அஜ்மீர் பயணம்- 7

அஜ்மீரின் அடையாளம் என்றால் வணிக உலகில் அது சலவைக்கல்தான். ஆர்கே மார்பிள்ஸ் என்னும் மாபெரும் நிறுவனத்தின் தலைமையகம் அஜ்மீர். சலவைக்கல் வணிகம் பெரும்பாலும் சமணர்களிடமே உள்ளது. அஜ்மீரில் தொன்மையான சமணக்கோயில்கள் பல இருந்துள்ளன. அவை சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டு கட்ட ஆரம்பித்து இன்றுவரை கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அஜ்மீர் அந்த மாபெரும் சமணக்கோயில்களால்தான் சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறும் என்றுகூடத் தோன்றுகிறது.

அஜ்மீர் நகருக்குள் உள்ள மிகப்பெரிய சமணக்கோயில் சோனிஜி கி நாஸியான் என்னும் கோயில். இது இன்றைய வடிவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திகம்பர மரபைச் சேர்ந்தது. இந்த ஆலயத்தின் பெயர் சித்கூட் சைத்யாலயம். [சித்தர்மலை] சிவப்புக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இதைக் கட்டியவரின் பெயரால் சோனிஜி கோயில் என வழங்குவதே நிலைபெற்றது.

சிவப்புக்கல்லால் கட்டப்பட்ட சிற்பவேலைப்பாடுகள் கொண்ட ஆலயம் இது. ஆதிநாதர் இதன் மையத்தெய்வம். வெண்சலவைக்கல்லால் ஆன ஆதிநாதர் சிலை உள்ளே இருக்கிறது. இந்த ஆலயம் 1870-ல் அஜ்மீரைச் சேர்ந்த வணிகரான சோனிஜி என அழைக்கப்படும் சேட் மூல்சந்த் சோனி அவர்களால் கட்டப்பட்டது. கட்டிமுடிக்க இருபத்தைந்தாண்டுகள் ஆயின. இன்றும் மூல்சந்த் சோனி குடும்பத்தினரின் உரிமையிலேயே உள்ளது.

சாலையோரமாகவே இந்த ஆலயம் உள்ளது. கொரோனாவுக்குப்பின் திறக்கப்படவில்லை. சாலையோரமாக இத்தகைய ஆலயங்கள் இருப்பதன் தீங்குகளில் ஒன்று தொடர்ந்து படியும் புழுதி. இன்னொன்று சாலையை தொடர்ந்து மேடாக்கிக் கொண்டே இருப்பதனால் இவை ஆழத்துக்குச் சென்று சேறு வந்து சேருமிடங்களாக ஆகிவிட்டிருக்கின்றன. நூறாண்டுகளே ஆகியிருக்கிறதென்றாலும் சோனிஜி ஆலயத்திற்கு ஆயிரமாண்டுப் பழமை தோன்றுகிறது.

இந்த ஆலயம் ஆச்சாரிய ஜினசேனர் என்னும் சமணமுனிவரின் பழைய சுவடியின் படி கட்டப்பட்டது என்கிறார்கள். அவர் இங்கே முன்பே இருந்த ஓர் சமண ஆலயத்தின் வடிவை தொன்மையான ஏடுகளில் இருந்து மீட்டு எழுதியளித்த வடிவமே கடைப்பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இக்கட்டுமானத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இதை கட்டிய மூல்சந்த் சோனி 1891ல் இக்கட்டுமானம் முடிவதற்குள்ளேயே மறைந்தார். அவர் மகன் நேமிசந்த் சோனி இதைக் கட்டி முடித்தார். இந்த ஆலயம் சமண முனிவர் சதாசுகதாஸ் அவர்களின் வழிகாட்டுதலால் அமைக்கப்பட்டது.

நாங்கள் சென்றபோது நாசியான் ஆலயம் பக்தர்களுக்காக திறக்கப்படவில்லை. ஆனால் அந்த ஆலயத்தின் பின்னாலுள்ள சுவர்ண நகரம் என்னும் அருங்காட்சியகம் திறந்திருந்தது. செந்நிறக் கற்களால் ஆன படிகள் வழியாக ஏறிச்சென்றால் நாம் எதிர்பாராத ஓர் ஆச்சரியம் அங்கே இருந்தது. பன்னிரண்டு மீட்டர் அகலமும் இருபத்தைந்து மீட்டர் நீளமும் கொண்ட மாபெரும் கூடம். அதை சுற்றி இரண்டு அடுக்குகளாக உப்பரிகைகள். உப்பரிகைகளிலுள்ள கண்ணாடிச் சாளரங்கள் வழியாக அந்த கூடத்தைப் பார்க்கமுடியும்.

