காடு- எம்.கே.மணி

காடு அமேசானில் வாங்க
காடு வாங்க

நூலகங்களுக்கு படையெடுத்து அலைபாய்ந்திருந்த காலத்திலேயே விபூதி பூஷனின் வனவாசி படித்து விட்டதாக நினைவு. பின்னால் படித்த போதிலும் அதில் இருந்த செவ்வியல் தன்மையை வியந்த போதிலும், கண்ணிலும் நெஞ்சிலும் ஓரளவு உள்வாங்கியிருந்த காட்டை அடைந்ததாக எண்ணம் வரவில்லை. தற்போதைய காடு சம்மந்தமுள்ள பல நாவல்களை முடியவில்லை என்றாலும் முழுசாக படித்தாயிற்று. எல்லாம் எழுதுகிறவர்களின் அறிவு தொடர்பானவை. ஒன்று, டேட்டாக்களை ஊறவைத்து மாவரைத்து சோடாமாவு கொட்டி நுரை கிளப்பிக் காட்டுகிறவை. மற்றும் ஒன்றை சொல்லலாம், சமீபத்தில் எங்கோ படித்த பத்தி ஒன்றில் காட்டின் உளவியல் அறியாததை மழுப்ப கவிதையால் பொதிந்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஜெயமோகனின் காடு நாவலில் காடு இருப்பதற்கு முதன்மையான காரணம் அது சொல்லப்படுகிற மிக அரிதான தொழில் நுட்ப திறத்தினால் என்பதை அதன் கதைப்போக்கில் இருந்து அதன் அத்தியாயங்கள் வாரியாக அறிந்து கொள்ள முடியும். அது திட்டமிட்டதா, இயல்பான போக்கில் படிந்து வந்தவாறு இருந்ததா என்பதை முடிவு செய்ய ஆகாவிட்டாலும், எதுவாயினும் அது புதிய உச்சத்தை தொட்டு விட்டிருக்கிறது. எந்த இடத்தில் எதை சொல்ல முடியும் என்பதை கற்க விரும்புவோருக்கு இது பொக்கிஷம்.

அதற்கு அடுத்ததாக செய்யப்படுவதைக் காட்டிலும் அதற்கு ஆவேசமாக தொழிற்படுகிற, அசலான ஆவேசம். அதாவது இதைப் படிக்கக் கூடிய ஒரே ஒரு மனிதன் இல்லாமல் போனாலும் அது எழுதப்பட்டிருக்கும் என்பதில் முடிகிற கொந்தளிப்பு. வேறு ஒன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது, அந்தக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி தன்னுடைய ஆணைக்குள் வைத்துக்கொண்டு அதை வைத்து விளையாடிய லீலை.

நூறு வருஷம் காட்டில் இருந்து படிந்தவன் அதைப் பற்றி ஒரு நாவல் எழுதி விட முடியும் என்பது கற்பனை தான், ஏன் சொல்லுகிறேன் என்றால் ரத்தினங்களை ஜொலிக்க வைக்க வேறு தினுசான ரசவாதம் தெரிந்திருக்க வேண்டும். பெருங்கூட்டத்தில் தனது காதலியை கண்டடைய முடிகிற காதலைப் போல நல்ல எழுத்தாளனால் அது முடியும். ஜெமோ காட்டை விரும்புகிறவர் என்பதில் ஒன்றுமே இல்லை, காட்டின் அத்தனை மகத்துவங்களையும் எப்படி நிருபிக்க முடியும் என்கிற பிரயத்தனம் வெற்றி பெறுவதில் மொத்தமுமே இருக்கிறது.

நாவலின் நாயகன் கிரி, வாழ்வு ஆத்திரத்துடன் செலுத்தின வேகத்தில் நிலைகுலைந்ததை நாவல் எவ்வளவோ இடங்களில் சொல்லுகிறது. குருபியான அவனுடைய மனைவி, நாதியற்று தன்னை உணர்ந்த ஒரு திக்கில் மண்ணெண்ணை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்று மருத்துவமனையில் கிடக்கும்போது கிரி பிதுங்குவதை தான் முதலில் நினைத்துப் பார்க்கிறேன். அவன் அநேகமாக பிறந்ததில் இருந்து பச்சையான வாழ்க்கைக்கு தன்னைப் பொருத்திக் கொள்ளாமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்ததின் விளைவு, அப்படி எப்போதும் பிதுங்கி நிற்கவே அவனால் முடிகிறது. தாயைக் கூட அவன் கவனித்து வைத்திருக்கிறான். அவளுடைய சாவுக்கு அப்புறம் தான் அவளுடைய பிடிமானம் கூட அவனது கவனத்துக்கு வருகிறது என்பதில் அவன் வாழக்கூடிய இவ்வுலகத்தின் சாத்தியப்பாடுகளை நாமே யோசித்துக் கொள்ளலாம்.

