கவிதைக்கான ஒரு நாள்

இளங்கோ கிருஷ்ணனின் கவிதை நூலான வியனுலகு வதியும் பெருமலர் வெளியீட்டு விழா சென்னையில் 31-10-2021 அன்று நடைபெற்றது. காலைமுதலே மழைபொழிந்துகொண்டிருந்தது. விழாவுக்கு கூட்டம் வருமா என்ற பதற்றம் எந்த அமைப்பாளர்களுக்கும் எழும். குறிப்பாகச் சென்னையில் இலக்கியக்கூட்டங்களே குறைந்து வரும் சூழலில். சென்னையில் விஷ்ணுபுரம் அமைப்பு சார்ந்து நடைபெறும் விழா என்றால் குமரகுருபரன் விருது விழாதான். அது சென்ற இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.

ஆகவே காலையில் என் அறைக்கு வந்த யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலன், இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பதற்றமாகவே இருந்தார்கள். நிகழ்ச்சிகள் எதை ஒருங்கிணைத்தாலும் கூட்டம் வராமல் போய்விடுமா என்னும் பதற்றம் தமிழிலக்கிய சூழலில் என்றும் நிலவுவது. அதிலும் நாம் வேறு ஒருவரை மரியாதை செய்யும்பொருட்டு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோமென்றால் அப்பதற்றம் மேலும் கூடிவிடும். அவர் நம்மால் சிறுமைப்பட நேரிடுமோ என்னும் எண்ணம் எழும்.

நான் கிரீன் பார்க் அறையில் தங்கியிருந்தேன். எனக்குப் பிடித்தமான, என் அறை என நான் பதினாறு ஆண்டுகளாக உணரும் இடம். முந்தைய நாள் இரவு நல்ல மழை. மின்னல்கள் வெட்டிக்கொண்டே இருந்தன. திரையை விலக்கிவிட்டு மின்னல்களை பார்த்தபடியே இரவு தூங்கினேன். அதிகாலையில் நகரம் சன்னலுக்கு வெளியே வெளிச்சத்தில் விந்தையான ஓர் உலகமாக துலங்குவதைப் பார்த்தபடி நின்றிருந்தேன். சென்னை சன்னலுக்குவெளியே மட்டும் அழகாக தெரியும் நகரம்.

இந்த அறையின் இந்த மேஜையில் வைத்துத்தான் பிரயாகையின் தொடக்கத்தை எழுதினேன். இதே நாற்காலியில். இதேபோன்ற டீக்கோப்பை அப்போதும் இருந்தது. எதுவுமே இங்கே மாறவில்லை. முன்பொருமுறை மோகன்லால் சொன்னார், அவர் சென்னை தாஜில் தங்கவே விரும்புவார் என. அங்கே எண்பதுகள் உறைந்து நின்றிருக்கின்றன.

யாவரும் ஜீவகரிகாலன் இந்த கொரோனாக்கால முடக்கம் அவருடைய பதிப்புச் செயல்பாட்டில் அளித்த பின்னடைவைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். இளங்கோ கிருஷ்ணனும் அவர் நண்பர் ஜெய்யும் வந்தனர்.கௌதம் மேனனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடிக்கும் நிலையில் இருக்கும் ஜெய் ஊட்டியில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி குறும்பட விழா ஒன்றை ஒருங்கிணைக்கிறார். அதற்கு ஏற்கனவே என்னை அழைத்திருந்தார். வருவதாகச் சொல்லியிருந்தேன்.

ஊட்டியில் டிசம்பர் என்பது கிட்டத்தட்ட உறைபனிக்காலம்தான். இரவில் பூஜ்யம் வரை குளிர் வரக்கூடும். நான் சென்று நீண்டநாட்களாகிறது. டிசம்பர் குளிரில் ஊட்டியில் சிலநாட்கள் இருக்கலாமென நினைக்கிறேன். நண்பர்களும் வருவார்கள் என்று படுகிறது. வாதச் சிக்கல்கள் கொண்ட நண்பர்கள் கண்டிப்பாக வருவார்கள். ஏனென்றால் ஆயுர்வேதப்படி வாதம் மேலோங்கியவர்களுக்கு குளிர் ஆகாது. ஆகவே குளிர் பிடிக்கும். இலக்கியவாதிகள் வாதம் செய்பவர்கள்தானே?

நண்பர் சக்திவேல் என்னைச் சந்திக்கவேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவரை சித்தர்காடு சென்று கூட்டிவரவேண்டும். நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். சத்யானந்த யோக மையம் நண்பர் சௌந்தர் சென்று கூட்டிவந்தார். நான் அவரை முதன்முறையாகச் சந்திக்கிறேன். ஏற்கனவே என் நண்பர்கள் அனைவரும் அவரைச் சந்தித்துவிட்டிருந்தனர்.

