அன்புள்ள ஜெ,
நலம்தானே? இந்நாட்களில் தொடர்ச்சியாக சில விவாதங்கள் நண்பர்கள் நடுவே ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் அடிக்கடி அடிபடும் ஒரு வாதம் என்னை தொந்தரவு செய்கிறது. உங்களுக்குத் தெரியும், நான் உங்களுடைய தீவிரமான வாசகன். சென்ற சில ஆண்டுகளாக உங்களை அதிதீவிரமாக வாசிக்கிறேன். என் நண்பர்கள் சொல்லும் முக்கியமான குற்றச்சாட்டு ‘ஒருவரை மட்டுமே முக்கியமாக வாசிக்காதே. அவர் உன்னை பாதித்துவிடுவார். உடனே அவரைவிட்டு விலகு.வேறு எதையாவது படி” இது திரும்பத்திரும்ப சொல்லப்படும் உபதேசம்.
“ஜெயமோகன் குருபீடமாக இருக்கிறார். மடம் கட்டியிருக்கிறார். அவருடைய வாசகர்கள் எல்லாம் கொத்தடிமைகள்” இது வழக்கமாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. “அவர் எவரையும் வளர விடமாட்டார். அவரை அணுகினால் வளர முடியாது” இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். “சுயசிந்தனை வேண்டும் என்றால் சுதந்திரமாக இருக்கவேண்டும். எவரையும் அணுகக்கூடாது. எவரும் நம்மை பாதிக்க விடக்கூடாது. நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள்.
நான் இதெல்லாமே அபத்தமான சிந்தனைகள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் இதை நீங்களே கோர்வையாக விளக்கவேண்டும் என நினைக்கிறேன். அந்தக் கட்டுரையை இதற்கெல்லாம் பதிலாக அனுப்பிக்கொண்டே இருக்கலாம்.
ராஜசேகர் பி.
அன்புள்ள ராஜசேகர்,
இதற்கும், இதேவகையான பல கேள்விகளுக்கும் முன்பும் விரிவாக பதிலளித்திருக்கிறேன். தொடர்ச்சியாக இந்த கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் இலக்கியச் சூழலில் இன்று எவ்வகையிலாவது இலக்கியத்தை அறிந்து உள்ளே வருபவர்களை விட இலக்கியத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் சமூகவலைத்தளங்கள் வழியாக வந்துசேர்பவர்கள் மிகுதி. அவர்கள் அடிப்படையில் சுரணையற்றவர்கள். அறிவியக்கம், இலக்கியம் பற்றி ஏதும் தெரியாதவர்கள். அதைவிட அவற்றின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞையோ மதிப்போ இல்லாதவர்கள்.பெரும்பாலும் எளிமையான அரசியல்சார்புகள் கொண்டவர்கள். அதற்கு அடிப்படையாக இருப்பவை சாதி, மதம்.
இந்தப் பதில்கள் எல்லாமே அவர்களுக்குத்தான். இலக்கியவாசிப்பு கொண்டவர்களுக்கு இதை பெரிதாக விளக்க வேண்டியதில்லை. இந்த பெருங்கும்பம் நம்மைச் சூழ்ந்து ஞொய் என ஒரு சத்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. அவர்களில் சற்றேனும் நுண்ணுணர்வுள்ளவர்களிடம் இதையெல்லாம் பேசலாம். மற்றவர்களிடம் நேரவிரயம் செய்யக்கூடாது.
இனி உங்கள் கேள்விகள். முதல் விஷயம், நம்மை பாதிக்கும் எழுத்தாளர்களிடமிருந்து விலகவேண்டுமா? சரி, விலகி? நம்மை கொஞ்சம்கூட பாதிக்காத எழுத்தாளர்களை வாசித்து என்ன அடையப்போகிறோம்? இலக்கியம் எழுதப்படுவதே பாதிக்கவேண்டும், ஆட்கொள்ளவேண்டும் என்னும் நோக்குடன்தான். ஓர் இலக்கிய ஆக்கம் நம்மைப் பாதிக்கிறதென்றால் அது நம் தர்க்கபுத்தியை வெல்கிறது, நம் கற்பனையை தூண்டுகிறது, நாம் எண்ணாதவற்றை எண்ணவும் காணாதவற்றை காணவும் செய்கிறது என்றே பொருள். அதுதான் இலக்கியத்தின் செயல்முறை. ஆகவே நல்ல ஆக்கம் வாசகனை மூழ்கடிக்கும், தன்னுள் இழுத்துக்கொள்ளும், அவனை மாற்றியமைக்கும். அப்படிச் செய்பவைதான் உலகத்து உயர்படைப்புக்கள். அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு ‘பொத்தினாற்போல’ வாழவேண்டும் என்கிறார்களா?
