எங்குளாய் இலாதவனாய்?- இரம்யா

அன்பு ஜெ,

வெண்முரசின் நிறைவிலிருந்து உங்களின் அலைக்கழிதலை ஒரு வாசகராக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உங்களுடன் ஏழு வருடமாக பயணித்த பலரும் ஒவ்வொரு விதமான அலைக்கழிதல்களைக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏதோவொரு வகையில் அதிலிருந்து மீண்டு கொள்ள என்னென்னவோ செய்கிறார்கள். அதனோடு மிகவும் தொடர்புடைய மற்றும் அதன் இணையாசிரியர்களான ஸ்ரீநி மாமா மற்றும் சுதா மாமி இருவரையும் சந்தித்து வந்தேன். நிறைவிற்குப் பின்னாக அவர்கள் வாழத் தேர்ந்தெடுத்த இடம் ரம்மியமானது. மாமா நித்தமும் மாமியோடு அதே இயற்கையை வேறு வேறு விதமாக ரசிக்கிறார். அப்படியே கம்ப ராமாயணம் வாசிப்பை மிகத்தீவிரமாக நகர்த்திச் செல்கிறார். மாமி எழுத்தாளராக.. மாமா மொழிபெயர்பாளராக என செயல் தீவிரம் வேறு. அந்த இனிமையான ஊரில் இதெல்லாம் மிகச்சுலபம் என்பது போல அவர்களுக்கு வசப்படுகிறது. சுபா நீலத்தின் நிறைவுப்பகுதியின் பிச்சி ராதையைப் போல இருக்கிறார். நீலத்தை ஒலிவடிவமாகப் போடுவதும் மொழிபெயர்ப்பதும் பயணமும் என தீவிரமாக இருக்கிறார். பல நல்ல அறிதலுக்கான கட்டுரையாக வெண்முரசு டிஷகஷன்ஸ் குழுவில் நான் சிலாகிக்கும் அருணாச்சலம் மற்றும் ராஜகோபாலன் அவர்களும் என்ன செய்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இன்னும் இப்படி ஏராளம்.

இந்த வரிசையில் எழுத்துக் கலையின் படைப்புக்காக இசைக்கலையின் மூலம் தனது காணிக்கையை ராஜன் சோமசுந்தரம் அவர்கள் செலுத்தியிருப்பதாகப் பார்க்கிறேன். இந்த இசைக்கோவை வெண்முரசு வாசகர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை அளிக்கக் கூடியது.

இசை வெளியிட்ட பின்னான ஒரு வார காலமாக பித்து பிடித்தாற்போல “கண்ணானாய் பாடலை” கேட்டுக் கொண்டிருந்தேன் ஜெ. இந்த இசை வெளியீட்டு விழாவில் நண்பராகவும் கலைஞராகவும் கலந்து கொண்டு இசைக்கோவையை மணிரத்னம் அவர்கள் வெளியிட்டு பேசியது மிகவும் பெருமையாக இருந்தது. வெளியீட்டு விழாவின் போது சைந்தவி அவர்கள் பாடிய

“சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே,

விரிமலர் முதலிதழோ

எனத் தோன்றும் பெருவிரலே,

இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே, அதிலெழுந்த ஆழிச்சங்குச் சுழியே, அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே,

அமைக என் தலைமேல்!

அமைக இப்புவிமேல்!

அமைக திருமகள் மடிமேல்!

அமைக!”

என்ற வரிகள் தான் முதலில் இசையாக என்னுள் நுழைந்த வரிகள். அந்தப் பாடலின் சிறு துளியே அமுதத்திற்கு இணையாக இருந்தது எனலாம். தாய்மையின் உணர்வில் பொங்கிக் கொண்டே இருக்கும் வரிகள் “அமைக! ” என்ற வார்த்தையால் முதலில் திகைத்தது. இறுதி “அமைக திருமகள் மடிமேல்” என்ற உச்ச சுருதியில் அடிநெஞ்சிலிருந்து உணர்வு மேலெழுந்து கண்ணீர் துளித்து நின்றது.

பின்னர் சிறு பெர்ஃபார்மன்ஸ் செய்த ரிஷப் ஷர்மா அவர்களின் சிதார் இசை இதையத்தையே அதிரச் செய்து அதில் மீட்டிக் கொண்டிருந்தது. அவர் இசையை நிறுத்திய பின்னும் அந்த அதிர்வு கேட்டுக் கொண்டே இருந்தது.

விழா முடிந்த பின் முழுப்பாடலையும் கேட்டேன். பாடலின் தேர்ந்தெடுத்த வார்த்தைகள், வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலுள்ள ஆழம் மிகவும் வலியது.