சக்திவேல் இளம் அறிவுஜீவிக்குரிய வேகத்துடன் இருந்தார். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மொழியாக்கங்கள் செய்கிறார். நிறைய படிக்கிறார். எழுதவேண்டுமென்னும் துடிப்பு உள்ளது. ஆகவே அது சார்ந்த ஐயங்களாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

காளிப்பிரசாத், சிறில் அலெக்ஸ், முத்துச்சிதறல் முத்து என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.மதியம் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு நான் கொஞ்சம் தூங்கினேன். நான்கரை மணிக்கு எழுந்து குளித்து உடைமாற்றி கவிக்கோ மன்றத்தில் நிகழ்ந்த கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றேன்

எண்ணியதற்கு மாறாக அரங்கு நிறைந்த கூட்டம். சென்னையில் அனைவருமே இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அனேகமாக எல்லா இலக்கிய முகங்களும் தட்டுபட்டன. பலரிடம் ஓரிரு சொற்கள் பேசமுடிந்தது.

எம்.ஏ.முஸ்தபா

நிகழ்ச்சி கொஞ்சம் பிந்தியது. அதற்கு நான் காரணம். கவிக்கோ மன்றத்தின் உரிமையாளர் எம்.ஏ.முஸ்தபா அவர்கள் சிங்கப்பூரில் வணிகம் செய்பவர். இஸ்லாமியப் பேரறிஞர். சிராங்கூன் டைம்ஸ் என்னும் இதழையும் நடத்துபவர். அவர் மேலே நூல்விற்பனையகம் அருகே அவருடைய அலுவலகத்தில் இருந்தார். அங்கே சென்றபோது தற்செயலாக அவரைச் சந்தித்தேன். அவர் தன் அறைக்கு கூட்டிச்சென்றார். சற்று நேரம் பேசி ஒரு நல்ல சுக்குக்காப்பி அருந்தினேன்

திரு முஸ்தபா அவர்கள் ஹதீஸ்களை தமிழாக்கம் செய்துவருவதை என்னிடம் முன்பு சிலமுறை சொல்லியிருந்தார். அம்முயற்சி முழுமையடைந்துவிட்டது. வெளியான நூல்களின் அடுக்குகளைக் காட்டினார். நூல்கள் வெளிவந்து  ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. அவற்றை எனக்கு அனுப்புவதாகச் சொன்னார்.

முஸ்தபா அவர்களின் தமிழ் மிகக் கூர்மையானது, பிழையற்றது, எளியது. இத்தகைய நவீன மொழியில் ஹதீஸ்கள் மொழியாக்கம் செய்யப்படுவதென்பது மிகமிக முக்கியமான ஒன்று. பெருவணிகர் ஒருவர் இத்தகைய மொழித்திறன் அடைவது அரிதினும் அரிது. அது தொடர்ச்சியாக பல்லாண்டுகள் தமிழில் ஈடுபட்டிருந்தால் அமைவது. முஸ்தபா அவர்களின் முதன்மைக் கனவே ஒரு மார்க்க அறிஞர் ஆகவேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது. அதன்பொருட்டே பல்லாண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த மொழியாக்கம் சென்ற அரைநூற்றாண்டில் தமிழில் நிகழ்ந்த மாபெரும் அறிவியக்கப்பணிகளில் ஒன்று. இத்தகைய பெருங்கனவு கொண்ட முயற்சிகளுக்கான காலம் முடிந்துவிட்டது என்று தோன்றிக்கொண்டே இருக்கும், அந்த எண்ணம் அறிஞர்களால் முறியடிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கும். இஸ்லாமிய இலக்கியத்தைப் பொறுத்தவரை  எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் அவர்களின் இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்திற்குப் பின் மாபெரும் முயற்சி இதுதான். இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் இணையதளம்

அப்துற் றஹீம் அவர்களின் கலைக்களஞ்சியத்தொகுதிகளை  இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு பழைய நூலகம் விற்கப்பட்டபோது அதன் தொகுதிகளை நான் வாங்கினேன். நான் மிக அதிகமாகப்புரட்டிப் படிக்கும் நூல்களில் ஒன்று அது. ஒருவகையில் தமிழ் வரலாற்றின், பண்பாட்டியக்கத்தின் ஒரு பகுதியின் சித்திரம் அதில் தனிச்செய்திகளாக உள்ளது.

