தீபாவளிக்கு நூற்பின் ஆடைகள்

நூற்பு, தொடக்கம்

மதிப்பிற்குரிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

நூற்பின் ஆறாம் ஆண்டில் தீபாவளிக்கான ஆடைகளை நண்பர்களுக்கு கைத்தறியில் நெய்து கொடுப்பதிலும் இந்த செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதிலும் மகிழ்வாக உணருகிறேன்.  தொடர்ச்சியாக ஒரே பாதையில் தீர்க்கமாக பயணிப்பதன் விளைவை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் நம்பிக்கையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நிறைய மனிதர்கள், நிறைய இடங்கள், நிறைய அனுபவங்கள், உங்களது எழுத்துக்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை புடம்போட்டுக் கொண்டிருக்கிறது.

அன்றாடங்களையும் அதனை கடந்த உள்ளார்ந்த தீவிரத்தையும் தன்னறத்தோடு செய்கின்ற செயல் ஒன்றே நகர்த்துகிறது. செயல்படுதல் மட்டுமே ஒவ்வொரு கட்டத்தையும் மீட்டெடுக்கிறது.  இந்த ஐந்தாண்டு செயல்படுதலில் கண்டடைந்தது, திருச்சிக்கு அருகே உள்ள முசிறி மற்றும் அதன் சுற்று வட்ட பகுதியில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை. இன்றும் நிறைய ஆசார விதிகளை கடைபிடிக்கின்றனர். அவ்வளவு உண்மையாக இருக்கின்றனர். ஏழ்மை அகத்தில் அண்டாது காத்து வருகின்றனர். இவர்களுக்கு நன்கு தெரிந்த  ஒரே தொழில் கைத்தறி நெசவும்  விவசாயமும்  மற்றும் அது சார்ந்த உப தொழில்களும்.

கடந்த இரண்டு ஆண்டுகள் இவர்களது வாழ்வு நிறைய மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு வருகிறது. நிறைய மக்கள் கைத்தறி நெசவை  விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர். மிகவும் சொற்ப அளவிலே ஒரு சிலர் கைத்தறியினை கையில் வைத்திருக்கின்றனர்.  அதில் ஆறு குடும்பங்களை ஒருங்கிணைத்து , அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் நூற்ப்பிற்கு நெய்கின்றனர். அதில் ஒருவர் பாலசுப்பிரமணி.  டிப்ளமோ ஆட்டோமொபைல் முடித்தவர். அந்த துறை நிறைவளிக்காத சூழலில் நெசவையே தொடருகிறார்.

பாலுவின்  உறவு முறைகளில் ஒருவரும் அவருடன் சேர்ந்து  ஐந்து குடும்பங்களும் கடந்த ஒன்னறை ஆண்டுகளில் நெய்த வேட்டிகள் அதிக அளவில் தேக்கமாக உள்ளது. கொரோனா நோய் தொற்று என்பதால் வியாபாரம் சரியாக நடக்காத சூழலில் அவர்களுக்கு வேலை கொடுத்தவர்கள் யாரும் மீண்டும்  நெய்த வேட்டிகளை எடுக்க வரவில்லை.  அதற்கான கூலியையும் கொடுக்கவில்லை.

என்னால் முடிந்த அளவிற்கான வேட்டிகளை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.  இந்த காலகட்டத்தை அவர்கள் கடந்துவிட்டால் அடுத்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் அவர்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கைத்தறியிலும் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.  இந்த தருணத்தில் அவர்களுக்கு பெரும் மன சக்தியும் பொருளுதவியும் தேவையாக இருக்கிறது.

இந்த தீபாவளி பண்டிகைக்கு நண்பர்களில் ஒருவர் ஒரு வேட்டியை பெற்றுக்கொண்டாலே  அடுத்த ஓராண்டிற்கான வாழ்வை நகர்த்துவதற்கும் மீண்டும் கைத்தறியில் தொடர்ந்து வேலை செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

வாழ்வின் என்றென்றைக்குமான நன்றியும்… பிரார்த்தனைகளும்…

சிவகுருநாதன்.சி,

9578620207

www.nurpu.in

நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்

நூற்பு -சிறுவெளிச்சம்

நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்

முந்தைய கட்டுரைஇல்லம்தேடி கல்வி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஜ்மீர் கடிதங்கள்-4