உண்மையில் அதைத்தான் இந்த மொண்ணைகள் நம்மிடம் சொல்கிறார்கள். அது நடுத்தரவர்க்க மனநிலை. எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாமல், எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் ‘நாம உண்டு நம்ம சோலி உண்டு’ என இருந்துவிடுதல்தான் நடுத்தரவர்க்கத்தின் உச்சகட்ட வாழ்க்கைத் தரிசனம். தீனி, செக்ஸ், சாதிமத அடையாளங்கள், சில்லறை அரசியல், சினிமா, மேலும் கொஞ்சம் வம்பு இவ்வளவுதான் அவர்கள் கண்ட வாழ்க்கை. அவ்வாறு இருந்து சாகவிரும்பும் ஆத்மாக்களுக்கு ஏது இலக்கியம்? என்ன அறிவியக்கம்? அது வேறொரு உலகம். புழுக்களின் உலகம். அவ்வுலகுடன் அறிவியக்கவாதிக்கு உரையாடலே இல்லை.
நம்மைப் பாதித்து ஆட்கொள்ளும் படைப்புக்கள் நம்மை அழிப்பதில்லை, நம்மை அடிமைப்படுத்துவதில்லை. ஏனென்றால் ஒரு படைப்பு உங்களை ஆட்கொள்கிறதென்றால் அது உங்களை விடமேலான ஆன்மிகத்துடன், கவித்துவத்துடன், அறிவுத்தரத்துடன் இருக்கிறது. உங்களுக்கு அது ஓர் அறைகூவலையே விடுக்கிறது. அதை எதிர்கொள்ள உங்கள் ஆன்மிகமும் கற்பனையும் அறிவும் கூர்கொள்கின்றன. நீங்கள் உங்கள் உச்சகட்ட ஆற்றலை வெளிப்படுத்துகிறீர்கள். ஆகவே ஆட்கொள்ளும் படைப்பு உங்களை மழுங்கடிப்பதில்லை. உங்களை கூராக்குகிறது.
இதை நல்ல படைப்பை வாசிக்கும் எவரும் அறியமுடியும். அந்தப்படைப்பு வழியாக நாம் முன்னேறுகிறோம், அடுத்த படிக்குச் செல்கிறோம். ஒரு படைப்பை எப்படி கடந்து செல்கிறோம்? அந்தப்படைப்பை முழுமையாக உள்வாங்குவதன் வழியாகத்தான். அவ்வாறுதான் நாம் இலக்கிய ரசனையிலும் அறிவுத்திறத்திலும் வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு பெரும்படைப்பு நமக்கு விடுவது ஓர் அறைகூவலை . அதை எதிர்கொண்டே நாம் நம்மை மேலெடுக்கமுடியும்.
அதிலுள்ள இன்பமும் வெற்றியின் நிறைவும் சாமானியர்களுக்குப் புரியாது. ‘கஷ்டப்பட்டு புக்கு படிக்கிறான்’ என இலக்கியவாசகனைப் பற்றி நினைப்பவர்கள் அவர்கள். ஆகவே மேலும் மேலும் ஆட்கொள்ளும் படைப்புகளை நாடிச்செல்லுங்கள். அதன்பெயர்தான் அறிவுப்பயணம், இலக்கியப்பயணம். அத்தனை இலக்கியவாசகர்களும் செய்யும் பயணம் உண்மையில் அதுதான்.
