கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7

கேளாச்சங்கீதம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் பற்றி நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களில் பலபேருக்கு அந்தக்கதை என்ன உணர்வுநிலை கொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை. சிலர் அது ரொம்ப பழைய கதை, வசியம் என்பதெல்லாம் பழைய சமாச்சாரம் என்றார்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏராளமான புதிய விஷயங்கள் வந்துவிட்டன என்று சொன்னார்கள் .டேட்டிங் போன்ற பல விஷயங்களைக் குறிப்பிட்டனர்.சிலர் மூடநம்பிக்கையைப் பேசும் கதை என்று சொன்னார்கள்.

நான் அவர்களிடம் சொன்னேன்.நல்ல கதை என்பது காலந்தோறும் மாறும் ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசுவது இல்லை என்று. என்றைக்கும் உள்ள ஒரு அடிப்படையான சிக்கலைத்தான் அது பேசும். இந்தக்கதை பேசும் இந்த பித்துப் பிடித்தது போன்ற காதல் எப்போதுமே இங்கே உள்ளதுதான். சங்கப்பாடல்களில் அதைப்பற்றி பேசியிருக்கிறது. காதல்பித்து பிடித்தவன் மடலேறுவதைப்பற்றிக்கூட சொல்லியிருக்கிறது.இன்றைக்கும் அது இருக்கிறது. காதலுக்காக கொல்கிறார்கள். சாகிறார்கள். அந்த பித்துநிலை என்ன என்பதும் அதன் இனிமையும் அவஸ்தையும்தான் கதையில் உள்ளது என்று சொன்னேன். வசியம் என்பது ஒரு குறியீடுதான் என்று சொன்னேன்.

அதன்பிறகு புரிந்தது, அவர்களுக்கு மனம் சார்ந்த காமமே இல்லை. அதை அவர்கள் அறிந்திருக்கவே இல்லை. அவர்கள் அறிந்த காமம் முழுக்கமுழுக்க உடலில்தான். ஒரு உடல் உபாதைதான் அது. அதோடு வெற்றிபெறுவதற்கான ஒரு போட்டி. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக்கதை புரியாது.இப்போதெல்லாம் சின்ன வயசிலேயே போர்ன் பழகி விடுகிறது. அப்படியே மனம் உருவாகி விடுகிறது. எழுத்தாளர்களிலும் பெரும்பாலானவர்கள் எழுதுவது வெறும் சதைக்காமத்தைத்தான். இந்தக்கதை வேறொரு இடத்தில் இருக்கிறது.

ஆனால் இந்தவகையான மனிதர்கள் அன்றும் இன்றும் இருக்கிறார்கள். இன்றும் மனநலசிகிச்சைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் இந்தக்கதையின் தீவிரம். ‘இனித்து இனித்துச் சாவது’ என்றால் என்ன என்று அவர்களுக்குத்தான் புரியும்

எம்.செந்தில்குமார்

 

அன்பு ஜெ,

புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பிலவர்க்கு என்ற குறளை இக்கதை கொண்டு திறக்க முற்பட்டேன். புறமாகியதை எவன் யாத்ததோ என்று வியக்கும் வள்ளுவர் அகத்தை மட்டும் ஐயமேயில்லாமல் அன்பு என்ற உணர்வால் நிறைக்கிறார். அன்பு ஓங்கி ஓங்கி பிரேமையாகிறது. பிரேமையின் உச்சத்தில் பக்தியாகக் கனிந்து அது சரணடைகிறது. அங்கிருந்து மீளலாம். மீளாமலும் அந்த உச்ச நிலையிலேயே கிடந்து கரையலாம். “ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?” எனும்போது சிலிர்த்துக் கொண்டேன். உங்கள் எழுத்தின் வழியான பயணம் கைவெஷம் கொடுத்தது போல தான் இருக்கிறது. எதர்க்கெடுத்தாலும் உங்கள் வரிகளை உதாரணம் காட்டுவதைப்பற்றி சில நண்பர்கள் குறைபட்டார்கள். இது என் குற்றமா? இல்லை. கைவெஷம் வைத்த உங்கள் குற்றம் தான். கம்பராமாயணம் படிக்கப் போனால் அங்கும் வெண்முரசு உதாரணங்கள், தருணங்கள், தத்துவங்கள் என சிலாகிக்கிறோம். கரமசோவ் சகோதரர்கள் வாசிக்கப்போனால் அங்கு நடக்கும் உச்சகட்ட விவாததத்தின் நுனியிலும் வெண்முரசைப் பேசுகிறோம்.

