அன்புள்ள ஜெயமோகன்,
எனக்குள்ள சிறுகெட்ட பழக்கம் கதையை படிக்கும்போது சிலவரிகளை தவிர்த்துவிட்டு முன்சென்று விடுவேன்.இலக்கிய கதைகளில் அப்படி தவிர்ப்பது அதன் நுண்மையை உணர்ந்துகொள்ள தடையென அறிந்துகொண்டேன், வெற்றி சிறுகதை வந்தபொழுதே படித்தேன். சற்று அதிர்வு தந்த கதை.சமீபத்தில் ராஜா எழுதிய வெற்றி சிறுகதையைப் பற்றிய கடிதத்தை படித்தேன். லதாவை இந்திய நிலமாக உருவகித்து அதன் மீது நடைபெறும் ஆதிக்கத்தை சொல்லியிருப்பது எனக்கு புதுக்கோணம். இலக்கிய விவாதம் இலக்கிய நுண்மையை, விரிவை அறிய உதவும் படிகளென இன்று உணர்கிறேன். நம் இயல்புக்கேற்ப படிகளின் எண்ணிக்கை அமையும். சென்றடையும் உச்சியும் அமையும்.
வெற்றி சிறுகதை என் எண்ணங்கள்:
நேற்றிரவு உறக்கச் செல்லும் முன் லதா தன்னை ஜெயித்ததற்கு ரங்கப்பர் கொடுத்த பரிசுதான் ஐந்துலட்சமென ஏன் சொல்ல வேண்டுமென யோசித்துக்கொண்டே உறங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு கழிவறை செல்ல எழுந்தபோது மீண்டும் அதே கேள்வி மனதில் வந்தது. லதா ஏன் சொன்னாள்? லதா யாரிடம் சொன்னாள்? நமச்சிவாயத்திடமா? இல்லை என்னிடம். நம்மிடம். அவரிடம் சொல்லுவதுமூலம் அந்த செய்தி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமென அவள் அறிந்திருக்கிறாள். அதன் மூலம் தன் ஏக்கம் தீர்க்கப்படுமென எண்ணினாள். அவள் சொல்லியது ரங்கப்பர் என்னை ஜெயித்ததற்கு உனக்கு கிடைத்தது ஐந்து லட்சம்.ஆனால் இழந்தது அமுதத்தை தரும் அட்சய பாத்திரத்தை. ஆங்கிலேயர் இந்திய மனதை வென்று பின் நிலத்தை வென்றனர்.இன்று அமெரிக்கா மனதை வென்று கொண்டிருக்கிறது.சரியாய் தெரியு ம் ரங்கப்பர் தேடியது, முதலாளித்துவத்தின் உச்சியான அமெரிக்காவில் வாழ்ந்த ரங்கப்பர் தேடியது பணத்தால் வெல்ல முடியாததை.அதைத் தேடித்தானே இன்றும் இங்கு வருகிறார்கள்.தான் தோற்று மானுடம் வெல்லும் ஒரு தருணம். லதாவிடம் தோற்றார்.லதா நினைத்திருந்தால் அவரை தோற்கடிக்காமல் ஐந்து லட்சத்தை வாங்கியிருக்கமுடியும்.அவள் விதித்த விதி நமச்சிவாயம் வெல்ல வேண்டும். ராயப்பன் தேடியது இப்படி ஒரு பெண்ணை, நிலத்தை. கண்டுகொண்டபின் தோல்வி இனிக்கிறது.
பின் அவள் ஏன் அந்த இரவு போனாள்? ராயப்பர் தன் மனதை வென்றதால். நிலத்திற்கு உடலும், மனமுமுண்டு. அவர் மனதை வென்றார். அவள் போகத்தானே வேண்டும்.நிலம் அத்தனை எளிதாய் நம்மை கைவிடுவதில்லை.அதனால் நமச்சிவா யம் வென்றார்.பின் இறக்கும்போது ஏன் சொன்னாள்? ஒரு தாயின் கோரிக்கை. தன் மகன் தன் மனதை வெல்ல ஆசைப்படும் கோரிக்கை.எனக்கு சொல்லப்பட்ட கோரிக்கை. நமக்கு சொல்லப்பட்ட கோரிக்கை. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். அந்த எண்ணத்தை நமக்குள் விதைத்துச் சென்றாள். சான்றோனென நான் நினைப்பது நகலெடுக்காத சிந்தனையை உருவாக்குபவனை, இந்நிலத்தின் ஆன்மிகத்தை நிலைநாட்டுபவனை.அவள் மனதை மீண்டும் வெல்லும்வரை ராயப்பர் மட்டுமே வென்றார்.
அன்புடன்,
மோகன் நடராஜ்