சில மொண்ணைகள் ஓர் இலக்கிய ஆக்கத்தை ’விமர்சனமின்றி’ ஏற்கவேண்டுமா என்பார்கள். முதலில் அது நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கவேண்டும். விமர்சனத்தால் அதை முதலிலேயே தடுத்துவிட்டால் அதன்பின் அந்த படைப்புக்கும் நமக்கும் தொடர்பே இல்லை. அதை படிப்பதற்கு முன்னரே நாமிருக்கும் நிலையில் நின்றபடியே நாம் அதன்மீதான விமர்சனங்களை உருவாக்கிக் கொள்வதைப்போல ஒரு படைப்பை வெளியே நிறுத்தும் செயல் இன்னொன்றில்லை. எதை வாசித்தாலும் நான் மாறவே மாட்டேன், லாந்தர் கம்பமாக நின்ற இடத்திலேயே நிற்பேன் என்பது ஒருவரின் நிலைபாடு என்றால் அவர் வாசிக்கவேண்டிய தேவையே இல்லை.
ஒரு நூலை வாசித்ததும் அதற்கு ‘எதிரான’ நூலை வாசித்து அதன்மீதான விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பவர்கள் எதையுமே வாசித்ததில்லை என்று பொருள். ஒரு நூலை வாசிக்கையில் நாம் அந்நூலுடன் சேர்ந்து வளர்கிறோம். அந்நூலை நாம் கடந்ததும்தான் அதன்மீதான விமர்சனங்கள் உருவாகின்றன. அவ்விமர்சனங்கள் வெளியே இன்னொருவரால் அளிக்கப்படுவன அல்ல. நாமே நம்முள் இருந்து உருவாக்கிக் கொள்பவை. நம் வாழ்க்கைநோக்கும் நம் ஆன்மிகப்பயணமும் நம் அறிவுத்தர்க்கமும் நமக்கு அளிப்பவை.
அவ்வாறு நம் கருத்தை உருவாக்கிக்கொள்வதற்காகவே நாம் வாசிக்கிறோம். அன்றி, அவர் அபபடிச் சொல்கிறார், இவர் இப்படிச் சொல்கிறார் என்று பேசிக்கொண்டிருப்பதற்காக அல்ல. நல்ல இலக்கியவாசகன் படைப்புகளைப் பற்றிய ‘தன்’ கருத்தையே சொல்வான். அது அவன் அப்படைப்பை உள்வாங்கி, உணர்ந்தமையால் விளையும் கருத்து.
ஓர் எழுத்தாளன் நம்மை கவர்கிறான், நம்மை ஆட்கொள்கிறான் என்றால் அதற்கு என்ன பொருள்? நாம் மண்ணாந்தைகள், அந்த எழுத்தாளன் மாயாவி என்றா? அப்படித்தான் உங்களிடம் பேசும் பாமரர்கள் நினைக்கிறார்கள். இலக்கியவாசகன் அறிவிலியோ அப்பாவியோ அல்ல. அவன் இங்குள்ள லட்சம்பேரில் ஒருவன். மிக அரிதானவன். அவனுக்குத்தெரியும் எது உண்மை எது பொய் என. எது பாவனை எது ஆழம் என. அவன் தன் அனுபவத்தையும் ரசனையையும் அறிவையும் முன்வைத்தே வாசிக்கிறான்.
வாசகனும் எழுத்தாளன் அளவுக்கே நுண்ணுணர்வும் அறிவும் கொண்டவன்தான். ஒரு நல்ல படைப்பு அந்தப்படைப்பின் அறிவுத்தரத்தை நோக்கி ,நுண்ணுணர்வுத்தளம் நோக்கி ,ஆன்மிகநிலை நோக்கி அதன் வாசகனை இழுக்கிறது. அவனை ஆசிரியனுக்கு நிகராக அமரச்செய்கிறது. பலசமயம் ஆசிரியனை விட மேலே கொண்டுசெல்கிறது. அந்நிலையை அடைந்தால் நாம் அந்த ஆசிரியனை இயல்பாகக் கடந்துசெல்கிறோம்.
கடந்துசெல்கிறோம் என்றால் அவனை நிராகரிக்கிறோம் என்றல்ல பொருள். அவனிடமிருந்து நமக்கான ஒன்றை உருவாக்கிக் கொள்கிறோம், நமது வழியொன்றை அவனிடமிருந்து திறந்துகொள்கிறோம் என்றுதான் பொருள். அவனை எதிர்த்துச் செல்கையிலேயேகூட அந்த வழி அவனிடமிருந்து உருவானது என அறிந்திருக்கிறோம்.
