அழிசியின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

நெல்லையில் சென்ற ஞாயிறு அழிசி பதிப்பகத்தின் நான்கு நுால்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. புதுமைப்பித்தனின் நாரத இராமாயணம் நுாலினை நான் வெளியிட நண்பரும் இளம் படைப்பாளியுமான சிவசித்து பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவினால் எனக்கு இரு நன்மைகள். ஒன்று நாரத இராமாயணத்தை முதல் முதலாக வாசித்தே ஆகவேண்டிய நெருக்கடி. வாசித்து முடித்து மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே தென்காசியில் இருந்து நெல்லைக்கு எண்ட் டூ எண்ட் பஸ் ஏறினேன்.

இரண்டு பகுதிகள் கொண்டது நா.இ. முதல் பகுதி முழுக்க அதிரடிப் பகடிதான். பட்டாபிசேகத்திற்கு பிறகான வாழ்வின் பொருள் குறித்து வெறுமை கொண்டு மீண்டும் ஒரு அரக்க துவம்சத்திற்காக ஆள்கள் தேடி இராமனும் அனுமனும் சீதையோடு வடக்கே செல்லும் காட்சிகள் மனதில் விரிந்து வந்தன. சீதையை அழைத்துச்சென்று குடில் அமைத்து இராவணன்கள் வந்து துாக்கிச்செல்ல மாட்டார்களா என்றும் அதன் பின்னர் சீதையை மீட்டெடுக்கும் ஒரு இலட்சியம் தனக்கு வாய்க்காத என்றும் மறைந்து நின்று காத்திருக்கிறார் இராமர். சித்திரங்கள் மனத்திரையில் விரிய உதடுகளுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அதக்கிக்கொண்டே பயணித்தேன்.

அதிகார மையத்தை உலுக்குதல் புதுமைப்பித்தனுக்கு சர்வசாதாரணமாக கை கூடுயிருக்கிறது. இராமன் சரயூ நதிக்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டு, தோற்றுப்போவதாக கற்பனை செய்து எழுதுவது அதீத நெஞ்சுரந்தான். புதுமைப்பித்தனைப் போல இன்று நம்மால் எண்ணிப்பார்க்கக்கூட முடியாது. உண்மையை எழுதிவிடவும் முடியாது.

இரண்டாவது, நண்பரும் எழுத்தாளருமான சிவசித்துவை நேரில் சந்தித்தது. இராயகிரிதான் சொந்த ஊர் என்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. கெங்கை அம்மன்கோவில் தெரு என்றார். எனக்கு சட்டென்று தெருவை ஊகிக்க முடியவில்லை. தற்போது வாசுதேவநல்லுாரில் வசித்து வருகிறார். அவரின் முதல் சிறுகதை தொகுப்பை மணல்வீடு வெளியிட்டு உள்ளது. கூடவே வேட்டை நாய்கள் வளர்ப்பு சார்ந்த தனித்த அனுபவங்கள் அவரிடம் இருக்கின்றன. அவரை இதுவரை வாசித்திருக்க வில்லை. அவரின் அறிமுகம் மகிழ்ச்சி அளித்தது.

அன்றாடம் புழங்கிக்கொண்டிருந்த நெல்லை இன்று விருந்தினரைப்போல சென்று வரக்கூடியதாக மாறிவிட்ட வருத்தம். பழைய பேட்டையைத் தாண்டியதும் ஒட்டகச் சவாரிதான். அரவிந்த் கண் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி நிகழ்வு நடக்க இருந்த இடத்திற்கு நடந்தே சென்றேன். அதற்குள் அழிசி ஸ்ரீ போனில் அழைத்து உறுதி செய்து கொண்டார்.

வாசலில் ஸ்ரீ நின்றுகொண்டிருந்தார். இரண்டாவது மாடியில் கூட்டம். மிகச்சிறிய அறை. பத்துப் பதினைந்து பேர்கள் அமரும் இடவசதி. மழை நசநசப்பு.

மெல்ல நண்பர்கள் வர ஆரம்பித்தனர். பி.கு. மதார் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். மதார் புதுமாப்பிள்ளைக்கு உரிய திடீர் பூரிப்பில் காணப்பட்டார்.

முதல் நுாலினை வெளியிட்டு புதுமைப்பித்தனின் தனித்தன்மைகளில் ஒன்றான சீண்டும் தன்மை, புண்படுத்தும் தன்மை குறித்து சுருக்கமாக பேசினேன்.

எனக்கே இரண்டு சொந்த அனுபவங்கள் இருந்தன. சனிக்கிழமை ஒரு வாசக நண்பர் என்னை அழைத்துப் பேசினார். தற்போது சொந்தமாக விவசாயம் செய்து, தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார். இருபத்தைந்தை ஒட்டிய வயது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் அத்தனைப்பேரிடமும் வாசக அறிமுகம் உள்ளவர். நண்பர் கோவில்பட்டி சிவகுமாருக்கும் அவர் நண்பர்.

“அண்ணே..நீங்க கொடுத்த இன்டியன் பாலிட்டிதான் படிச்சிட்டு இருக்கறேன்..” என்றார் போனில் எடுத்த எடுப்பில்.

“ஏம்பா..மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சு.. தொழில் அதிபரா வருவேனு நான் எதிர்பார்த்திட்டு இருக்கேன். மறுபடியும் அரசு வேலை முயற்சி?” என்றேன்.

“இன்னைக்கு புதுமைப்பித்தனோட ஒரு வரியைப் படிச்சேன்னே..விவசாயம் சோம்பற் தொழில்னு எழுதியிருக்கார். ஷாக்காயிடுச்சு..அதான்” என்றார்.

 

அவர் யாரைக்குறித்து அவ்வரிகளை எழுதினார். அது யாருக்குப் பொருந்தும் என்று விளக்கினேன். நுாறாண்டு பழைய எழுத்து புதுமைபித்தனுடையது அது இன்றும் வாசிக்கப்படுகிறது. வாசிக்கின்றவரை நிலைகுலையச் செய்கிறது.நாள்தோறும் ஒரு பு,பி.கதை என்று மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமும் வியப்பும் அதிகரித்தபடிதான் இருக்கிறது. அவரின் எழுத்தில் உள்ள புத்தம்புதுத்தன்மை இன்னும் ஒரு நுாற்றாண்டு கழிந்தாலும் மங்கிவிடப்போவதில்லை. காலத்தின் களிம்பு ஏறும் சாத்தியமே இல்லை. காலத்தை வெல்லுதல் மேதைகளுக்கே உரியது.

நண்பர் பி.கு. கரையாளர் நுாலினை வெளியிட்டு விரிவாக ரசனை விமர்சனம் செய்தார். கொஞ்சம் குண்டாகி விட்டாரோ என்று தோன்றியது. அல்லது அவர் அணிந்திருந்த சட்டை அவ்விதம் காட்டியதோ? அரங்கம் நிறைந்து விட்டது. என் சார்பாக என் நண்பர்கள் மாரிராஜா, சொல்லுடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்தபோது மழை ஆரம்பித்து விட்டது. எனவே வந்திருந்தவர்கள் காத்திருந்தார்கள். அந்த காத்திருப்பின் போது ஸ்ரீ, சிவசித்து, பி.கு. மூன்று பேர்களையும் தங்களின் வாசிப்பு எழுத்து அனுபவங்கள் குறித்து சிறிது பேசக் கேட்டுக்கொண்டோம். சிறப்பாக பேசினார்கள்.

விழாவில் பங்கேற்றவர்களில் நான்கு ஐந்து பேர்கள் மட்டுமே ஐம்பதுகளை ஒட்டியவர்கள். மிகுதியும் இளைஞர்கள். வாசிப்பின் மீது ஆர்வமும் எழுதும் உத்வேகமும் கொண்டிருப்பவர்கள்.எழுதக்கூடியவர்கள் அதைவிட தீவிரமாக வாசிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு சந்திக்கும் இடமாக ஓரிடம் என அச்சிறு அறையே விரும்பத்தகுந்ததாக இருந்தது.

