கேளாச்சங்கீதம்- கடிதங்கள் -9

கேளாச்சங்கீதம்

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் வாசித்தேன்.சங்க இலக்கியத்தில் வரும் அதிமதுரம் தின்ற யானைபோல என்ற உவமை உடனே நினைவுக்கு வந்தது. அந்தக் கவிதையை வாசிக்கும்போது அதிமதுரத்தை நான் வாயில் வைதிருக்கவில்லை. ஆனால் பிறகு அதை வாயில் வைத்தபோதுதான் அந்தக்கவிதை சொல்வதென்ன என்று புரிந்தது. உண்மையில் மிகப்பெரிய அவஸ்தை.

ஒரு கஷாயம் தயாரிக்க வாங்கி வந்திருந்தார்கள். வேர் போல இருந்தது. வாயில்போட்டு மென்றுபார் என் சித்தப்பா சொன்னார். சரசரவென மென்றுவிட்டேன். கசப்பாக இருந்தது. துப்பினேன். ஆனால் உடனே இனிக்க ஆரம்பித்தது. இனிப்பா கசப்பா என்று சொல்லவே முடியாது. ஒருநாள் முழுக்க துப்பிக்கொண்டே இருந்தேன். வாயில் தண்ணீர்விட்டு கொப்பளித்தேன். சோடா போட்டு கொப்பளித்தேன். காரம் சாப்பிட்டேன். என்ன செய்தாலும் இனிப்பு அப்படியேதான் இருந்தது. இனிப்பு என்று நாம் நினைத்தால்தான் அது இனிப்பு.ஒரு நாள் முழுக்க மரண அவஸ்தை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டுமுறை வாந்தி எடுத்துவிட்டேன்.

இப்போது கேளாச்சங்கீதம் வாசித்து அந்த வரியை நினைத்தபோது இந்த கதையிலுள்ள இதே மனநிலையைத்தான் அந்தக்கவிதையும் சொல்லியிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டது.

எஸ்.விஜயகுமார்

 

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் வாசித்தேன். மிகமிக பெர்ஃபெக்டாகச் சொல்லப்பட்ட கதை. மிகத்தீவிரமான ஒரு விஷயத்தைச் சொல்லும்போது சம்பந்தமே இல்லாமல் ஒரு விலகிய பாவனை கதையில் இருக்கிறது. சாவுக்கும் வாழ்வுக்குமான ஊடாட்டம் இந்தக்கதையில் இருக்கிறது. ஆனால் கதை ஏதோ மாந்திரீக மருத்துவம் பற்றிப் பேசுவதுபோல இருக்கிறது. டிவிஸ்ட் என்று ஏதுமில்லை. கதையின் உச்சம் சாதாரணமாக வந்துவிடுகிறது. ஆனால் அதன்பிறகும் கதை நீண்டும் அந்த உச்சவரியையும் வாசகன் ஊகிக்கும்படி விட்டுவிடுகிறது. பெர்ஃபெக்‌ஷன் என்பது சொல்வதில் அல்ல. சூட்சுமமாகச் சொல்வதிலும் அதையே சரளமாகச் சொல்வதிலும்தான் உள்ளது. அந்த நுட்பம் கூடிவந்த கதை இது.

ஒரு மதுரமாக்கும். இதிலே ஒரு சொட்டு குடிக்காத மனுசன் இல்லை

சொப்பனம்னா வேரு, யதார்த்தம் மரம்

மந்திரம் போடுறவன் அந்நேரத்திலே தேவன்

கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?

என்னும் வரிகள் வழியாக ஒரு சூட்சுமமான கதை சொல்லப்படுகிறது. அதுதான் இந்த மருத்துவ மாந்திரீகக் கதைக்குள் இருக்கும் மானுட உறவின் கதை.

 

எஸ்.பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகோவை கவிதைநிகழ்வு- கடிதம்
அடுத்த கட்டுரைஏதோ ஒரு நதி