“எங்குளாய்.. இலாதவனாய்… காலமானாய்… ” என்ற வார்த்தைகளெல்லாம் உச்சாடன சொற்கள். “கருநீலத்தழல்மணியே” என்ற ஒரு வார்த்தையே கவிதயாய் மனதில் பதியக்கூடியது. ஆணும் பெண்ணுமாக தாயாக மாறி பிரம்மத்தை குழந்தையாக அணைத்துக் கொள்வதாக அமைந்த பாட்டில் கமல்ஹாசன் அவர்கள் உச்சரித்த

 

“ஞானப்பெருவிசையே

ஞானப்பெருவெளியே

யோகப் பெருநிலையே

இங்கெழுந்தருள்வாயே”

என்ற வரிகள் மட்டும் பிரம்மமே தனக்குத்தானே சொல்லி தன்னை எழுந்தருளச் செய்து கொண்டது போல இருந்தது.

இந்த பாடலின் முதலில் வரும் புல்லாங்குழல் இசை வெண்முரசுக்கெனவே இசைப்பிரபஞ்சத்தினின்று கொடுக்கப்பட்டது என்பேன். வெண்முரசு படிக்க ஆரம்பித்த நாட்களில் புனைவில் பிரபஞ்சத் தோற்றுவாயிலிருந்து அஸ்தினாபுரி வரையிலான புனைவை கட்டியெழுப்பிக் கொண்டிருந்தேன். வாசிப்பில் புனைவுலகம் பெருகிக் கொண்டே சென்றது. வெண்முரசு தீம் மியுசிக்கை கேட்டபோது நான் கட்டியெழுப்பிய புனைவுலகத்தில்  ராஜனுடையை இசையை இட்டு நிரப்பி மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

நீலம் நாவல் வாசிக்கும்போதே மனம் இசையை நாடிக் கொண்டே இருந்தது. ஏன் என்று புரியவில்லை. கண்ணனின் புல்லாங்குழல் இசை என்று தேடித் தேடி இசையை தவழவிட்டுக் கொண்டே தான் படிப்பேன். கண்ணனின் கலிங்க நர்த்தனம் வரும்போது அருணா சாய்ராமின் தில்லானா வை கேட்டுக் கொண்டிருந்தேன். மேலும் “மாடு மேய்க்கும் கண்ணே” பாடல், சஞ்சை சுப்ரமணியத்தின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடல், இளையராஜாவின் “நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா”, எம். எஸ். வி -ன் ” தீர்த்தக்கரையினிலே.. ” என்று நீலத்தில் மூழ்கியிருந்த நாட்களிலெல்லாம் மனம் இசையையே நாடிச் சென்றது.

இசையை ஈர்க்கக்கூடிய ஒரு நாவலுக்கு ஒரு இசையமைப்பாளர் வாசகராய் அமைந்தது நல்லூழ் என்பதைத்தவிர என்ன சொல்ல? நீலத்திற்காக நான் ஏங்கிய அந்தப் புல்லாங்குழலை ராஜன் இசைப் பிரபஞ்சத்தில் எங்கிருந்து தேடிப் பிடித்தார் என்று வியந்தேன். அதைத் துழாவி எடுத்த அந்த கைவிரல்களுக்கு என் அன்பு முத்தங்கள்.

பாடலின் அலைகழிதலால் உந்தப்பட்டு கன்னியாகுமரி பயணம் செல்லலாம் என்று முடிவுடுத்தேன். எந்தவொரு முன்திட்டமும் இல்லை. கன்னியாகுமரியின் ஒட்டுமொத்த நிலத்தை நெடுக அளந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் என் மனதிற்கு மிக மிக அணுக்கமாகியது இந்த ஊரடங்கில் நீங்கள் எழுதிய புனைவுக்களியாட்டு சிறுகதைகள் வழியாகத் தான். அதன் மாயப் புனைவிடங்களைத் தவிர்த்து எத்தனை மனிதர்கள், நிலங்கள், உணர்வுகள் என கடத்தியிருக்கிறீர்கள். அவற்றையும் காண வேண்டுமென நினைத்தேன். நூறு சிறுகதைகளின் வாசகராக என் பயணம் அலப்பரியது. என்னை ஆழமாக மேலும் மேலுமென திறந்து கொண்டு செல்லும் பயணத்தில் இணையாக உங்கள் உள்ளத்தின் ஆழத்திலும் பயணிப்பது மகிழ்ச்சியை அளித்தது. உங்கள் அன்றாடங்கள் அனுபவங்களை நீங்கள் எழுதியதன் வழி மேலும் மேலுமென அணுக்கமானீர்கள். தளத்தில் துழாவி சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள், உரைகள் என படித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்.