ஓர் எழுத்தாளன் என்னை ஆட்கொள்கிறான் என்றால் அதன் பொருள் நானும் அவனும் சந்திக்கும் புள்ளிகள் மிக ஆழமானவை என்று மட்டும்தான்.காஃப்காவை அப்படி தன் மெய்யாசிரியனாகக் கொண்டவர்களை நான் அறிவேன். எனக்கும் காஃப்காவுக்கும் சந்திப்புப்புள்ளிகள் இல்லை. எனக்கு தல்ஸ்தோயும் ஹெர்மன் ஹெஸ்ஸும் தான்.
இவ்வாறு ஆட்கொள்ளும் படைப்பாளிகளையே நாம் வெறிகொண்டு வாசிக்கிறோம். அவர்களையே நாம் முழுமையாக அறிகிறோம். அவர்களாகவே நாம் மாறுகிறோம். அப்போது அவர்களாக மாறாமல் நம்முள் எஞ்சும் ஒரு ‘மிச்சத்தையும்’ உணர்கிறோம். அங்கிருந்து நாம் நம் பாதையை கண்டடைகிறோம். ஓர் இலக்கியவாசகன் படைப்பாளியிடம் சொல்வது “என்னை பாதிக்காதே, அப்பாலே போ சாத்தானே!” என்று அல்ல. “வா, என்னை விழுங்கு. என்னை ஆட்கொள். என்னை நிறை. என்னில் எஞ்சுவதென்ன என்று பார்க்கிறேன். உன்னிலிருந்து மேலெழுகிறேன்” என்றுதான்.
“எல்லாரையும்தான் படித்திருக்கவேண்டும்” என்பார்கள். நீங்கள் இலக்கியத்தில் முனைவர் பட்டம்பெறவேண்டுமென்றால் அப்படிப் படிக்கலாம். இலக்கிய விமர்சகர் என்றால் அதைச் செய்யலாம். வாசகர் என்றால் உங்களை பாதிக்காத எதையும் படித்து நேரவிரயம் செய்யவேண்டாம்.
*
என் வாசகர்கள், விஷ்ணுபுர வாசகர்வட்ட நண்பர்கள் அளவுக்கு வெளியே எவரும் இலக்கியம் வாசிப்பதில்லை. சொல்லப்போனால் வெளியே உள்ள படைப்பாளிகளே தங்கள் நல்ல வாசகர்களை இங்கேதான் கண்டடைகிறார்கள். அதை பலர் சொல்லியுமிருக்கிறார்கள். வெளியே எவர் இன்னொரு ஆசிரியரைப்பற்றி ஏதாவது பேசுகிறார்கள் என்று சும்மா ஒருமுறை பாருங்கள், தெரியும்.
தமிழின் எந்த நல்ல படைப்பையும் எடுத்து பெயரை அடித்து கூகிளில் தேடுங்கள். என் தளமோ அல்லது இன்னொரு தளமோ திறக்கும். நீங்கள் காணும் கட்டுரைகள் பெரும்பாலும் எங்கள் நண்பர்வட்டத்திற்குள் உள்ள ஒருவர் எழுதியவையாகவே இருக்கும். தமிழில் எந்த எழுத்தாளரைப் பற்றி ஒரு மலரோ இதழோ போட்டால் பாதிக் கட்டுரைகள் எங்கள் நண்பர்கள் எழுதியவையாகவே இருக்கும். பல நூல்களைப்பற்றி வேறு எவருமே எழுதியிருக்கமாட்டார்கள்.
அவர்கள் ‘ஓர்’ எழுத்தாளரின் வாசகர்கள் அல்ல. அவர்கள் மிக விரிவான வாசிப்பு கொண்டவர்கள். விரிவான தேடல்கொண்டவர்கள். தங்கள் அளவிலேயே எழுத்தாளர்கள். இங்கே அவர்கள் உரையாடலுக்கு உகந்த பிற நண்பர்களைக் கண்டடைகிறார்கள். இது இலக்கியம் மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் களம். அத்தகைய இன்னொன்று இன்று தமிழகத்தில் இல்லை. ஓர் எழுத்தாளராக என் மேல் மதிப்பு கொண்டவர்கள், என்னுடன் உரையாடுபவர்கள் என்பதே அவர்களை ஒருங்கிணைக்கிறது
*
தமிழில் சீடர்களைச் சேர்க்கிறார் மடம் அமைக்கிறார் என்ற குற்றச்சாட்டு முதலில் யார்மேல் வந்தது? பாரதியார் மேல். அவருடைய இளம் நண்பர்களை கேலிசெய்தும் மட்டம்தட்டியும் அக்கால மிதவாதிகள் எழுதியிருக்கிறார்கள். பரலி சு நெல்லையப்பர் தொடங்கி அவருடைய அணுக்கநண்பர்களின் அணி மிகப்பெரியது. அவர்கள்தான் அவருடைய நூல்களை பதிப்பித்தனர். அவர் மறைந்தபின் பேருருக்கொண்டு எழுவது வரையிலான இருபதாண்டுக்காலம் அவருடைய பெயரை நிலைநிறுத்தினர்
அதன்பிறகு புதுமைப்பித்தன் அப்படி குற்றம் சாட்டப்பட்டார். அச்சிலேயே நிறைய எழுதப்பட்டுள்ளது. தொ.மு.சி.ரகுநாதன், மீ.ப.சோமு என நீளும் ஒரு நண்பர் வட்டம் அவருக்கு இருந்தது. அவர்கள் அவரை ‘கெடுக்கிறார்கள்’ என எழுதப்பட்டுள்ளது. அவரை அவர்கள் ’வீரவழிபாடு’ செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. புதுமைப்பித்தனை அவர்கள் சாகக்கொடுத்தார்கள் என்றுகூட எழுதியிருக்கிறார்கள். அப்படிச்சொன்னவர்களின் பெயர்கள் எல்லாம் இன்று எங்குமில்லை. ‘வீரவழிபாடு வேண்டாம்’ என்னும் தி.க.சியின் கட்டுரை மட்டும் வாசிக்கக் கிடைக்கலாம்.
அடுத்து க.நா.சு அப்படி குற்றம் சாட்டப்பட்டார். சுந்தர ராமசாமி உள்ளிட்ட அவருடைய மாணவர்கள் ‘பரமார்த்தகுருவும் சீடர்களும்’ என பழிக்கப்பட்டனர். பின்னர் சுந்தர ராமசாமியும் அதே வசையைப் பெற்றார். குருபீடம், மடம், சீடர்கள் போன்ற சொற்களெல்லாம் சுந்தர ராமசாமிமீது தொடர்ச்சியாகப் பெய்யப்பட்டன. சுந்தர ராமசாமியை வீரவழிபாடு செய்கிறார்கள் என்று எழுதினார்கள். சுஜாதாவேகூட எழுதியிருக்கிறார். என்ன சோகம் என்றால் அசோகமித்திரனே அப்படி எழுதியிருக்கிறார்.
நான் எழுதவந்தபோது எனக்கு ஏராளமான உபதேசங்கள் எனக்கு வந்தன. சுராவுடன் இருந்தால் நான் வளரமுடியாது என்று என்னிடம் ஒருவர் சொன்னார். ”அவரு பெரிய வெயிட்டு. உங்கமேலே பாறாங்கல்லை தூக்கி வைக்கிற மாதிரி” என்றார். நான் சொன்னேன் “எனக்குள் இருப்பது விதை. பாறாங்கல் விதையை ஒன்றும் செய்யாது. மீறி எழுந்து முளைக்கும். வளரும்போது பெயர்த்து அப்பால் இடும் ”.சுந்தர ராமசாமியின் வழிவந்தவர்களை ‘ஏழைகளின் சுரா’ என பழிக்கும் வழக்கமும் அன்று இருந்தது. என்னையே ‘சுந்தர ராமசாமியின் கொத்தடிமை’ என எழுதியிருக்கிறார்கள்.
சுரா எவரையும் பேசவிடமாட்டார், அவரே பேசி இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார், சுராவின் அணுக்கர்கள் வாசகர்களே அல்ல ரசிகர்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. எழுதியவர்கள் பலர் இன்றும் உள்ளனர். ஆனால் சுந்தர ராமசாமியின் நட்புக்குழுமத்தில் இருந்தே இன்றைய தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள் பலர் உருவாகி வந்தனர் என்பது வரலாறு.
இது உலகமெங்கும் சிந்தனையிலும் இலக்கியத்திலும் உள்ள வழக்கம். ஓர் ஆசிரியரை மையமாக்கி அடுத்த தலைமுறையில் இளம் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் கூடுகிறார்கள். அவருடன் உரையாடுகிறார்கள். தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். அவரிடமிருந்து முன்செல்கிறார்கள். தமிழில் நான் வரும்போது சுந்தர ராமசாமியும் தேவதச்சனும் ஞானக்கூத்தனும் அப்படிப்பட்ட மையங்கள்.
இது என்றுமிருக்கும். ஆனால் இதன் தேவை பாமரர்களுக்குப் புரியாது. அவர்கள் பாரதியைப்பற்றியும் புதுமைப்பித்தன் பற்றியும் சொன்னதை அப்படியே இன்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்த விவாதக்களத்திலேயே இல்லை.
நான் பலமுறை சொன்னதுபோல இந்தக் குழுமங்களின் தேவைகள் பல. இலக்கியத்தை ஒரு கூட்டுக் கொண்டாட்டமாக இவை ஆக்குகின்றன. உலகியல் கட்டாயங்களில் இருந்து விலக்கி இலக்கியத்துள் ஒருவனை ஆழ்த்தி வைக்கின்றன, விவாதத்தரப்புகளை அறிமுகம் செய்கின்றன. நம்மை நாமே கண்டடையவைக்கின்றன.
நான் மற்றவர்களுக்கு எப்படி என எனக்கு தெரியாது, நான் சுந்தர ராமசாமியிடம் அடைந்தது சிந்திப்பதற்கான பயிற்சியை. சிந்தனைகளை நூல்கள் தரக்கூடும், சிந்திக்கும் பயிற்சியை ஆளுமைகளே அளிக்க இயலும். சுந்தர ராமசாமி படிமங்கள் வழியாகச் சிந்திப்பதை, அவருடைய நுண்ணிய சீண்டல்களை நான் அறியாமலேயே கற்றுக்கொண்டேன். நான் அவரை மறுப்பதேகூட அவருடைய பாணியில்தான். சமீபத்தில் யுவன் பேசிக்கொண்டிருக்கையில் தேவதச்சன் பேசிக்கொண்டிருப்பதாகவே பிரமை எழுந்தது. இலக்கியம் அப்படித்தான் கைமாற்றப்பட்டுச் செல்கிறது.தலைமுறை தலைமுறையாக.
அத்தகைய ஆளுமைகளை இரண்டு காரணங்களுக்காக ஒருவர் தவிர்க்கலாம். ஒன்று, ஆழமான தாழ்வுணர்ச்சியால். ஓர் ஆளுமை அவருடைய தீவிரத்தால் தன்னைச் சிறியவனாக ஆக்கிவிடுவார் என அஞ்சுபவன் அவரை தவிர்ப்பான். அப்படி சுந்தர ராமசாமியை தவிர்த்த பலரை நான் அறிவேன். தன்னை பொத்திப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது ஓர் அச்சத்தின் விளைவு. உண்மையான அறிவியக்கவாதிக்கு, கலைஞனுக்கு அந்த அச்சம் இருக்காது. அவனுடைய நிமிர்வு அவன் தன்னுள் இருக்கும் படைப்புசக்தியின் ஆற்றலை உணர்ந்தமையால் வருவது. எனக்கு அந்த தயக்கமே இருந்ததில்லை. நான் எவரையும் சந்திக்க உரையாட அருகமர தயங்கியதே இல்லை.
இரண்டு, சூழலில் இருந்து வரும் அபத்தமான கருத்துக்கள். ‘நீ நீயாகவே இரு’ என்பது போன்ற மடத்தனங்கள். ஒருவன் எந்த மாறுதலும் இல்லாமல் இருப்பதற்கு பெயர் மந்தபுத்தித்தனம். ‘எதையும் ஆராய்ந்து பார்” என்பது இன்னொரு அபத்தம். எதையும் முழுதாக அறிந்துகொள்ளாமல் ஆராயமுடியாது. தன்னை அளிக்காமல் எதையுமே அறிந்துகொள்ள முடியாது. பணியாமல் அறியமுடியாது. அறிந்தபின்னர் வரும் நிமிர்வே உண்மையானது. அறியாமையின் தருக்கு என்பது ஆபாசமான ஒரு நிலை.