“இது ஒரு மதுரமாக்கும். இதிலே ஒரு சொட்டு குடிக்காத மனுசன் இல்லை. சிலருக்கு அந்த தேவமதுரம் கொடம் கொடமா கிட்டிருது. அமிருதம் மிஞ்சினா வெசம். அவ்ளவுதான்… மத்தவன் உங்களை நினைச்சு பொறாமைப்படத்தான் செய்வான்” என்பதை ஒரு நிலை எனலாம் ஜெ. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து, ஒவ்வொன்றின் மேல் பித்து வருகிறது. ஒருவகையில் இந்த பித்து தான் நம்மை தீவிரமாக பயணிக்கச் செய்கிறது. சிறு வயது முதலே புத்தகங்களின் மீது கல்வியின் மீது தீராப்பித்து எனக்கு. இலக்கியம் பற்றியெல்லாம் அறிந்திராத போது பள்ளிப் புத்தகங்களே கற்றல் என்று நினைத்த அந்தப் பருவத்தில் கையிலிருந்த அனைத்து புத்தகங்களின் மீதும் காதல் கொண்டேன். என் தனிமையை அந்த புத்தகங்களால் நிறைத்தேன். சின்ன விடயம் அறிந்து கொண்ட கணந்தோறும் வியப்பின் உச்சிக்கு செல்வேன். தனியாக அதைப்பற்றிய புலம்பலைக் கொள்வேன். கல்லூரியிலும் இப்படித்தான் இருந்திருக்கிறேன்.

எனக்குப் புரியாத ஒரு கணக்கை தோழி ஒருத்தி விளக்கிக் கொண்டிருந்தாள். கணக்கு பாடத்தை கற்பனையில் விரித்து தவழ விட்டுக் கொண்டிருந்தாள். அதன் பொறி வந்து என்னை முட்டிய நேரம் அழுதேன். அவள் திகைத்துவிட்டாள். அவள் ஒரு பூனே பெண். ஏதும் மொழிச் சிக்கலோ என்று அவள் பயந்து “ஹே ரம்யா இஸ் எவ்ரிதிங் ஓகே” என்றாள். இல்ல இன்னைக்கு தான் இந்தக் கணக்கை என் வாழ்வோடு தொடர்பு படுத்தினேன்படுத்தினேன் என்றேன். அவள் சிரித்துவிட்டாள். அதே போல அபுனைவு புத்தகங்களை வெறி கொண்டு படித்துக் கொண்டிருந்த சமயம் ஐன்ஸ்டீன் பற்றிய புத்தகத்தை நண்பன் ஒருவன் கொடுத்திருந்தான். ஐன்ஸ்டீனின் தத்துவப்புள்ளியை E=MC2 ல் கண்டடைந்தேன். எல்லா அறிவியலாலரும் சென்று சேரும் தத்துவப்புள்ளியை கண்டடையுந்தோரும் உணர்வுப் பெருக்குக்கு ஆளானேன். வியந்து பலரிடமும் சிலாகித்திருக்கிறேன். போட்டித்தேர்வுக்கு படித்த காலகட்டம் எனக்கு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்த காலகட்டத்தைத் தந்தது. ஒவ்வொரு நாளும் புதிய விடயம் ஒன்று வந்து சேர்ந்தது. அது நான் காணும் உலகை வேறொன்றாகக் காட்டியது. முதல் இரண்டு வருடங்கள் பித்தின் உச்சத்தில் இருந்திருக்கிறேன். அறிதல்களைக் கோர்த்துக் கொண்டே வந்து காணும் சிறு விடயங்கள் தோறும் அதன் ஆதியைத் தொட்டு பிரமித்து நிற்பேன். ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள நுண்ணிய சரடை கோர்த்துக் கொண்டே வருவேன். அறிவியலில் “சலனம்” என்ற கருத்துருவைக் கண்டு வியந்து அதை சமூகவியலில் கோர்த்திருக்கிறேன். இயற்கை மட்டுமல்ல மானுடமே சலனத்தால் இயங்குகிறது என்ற கருத்துருவை அடைந்தேன். உயர்வு தாழ்வு, மகிழ்ச்சி துக்கம், வளமை வறுமை, கல்வி பேதைமை என இருவேறு முனைகளுக்கு இடைப்பட்ட சலனமே சமூகத்தை இயக்குகிறது. இதையே அறிவியலில் அழுத்தம், வெப்பம், ஆற்றல், விசை, வீச்சு, முடுக்கம் என பல வகையான கோட்பாடுகளாகக் கற்கிறோம் என்று நானே அறிந்த கணம் சிலிர்ப்பானது. இது மிகச் சாதாரணமாக பிறருக்கு இருக்கலாம். பலரும் முன்னமே அறிந்திருக்கலாம். ஆனால் நான் கண்டடையும்போது பிரமிப்பு மேலோங்கியது. ஆனால் அவையெல்லாம் புனைவிலக்கியம் வாசிக்க ஆரம்பித்ததும் சிறிய உணர்ச்சிகளாக ஆனது.