இன்னும் உங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறேன். தீராத பயணம் இது. நேரில் உங்களைக் காணும் போது மனமும் முகமும் விரிந்து கொண்டே இருப்பதை உணர முடிகிறது. சில சமயங்களில் வலிந்து நான் புன்னகைப்பதை நிறுத்தி சீரியஸாக வைத்துக் கொள்வதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன நெருடல் ஒன்று உள்ளத்தில் வந்து மறையும். நான் புனைவில் கண்டு உணர்வுகளைக் கொட்டும் ஜெ நீங்கள் அல்ல என்று. முதல் சந்திப்பில் அப்படித் தோன்றவில்லை. புதிய வாசகர் சந்திப்பின் போதும் உணரவில்லை. மூன்றாவது முறையாக மதுரை குக்கூ நிகழ்வின் போது தான் அதைக் கண்டேன். புனைவுக்களியாட்டு சிறுகதைகளுக்குப் பிறகு நீங்கள் எழுதிய கதைகளுக்கு என்னால் கடிதம் எழுத முடியவில்லை. அதீத உணர்வுகளை எழுத்திற்கு அளிக்கலாமா? அளித்தால் அழிந்துவிடுமா? அல்லது அதை என்னால் கடத்திவிட முடியுமா என்ற தயக்கமே அதற்கு காரணம். “அந்த முகில் இந்த முகில்” உச்சமான பிரேமையில் இட்டு என்னை திழைக்கச் செய்தது. பிரேமையோடு வெறும் அந்த ஒற்றைப்பாடலை “ஆ மப்பு இ மப்பு” என எத்தனை முறை இசைத்ததேனென்றே தெரியாமல் இரண்டு மணி நேரப் பயணமாக மதுரை வந்து சேர்ந்தேன். ஆனால் அங்கு நீங்கள் ஒரு ஆசிரியராக நின்று கொண்டிருந்தீர்கள். என்னால் உங்கள் முன் நிற்கக்கூட முடியவில்லை. மதுரையிலிருந்து சிலுத்தூர் செல்லும் பயணத்தில் அழுது கொண்டே சென்றேன். அருகில் இருப்பவர்கள் என்னை பித்தி என்று நினைத்திருக்கக்கூடும். நினைக்கட்டுமே என்றும் தோன்றியது.

மதுரை குக்கூ நிகழ்வை எழுதுவதை தவிர்த்துவிட்டேன். காதலில் கனிந்துருகி நின்று பக்தி இலக்கியம் பாடும் போது ஏன் தன்னை காதலியாக கவிஞர்கள் கற்பனை செய்து கொண்டார்கள் என்பதும் விளங்குகிறது. பித்தியாக நின்று கரையும் நேரத்தில் ஆசிரியனாக நிற்பது ஏமாற்றத்தை அளிக்கிறது அது தெய்வமாக இருந்தாலும் கூட. ஆனால் அது எழுத்தாளனின் தவறல்ல. அவன் எழுதும்போது மட்டுமே அதுவாக இருக்கிறான் என்றும் தொடர்ந்து நீங்கள் சொன்ன “நான் வெளிவந்துவிடுவேன்” என்ற வரியின் மூலமும் அதை உணர்ந்து கொண்டேன். ஆமாம். அதன்பின் அவன் வேறு தானே. அவன் ஒரு கலம். புனைவில் நாம் காதலிப்பதோ வெறுப்பதோ சொல்லொண்ணா உணர்வுகளை அடைவதோ அதில் அவன் கடத்தும் உணர்வுகள் வழி தானே. என்னை நானே மீட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. அதன்பின் புனைவுக் களியாட்டு சிறுகதைகளை தொகுத்துக் கொள்ள முற்பட்டேன். மீள் வாசிப்பு செய்தேன். புனைவையும் உங்கள் அருகமைவையும் பிரித்துக் கொண்டேன். நேரில் அப்படி உணர்ச்சி பொங்க அழுபவர்களை பித்தாக இருப்பவர்களை நீங்கள் காணும் போது ஒரு விலக்கத்தை அடைவதைப் பார்த்திருக்கிறேன். நெருங்கிய வட்டத்தில் உங்களுக்கு அருகிலிருப்பவர்கள் மிகச் சரளமாக இருப்பதை முதலில் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. ஆனால் உங்களுக்கு விலக்கம் கொடுகக்கூடியது பித்தாக இருப்பவர்கள் தான் என்று தோன்றியது. இன்று இயல்பாக உங்கள் முன் இருக்க முடிகிறது. உங்களுடனான சந்திப்பை, அருகமைவை, பிரிவை உணர்ச்சிவசப்படாமல் இன்று என்னால் சந்திக்க முடிகிறது.

ஆனாலும் உங்கள் புனைவுகளின் வழி நான் உருவாக்கிக் கொண்ட ஜெ வை சந்திக்க வேண்டுமென்று தோன்றியது. குட்டி அனந்தனை,  சின்ன தேகமும் பெரிய மண்டையுமுடைய விடலைப் பருவனை, இளைஞனை, காதலனை, தந்தையை, குருவை எல்லாமுமானவனைக் காண வேண்டும் என்று தோன்றியது.

