கேளாச்சங்கீதம், கடிதம்-6

கேளாச்சங்கீதம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

கேளாச்சங்கீதம், நீர்க்கோலத்தின் இந்த பகுதியை நினைவுபடுத்தியது:

திரௌபதி புன்னகையுடன் “கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை” என்றாள்.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்

 

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையை ஒட்டி சில கடிதங்களில் சில அனுபவங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. உண்மையில் வாழ்க்கையின் ஒரு விசித்திரமான விஷயம் இது. இதை எளிமையாக அப்செஷன் என்று சொல்லலாம். நோய் என்று சொன்னால் அப்ஸெசிவ் நியுரோசிஸ். ஆனால் இதெல்லாம் பெயர்கள். வரையறைகள். உண்மையில் இப்படி ஒரு மனநிலை, ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பம் இருக்கிறது.

இந்தச் சிறுகதையில் பல நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன. அந்தப்பையனிடம் இருக்கும் பெண்மை அம்சம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். பெரும்பாலும் இதே நிலைக்குப்போகிறவர்கள் பெண்மைச்சாயல் கொண்ட , கொஞ்சம் மென்மையான இளைஞர்கள்தான். Macho ஆண்கள் இந்த மனநிலைக்குப் போவதில்லை.

அதோடு இந்தவகையானவர்கள் கொஞ்சம் கலை இலக்கியம் ஆன்மிகம் போன்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு குணாதிசயம் உண்டு. வெளியே பேசக்கூச்சப்படும் அமைதியான இளைஞர்களாக தெரிவார்கள். Introvert என்று தோன்றுவார்கள். ஆனால் வீட்டுக்குள் தெரிந்தவர்கள் நடுவே பாட்டு டான்ஸ் என்று உற்சாகமாகக் கலக்கி எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை அவர்களின் குடும்பம் மிகமிக உற்சாகமானவர்களாகவே அறிந்திருக்கும். திடீரென்று அவர்கள் அபப்டியே இன்னொன்றுக்குள் சென்றுவிடுகிறார்கள்.இன்னொன்றும் சொல்லப்படுவதுண்டு. இந்தவகையான உச்சநிலைகளுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் அம்மாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் ‘அம்மாப்பிள்ளை’கள்தான்.

இதெல்லாம் சேர்ந்து அவர்களை வீழ்த்துகிறது. அவர்களிடமிருக்கும் பெண்மை அம்சம், அவர்கள் தாயை தேடுவது, அவர்களிடமிருக்கும் அழகுணர்ச்சி எல்லாமே அவர்களுக்கு எதிரிகளாகிவிடுகின்றன. இது நடந்துகொண்டே இருக்கிறது. டீன் ஏஜ் முடிந்த பிறகு வரும் குழப்பமனநிலையில் இதற்குள் சென்றுவிடுகிறார்கள். ஏதோ ஒரு பெண் அவர்களை ஈர்த்துவிடுகிறாள். இங்கே அந்தப்பெண் முக்கியமே அல்ல. இவனுக்குள் இருக்கும் தேனைத்தான் இவனே உண்கிறான். தேனீயின் கைகளில் முடிவில்லாமல் தேன் சுரந்தால் என்ன செய்யும் என்று என் சீனியர் இதைப்பற்றிச் சொல்வதுண்டு.

இந்தமனநிலையில் கலைகள் இசை எல்லாம் அற்புதமான அழகு கொள்கின்றன. நிஜவுலகமே இல்லாமலாகிவிடுகிறது. உச்சகட்ட கவித்துவ மனநிலை அமைந்துவிடுகிறது. என்ன செய்கிறோமென்றே தெரியாமல் கனவிலேயே அலைகிறார்கள். ஒரு நல்ல போதைப்பொருள் என்ன செய்யுமோ அதை மூளையே தனக்குத்தானே செய்துகொள்கிறது. கிளினிக்கலாகப் பார்த்தால் மூளையில் உண்மையிலேயே செரட்டோனினை கொப்பளிக்க வைக்கும் பல என்சைம்கள் காணக்கிடைக்கின்றன. ஒரு பெரிய பரவச நிலை. அவர்களை நாம் நார்மலாக ஆக்கினால் அவர்கள் இழப்பது அந்த மொத்த பரவசநிலையையும்தான். அது ஒரு இழப்புதான். அப்படி பறந்து மேலே சென்றுவிட்டு பாதுகாப்பாக கீழே இறங்கிவிட முடியும் என்றால் அது ஒரு நல்ல அனுபவம்தான்

நம்முடைய பல பெருங்கவிஞர்கள் இந்நிலையில் இருந்திருக்கலாம். ஜெயதேவரைப்பற்றிச் சொல்வார்கள். அவர் புரி கோயிலில் இருந்த ஒரு தேவதாசியிடம் கொண்ட பித்துதான் அஷ்டபதியாக வெளியாகியது என்பார்கள். இந்த மனநிலையை ஒரு மனித உச்சம் என்றுதான் பார்க்கவேண்டும் என்று ஆர்.டி.லெய்ங் போன்றவர்கள் சொல்வார்கள். ஆனால் இதைப்போன்ற எந்த நிலைகுலைவும் உண்மையில் மிகப்பெரிய துன்பமாகவே உள்ளது.

 

ஆனந்த்ராஜ்
கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 1
கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2
கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3
கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4
கேளாச்சங்கீதம்- கடிதங்கள் – 5
முந்தைய கட்டுரைவாசகர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருண்மொழி பேட்டியும் கட்டுரையும்