கேளாச்சங்கீதம்- கடிதங்கள்

கேளாச்சங்கீதம்

அன்புள்ள ஜெ

உயிர்மையில் கேளாச்சங்கீதம் கதையை வாசித்தேன். நெஞ்சில் தீ எரிந்தது. என்னால் கைநடுங்காமல் வாசிக்கவே முடியவில்லை. வாசித்து முடித்தபோது கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். நான் தொடர்ந்து கதைகளை வாசிப்பவன். ஆனால் இந்தக்கதை போல ஒரு கதை என்னை இப்படி பாதித்ததில்லை.

ஏனென்றால் இது என்னுடைய கதை. இதேபோல இனித்து இனித்துச் சாகும் ஒரு நிலையில் நானும் இருந்தேன். மூன்று ஆண்டுகள் அந்த நிலை இருந்தது. அப்போது எப்படி இருந்தேன் என்று எனக்குச் சரியாக நினைவில் இல்லை. என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தார்கள் என்று அவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருந்தேன். அப்படி ஓர் உறவு. ஒருதலை உறவுதான். அதற்கு ஒரு காரணமும் கிடையாது. அழகு, நெருக்கம் ஒன்றுமே காரணம் கிடையாது. ஏன் உருவானது என்றே தெரியாது. அப்படியே விழுங்கிவிட்டது.

நான் மூன்று ஆண்டுகள் வேறு நினைப்பே இல்லாமல் இருந்திருக்கிறேன்.அவள் வரும் வழியிலேயே நாளெல்லாம் நிற்பேன். அவள் வேலைபார்க்கும் பள்ளி வாசலில் நிற்பேன். அவள் பின்னாலேயெ போவேன். நடு ராத்திரியில் அவள் வீட்டுவாசலில் நிற்பேன். அவள் கணவனும் பிறரும் பலமுறை என்னை அடித்திருக்கிறார்கள். மனநலச் சிகிச்சை எடுத்திருக்கிறேன்.

அந்த மனநிலையை கன்னி நாவலில் பிரான்ஸிஸ் கிருபா கொஞ்சம் எழுதியிருக்கிறார். மஞ்சள்வெயில் நாவலில் யூமா வாசுகியும் எழுதியிருக்கிறார். ஆனால் அவையெல்லாம்  கொஞ்சம் மிகையுணர்ச்சி கொண்டவையாக இருந்தன. அந்த மனநிலையை நேரடியாகச் சொல்லச் சொல்ல அது கீழே இறங்கிக்கொண்டே போகும். அதற்கு ஒரு உளறல்மாதிரியான தன்மைதான் வரும். இந்தக்கதையில் அதைச் சொல்லவே இல்லை. வேறு ஒன்று சொல்லப்படுகிறது. ஆனால் அதுதான் உணர்த்தப்படுகிறது.

எல்லாருக்கும் இந்தக்கதை கொஞ்சம் புரியும் என நினைக்கிறேன். ஏனென்றால் இந்த பைத்தியம் கொஞ்சநாளாவது எல்லாருக்கும் இருந்திருக்கும். என்னைப்போன்ற சிலருக்கு ஆண்டுக்கணக்கில் நீடித்திருக்கும். இந்த பித்து ஒரு பெரிய சித்திரவதை. அதேசமயம் பெரிய இன்பமும்கூட. கதையில் அந்த சித்திரவதை அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கொஞ்சம் பிரக்ஞை மிச்சம் இருக்கும்போது எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று தோன்றும். ஆனால் மீண்டும் உள்ளே போய்விடுவோம். இந்த அலைக்கழிப்புதான் மிகப்பெரிய சித்திரவதை

ஆனால் அந்த மாயம் எப்படி விலகுகிறது என்பதும் ஆச்சரியம்தான். ஒரு திடீரென்ற கணத்தில் அது மாறிவிடும். எல்லாமே சரியாகிவிடும். நான் படிப்புக்காக அமெரிக்கா வந்தேன். அப்படியே மாறிவிட்டது. இங்கே நிலைகொள்வதற்காக கடுமையாக போராடினேன். ஏகப்பட்ட சிக்கல்கள். இங்கே வருவதற்கு பல சட்டச்சிக்கல்கள். அதில் மாட்டியதனால்தான் நான் வெளியே வந்தேன். இந்தச் சிக்கல்கள் அந்த பிரச்சினையில் இருந்து என்னை வெளியே கொண்டுவந்தன. இதெல்லாம் அபத்தம்தான். ஆனால் இப்படித்தான் இருக்கிறது.

ஆனால் இங்கே இப்படி மாறியபிறகு என் வாழ்க்கையிலே மிகப்பெரிய ஒன்றை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அந்தக்காலத்தில் இசை என்னை பெரிய போதைக்கு கொண்டுசென்றது. காட்டுக்கிளி பாட்டு சொல்ல வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள என்று ஒரு பாட்டு. அதை நான் ஒருமுறை ரோட்டில் கேட்டு மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன். சில பாட்ட்டுகளை தொடர்ச்சியாக பலமணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது பாட்டுகேட்பதே இல்லை. கேட்டாலும் மனம் நிலைகொள்வது இல்லை. இப்போது கலையோ சுவையோ இல்லை.

இந்தக்கதையில் ‘மீளமுடியாமலேயே அழிந்தால்கூட நல்லதுதானே’ என்ற வரிதான் உச்சம். அதுதான் இந்தக்கதையின் திருப்பம். அந்த வரி என்னை தீயால் சுட்டதுபோல இருந்தது.’நார்மல்ஸி’ என்பது வசதியானது. ஆனால் அதில் உண்மையான மகிழ்ச்சி என்று ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. இந்தக்கதையின் ஒவ்வொரு வரியும் கதைக்கு வெளியே விரிந்துகொண்டே இருக்கிறது.

எம் [தமிழாக்கம்]

 

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையின் மூலக்கதாபாத்திரம் ஒரு பூசாரிப்பிராமணர். அவரைப்பற்றி நீங்கள் வாழ்விலே ஒருமுறை கட்டுரைகளில் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இதேபோல ஒரு விபச்சாரி மேல் பித்து கொண்டு அதிலிருந்து மீளாமலேயே இறந்துபோன ஒருவர்.

ஒவ்வொரு வாழ்க்கையிலும் உள்ள என்றைக்குமுள்ள பிரச்சினைதான். மீளவேண்டுமா என்பது பெரிய கேள்விதான். பெரும்பாலானவர்கள் கண்ணைமூடிக்கொண்டு வெளியே குதித்து மீண்டுவிடுவார்கள். மீளாமலேயே போகிறவர்கள் பிரான்ஸிஸ் கிருபா போன்ற சிலர்தான்.

 

எம்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைபுறப்பாடு, கடிதம்
அடுத்த கட்டுரைஇரவின் நாணம்