கவிதை முகாமிற்குப் பிறகு நடந்த வெண்முரசு இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு ஆஜ்மீர் செல்வதாகச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் இல்லாத இடத்தில் தான் அந்த புனைவின் ஜெ வை மிக நிதானமாக சந்திக்க முடியும் என்று தோன்றியது. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகமான “குமரித்துறைவி” கையில் கிடைத்ததிலிருந்தே இருந்த உணர்வுப்பெருக்கு வெண்முரசு இசை வெளியீட்டு விழாவில் மேலும் அதிகமாகியது. வெண்முரசு நிறைவிற்குப் பிறகு நீங்கள் எழுதிய கதைகளை அலைகழிதல்கள், உணர்வெழுச்சிகள், விலகுதல் என்று சொன்னால்  குமரித்துறைவியை மட்டும் :நிறைவின் மங்களம்’ எனலாம். அதை கன்னியாகுமரி பகவதியின் காலடியில் வைக்க வேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றுக்குமாக சேர்த்து நாஞ்சில் நிலம் நோக்கி பயணமானேன்.

திருநெல்வேலிக்குப் பிறகான நிலத்தை முதல் முறை காண்கிறேன் எனலாம். இதற்கு முன்பு பள்ளி சுற்றுலாவின் போது ஒரு முறை வந்திருக்கிறேன். மிகவும் மங்கலான நினைவுகளே என்னில் எஞ்சியுள்ளன. பகவதி கோவில் கருவறை, விவேகானந்தா பாறையின் தியான அறை, திருவள்ளுவர் சிலையை மிக அருகே கண்டபோது அவரின் கால் கட்டைவிரலை என் கையின் சுண்டுவிரலோடு ஒப்பு நோக்கி அதன் பிரம்மாண்டத்தை வியந்தது என சில நினைவுகள்.

இம்முறை திருநெல்வேலியைத் தாண்டிய நிலப்பரப்பை புனைவின் கண்கொண்டு ரசித்திருந்தேன். நாங்குனேரி வள்ளியூரைத் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலைகள் மிக அருகே என தெரிந்து கொண்டே வந்தன. வள்ளியூரைத் தொடும்போது ஸ்ரீநி மாமாவையும் சுதா மாமியையும் நினைத்துக் கொண்டேன். மாலை நடையில் நான் கண்டு கொண்டிருக்கும் மாலையை மலையை மேகத்தை ஓவியமாக ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். முப்பந்தல் பணகுடிக்குப் பிறகு “குளம்” என்ற பின்னொட்டு கொண்ட பல ஊர்கள் தென்பட்டன. கன்னியாகுமரியை அடையும் போது நல்ல மழை பிடித்துவிட்டது. நேராக பகவதி கோவிலுக்கு முதலில் சென்றோம். அந்த சாலையை அடைவதற்கு முன் சிறு மண்டபம் இருந்தது. அது தான் கோவில் நுழைவாயில் என்று நினைத்து உள்ளே சென்று விட்டேன். அங்கே மிகப் பெரிய சரஸ்வதி படம் வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடிக் கொண்டிருந்தனர். கருங்கற்களுக்குள் அந்த இருட்டில் அவள் முன் மட்டும் விளக்கு மண்டியிருந்தது. அங்கிருந்த அனைவரும் ஆட்டோ காரர்கள். அனைவருடைய வண்டிச்சாவிகளும் அவள் முன் இருந்தன. அதற்கு நடுவில் குமரித்துறைவியை வைத்தேன். எல்லோரும் “அது என்ன புத்தகம்” என்று எட்டி எட்டி பார்த்தனர். சாமி கும்பிட்டு முடித்ததும் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். “பகவதி கோவிலுக்கு இப்படி ஏதும் வழி இருக்கா” என்று கேட்டேன். “இல்லமா. ஆனா முன்னம் இது பெரிய மண்டபம். இது வழியாவும் போலாம். இப்ப கடைகள் அடைச்சி கிடக்கு. வெளிய போய் இடப்பக்கமா திரும்பி நடங்க. வந்திடும்” என்று பூசாரி சொன்னார். சில ஆட்டோகாரர்கள் எங்களை கூட்டிக் கொண்டுபோய் வழி காணித்தனர்.

பகவதி கோவிலை அடைந்து பூ வாங்கிக் கொண்டு உள் நுழைந்தோம். தாமரை இலையில் சுற்றிக் கொடுத்தனர். இங்கு அதிகம் விளையும் என்று நினைத்துக் கொண்டேன். மக்கிய தாமரை இலையில் ஒரு புராதனமான எண்ணம் நிறைந்திருப்பதாய் நினைத்தேன். கேரளா பாணி கொண்டை நிறை யட்சிகள் மற்றும் யட்சன்கள் நிறைந்த கோவிலாகத் தென்பட்டது. சுற்றி வந்து மங்கள பகவதியைக் கண்ணுற்ற போது கருவறையிலிருந்து எழுந்த ஒளியுடன் அழகு ததும்பி நின்றாள். கூட்டமில்லாததால் சிறிது நேரம் நின்று அவளைப் பார்த்தேன். பூசாரிக்கு தக்க காணிக்கை அளிக்க வேண்டும் என்ற எண்ணமே நீங்கள் சொன்ன பிறகு தான் கடைபிடிக்க ஆரம்பித்தேன். காணிக்கை அளித்தபின் புத்தகத்தை அவர்களிடம் கொடுத்து பாதத்தில் வைத்துத் தரும்படி கேட்டேன். அவர் அந்த புத்தகத்தை திருப்பி திருப்பி பார்த்தார். ஏதோ படித்தார். பின்னர் கருவறையினுள் சென்று பகவதியின் காலில் வைத்தார். கண்கள் கலங்கி விட்டது. சட்டென மூத்தோள் கதையின் ஜேஸ்டாதேவியின் பேருருவம் என் தலைக்குமேல் இருப்பதாய் நினைத்து சிலிர்த்துக் கொண்டேன். யாவும் தணிந்து புத்தகம் கைக்கு வந்தபின் கடற்கரை நோக்கி நடக்கலானோம்.

இரவின் கடல் இரவின் கடல் என துள்ளிக் கொண்டே சென்றேன். வெவ்வேறு கோணத்திலிருந்து அலையையும் அதன் ஓசையையும் கரையிலிருந்து விவேகானந்தா பாறையையும், வள்ளுவர் சிலையையும் ரசித்தோம். கறுமையான பிரபஞ்சத்தில் இரு துளி ஒளியை மனிதன் படைத்து விட்டான். இரவில் அந்த அந்தப் பாறையில் அமர்ந்து தியானித்திருப்பது அந்த எண்ணத்தை தான் கொடுக்கும் என்று நினைக்கிறேன். சங்கிலித்துறைக்குச் சென்றேன். அங்கிருந்த மண்டம் சிறு வெளிச்சத்தில் புராதன எண்ணத்தைக் கொடுத்தது. அங்கு உட்கார்ந்திருந்தேன். பௌர்ணமியை நெருங்கும் மதியன் மற்றும் சில வெள்ளிகள், இரவின் கடல் அலையை சங்கிலித்துறையிலிருந்து ரசித்திருந்தேன். ஆள்நடமாட்டமில்லாத சங்கிலித்துறையை காலத்தில் பின்சென்று கண்டு சிலிர்த்தேன். எத்தனையோ காலமாக மனிதர்கள் இங்கு நின்று இந்த கடல் அலையை மதியனை ரசித்திருக்கக்கூடும். கடலும் நிலவும் அப்படியே தான் இருந்திருக்கும். காலத்தின் முன் சென்று நான் இறந்துவிட்ட உலகை நினைத்துப்பார்த்தேன். அப்போதும் மதியன் ஒளி கொண்டிருப்பான், அலைகள் தவழ்ந்து வந்து சிரித்துக் கொண்டிருக்கும். இது போன்ற இரவுகளை ரசிப்பதற்கென்றேயல்லவா மனிதர்கள் பிறந்து இறக்கிறார்கள்.

“இயற்கைக்கு ஓய்வு ஓயாத

மகத் சலித்த அதன்

பேரிரவு.”

என்ற பிரமிளின் வரிகள் நினைவிற்கு வந்தது. இரவின் தீவிரத்தை மிகுந்து ரசித்து எழுந்த ஒரு பகலில் தான் அவன் இந்த வரிகளை எழுதியிருக்கக்கூடும்.

“இரவில் குளித்து

உலகம் வீசும்

வெளிச்சச் சாயை பரிதி.

ஆமாம்.

இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி.”

நீண்ட நேரமாக அந்த அலைகளை மண்டப இருளில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். “எங்குளாய் இலாதவனாய்… ” என்று கேட்டுப் பார்த்தேன். சிறிது நேரம் கழித்து “அமைக! அமைக இப்புவிமேல்!…” என்றேன். அப்போதும் அதே பேரிரைச்சலுடன் கூடிய அலை. அதன் மொழி புரியவில்லை. ஆனாலும் இனிமையான ஏதோ ஒன்றைத்தான் சொல்லியது எங்கள் வீட்டில் கூடு கட்டியிருக்கும் குருவிகளைப் போல.

காலையில் சூரியன் எழுவதைப் பார்க்கச் சென்றோம். அடர் மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது. நீண்ட கருங்கற்கள் குவிக்கப்பட்ட பாலம். நடந்து செல்லும்போதே மழை வந்து விட்டது. தொடக்கூடாதது தொட்டுவிட்டது போல மனிதர்கள் பலரும் அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர். மழையின் இனிமையை ரசிக்கும் மிகச்சிலருடன் அந்தப் பாறையில் உட்கார்ந்திருந்தோம். நிலத்திலிருந்து நீண்ட தொலைவில்  மூன்று பக்கமும் கடல் சூழ கருங்கற் பாறையின் நுனியில் நின்று கடலையும் பரிதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இரவிலும் பகலிலும் கடல் பிரம்மாண்டத்தையன்றி எதையும் தருவதில்லை.