எங்கும் பணியமாட்டேன் என்றிருப்பவன் அறிவுஜீவி அல்ல. எளிய இடங்களில் பணியாமலிருப்பவன் அவன். ஆனால் பணியவேண்டிய இடங்களை தேடித்தேடிச் செல்பவன். கடைசிவரை அவன் பணியும் இடங்களை கண்டடைந்துகொண்டே இருப்பவன். அறுபது வயதில் சுந்தர ராமசாமி க.நா.சு முன் எப்படி பணிவார் என நான் கண்டிருக்கிறேன். என்னிடம் சொன்னார், ‘கநாசுவோட படத்தை ஒருவன் மிதிச்சால் அவனை அறையாம என்னாலே முன்னாலே போக முடியாது” அந்தப் பற்றுதான் அடிப்படை. அது க.நா.சு கொண்ட பற்று அல்ல. க.நா.சு வரை வந்து நிற்கும் ஒரு மரபின் மீதான பற்று
நமது நிமிர்வும் சுதந்திரமும் .வன் அறிந்துகொண்டே இருப்பதனால் வருவதே ஒழிய அறியாமையை இறுக்கமாகப் பேணிக்கொள்வதனால் வருவன அல்ல. இது இலக்கியம் அறிவியக்கம் போன்ற துறைகளுக்கு மட்டும் அல்ல, சாதாரண தொழில்நுட்பப்பயிற்சி வணிகப்பயிற்சி போன்றவற்றிலேயே இப்படித்தான் உள்ளது. அறிந்தோரை நாடுங்கள், உங்களை அளியுங்கள், கடைசித்துளிவரை கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் இயல்பான படைப்பூக்கத்தின் துளியை வளர்த்துக்கொண்டு கடந்துசென்று வளருங்கள்.
உங்கள் நண்பர்கள் அறிவியக்கத்தைப் பற்றி மட்டும் அல்ல, எதையாவது கற்றுக்கொள்ளும் எந்த துறை பற்றியும் எதுவும் அறியாத ‘வெறுஞ்சோற்றுப்’ பாமரர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுபுர நண்பர் ஒருவரிடம் ஒர் ஆசாமி உங்கள் நண்பர்கள் சொன்னவற்றையே சொன்னார். அந்நண்பர் முக்கியமான வாசகர், விமர்சகர். துடுக்குத்தனத்தனத்துக்கும் பெயர் போனவர். நண்பர் கேட்டார் “நீங்க இப்ப சொன்னதையெல்லாம் நீங்களே கடைப்பிடிக்கிறீங்களா?”
“ஆமா” என்றார் அவர்
“அப்டி கடைப்பிடிச்சு என்ன சாதிச்சீங்க? நீங்க சுயமா சிந்திச்ச ஒரு நாலு வரிய காட்டுங்க. ஒரு நல்ல படைப்ப காட்டுங்க”
அவர் திக்கிட்டுப்போனார்.
“வெத்துப்பிண்டமா இப்டி அலையறத விட யாருக்காவது அடிபணிஞ்சு எதையாவது கத்துக்கிடறது மேல். போங்க” என்றார் நண்பர்
நான் அவருடைய துடுக்குத்தனத்தை கண்டித்தேன். ஒரு அப்பாவிப் பாமரரை அவர் சாவின் எல்லைக்கு தள்ளிவிட்டார்.ஆனால் அவர் சொன்னது உண்மை. நீங்கள் உங்களிடம் பேசுபவர்களிடம் “சரி, நீங்க அப்டி என்னதான் அடைஞ்சீங்க? என்ன சாதிச்சீங்க? நீங்க வச்சிருக்கிற அந்த தனித்தன்மைதான் என்ன?’’ என்று கேளுங்கள். உங்கள் வாசிப்போ நுண்ணுணர்வோ இல்லாத அந்தப் பாமரர்கள் திகைத்துவிடுவார்கள். சமூகவலைத்தளங்களில் இதைச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் எல்லாமே எந்த அறிவும் எந்தப் பங்களிப்பும் இல்லாத சருகுகள்தான்.