உள்ளே சமணர்களின் புராணங்கள் சொல்லும் பிரபஞ்சம் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. சமணர்கள் இப்பிரபஞ்சம், இந்த பூமி, தேவர்கள், தெய்வங்கள், உயிர்க்குலங்கள், மனிதர்கள் ஆகியவற்றை பல்வேறு வளையங்களாக உருவகிக்கிறார்கள். அதன் மையம் மேரு என்னும் பொன்மலை. அங்கே ஆதிநாதர் அமர்ந்திருக்கிறார். பல சமண ஆலயங்களில்  இந்த பிரபஞ்ச கற்பனை ஓவியமாக வரையப்பட்டிருக்கும். இங்கே அந்தக் கற்பனை பிரம்மாண்டமாக, பற்பல அடுக்குகளாக சிற்பங்களாக செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிற்பக்காட்சியகம். சிற்பங்களாலான ஒரு வெளி

மரத்தால் செதுக்கப்பட்டு தங்கத்தால் பூச்சு அமைக்கப்பட்டவை இச்சிற்பங்கள். கண்களைக் கூசவைக்கும் பொன்னிற ஒளி. மரச்சிற்பங்களுக்குமேல் தங்கரேக்கு அமைக்க நூற்றைம்பது கிலோ தங்கம் செலவிடப்பட்டுள்ளது. சீராக ஒளியமைப்பு செய்யப்பட்டுள்ளது. சாளரங்கள் வழியாக வெவ்வேறு கோணங்களில் உள்ளிருக்கும் பொன்வெளியை பார்த்துக்கொண்டே சுற்றிவந்தோம்.

பறக்கும் தேவர்கள். சுழன்று சுழன்று ஏறும் மலைகளில் வெவ்வேறு நிலைகளில் ஊழ்கம் செய்யும் ஞானிகள். உச்சியில் அமர்ந்த தீர்த்தங்காரர்கள். காடுகள், நதிகள், நகரங்கள். அங்கெ செறிந்து வாழும் பல்லாயிரம் மக்கள். அனைத்துமே தங்கப்பூச்சுள்ள சிற்பங்களாக. ஒருகணத்தில் பிரபஞ்ச வாழ்க்கை ஒரு பொற்துளியாக உறைந்தது போலிருந்தது. பொற்கணம்!

நாசியானில் இருந்து நேராக எங்கள் அறைக்கு வந்தோம். சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுத்தோம். மாலை ஐந்து மணிக்கு வருவதாகச் சொன்ன காவலர்கள் சற்றுப் பிந்தி வந்தனர். ஐந்தரை மணிக்கு கிளம்பி அஜ்மீரில் இருந்து எட்டு கிமீ தள்ளி புறநகரில் ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் நரேலி என்னும் இடத்தில் இருந்த சமணக் கோயில்களைச் சென்று பார்த்தோம்.

ஆர்கே மார்பிள்ஸ் நிறுவனர் அசோக் பட்னி அவர்களால் கட்டப்பட்டது இந்த ஆலயம். ஏறத்தாழ ஐம்பதுகோடி ரூபாய் இதுவரை செலவாகியிருகிறது. இன்னமும் பணி முடியவில்லை. முடியும்போது இருநூறுகோடி ரூபாய் செலவாகியிருக்கக்கூடும். அசோக் பட்னி அவர்களுக்குப்பின் தீன்நாத்தும் அவருக்குப்பின் அவர் மகன் தீபக் ஜெயினும் கட்டுமானத்தை நடத்துகிறார்கள். இன்னும் இருபத்தைந்தாண்டுகள் ஆகலாம், கட்டி முடிக்க. கட்டுமானம் முடிந்தால் இந்தியாவின் மாபெரும் சமண ஆலயத்தொகைகளில் ஒன்றாக இது இருக்கும்

நாங்கள் செல்லும்போது இருட்டிவிட்டது. இருட்டில் ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அந்த ஆலயம் மெல்லிய விளக்கொளியில் விரிந்து கிடந்தது. மலைக்குமேல் இருபத்து நான்கு தீர்த்தங்காரர்களுக்கும் இருபத்துநான்கு கோயில்கள் கட்டப்படுகின்றன. கீழே ஆதிநாதரின் ஆலயம் முக்கால்வாசி பணி முடிந்திருக்கிறது.

சிறப்பு அனுமதி பெற்று மலைக்கு மேலே சென்றோம். அங்கே சலவைக்கல் குவியல்கள். நடுவே ஆலயங்கள் எழுந்து, முடிவடையாமல் நின்றுகொண்டிருந்தன. மலையுச்சியில் ஒரு சிறிய பழமையான கோயில். அங்கே செல்ல சிறிய படிக்கட்டு ஒரு வெண்ணிற நாடா போல வளைந்து ஏறிச்சென்றது. வானில் விண்மீன்கள் நிறைந்திருக்க நிழலுருக்களாக நின்றிருந்த ஆலயத்தொகைக்கு கீழே நின்றிருந்தோம்.

