அன்புள்ள ஜெ,
2018 டிசம்பரில் நீங்கள் அஜ்மீர் தர்கா செல்ல விரும்புவதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். அந்த நாள் நாங்கள் அஜ்மீர் செல்லும் வழியில் இருந்தோம். அடுத்த நாள் தர்கா சென்றோம்.
நேற்று ‘முழுமதி அவளது முகமாகும்’ என்ற பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். ’ஜோதா அக்பரை’ பற்றிச் சொன்ன நித்யா ’அக்பர் அஜ்மீர் தர்காவுக்கு சென்று ஜோதாவை மணம் முடிக்க அனுமதி பெறுவார்’ என்றாள். ’அக்பர் போன எடத்துக்கெல்லாம் போயிருக்கே! நீ யாரு!!’ என்று அவளை கிண்டல் செய்தேன்.
பின்பு ’ஜெயமோகன் தர்காவுக்கு வருவார்’ என்று சொன்னேன். நீங்கள் வெண்முரசு இசை வெளியீட்டில் தர்காவைப் பற்றி மீண்டும் சொல்லி இருந்தீர்கள். இரவில் உங்கள் பதிவு.
’முதுநாவல்’ சிறுகதையை மீண்டும் வாசித்தேன். அந்தக்கதை என்னுள் மேலும் மேலும் வளரும்.
வட இந்தியா சூஃபிகளின் நிலம். தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட சில சூஃபி வழிபாட்டு தளங்கள் தவிர அறியப்படாத பல தளங்கள் உள்ளன.
ஹரிதுவார் அருகே ’பிரன் கலியார்’ (Piran Kaliyar) என்ற அழகிய தர்கா உள்ளது. சுல்தான் இப்ரஹீம் லோதியால் கட்டப்பட்டது. கலியார் ஷரீஃப் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி அலாவுதீன் அலி அஹ்மத் சபீர் அவரின் தர்கா.
முகலாய சக்ரவர்த்தி ஷா ஜஹானின் புதல்வர் தாரா சிக்கோவின் குரு ஷேக் சில்லி. அவருக்கு சிவந்த கற்களால் கட்டப்பட்ட சமாதி பானிபத்தில் உள்ளது. பானிபத்தில் உள்ள இன்னொரு தர்கா பூ அலி ஷா கலந்தர் அவர்களுடையது. இவரை மொய்னூதீன் சிஷ்டியுடன் சேர்த்து ஆறு சூஃபி ஞானிகளில் ஒருவர் என்கிறார்கள்.
பஞ்சாபின் ஃபரீத் கோட் மாவட்டம் பாபா ஷேக் ஃபரித் என்ற சூஃபி ஞானியின் பெயரில் அமைந்தது. குவாஜா மொய்னூதீன் சிஷ்டியின் சீடர் குத்புதீன் பக்தியார் காகி. பக்தியார் காகியின் சீடர்தான் பாபா ஃபரீத். 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பாபா ஃபரீத் அவர்கள் தில்லி நிஜாமுதீன் ஆலியாவின் குரு. சிஷ்டி சில்சிலாவின் குரு சீட வரிசை.
பாபா ஃபரீத் இயற்றிய பாடல்கள் சீக்கிய குரு கிராந்த் சாஹிபில் இடம் பெற்றுள்ளன. ஃபரீத்கோட்டில் உள்ள ’டில்லா பாபா ஷேக் ஃபரீத்’ என்ற தளம் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் அனைவரும் சென்று வழிபடும் தளம். நானும் சென்று தலை தாழ்த்தி வணங்கியிருக்கிறேன். அஜ்மீர் தர்காவிலும்.
அன்புடன்,
ராஜா
***
அன்புள்ள ஜெ
அஜ்மீர் தர்கா சென்ற அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள். அக்கட்டுரையில் உள்ள உங்கள் தெளிவும் உறுதியும் ஆச்சரியப்பட வைக்கிறது. இஸ்லாமிய ஆன்மிகத்தை முழுமையாக ஏற்று தலைவணங்கி வர முடிகிறது உங்களால். ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்களை அவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள். அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆலய இடிப்புகளையும் சொல்லிச் செல்கிறீர்கள். இஸ்லாமை ஏற்கிறோம், மதச்சார்பின்மை பேசுகிறோம் என்றபேரில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் மன்னர்களின் அழித்தொழிப்புக்கும் வெள்ளைபூசும் அரசியல் இலக்கியவாதிகள் நிறைந்த சூழலில் இந்த நடுநிலை ஆச்சரியமானது
கூடவே பிருத்விராஜ் சௌகானைச் சொல்லும்போது எந்த வகையிலும் இந்துத்துவப்புல்லரிப்புக்குள்ளும் செல்லவில்லை. அவருடைய குரூரமும் ஆக்ரமிப்புத்தன்மையும் அவர் கோரியிடம் சமரசம் செய்துகொண்டதும் எல்லாம் பேசப்படுகிறது. இந்த தெளிவுதான் கட்சிகட்டுபவர்கள் உங்கள் மேல் காழ்ப்பு கொள்ள காரணமாக அமைகிறது என்று நினைக்கிறேன். உங்களை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள எவராலும் இயலாது.
அன்புடன்
ஜெயராஜ செல்லையா
முதுநாவல்
***