கேளாச்சங்கீதம்
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதத்தின் ஒரு நுண்ணிய வரியை நான் இரண்டாம் முறையாக அதை வாசிக்கும்போதுதான் கண்டறிந்தேன்.
எல்லா அமிர்தமும் திரியுற ஒண்ணுதான் இந்த உலகம். உடலுக்குள்ள போனா அமிர்தம் அப்பவே மலமா மாற ஆரம்பிச்சாச்சு. மலம் எதுவானாலும் உடலைவிட்டு போயாகணும்.
உண்மையில் இந்தக் கதை அந்த அதிதூய எக்ஸ்டஸி பற்றியா பேசுகிறது? இல்லை அது மனிதனின் objective existence என்பதில் வேறு வழியே இல்லாமல் திரிபடைந்து மலமாக ஆகி வெளியேறிவிடுவதைச் சொல்கிறதா?
மின்னலை தொடும் வாய்ப்பு சில மரங்களுக்கு கிடைக்கின்றது. ஆனால் அவை கருகிவிடுகின்றன. இது ஒரு கவிதை வரி. கருகுவதன் வழியாக அவை மின்னலை உள்வாங்குகின்றன. அதுதான் செய்ய முடியும்.
நாம் மனிதர்கள் என்ற நிலையில் நம்முடைய existence வழியாகவே பிரபஞ்ச அனுபவத்தை இழந்துவிடவேண்டியவர்களா என்ன?
பிரபாகர்
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதம் கதையின் முக்கியமான வரி இது. “சொப்பனம்னா வேரு, யதார்த்தம் மரம்” இதைத்தான் கதை சொல்கிறது என வாசித்தேன். இந்த பெரிய இனிமையும் கொந்தளிப்பும் நிகழ்வது கனவில். ஆனால் கனவு என்றால் பொய் அல்ல. அதுதான் வேர். அங்கிருந்துதான் எல்லாமே முளைக்கின்றன.
அருண்குமார்
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதம் கதையுடன் அளிக்கப்பட்டுள்ள பெயிண்டிங் அற்புதமானது. அதை வரைந்தவர் Nadya korotaeva. ரஷ்ய ஓவியரான நடியா இப்போது இந்தோனேஷியாவில் வசிக்கிறார். ஏராளமான சர்வதேச அரங்குகளில் பெரும்பாராட்டைப் பெற்றவை அவருடைய ஓவியங்கள். பெரும்பாலும் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்கள்.
நடியாவின் ரத்த ஊற்று [Fountain Of Blood] என்னும் ஓவியத்தின் நகல் நீங்கள் அளித்திருப்பது. அவர் அதில் வரைந்திருப்பது மலர்போலவும் பெண்ணின் குறி போலவும் மயக்கம் தரும் ஒரு வடிவம். அதை சக்திமையம் என்று கொண்டால் நீங்கள் இந்தக்கதைக்கு மேலதிகமான ஒரு அர்த்தத்தை அந்த ஓவியம் வழியாக அளித்திருக்கிறீர்கள்
இந்த ஓவியங்களை எப்படி தேடிப்போய் கண்டுபிடிக்கிறீர்கள் என்று அறிய ஆசை
எஸ்.ரவீந்திரன்