சிஷ்டி கவிதைகள்- கடிதங்கள்

அன்புநிறை ஜெ,

அஜ்மீர் பயண அனுபவமும், சூஃபி இசையும், குவாஜா பாடல்களுமாக மனது சுழன்று சுழன்று இறகென ஆகிக் கரைகிறது.

கட்டுரையை வாசிக்கும் போது இது போன்ற ஆன்மீக பயணங்களில் தனித்திருப்பதும் அந்த ஆதாரமான ஆழ்ந்த மனநிலையிலேயே இயன்றவரை நீடித்திருப்பதும் எவ்வளவு முக்கியம் என்றெண்ணிக் கொண்டிருந்தேன். பயணம் முழுவதும் அகத்தில் தனித்திருப்பதும், மனம் கனிந்து நிறைந்திருப்பதும், அதற்கு முன்னரும் பின்னரும் அந்த இசையிலும் கவிதையிலும் தோய்ந்திருப்பதும், அங்கு அந்த ஞானியின் பாதத்தில் தலை வைத்து நிற்பதும் என அனைத்தும் சேர்ந்ததுதான்  புனிதப்பயணம். இந்த இறையனுபவம் என்றைக்குமாய் நீடித்தவர்கள் மறுபுறம் கடந்து விடுகிறார்கள்.

நாம் வாழும் உலகுக்கும் அந்த ஞானியர் உலவும் வெளிக்கும் இடையே சூஃபி இசை எனும் ஆறு கொந்தளித்து பெருகி ஓடுகிறது.  இடையே ஓடும் இந்நதி அகழியா அவனை அணுகத் திறந்திருக்கும் ஒரே வழியா என்பது நம்மை அந்த அனுபவத்தின் முன் திறந்து வைப்பதிலேயே இருக்கிறது. கடந்தவர்கள் கரையேறி விடுகிறார்கள். இருகரைகளில் ஒரே நதி. இக்கரைக்கும் அக்கரைக்குமாய் அலைகிறது சிறுதோணி.

மழையில் தொடங்கி, மழைக்கால கேரள நிலத்தின் பசுமை வழியாக பயணித்து, நிறைந்தொழுகும் ஆறுகள், காயல்கள், அருவிகள், காடுகள் என பேரழகுப் பயணம் பாலை நிலம் நோக்கி.  சாம்பல்பசுமை எனும் சொல் புதிதாக, அந்த அந்தியைக் கண்முன் கொண்டுவந்துவிட்டது.  புகைப்படங்கள் மிக அருமை.

அந்தக் கவாலி இசைப் பாடல்கள்! காலையில் கேட்டால் நாள் முழுவதும் உளம் பொங்கி நிறைகிறது. இரவில் கேட்டாலோ இரவை அது இல்லாமல் ஆக்கி விடுகிறது. பாலை நிலத்தில் பிறந்த அந்த இசையில்தான் எத்தனை வெள்ளம், சுழல்கள், சீறிப்பாயும் கொந்தளிப்புகள்! நீருக்காக தவம் செய்யும் நிலத்தில் இசையும் நீர்மை கொள்கிறதோ என்று தோன்றியது.

ரோஜாக்கள் குறித்த இவ்வரி கவிதையாக இருந்தது.

“ரோஜாவின் வாசனை மல்லிகைப்பூ போல உரத்தது அல்ல. அது ஒரு ரகசியம். பாலைவனத்தின் மலர் அது. நெடுநேரம் செவியோடு சொல்லப்படவேண்டிய மொழி கொண்டது.” இனி என்றும் ரோஜாவோடு நினைவில் வரும் வரி.

சூஃபி நடன அசைவில் சுழன்று சுழன்று உறைந்து நின்ற ஒரு காலத்துளியின் மலர் ரோஜா என்றும் தோன்றியது.

நவம்பர் இரண்டாவது வாரம் அஜ்மீர் பயணம் செல்லலாம் என எண்ணியிருக்கிறேன். இந்த எழுத்துக்கள், இந்த இசை என் உடனிருக்கும்.

மிக்க அன்புடன்,

சுபஸ்ரீ

***

அன்புள்ள ஜெ

கவாலி இசை, சூஃபி தரிசனம், பயண அனுபவங்கள் என கனவுபோல ஒருவாரம் கடந்து சென்றது. நான் மேலோட்டமாக சூஃபிகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய அந்தக் கொள்கையை ஆழ்ந்து அறிந்தது இல்லை. அறிவார்ந்து புரிந்துகொள்வது வேறு, உணர்வுபூர்வமாக உள்வாங்குவது வேறு. இந்தப்பயணக்கட்டுரையும் உடன் அமைந்த கவிதைகளும் பாடல்களும் அந்த அற்புதமான மனநிலையை உருவாக்கின.

சூபி கவிதைகள் மிகமிக அருமையானவை. சுபஸ்ரீ மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்தார். பல வரிகள் திகைப்பூட்டும் அளவுக்கு ஆழமானவை. அரசன் கையில் இருந்து பறந்து எழும் பருந்துக்கு வானமே உள்ளது. ஆனால் அரசனின் ஆணையை அது மறக்கமுடியாது. மதுகொண்டு வருபவனே அப்பால் செல், மொய்ன் மேலும் பெரிய மதுவை அருந்தி மயக்கத்தில் இருக்கிறார். மது நமக்கு மது நமக்கு என்று களியாடும் பாரதியின் வரி ஞாபகம் வந்தது. மதுவுண்ணல் சிவக்களி எய்தல் என்று நம் மரபும் சொல்கிறது.

குவாஜா மொய்னுதீஷ் ஷிஷ்டி இனி எப்போதும் என் ஆன்மாவில் ஒலிக்கும் கவிஞராக இருப்பார்

ஆர்.ஸ்ரீரங்கநாதன்

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்

முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைபுறப்பாடு, கடிதம்