அங்கிருந்து வட்டக்கோட்டை சென்றோம். கொள்ளையர்களை எல்லை தாண்டி வருவோரை கண்காணிக்க கட்டப்பட்டது. அங்கு ஆயுதத்தோடு நிற்கும் போர்வீரனைப்போல கற்பனை செய்து கொண்டேன். “வருமானத்துக்குச் சிக்கலற்ற வேலை என்பது ஒரு பெரிய கோட்டைபோல. கோட்டைக்குள் இருந்து எவ்வளவு வேண்டுமென்றாலும் கனவு காணலாம். இசைகேட்க சிறந்த இடம் கோட்டைக்குள்தான் என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அந்த பாதுகாப்பு மிகமுக்கியமானது.” என்று நீங்கள் சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது. இந்த அற்புதமான இடத்தில் வேலை என்கிற பேரில் நின்று கொண்டே இலக்கிய வாசகனாக இருக்கலாம், கவிதை திறந்து கொண்டால் எழுதலாம், இல்லையென்றாலும் இயற்கையை ரசிக்கலாம். மூன்று கடல்களும் கலப்பதைக் காணிக்கும் வித்தியாசமான நிறங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் மாமன் இடப்பக்கமாக கை காணித்து “இங்க பாருத்தா.. அந்த ஒரு இடத்துல மட்டும் கடல் சுழிச்சு போகுது. அலை இப்படி நடுக்கடல்ல அடிக்குமா. ஏதோ பாறை இருக்காப்ல தெரியிதே” என்றான். நான் அதை உற்றுப் பார்க்கும்போதே மணிப்பல்லவம் சிறுகதை நினைவிற்கு வந்தது. அதை கலந்துகட்டி ஒரு புனைவுக் கதையை சொன்னேன். “அப்டியா” என்று ஆச்சரியமாகக் கேட்டான். பாவம். நம்பி விட்டான். “ஆமா மாமா. உண்மை.” என்று முகத்தை கராராக வைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து நாகர்கோவில் சென்றோம். தாமரைக்குளங்கள், செழிப்பான வயல்வெளிகள், மலைகள் என பசுமையின் உச்சமாக இருந்தன. பார்வதிபுரம் ஜங்ஷனில் சிறிது நேரம் நின்றோம். அருணாம்மாவை நினைத்துக் கொண்டேன். இன்னேரம் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நாகர்கோவில் கன்னியாகுமரியைவிட நவீனமாகத் தென்பட்டது. மிகப்பெரிய ப்ராண்ட் ஷோரூம்கள் எல்லாமே அங்கு இருந்தன. வலப்பக்கம் மலைகள் நிறைந்திருந்தது. நாகர்கோவிலில் ஒரு கடையில் மீன் சாப்பாடு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. தக்கலை, வேர்க்கிளம்பி செல்லும் பாதையில் இரண்டு சாலை பிரிந்தது. ஒன்று ஆற்றூர் இன்னொன்று திருவட்டாறு. உங்களுக்கு மிகவும் பிடித்த மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவும் நீங்களும் இணையும் புள்ளி என்று கற்பனை செய்து கொண்டேன்.

 

திருவட்டாறில் பரளியாறு செல்லும் ஓர் படித்துறையில் உட்கார்ந்திருந்தேன். இரண்டு பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். காலம் இங்கு மட்டும் மெதுவாக சுழித்துச் செல்வதாக உணர்ந்தேன். வெண்முரசு பாடலை அங்கு உட்கார்ந்து கேட்டேன். அருகில் ஒரு நாய் வந்து உட்கார்ந்தது. நான் மாமனை நோக்கி “இது பேரு கருப்பன்” என்று சொன்னேன். “பைத்தியமே. சீக்கிரம் வா. திற்பரப்பு போகனும். லேட் ஆச்சு” என்றான். அதற்கு முன்பு திருவட்டாறு கோவில் போகனுமே என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து சென்று கொண்டிருந்த ஒரு சாலையில் இடப்பக்கமாக பிரியும் ஒரு துண்டு சாலையில் போகும்படி கூகுல்மேப் சொன்னாள். கற்பனையில் மட்டுமே கண்ட திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை அருகே அடையப் போகும் படபடப்பு வந்து சேர்ந்தது. அங்கு அந்த அரசமரத்தடியில் காரை நிறுத்தும்போது திருமுகப்பில் காளிசரணாக உணர்ந்தேன். இறங்கியதும் எதிர்கொள்ளப்போகும் நூலக புத்தகங்களை கையில் அடுக்கிக்கொண்டு நடந்துவரும் அந்த ஒல்லித் தேகமும் பெரிய மண்டையுமுடைய அந்த ஜெ வை நினைத்தேன். மேலும் பதட்டமாகியது. ஆளரவமில்லாத அந்தக் கோவில் சாலையில் நடக்கும்போதே கண்கள் குளமாகியது.

