உயிர்மை ஒரு வினா

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

நீங்கள்

உயிர்மையின் 200வது இதழில் எழுதியிருப்பதாக அறிந்தேன். என்னைப்போன்ற உங்களை முழுமையாக நேசிக்கும் வாசகர்களுக்கு சங்கடமளிக்கும் செய்தி என்று நினைக்கிறேன் . அவர் உங்கள்மேல் வைத்தது இலக்கிய விமர்சனத்தைத் தாண்டி முழுமையாகவே அவதூறுதான் நீங்கள் ஓர் இஸ்லாமிய வெறுப்பாளி. முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் மகிழ்வீர்கள் என்ற பொருளில் கூட எழுதினார் . (அவருடன் சேர்ந்து கொண்டு பலரும்). அதே சமயம் அவர் மேல் வைக்கப்பட்ட சாதாரண விமர்சனத்தைக் கூட தன் மீதான தாக்குதல் என்றுதான் எதிர் கொண்டார் . இதனாலேயே நான் உயிர்மையை வாங்குவதை நிறுத்தியவன். இனிமேலும் வாங்க வாய்ப்பில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை . ஆனாலும் நீங்கள் அளிக்கும் அங்கீகாரம் எனக்கு வருத்தமளிக்கிறது .

அன்புடன்,

ஆ .கந்தசாமி

புனே

***

அன்புள்ள கந்தசாமி,

முன்னர் சாரு நிவேதிதாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதும் இதேபோன்ற கேள்விகள் வந்தன. நான் பதில் எழுதினேன்.  நீங்கள் சொல்வதுபோன்ற பதிவுகள் நிறையவே வருகின்றன, பலரிடமிருந்து. நான் என்ன எதிர்வினை ஆற்றினேன்? நீங்கள் பார்க்கவேண்டியது அதைத்தான் அல்லவா?

நான் இலக்கியவிமர்சனக் கருத்துக்களைச் சொல்வதுண்டு. சிலசமயம் மிகக்கடுமையாககூட. ஆனால் தாக்குதல்களுக்கு பதில் சொல்வதில்லை.

இலக்கியவாதிகள், கலைஞர்களின் உணர்வுநிலையின் அலைபாய்தல்கள் எனக்கு நன்றாகவே தெரியும். அவற்றை பொருட்படுத்துவதில்லை. அவர்களுடனான நட்பை எந்த வகையிலும் அது பாதிக்கவிடுவதில்லை. எந்நிலையிலும் அவர்களை இலக்கியவாதிகள், கலைஞர்கள் என்றே அணுகுகிறேன். கடந்தகாலத்திலும் தொடர்ந்து நான் அவ்வாறே நடந்துகொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

மனுஷ்யபுத்திரன் என் பிரியத்துக்குரிய கவிஞர். என் கவிஞர் என்று சொல்லத்தக்க கவிதைகளை எழுதியவர். தமிழ் நவீனக்கவிஞர்களில் முக்கியமானவர். எப்போதும் இதைச் சொல்லாமல் இருந்ததில்லை. இந்த தளத்தில் மனுஷ்யபுத்திரன் என அடித்து தேடுங்கள் எல்லா குறிப்புகளும் அப்படித்தான் இருக்கும்.

உயிர்மை இதழ் தொடர்ந்து வரவேண்டும். அச்சிதழ்கள் எவையும் நின்றுபோய்விடலாகாது. அது என் ஆசை. அதில் எழுதிய நாட்கள் எல்லாம் என் சிறந்த நினைவுகள்.

கலைஞர்கள் எழுத்தாளர்கள் அல்லாதவர்களின் வசைகள், திரிபுகளை பொருட்படுத்துவதே இல்லை. அவர்கள் என் உலகில் இல்லை. அவர்கள் பேசுவதில் பொருட்படுத்தத் தக்க ஏதேனும் சமூகம் சார்ந்த, அரசியல்சார்ந்த, இலக்கியம் சார்ந்த திரிபுகள் இருந்தாலன்றி அவர்களுக்கு பதில் சொல்வதுமில்லை.

நான் இருமைகளை உருவாக்கிக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். வேண்டியவர் வேண்டாதவர் என்னும் இருநிலைகள் என்னை மிகக்குறுகச் செய்வன என நினைக்கிறேன். அற்பத்தனம் அல்லது எதிர்மறைப்பண்பு கொண்டவர்களை ஒதுக்கிக் கடந்துசெல்வதே உகந்த வழி. அவர்களுக்கு நம் உளச்சக்தியை அளிக்கலாகாது.

நான் தொடர்ந்து படைப்பியக்கத்துடன் இருக்கிறேன். அது எப்படி என்னும் கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. அதற்கான பதில் இதுதான். உளச்சக்தியை வீணடிப்பதில்லை. அதை முடிந்தவரை படைப்பு சார்ந்தே குவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் ஓர் இதழை வாங்குவதும் வாங்காததும் உங்கள் சொந்த தெரிவின்பாற்பட்டதாகவே இருக்கவேண்டும். அதற்கான தனிப்பட்ட காரணங்கள் உங்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் கசப்பு அல்லது வெறுப்பு காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது என்றும் அவ்வுணர்வுகளை கொண்டுசெல்லக் கூடாது என்றும்தான் சொல்ல விரும்புவேன். உங்களுக்கு பயனில்லை, உங்களுக்கு ஒவ்வாது என்றால் ஓர் இதழை விலக்கலாம். விலக்கிய கணமே மறந்துவிடவும் வேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைசொல் தெளியா இசை
அடுத்த கட்டுரைசென்னையில் பேசுகிறேன்