இன்று கைவெஷம் என்று சொல்லுமளவுக்கு மூழ்கியிருப்பது உங்கள் படைப்புகளில் தான். வெளிவர விருப்பமில்லை. இந்த பித்தின் இனிமையை விளக்க இயலவுமில்லை. முதல் முறையாக அடைக்கலாங்குருவி உங்கள் அறையில் கூடு கட்டியதை வாசிக்கும் போது உணர்ச்சிகரமானேன். பிரபஞ்சப்பசி, என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தீர்கள். அந்தக் குஞ்சு உங்கள் சன்னலின் விளிம்பில் நின்று ஆகயத்தை பார்த்துக் கொண்டிருந்ததை வானை நோக்கி அது ஊழ்கத்தில் இருந்ததாகக் கூறினீர்கள். “வாழ்வோ சாவோ அது வானுக்குரியது” என்றீர்கள். அந்த எஞ்சும் கூட்டில் என்னவெல்லாம் கரைத்தேன் என்று சொல்ல இயலவில்லை. படித்த அன்று அழுது கொண்டே இருந்தேன். ‘ஏன் இப்படி அழற’ னு வீட்டிலுள்ளவர்கள் கேட்டார்கள். ‘குருவி’ என்று அது இல்லாத ஜன்னலைக் காணித்தேன். “புரியல” என்றார்கள். “நம்ம ஜன்னலுக்கும் ஒரு குருவி வேணும்” என்று அழுதேன். சுற்றியும் பார்த்தேன். கூடு கட்டுவதற்கான எந்த சுவடுமல்லாத பால்கனி இது. அங்கு நின்று ‘இங்க ஒரு குருவிக் கூடு வேணும்’ என்று ஏங்கினேன். நாளடைவில் அதை மறந்தும் போனேன். சரியாக ஒரு வருடத்திற்குள்ளாக அதே மாதிரி ஒரு அடைக்கலாங்குருவி ஒரு அழகான கூட்டைக் கட்டியது. வெறுமே துணி காயப்போடும் கயிறுக்கும் சுவற்றுக்கும் நடுவில் “ஒரு அட்டைப்பாக்கு மாதிரி அம்பிட்டு சின்ன குருவி”. அதன் மூன்று குஞ்சுகள்  பிறந்திருக்கும்போதும் ‘டைனோசர் குட்டிகள்’ என்று கூறி அழுதேன். அழுதுகொண்டே இருந்தேன். இன்று பேருந்தின் பயணத்தில் காணும் சிறு செடி மனதை நிறைத்துவிடும். சின்ன தூரல் அகத்தை பொழியச் செய்யும். அலுவலக நேரத்தில் எப்போதாவது தென்படும் சிறு குழந்தையின் புன்னகை என்னை மூழ்கடித்துவிடும். கேளாச்சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். பொங்கிக் கொண்டே இருக்கிறேன். எதுவும் என்னை கவலைக்கு உள்ளாக்குவதில்லை. கையாளமுடியாத கவலைகளிலிருந்து என்னை உடனே விடுவித்துக் கொள்ள முடிகிறது. யாவற்றுக்கும் பதில் உங்களிடமிருந்து வருகிறது. பதில் என்பதை விட உங்கள் எழுத்துக்களுடன் உரையாடுகிறேன் எனலாம்.

“பிள்ளே, இங்க மனுசங்கள பாத்தா ஒவ்வொருத்தரும் தனித்தனியா அலையுத மாதிரி தோணும். ஆனா அத்தனைபேரையும் ஒண்ணாச் சேத்துக் கெட்டிப்பின்னி வச்சிருக்கு. சொந்தம், பந்தம், பாசம், அன்பு, காதல், காமம்னு என்னென்னமோ இருக்கு. அது ஒரு மாதிரி ஒரு பசைன்னு வையுங்க. இல்ல ஒரு வலைன்னு சொல்லுங்க. அதனாலேதான் மனுச வாழ்க்கை இங்க நடக்குது. மனுசங்கள்லாம் சேந்து ஒற்றைக்கெட்டா இங்கிண வாழுறாங்க… “ என்றீர்கள். அதை உணர்கிறேன். எல்லோரிலும் என்னைக் காண்கிறேன். என்னில் பிறரைக் காண்கிறேன். இன்னும் உங்களில் மூழ்கி முடியவில்லையான பயணமிது. “தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்” என்ற வரிகளின் மதுரத்தை என் வாழ்விற்கு அளித்ததற்காக மிக்க நன்றி ஜெ. கைவெஷமாக்குமே. அது நல்லது என்று கண்டேன்.

பிரேமையுடன்

இரம்யா.

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்1

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம், கடிதம்-6

முந்தைய கட்டுரைதவம் நிறைதல்- சக்திவேல்
அடுத்த கட்டுரைஅழிசியின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா