கேளாச்சங்கீதம்- கடிதங்கள்- 8

கேளாச்சங்கீதம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மீண்டும் உங்களிடம் இருந்து ஒரு அற்புதமான சிறுகதையை வாசிக்கும் பேறு பெற்றோம்.

கேளாச்சங்கீதம் என்ற கதையின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருந்தது. கேட்கப்படாத இசை என்பதற்கும் இசைக்கப்படாத இசை என்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? இந்த தலைப்புதான் கதையோடு எத்தனை அழகாக பொருந்திப் போகிறது. ஆழமாக சிந்தித்து பார்த்தால் மட்டுமே இது விளங்கும். அங்கே அந்த சங்கீதம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது ஆனால் எதனாலோ அது கேட்கப்படாமலும் இருக்கிறது. தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான சங்கீதங்களின் நடுவே எவரோ ஒருவர் அந்த இதுவரை எவராலும் கேட்கப்படாத ஒரு சங்கீதத்தை தன்னுள் கேட்க நேரும் பொழுது அதிலிருந்து அவரால் விடுபட முடிவதேயில்லை.

ஒரு இடத்தில் பகவான் இரமணர் கூறுவார் மௌனம் என்பது இடைவெளியே இல்லாத தொடர்ச்சியான பேச்சு என்று. ஓரளவேனும் தியானப்பயிற்சி இல்லாதவர்களால் அவர் சொல்ல வருகின்றதன் ஆழ்ந்த பொருளை எளிதாக விளங்கிக்கொள்ள முடியாது. பேச்சற்ற ஒரு நிலையைத் தானே மௌனம் என்று சொல்கிறோம் அது எப்படி தொடர்ச்சியான பேச்சு என்பது மௌனமாகக் கூடும் என்ற கேள்வி எழும். புலன்கள் உட்பட மனம் இயங்கும் விதத்தை உற்றுநோக்குபவர்கள் இதை புரிந்து கொள்ளக்கூடும். அந்த அதிகாலை நேரத்தில் வந்த சிறு தன்நினைப்பு இடைவெளி நிகழாமல் இருந்திருந்தால் கணேசன் இன்னும்கூட முழுமையான இன்பத்தில் திளைத்திருப்பான் தானே?

ஏதோ ஒன்று ஏதோ ஒரு வழியில் நாம் அறியாத ஏதோ ஒரு கணத்தில் நெஞ்சின் ஆழத்தில் புகுந்து விடுகிறது. எல்லா புலன்களும் மனமும் பூரண விழிப்பு நிலையில் இருக்கின்ற அந்த கணத்தில் புகுகின்ற ஒன்று முழுமையின் அத்தனை கூறுகளையும் தன்னுள் முழுமையாக கொண்டிருக்கிறது அதனாலேயே அது மதுரமாய் அமிழ்தாய் திகட்ட திகட்ட தாங்க முடியாத இன்பத்தில் ஆழ்த்துகிறது. கூடுதல் குறைதல் இல்லாத மாற்றம் இல்லாத முழுமையான இன்பம் என்பது முழுதான துன்பமும் கூட. அந்த தேவ முகூர்த்தத்தில் நெஞ்சில் புகுந்த ஒன்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது முழுமையாக நம்மை வசியப்படுத்தி விடுகிறது. ஏதோ ஒரு இசைத் துணுக்காக, ஒரு கவிதையின் ஒரு வரியாக, ஒரு காட்சியின் படமாக, ஒரு பொருளாக அல்லது ஒரு நபரின் ஏதோ ஒரு உறுப்பாக என்று எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். ஆனால் அது நம்மை முற்றாக அடிமைப்படுத்தி போடுகிறது என்பதுதான் அந்த முழு விழிப்பு கணத்தில் நம்முள் நுழைந்து நம்மைப்பற்றிய அதன் பலம்.

ஒரே ஒரு பாடலை வெறி பிடித்தது போல ஆயிரக்கணக்கான முறை கேட்ட அனுபவங்களும், ஒரு திரைப்படத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட காட்சி தொகுப்பை மீண்டும் மீண்டும் பார்த்து ஆழ்ந்து கிடந்த அனுபவங்களும் அனைவருக்கும் இங்கே பொதுவானதே.