இருட்டில் ஆலயக்கோபுரங்களைப் பார்ப்பது ஒரு திகிலூட்டும் அனுபவம், சட்டென்று அவை உயிர்கொண்டு தெய்வங்களாக ஆகிவிட்டது போல. பார்வை பெற்றுவிட்டதுபோல. ஏராளமான ஆலயங்கள் என்னும்போது பேருருவ வடிவங்களால் சூழப்பட்டது போன்ற உணர்வு உருவாகியது. அந்தக்குன்று முழுமையும் ஆலயங்கள்தான். கீழே இருக்கும் ஆதிநாதர் ஆலயத்திற்கு மலையால் ஒரு மகுடம் சூட்டியதுபோல.

ஆதிநாதரின் ஆலயம் முற்றொழிந்து கிடந்தது. விரிந்த பெரும் கூடத்தின் மையமென அமர்ந்த கோலத்தில் அருகமுதல்வர். அருகே இன்னொரு மாபெரும் சந்திப்புக் கூடம். விரிந்த முற்றம். யட்சர்களால் ஆன கொடிக்கம்பம். அதன்மேல் யட்சிசிலை.

அங்கே இருந்த நிர்வாகி ஒரு பண்டிட். ரமேஷ் என்று பெயர். அவரிடம் நான் மகாபாரதத்தை முழுமையாக நாவல்களாக எழுதிவிட்டேன் என்று ஷாகுல் சொல்லிவிட்டார். பரவசம் அடைந்து என் காலில் விழுந்து வணங்க விரும்பினார். நான் தடுத்து அவரை அணைத்துக் கொண்டேன். என் காலில் தொடுவதுபோல ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று துடித்தார்.

ஆலயமுகப்பில் அமர்ந்து காவலர்களுடன் சில படங்கள் எடுத்துக்கொண்டோம். அதன்பின் அங்கிருந்து நேராக செங்கதிரின் வீட்டுக்குச் சென்று இரவுணவு அருந்தினோம். காவல் உயரதிகாரிகளுக்கு இடைவேளை, ஓய்வு என ஏதுமில்லை. ஆகவே விரிவாகப் பேசவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் அவர் ஓய்வுபெற்ற பின்னர்தான் இலக்கியம் பேசவேண்டும்.

அவருடைய வீடாக அமைந்த அந்த பங்களா முக்கியமானது. அங்குதான் ஈழப்போராளி ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் வரதராஜப்பெருமாள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தார். அவர் புலிகளின் கொலைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு நான்கடுக்கு ராணுவப்பாதுகாப்பு அப்போது அளிக்கப்பட்டிருந்தது.

அஜ்மீர் கடைசிநாளில்

மறுநாள் காலையில் ஷாகுல் எழுந்து தொழுகைக்குச் சென்றார். நான் உடன் சென்று இறுதியாக சிஷ்டி அவர்களின் தர்காவை ஒருமுறை பார்த்தேன். மரத்தடியில் சற்றுநேரம் அமர்ந்திருந்தேன். நினைவாக சில சிறுபொருட்கள் வாங்கிக்கொண்டேன். காலையிலேயே அதே திரள். பாயசத்துக்கான நீண்ட வரிசை.

ஷாகுல் வந்ததும் அவருடன் அஜ்மீரின் தெருக்களைச் சும்மா சுற்றி வந்தோம். அஜ்மீர் வெவ்வேறு குன்றுகளால் ஆனது. ஆகவே தெருக்கள் சரிந்து ஏறிச்சென்று சட்டென்று படிக்கட்டுகளாக ஆகி மேட்டை அடைந்து மீண்டும் சரிந்திறங்கும். எல்லா இடங்களில் இருந்தும் ஆனசாகரம் நோக்கியே மண் இறங்கிசென்றது. சாக்கடைகள் அங்கே செல்வதை தடுக்கவே முடியாது

இடுங்கலான சந்துகள் கொண்ட பழைய வீடுகள். சாக்கடை, பன்றிகள், நாய்கள் என திணறச்செய்யும் குடியிருப்புப் பகுதி. கழுதைகள் இங்கே முக்கியமான ஊர்திகள். நகர்முழுக்க இருக்கும் பலநூறு படிக்கட்டுகள் வேறெந்தவகையான ஊர்தியும் பயன்படுத்த முடியாமலாக்கி விட்டிருக்கின்றன. நிரை நிரையாக பொதிகளுடன் அவை சென்றுகொண்டே இருக்கின்றன.

