அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்.
நலம், நலமே சூழ்க.
இங்கு புதுவையில் மணிமாறன் மட்டுறுத்தியாக நின்று செயல்படும் எங்கள் சிறுகதைக்கூடலில் விகடன் தீபாவளி மலரில் வந்துள்ள ‘கல்குருத்து’ சிறுகதையை இந்த வாரம் விவாதிப்பதென்று முடிவெடுத்தவுடன் வண்டியெடுத்துக்கொண்டு நகருக்குச் சென்று மலரை வாங்கி வந்துவிட்டேன்.பொதுவாக விவாதத்திற்குரிய கதையின் pdf வடிவத்தை குழுவில் எப்படியும் பதிவேற்றி விடுவார்கள்தான்.ஆனால் அதற்குப் பொறுமையேது.
கதை தங்களின் தங்கையா நாடார்,கரடி நாயர் வரிசையிலானதுதான். வழமையான பகடிகளுக்கு பஞ்சமிருக்காது என்று நினைத்துப் படித்து, கதை உள்ளிழுத்துக்கொண்ட போதுதான் இது வேறு தளத்திலான கதை என்பது புரிபட்டது.
எதையோ நினைத்து வந்தவளுக்கு இங்கு இரண்டு கிழடுகளைத் தலையில் கட்டியவுடன் வாழ்க்கையில் ஏமாற்றமும் எரிச்சலும் அதனால் குடும்பத்தில் ஒரு வித நிலைகொள்ளாமையும் எற்பட்டு பின்னர் அதிலிருந்து விடுபட்டு அதைக்கடந்து அவள் பூரணமாவதுதான் கதை.
அவளது தினசரி அழுகைக்கும் ஆற்றாமைக்கும் காரணம் இல்லாமலில்லை. கண்ணப்பன் தாய் தந்தை, சகோதர சகோதரி என்ற எந்த ஒட்டுறவும் இல்லாமல் வளர்ந்தவன். அதன்னியில் பொழுது விடிந்தால் மாடு கன்று, தோட்டம் துறவு கூடவே வியாபாரம் என்று ஓடிக் கொண்டிருப்பவனுக்கு மனைவியுடன் பரிவாய்ப் பேச நேரமிருப்பதில்லை.பகலில் எரிந்து விழுபவன் இரவுத் துணைக்கு மட்டும் அணுகும் போக்கை எந்தப் பெண்ணும் இயல்பாக எடுத்துக் கொள்ள மாட்டாள்தான்.
எப்போதும் அடுப்பங்கரைக்குள் கசப்புடனேயே நுழைந்து வந்த அழகம்மை கதையின் இறுதியில் சந்தோஷமாக புன்னகைத்துக்கொண்டே உள் நுழைவதாக முடிகிறது.மூத்ததுகளைப் பாரமாகவே கருதிவந்த அழகம்மையின் கல் மனதை மென்மையான குருத்தாக உருமாறச் செய்த மந்திரம் எது என்பதுதான் கதையின் மூல நாடி. ஒரு பகல் பொழுதுக்குள் இந்த ரஸவாதம் எப்படி நிகழ்ந்தது . அந்த மெல்ட்டிங் பாயிண்டை வாசகன் உணர்ந்துவிட்டால் கதை அவன் வசமாகிவிடும்.ஆம். அழகம்மை தாயாகிவிட்டாள்.அதை அவளே இன்னும் உணர்வதற்குள் வாசகர்களாகிய நம்மை உணரச் செய்த வரிகளில்தான் எழுத்தின் கூர்மை வெளிப்படுகிறது.அம்மையான அழகம்மையைத்தான் பாட்டா,பாட்டிக்கு கருப்பட்டி கொடுத்து பாட்டியின் பொருளற்ற பிதற்றல் மொழியை, மழலைச் சொல் கேட்ட அன்னையாக புன்னகைக்க வைக்கிறது.தாய்மையின் வலிமையை உணர்த்தும் வரிகள்.
அம்மியை உருவகப்படுத்தி இரண்டு விஷயங்கள் இக்கதையில் பேசப்பட்டிருக்கிறது.ஒன்று அந்த பழைய உருக்குலைந்த அம்மி இந்த குடும்பத்தின்,கண்ணப்பனின் வளர்ச்சிக்காகத் தங்களையே தேய்த்துக்கொண்ட முதியவர்களைக் குறிப்பிடுகிறது.மற்றொன்று, புதிதாகப் பொலியப்படும் அம்மி அழகம்மையை உருவகப்படுத்துகிறது.அம்மி தயாரனவுடனே பயன்பாட்டுக்கு வந்துவிடுவதில்லை,அது பழக கொஞ்சம் நாளாகும் என்று தாணுலிங்க ஆசாரி கூறுவது அழகம்மைக்கும் பொருந்தும்தானே.
இப்படி வாசக இடைவெளி கொடுத்து அவரவர் மனம் பூத்ததிற்கேற்ப ஊகத்திற்கு இடம் கொடுத்த கதையைப் படைத்த உங்களுக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
இரா.விஜயன்
புதுச்சேரி-10.
அன்புள்ள ஜெ
கல்குருத்து கதையை விகடனில் கண்டேன். சகிக்கவே முடியாத ஓவியம் ஒன்றை போட்டிருந்தார்கள். ஒரு நவீனக்கவிதை போன்ற கதை. அதன் மையமே தேய்ந்து மென்மையான அம்மிக்குழவியும் இன்னொரு பக்கம் கல்லில் இருந்து பிறந்து வரும் அம்மியும் குழவியும்தான். கதையை புரட்டிக்கூட பார்க்காமல் ஒரு கேலிச்சித்திர பாணியிலான பொம்மை படத்தை போட்டிருக்கிறார் ஓவியர். விகடன் போன்ற இதழ்களில் இலக்கியப்படைப்புக்களை எழுதும்போது வரும் மிகப்பெரிய சிக்கலே இதுதான்.
அர்விந்த்