சாதாரணமான ஒரு நபர்கூட பேரழகியாக அல்லது பேரழகனாக தெரிகின்ற ஒரு கணம் ஒரு கோணம் எங்கோ ஒளிந்து இருக்கிறது. எவரோ ஒருவரின் உள்ளம் முழு விழிப்பு கொள்கின்ற அந்த கணத்தில் அந்தப் பேரழகு கோணம் கண்களின் வழியாக உள் நுழைந்து விட அவர் அவ(ளி/னி)ன் மீது முற்றாக பித்துப் பிடித்து தன்னை முழுதும் மறந்து அந்த நபரின் உணர்வில் தகித்து அலைகிறார்.

கைவிஷம், மந்திர உச்சாடனம், மை வைத்தல் அதுவும் கனவுக்குள்ளாக அதை வைத்தல் என்பதெல்லாம் கதைக்குள் நீங்கள் புகுத்திய மிகச் சிறந்த உத்திகள் என்றே பார்க்கிறேன். இப்படி உத்திகளை பயன்படுத்தாவிட்டால் இவைகளைப் புரிந்து கொள்வதுதான் எப்படி. மனதும் மனதும் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளத்தான் எத்தனை எத்தனை ஆயிரம் உத்திகள். “மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?” என்ற பாவலர் வரதராஜனின் பாடலைத்தான் இங்கே நினைக்கத் தோன்றியது. அன்பு மயம் காதல் மயம் பிரேம மயம் என மனம் முற்றாக ஏதோ ஒன்றினால் நிறைந்து விடுவதைத் தானே மஹா யோகம் என்கிறோம். இங்குள்ள எல்லாமும் பிரம்மத்தின் வெளிபாடுகள் என்ற அத்வைத நோக்கில் பார்த்தாலும் இப்படி ஒன்றில் முழுமையாக ஆழ்ந்து போகக்கூடிய ஒன்று என்பது வரம்தானே!. நண்பர் அருணாச்சலம் மகாதேவன் இதை மிக அழகாக தொட்டுக்காட்டி கடிதம் எழுதியிருந்தார்.

“காவி உடை வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் ஒன்றே போதுமடா பரமநிலை எய்துதற்கு” என்கிறான் பாரதி. பாவித்தலின் மூலம் பரமநிலையையே எய்த முடியுமென்றால் வேறு எதை அடைய முடியாது?. பிரபஞ்சத்தில் எங்கோ உள்ள எதைவேண்டுமானாலும் தீவிர பாவனை மூலமும், திராட்டக்(இமையா நோக்கு), சஞ்ஜன்(இடைவிடாமல் ஒன்றைக் குறித்து நினைத்தல்)என்ற பல்வேறுபட்ட யோகப் பயிற்சிகளின் மூலமும் அடைய முடியும் என்றால், பிறரை நம்மை விரும்பச் செய்தல் என்பதுவும் சாத்தியமே. இதை எதையுமே பயிலாத, எதையுமே அறியாத ஒரு மனமும் கூட, ஒருமுகப்பட்டு ஒரு சில கணங்களுக்கு ஒன்றையே அதிதீவிர விருப்போடு அடைய நினைக்குமானால் அதை என்றேனும் ஒரு நள் வசப்படுத்தியே தீரும். வசியப்படுத்த முயல்கின்ற மனதின் தீவிரத்தைப் பொருத்தும், வசப்படுகின்ற மனதின் மனோதிடத்தை பொருத்தும் இதில் வெற்றி தோல்விகளின் அளவுகள் மாறுபடலாம். இப்படி எத்தனையோ சிந்தனைகளை என்னுள் எழுப்பிய வண்ணம் இருந்தது இந்த கேளாச்சங்கீதம் கதை.

அளவுக்கு அதிகமான அமிர்தம் விஷமாகிறது. துளியினும் துளி விஷம் அமுதாகிறது. ஆலகால விஷத்தை நெஞ்சில் தேக்கியவனும், அமுதக் கடலின் மீது படுத்து துயில்பவனும் இருப்பது என்னவோ பரமானந்த நிலையில்தான் என்கிறது நமது தொன்மம். இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் சம்சாரிக்குத்தான் இன்ப துன்பங்கள் எல்லாம். இவன் விஷத்தைக் குடிக்கவும் தயாராக இல்லை அமுத கடலில் குதிக்கவும் தயாராக இல்லை. வைத்தியர் மகன்களும் கணேசன்களும் நிச்சயமாக ஏதோ ஒன்றில் குதித்து விட்டவர்கள். பச்சாதாபம் துன்பம் துயரம் எல்லாம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான். துணிந்து குதித்து விட்டவனுக்கு வெளி உலகு எல்லாம் ஒரு பொருட்டா என்ன? ஆண்-பெண் இன்பத்தின் அதீத நிலைகளுக்கே இப்படி என்றால் யோகத்தின் பரமானந்த மௌனத்தில் குதித்தவர்கள் குகைக்குள் இருந்து நிர்விகல்ப சமாதியில் தொடர்ந்தவண்ணம் அப்படியே உடலை உகுத்து விடுவதை குறித்து என்ன சொல்ல?

“ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?” என்ற ஆழமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். எந்தக் கணக்கின் வழியாகப் பார்த்தாலும் உள்ளம் ஒன்றிலே ஒன்றி அதுவாகவே ஆகிவிடுதல் என்பது அந்த நிலையில் விழுந்தவர் பெற்ற பெறற்கரிய பேறு என்பதை அறியாதவரா என்ன நீங்கள்? தாளமுடியாத துன்பத்தில் விழுந்து அந்தத் துன்பமே அறிதலின் உச்சத்தில் ஆழ்த்தி ஞானி ஆனவர்களும் உண்டுதானே இங்கே.

முள்ளுநுனியிலே பனித்துளின்னாக்கும் மனுசனை பத்திச் ல்லியிருக்கு என்பது தான் எத்தனை ஆழ்ந்த வாசகம். எத்தனை நுண்ணிய முள் நுனி ஆயினும் எல்லாப் பனியும் வழிந்து ஓடிய பின்பும் அங்கே ஒரு மீச்சிறு பனித்துளியாவது நின்றே தீரும். ஆனால் அது அத்தனை சிறு துளியாக இருப்பதனால் சூரிய வெப்பத்தில் உடனடியாக ஆவியாகிவிடும். அதையும் தாண்டி இலைகளால் மறைக்கப்பட்ட ஏதோ ஒரு முள்ளின் நுனியில் ஒரு துளி பனி நின்றுவிடுகிறது! அதை ஆசீர்வதிக்கப்பட்ட துளி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது!

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையை திரும்பத்திரும்ப வாசிக்கிறேன். அது என்னை என்ன செய்கிறதென்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது என்னுடைய கதை. நான் ஒரு ஆறாண்டுக்காலம் வாழ்ந்த கதை. அதை விளக்கவே முடியாது. நீண்டநாளுக்கு பின்னால் எனக்கு ஆன்மிகம் கற்றுக்கொடுத்த சுவாமிஜி சொன்னார் அது கர்மாவின் தொடர்ச்சிதான் என்று. வேறு எதைக்கொண்டும் அதை விளக்கவே முடியாது.வேறொரு முறை சுவாமி சொன்னார். அந்தப்பெண் ஒரு நிமித்தகாரணம்தான். நமக்கு அப்படி ஒரு presence தேவைப்படுகிறது. பக்தனுக்கு அப்படித்தான் விக்ரகம் தேவைப்படுகிறது. அதை rathi என்று சொன்னார் அதை பகவான்மேல் அப்படியே திருப்பிக்கொள்பவர்களே மீட்சி அடைகிறார்கள் என்று சொன்னார். என்னால் அது முடியவில்லை.

ஆனால் கதையில் வந்ததுபோல அன்று நூறுகண்ணும் நூறு காதும் நூறு நாக்கும் அடைந்ததுபோல் இருக்கிறது. மொத்தமாக லாஜிக்கலான எல்லாமே மறந்துவிட்டது. ஆனால் பல காட்சிகளும் பாடல்களும் அப்படியே அச்சுஅசலாக இப்போது கண்முன் நிகழ்வதுபோல நினைவில் இருக்கின்றன. சிலபாடல்களை அதன் ஒவ்வொரு ஒலித்துணுக்கையும் தனித்தனியாகக் கேட்பதுபோல அன்றைக்குக் கேட்டிருக்கிறேன். ‘உன்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட’ என்றபாட்டு என்னை கொல்லும் அளவுக்கு தீவிரமாக இருந்திருக்கிறது. அதெல்லாம் தியானத்திலே வரவேண்டும் என்று சொன்னார். ஆனால் அதெல்லாம் எனக்கு பிராப்தம் கிடையாது. ஆனால் இன்றைக்கும் அதெல்லாம் ஒரு கனவுபோல இருக்கிறது.

எஸ்

 

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்1

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம், கடிதம்-6

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7

முந்தைய கட்டுரைதமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்(ராஜ் கெளதமன்) -சக்திவேல் கோபி
அடுத்த கட்டுரைகவிதைக்கு ஓர் இணையதளம்