அன்புள்ள ஜெயமோகன்,
ஒருவரியில் சொல்லவேண்டுமானால் சிரிப்பு, சிரிப்பு , சிலவருடங்கள் கழித்து இப்படி ஒரு சிரிப்பு, வயிறு வலிக்க சிரிப்பு. நினைவிலெழுந்து மீண்டும் சிரிப்பு. ஒருநாள் அக்கிராமத்தில் வாழ்ந்துவிட்டேன்.இருந்தாலும் ஆண்களை கொஞ்சம் வீரமாய் காட்டியிருக்கலாம். ஆண்களின் சார்பில் கண்டனங்கள். அற்புதமான நையாண்டி கதை. நையாண்டி வழியாக அரசாங்கத்தை, சமூகத்தை, மதத்தை, மதக்கொள்கையை தன் தேவைக்கேற்ப வளைக்கும் மனிதனை, ஆண்களின் ஆதிக்க இயல்பை குட்டிவிட்டு செல்கிறது. வாசிக்கும்போது சிரிப்பு மட்டும், வாசித்தபின் யோசிக்கும்போது நையாண்டிவழி உணர்த்தும் செய்தி மட்டும் கண்முன் நிற்கிறது.
சிரித்த பல தருணங்கள் சில இங்கு:
“வீட்டிலே ஆம்புளைங்க இருந்தாகளே அம்மிணி!” என்றாள் பொன்னம்மை”
“அதாருடீ நானறியாம?” என்றாள் ராஜம்மை
*
“உனக்க அப்பன வரச்சொல்லுடா எரணங்கெட்ட நாயே”
“நாயி உனக்க அப்பன்”
“எரப்பாளி… உறங்கிக்கிடந்தா இவன் நம்மள தின்னிருவானே” என்றார் கரடி
*
“ஏமான், சொறியுது”
“கொரங்கு சொறியாம பின்ன டான்ஸாலே ஆடும்? வெளங்காப்பயலாட்டு இருக்கானே”
*
கவட்டைக்குள் வாலை சுருட்டிக்கொண்ட கருப்பன்
“எளவு பயந்து பூனையா மாறிட்டுபோல!”
கரடி நாயைப் பார்த்தபின் அவமான உணர்வுடன் “அதுக்கு தேகசொகமில்லை” என்றார்.
அன்புடன்,
மோகன் நடராஜ்
அன்புள்ள ஜெயமோகன்,
தன் வாலை தானே விழுங்கியிருக்கும் சர்ப்பம்போல் நம்முள் நாம்மட்டும் புதைந்திருக்கும் தருணங்கள் உண்டு. அனைவர்மீதும் விலக்கம், எதிலும் பிடிப்பின்மை, தர்க்கம் தொலைந்த தருணங்கள். மனதின் பித்து கொந்தளிக்கும் காலங்கள். அந்த பித்தையும்தாண்டி ஏதோவொன்று நம்மை பிணைத்திருக்கும்.புவியில் உயிர்ப்புடன் வைத்திருக்கும். கருவில் உருவாகும்போது நம்முடன் இணைந்த தெய்வம். அது என்றும் நம்மை கைவிடுவதில்லை. நம்முடன் இருக்கும் தாய்போல. அவள் பொறுமையாகத்தான் நம்மை மீட்டெடுப்பாள். அவளின் பிணைப்பு ஆறுதலும், பலமும் தரும்.சிறுகச் சிறுக ஏதோவொன்று நமக்கும் நிறையும்.எதோ தருணம், யாரோ மனிதர், எதோ சப்தம், எதோ காட்சி மாயக்கணமென வரும். அது இருட்டில் எழுப்பப்பட்ட சிறு வெளிச்சம். வெளிச்சத்தின் வல்லமை அதை எத்தனை இருட்டு வந்தாலும் அணைக்க முடியாது. அந்த சிறு வெளிச்சம் பெரும் பாதையின் தொடக்கத்தைக் காட்டும்.
அன்புடன்,
மோகன் நடராஜ்