நுால் வெளியீட்டினை ஸ்ரீ ஒருங்கிணைத்தார். அவரின் மெல்லிய அசோகமித்திரக் குரலும், உடல்மொழியும் ரசிக்கும் படியாக இருந்தன. கைகளைக்கட்டி, நின்று கொண்டே இருந்தார். அது ஒன்றுதான் தர்மசங்கடப்படுத்தியது.

வந்திருந்தவர்களில் சிலர் ஸ்ரீயை ஆச்சரியமாக விசாரித்தனர். அவர் பதிப்பாளராக வந்து சேர்ந்த முன்கதைச்சுருக்கத்தை அறிய ஆவல் கொண்டிருந்தனர். எனக்கே அவர் இன்னும் தீரா ஆச்சரியந்தான். முதல்நாள் இரவில்கூட நானும் நண்பர் சொல்லுடையாரும் அவரைக்குறித்துப் பேசி ஆச்சரியம் அடைந்திருந்தோம்.

சென்றாண்டு நடந்த புத்தகவிழாவில்தான் அவர் அறிமுகம். சுனில் கிருஷ்ணனை சந்திக்க ஸ்ரீ வந்திருக்கிறார். அவரின் தயங்கிய நடையும் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த நிதானமும் மாம்பலத்தில் அசோகமித்திரனைப் பார்த்ததைப்போல இருந்ததாம்.

சமீபத்தில் எம்.யுவன் வியப்போடு பகிர்ந்து கொண்டதாக கோவில்பட்டி சிவக்குமார் எனக்கு ஒரு தகவல் சொன்னார். ஒரு ஜைனத்துறவியின் நிர்வாணத்தின் முன் யுவன் அடைந்த தரிசனம் அது. அந்த ஜைனத்துறவி அனைத்தையும் துறந்துவிட்டதன் மூலம் அனைத்தையும் அள்ளிச்சேர்க்க வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ஒரு பெரிய அறைகூவலாக இருக்கிறார்.எனக்கும் அழிசி ஸ்ரீயை எண்ணிப்பார்க்க அந்த வியப்புதான் ஏற்படுகிறது.

ஒட்டுமொத்த உலகமும் பொருள் வெறி கொண்டு ஒரே திசையில் ஓடிக்கொண்டிருக்க ஸ்ரீயைப் போல அரிதாக சிலர் தங்களின் உள்ளார்ந்த இசைவிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முக்கியமான காரியம்.

பொருளாதார ரீதியாக சவால்களும் கையறுநிலைகளும் இருக்கலாம். அது கால காலமாக தமிழ் இலக்கியம் அளிக்கச் சாத்தியமுள்ள தண்டனைகள். ஆனால் அவையெல்லாம் பெரும் தடைகளே அல்ல. இன்று இலக்கியத்தின் மீது இலக்கியப்பித்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு களப்பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் ஒரு மவுசு. ஆடம்பர அடையாளம். ஒரு கோடியில் வீடு கட்டிடுவதைப்போன்ற ஸ்டேட்டஸ் இம்ரூவ்மெண்ட். சினிமாவிற்கான விசிட்டிங் கார்ட். அரசியல் எண்ரிக்கான லைசன்ஸ். ஆனால் அழிசிக்கு அவ்விதம் அல்ல.உ.வே.சா, சி.சு.செல்லப்பா, க.நா.சு அ.மி. என்று இடையறாத லட்சியவாதத்தின் தொடர்ச்சி. சமகாலக்கண்ணி.

ராயகிரி சங்கர்

https://mayir.in/

முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7
அடுத்த கட்டுரைஎங்கெங்கு காணினும் சக்தி- பாலசுப்ரமணியம் முத்துசாமி