“எழுதப்பட்ட நிலமே வரலாற்றில் நிலைகொள்கிறது, எழுதப்படாத நிலம் வெறும் பருப்பொருள் மட்டுமே எனப்படுகிறது. நிலம் என நாமுணரும் பண்பாட்டு வெளி எழுதி எழுதி உருவாக்கப்பட்டது மட்டுமே.” என்ற உங்களின் வரிகள் நினைவிற்கு வந்தது. நான் நிகழில் காணும் இந்த கோவில் கூட வாழப்போவதில்லை. வாழப்போவது திருமுகப்பில் சிறுகதையில் நீங்கள் எழுதிய கோவில் மட்டுமே. நான் இப்போது கண்டுகொண்டிருப்பது கூட அந்த கோவில் தான். ஒரு பூசாரி நின்று இன்னொருவருடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். சங்கு வாக இருப்பார் இல்லைனா சங்குவின் சொந்தக்காரர் என்று நினைத்தேன். படிகளில் ஏறும்போது அந்த ஒல்லிப்பையன் ஏறி ஏறி தேய்ந்த படிகள் என்று நினைத்தேன். ஏறிப்போய் அந்த கதவுகளைத் தொட்டேன். கதவு அதிர்வது போலிருந்தது. ஆனால் இல்லை. அதிர்ந்தது என் உடல். அங்கு நின்றும் உங்களை தான் நினைத்துக் கொண்டேன். மேலே நின்று கீழுள்ள தாழ்வாரத்தைப் பார்த்தேன். இருள் கவ்விய அந்த மண்டபத்தில் நீங்கள் படுத்திருப்பது போல. பரளியாற்றை சோனாவாக கற்பனை செய்து விஷ்ணுபுரம் கருவுருவாகிய இடமாகக் கண்டேன். “எங்குளாய் இலாதவனாய்… ” என்ற வரி நினைவிற்கு வந்தது.

அங்கிருந்து திருவரம்பு வழியாக திற்பரப்பு நோக்கிச் சென்றோம். ஏதோ ஊட்டியில் உள்ள மலைகிராமத்திற்குச் செல்லும் வழி போல இருந்தது. ரப்பர் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. உங்கள் முதல் எழுத்துக் குழந்தை ரப்பராக அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன். ரப்பரைப் பற்றி நீங்கள் சொன்ன தகவல்களையெல்லாம் அதன் மீது ஏற்றி அதை முறைத்துக் கொண்டே வந்தேன். திடீரென லோகமாதேவி டீச்சர் என்னை திட்டுவது போல இருந்தது. எல்லாத்துக்கும் காரணம் மனிதர்கள் தான் ரப்பர்கள் என்ன செய்யும் பாவம். கீரப்பட்டு கீரப்பட்டு பால் சொறிந்த இடத்தில் கருப்பு வலையமாக ஆகிப்போன மரத்தைப் பார்த்து பரிதாபத்தோடு புன்னகைத்தேன். திருவரம்பின் சாலைகள் தோறும் குட்டி அனந்தனை, கரடி நாயரை, டீக்கனாரை, எலிசிக்கிழவியை, கோலப்பனை, தங்கையா நாடாரை,  அணைஞ்சீயை, தவளைக் கண்ணனைத் தேடினேன்.

திற்பரப்பு மிகவும் சாந்தமாக ஒழுகிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே தவம் போல இருந்தது. மழைக்கு முன்னர் வரும் ஈரப்பதம் காற்றில் கலந்து வியர்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து மாத்தூர் பாலம் செல்லும்போது மழை தூர ஆரம்பித்தது. ஆற்றுபாபாலத்திற்குள் நுழையும்போது தூத்தலாக இருந்தது கொட்டும் மழையாக மாறியது. பாலத்திலிருந்து ஒன்றிரண்டு பேர்களைத்தவிர யாவரும் ஓடிவிட்டனர். கைகளை விரித்து முழுவதுமாக மழையை உடலில் வாங்கிக் கொண்டேன். மிக உயரமான பாலம். சுற்றிப்பார்த்தால் காடும் ஆறும் மட்டுமே தெரிகிறது. மனிதர்கள் சிறு எறும்புகளாத் தெரிந்தார்கள். பொருளற்ற வேலைகளைச் செய்வது போலத் தோன்றியது. மழைக்குள் ஒரு முடிவடையா பாலத்தில் சென்று கொண்டே இருந்தோம். “வேற உலகத்துக்குள்ள இருக்க மாதிரி இருக்குத்தா” என்றான் அவன். அப்படிதான் இருந்தது.