இந்த ஹதீதுகள் தொகுதியும் எதிர்காலத்தில் எங்கும் மேற்கோள் காட்டப்படும் ஒரு மூலநூல்களஞ்சியமாக ஆகலாம்.திரு எம்.ஏ.முஸ்தபா அவர்களிடம் ஒரு நீண்ட பேட்டியை எடுத்து பதிவுசெய்யவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

ஆறுமணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் தேவசேனா முதலில் பேசினார். அடுத்து பேசிய பிரவீன் பஃறுளி பேராசிரியர் வீ.அரசு அவர்களின் மாணவர். நான் சென்னை பல்கலைக்குள் ஒரே ஒருமுறை சென்றிருக்கிறேன். ஒரு மலையாள நூல்வெளியீட்டு நிகழ்ச்சிக்காக. அப்போது மாணவராக அவர் என்னைச் சந்தித்திருக்கிறார். சென்னை பல்கலையின் கடலோர விருந்தினர் விடுதிகள் அழகானவை.

நண்பர் மனோ மோகன் பேசினார். மிக இக்கட்டான நிலையில் இருந்த நண்பர் ரமேஷ் பிரேதனை அடைக்கலம் கொடுத்து பல ஆண்டுகள் பேணியவர் அவர். மனோ மோகனின் மனைவியும் பாண்டிசேரியில் இருந்து வந்திருந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பின் மனுஷ்யபுத்திரனைப் பார்த்தேன். கன்யாகுமரியில் என் நண்பர் கிருஷ்ணா இயக்கும் ஒரு சினிமாவில் நடிக்கச் சென்றிருந்தார். அங்கிருந்து நேரடியாக வந்திருந்தார். கன்யாகுமரியில் இருப்பதுபோலவே இருக்கிறது என்றார். மழையில் நனைந்த கன்யாகுமரி அழகான இடம்தான். கன்யாகுமரி மாவட்டமே அழகாகத்தான் இருக்கும்.

மனுஷ்யபுத்திரன் மடிக்கக்கூடிய ஒரு செல்பேசி வைத்திருந்தார். சாம்சங். அழகாக இருந்தது. என்னுடைய ரெட்மி உயிரைவிட்டு நான் இன்னொன்று வாங்குவதாக இருந்தால் அதை வாங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். மனுஷ்யபுத்திரனின் பேச்சு தெளிவான உச்சரிப்பும், சரளமான மொழியும் கொண்டிருந்தது. முன்பு அவரிடமிருந்த பல தடுமாற்றங்கள் இல்லை. துவரங்குறிச்சி வட்டார வழக்கு அறவே இல்லை.

கவிஞர் வெயில் , மனுஷ்யபுத்திரன் பேசியபின் நான் பேசினேன். இளங்கோ கிருஷ்ணன் நிறைவாகப் பேசினார். அவருடைய வாழ்க்கையின் ஒரு நல்ல நாளாக அது இருக்குமென்று தோன்றியது. அவருடைய அப்பா அம்மா மனைவி எல்லாம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவருடைய மகளாகிய பாடல்பெற்ற அழகி லயாவைச் சந்தித்தேன். உற்சாகமாக இருந்தாள். முழுநிகழ்ச்சியையும் பொறுமையாக தாங்கிக்கொண்டாள் என்பது பெண்மையின் பெருமைக்குச் சான்று.

ஒன்பது மணிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குமரகம் சென்று சாப்பிட்டோம். பிரியா தம்பி உடன் வந்திருந்தார். தமிழின் மிக வெற்றிகரமான நான்கு டிவி தொடர்களுக்கு அவர்தான் எழுதுகிறார் என்றார்கள். அவர் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். “நாங்க அலையலையா கெளம்பி வந்திட்டே இருப்போம்ல?’ என்று நண்பர்களிடம் சொன்னேன்.

இனிய நிறைவான நாள். இன்று என் நீண்டநாள் நண்பர் அன்பு, ஆன்மிகப்பேச்சாளர் கிருஷ்ணா மற்றும் வேதமாணவரான அவர் மகன், பாஸ்கர் சக்தி, பாலசாகித்ய விருது பெற்ற பாலபாரதி உட்பட பலரை நெடுநாட்களுக்குப் பின் சந்தித்தேன். கிரீன்பார்க்கில் இருந்து மறுநாளே கிளம்பி நாகர்கோயில். மழைபெய்து நனைந்த குமரிமாவட்டம்.

முந்தைய கட்டுரைவியனுலகு வதியும் பெருமலர்- உரைகள்
அடுத்த கட்டுரைஎங்குளாய் இலாதவனாய்?- இரம்யா