நகர்வழியாகச் சுற்றிவந்தோம். காலையுணவு சாப்பிட்டோம். எட்டு மணிக்கு கிளம்பி ரயில்நிலையம். காவலர்கள் வந்து ஏற்றிவிட்டார்கள். மீண்டும் ஒரு ஐம்பத்தாறு மணிநேரப் பயணம். ஆனால் சலிப்பில்லை. எப்போது பயணம் முடியும் என்னும் எண்ணம்கூட இல்லை. இனிதாக இயல்பாக அமைந்திருந்தேன். நல்ல தூக்கம். விழித்திருக்கையில் எண்ணங்கள் அலையடிக்காத நிறைவு.

மீண்டும் மழைக்குள், பசுமைக்குள் நுழைந்தோம். காடுகளின்மீதாக மிதப்பது போல ஒழுகிச்சென்றோம். நிறைந்தொழுகிய ஆறுகளில் வெள்ளம் மேலும் பெருகியிருந்தது. மேற்குமலைகளில் கடுமையான மழை என செய்திகள் சொல்லின. வசிஷ்டி மேலும் பொன்னிறமாகி மேலும் விரிந்து அழகுகொண்டிருந்தது. சந்திரகிரி ஆறு கண்களை நிறைக்கும் பொன்னொளி கொண்டு விரிந்திருந்தது.

எர்ணாகுளத்துக்கு அதிகாலை ஆறு மணிக்கு வந்தோம். ரயில்நிலையத்தில் ஒருமணிநேரக் காத்திருப்பு. நனைந்த ரயில்நிலையத்தின் காலை இளங்குளிர் காற்றுடன் இனிதாக இருந்தது. பெங்களூரில் இருந்து வந்த ரயிலில் ஏறி மீண்டும் ஒரு மிதந்தொழுகுதல். கேரளத்தில் கடும் மழை. சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கோட்டையம் பகுதியில் வீடுகள் பல நீரில் பாதி மூழ்கியிருந்தன.

காயல்களின் நீர் பெருவெள்ளம் வந்தால் மட்டுமே செவ்வண்ணம் கொள்ளும். அப்போது அணையாத அந்தி ஒன்று உருவாகிவிட்டதுபோல தோன்றும். வேம்பநாட்டுக்காயலில் செந்நிறம் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. திருவனந்தபுரம் வந்து குமரிக்குள் நுழைந்தபோதுகூட பயணம் முடிந்ததாகத் தோன்றவில்லை. பள்ளியாடி நிலையத்தில் ரயில்பாதை ஓரமாகவே ஒரு குளம் நீர் நிறைந்து நின்றது. அதுவும் பயணப்பாதையில் இருப்பதாக ஒரு உளமயக்கு.

குமரிமாவட்டம் மழையில் நீராடி நின்றிருந்தது. வாழை தென்னை இரண்டுமே மழையில் மெருகும் இளமையும் கொள்கின்றன. அவற்றின் உடலெங்கும் நீர் நிறைந்துவிடுகிறது. மழைக்குப்பின் குமரிமாவட்ட நிலம் முழுக்க சரல்கற்கள் முழுத்து மேலெழுந்து நின்றிருக்கும். நடுவே இருந்த மண் அரித்துச் சென்றிருப்பதனால். அது மண் மெய்சிலிர்த்து நின்றிருப்பதாக தோன்றச்செய்யும்.

எர்ணாகுளம் ரயில்நிலையம் அதிகாலையில்

ரயில் நிலயத்தில் இருந்து ஷாகுலின் வீடு வழியாக என் வீடு. ஷாகுலுக்கு கோவாவில் ஒரு நண்பர் ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்து இனிப்புகள் பலகாரங்கள் கொடுத்துவிட்டுச் சென்றார். இன்னொருவர் மங்களூரில் கொட்டும் மழையில் காத்திருந்து கோழியிறைச்சி பத்திரி கொடுத்துச் சென்றார். கப்பல்காரர்கள். ஆகவே அவருடைய இரு மகன்களுக்கும் பெட்டி நிறைய பலகாரங்கள் இருந்தன. “சல்மானுக்கு ஸ்வீட் வாங்கணும்” என்று அவர் அஜ்மீரிலேயே சொல்லிக்கொண்டிருந்தார்.

மதியம் நான்குமணிக்கு வீட்டைச் சென்றடைந்தேன். அன்றுதான் மழை ஓய்ந்த இளவெயில். வாசல்முழுக்க மழை உதிர்த்த சருகுகள். நீராவியும் ஒளியும் நிறைந்த பின்மதியம். வீட்டை திறந்து அருண்மொழி வந்தபோதுகூட பயணம் முடியவில்லை என்னும் கனவுநிலை நீடித்தது.

[நிறைவு]

முந்தைய கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-7
அடுத்த கட்டுரைஅஜ்மீர் – கடிதங்கள்-1