திரும்பிச் செல்லும்போது நாகர்கோவில் சாலையல்லாமல் வேறு ஒரு சாலையை கூகுள் மேப்காரி காணித்தாள். புது சாலையாக இருக்கு இதிலேயே போலாம் என்று முடிவெடுத்தோம். திருவரம்பில் வீடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்து இருப்பது போல தோன்றியது. எங்கள் ஊரில் வீடுகள் வரிசையாக மிகச்சிறிய இடைவெளியோடு இருக்கும். ஒரு வீட்டில் பேசுவது நான்கு வீடு தள்ளி கூட கேட்கும். ரகசியம் என ஏதுமில்லாதது. ஆனால் திருவரம்பு வீடுகள் தன்னளவில் ரகசியத்தை ஒளித்துக் கொண்டு தியானத்தில் அமர்ந்திருப்பவை போல அமைந்திருந்தன. அந்த சாலை அடர்ந்த காட்டுக்குள் நீண்ட நேரமாக சென்று கொண்டிருந்தபோது தான் அது நெடுமங்காடு சாலை என்பதை உணர்ந்தேன். முழுவதும் முடிக்காத “காடு” நாவலும், காட்டின் விதையான மிளாவும் நினைவிற்கு வந்தது. அளப்பங்காடு சாஸ்தா கோவில் ஞாபகம் வந்தது. ராதாகிருஷ்ணனும் நினைவிற்கு வந்தான். அவனுக்கு வயதாகவில்லை. அவன் அப்படியே இளமையாக சைக்கிளில் விரைந்து சென்று கொண்டிருந்தான்.

‘நீ நேரமே பள்ளிக்கு போனா என்னடே?’ என்று நீங்கள் கேட்டதும், அவன் ‘டேய் இந்த எருமை என்னை அவளுக்க கெட்டினவன்னு நினைக்குது கேட்டியா? இவள சிங்காரிச்சு வச்சுகிட்டு போறதுக்குள்ள அங்க ஒண்ணாம் பீரியடு முடிஞ்சிரும்’ என்று சொன்னது நினைவிற்கு வந்தது. சிரித்துக் கொண்டே இருந்தேன். மலைக்குமேலே எத்தனை கோயில்கள், பூதத்தான் கோயில், சாஸ்தா கோயில் என ஒவ்வொன்றும் சிறுகதைகளையே நினைவுபடுத்தியது. ராதாகிருஷ்ணன் இடையில் புகுந்து “டேய் மக்கா ஆணுக்கு என்னடே கதை? கதை கிடக்குதது பெண்ணுக்காக்கும். அதை எந்த மயிராண்டியும் எழுத முடியாது பாத்துக்க. அவளுக எழுதவும் மாட்டாளுக” என்றான் என்னிடம். ‘கொஞ்சம் கூடித்தான் போவுது கேட்டியா?’ என்று அவனைக் கடிந்து கொண்டேன். போய்க் கொண்டிருக்கும்போதே அந்த சாலையில் செண்டை மேளம் கேட்டது. அனைத்து எண்ணங்களையும் விரட்டி வெறுமையாக்கவே அடிக்கப்படும் ஒலி போலவே அது இருந்தது. வெறுமையும் அமைதியும் நிறைந்த பயணத்தில் மீண்டும் அந்த வரி வந்து முன் நின்றது. “எங்குலாய்…. இலாதவனாய்… ”

ஆண்டோர், சுருளக்கோடு, செல்லன்துரிதி, பேழையாறு ஆற்றுப்பாலம்,  சூலூர், தடிக்காரன்கோணம், அழகியபாண்டியபுரம், செம்பொன்விளை, திட்டுவிளை, செண்பகராமன்புதூர் தாண்டி ஒருவழியாக முப்பந்தலை அடைந்தோம். எந்த ஊரின் பெயரும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நடுஇரவில் வீடு வந்து சேர்ந்தோம். கனவில் நீங்கள் வந்து ‘பைத்தியமே அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே. அப்பறம் என்ன எங்குலாய் இலாதவனாய்னு.. ‘ என்று இந்த வரிகளைக் காணித்தீர்கள்.

“அவர் சூனிய வடிவமாக இருந்தார்.

சூனியத்திலே காலம் பிறந்துவருது. காலத்துக்க பீஜம்.

கருத்துளி.

பாஷை இல்ல.

சித்தம் இல்ல.

சித்தத்துக்கு அப்பால் உள்ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்ல.”

இன்னும் காண வேண்டிய இடங்களும், வாசிக்க வேண்டிய புத்தகங்களும், உங்களுள் செல்ல வேண்டிய பயணங்களும் எழுத வேண்டியவையும் மிச்சமிருக்கின்றன. இந்தப்பயணத்தில் நான் காண விரும்பியவனைக் கண்டு கொண்டேன்.

பிரேமையுடன்

இரம்யா. 

முந்தைய கட்டுரைகவிதைக்கான ஒரு நாள்
அடுத்த கட்டுரைவாசகர் கடிதங்கள்