அவனுடைய அப்பா அவனுடைய மதிப்பில் இருந்து விழுந்து விட்டவர். அப்படி இருக்க அவனுடைய மாமாவின் நிழலில் அவனது வாழ்க்கை ஒதுங்குகிறது. அங்கே, எப்போதுமே வீழ்ச்சியின் பதட்டத்தில் இருக்கிற, வெறுமனே ஒரு முதலாளியின் முகத்தை எங்கனம் ஏறிடுவது ?கல்வெர்ட்டுகள் வழியாக, பாலங்கள் வழியாக, சாலைகள் வழியாக மனிதர்கள் காட்டை வென்றவாறு இருப்பது அதன் குருதி முழுவதையும் உறிஞ்சிக் குடித்து விட்டு அதை மழித்து முடிப்பதற்கு தான்.

அடர் வனத்தின் நடுவே முழுமை கொள்ளாத கொத்தலுடன் மல்லாந்து கிடந்த பாறையினாலான மூப்பன் அனந்த பத்மநாபன் ஆவதும் அவனைச் சுற்றிலும் திருவனந்தபுரம் என்கிற நகரம் உருவாவதும் யாரோ சொல்லி, கிரியால் கற்பனை செய்யப்படுவது நாவலில் உண்டு. எனினும் அவன் வாழ்வு முழுவதும் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சீரழிவை. தந்திரமும், சதியும், துரோகமும், வலியும், அவமானமுமான நிர்க்கதிகளில் விளையாட உட்கார்கிற ஒரு சூதாட்டம்.

அவனுமே கூட அதில் ஈடுபட்டு வேடிக்கைப் பார்த்து நஷ்டமடைகிறான். அன்றும் இன்றும் சந்தனக்காடுகள் போன்ற இயற்கையின் தாய்மடியை குறி வைத்து சாலைகள் நகர்ந்தாலும் அதன் வழியாக தானே நாகரீகம் நம்மை வந்து அடைகிறது. முன்னேற்றம் பேசுகிற சூதாடிகளில் இருந்து பிதுங்கி அவன் சூதாடிய போது அவனால் வெற்றி பெற முடியவில்லை. முடியாது என்பது அவன் தன்னை வளர்த்துக் கொண்ட சித்தத்தின் காங்க்ரீட் விதி.

கிரி தனியன்.அவன் தனது தனிமைக்கு பாலூட்டினான். போற்றி வளர்த்தான். உலகின் யதார்த்தங்களாக இருக்கிற நாற்காலிகளில் உட்காரப் பழகுவதற்கு பதில் காதில் விழாத ரகசியங்களை எதிர்பார்த்து சொற்களில் புழங்கினான். அப்படி ஒருவன் பொருத்தப்படுவதற்கு உதவுகிற நிழல் மூலை அவனை அழிப்பதற்கே வரும். தனது காரியம் பார்த்து நடக்கிற பித்துக்குளிகளுக்கு பிரத்யட்ஷப்படாத தெய்வங்கள் அவனில் இறங்கி களிக்கும். அவனை சிதறடித்தவாறு அவனது ஊனுண்ணும். அவளே நீலியாக இருந்தாள்.

நான் அவளை சொல்லுவதில் இருந்து விலகுகிறேன்.முதல் ஒன்று, நீலியைப் பற்றி நான் எவ்வளவு சொன்னாலும் அது போதாது.இரண்டாமாவது, படிப்பவர்களுக்கு முன் முடிவு கொள்ள காரணம் வைத்து விடக் கூடாது.ஆனால் நீலி வரும் இடங்கள் எல்லாம் வெகு கவனமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அவை அதிகமோ, குறைவோ என்று சந்தேகம் கொள்ள முடியாத அளவிற்கு கச்சிதம். ஒரு திடுக்கிடலுடன் அவளை முதன்முறை பார்க்கும்போதும், கிரி ஆற்றாமையோடு அவளை தேடி காடு முழுக்க முட்டி மோதி தேடும்போதும், அடுத்த சந்திப்பில் நிலவும் போதும், ஒரு பெரிய இடைவெளியில் மனித வாழ்வு அலசப்பட்டு அதற்குப் பிறகு அவள் அவனைப் பார்த்தவாறு இருந்ததை சொல்லும்போதும் நமக்குள் இருந்து ஒருபோதும் போகாத, சிரஞ்சீவியான, நிர்மலுமுள்ள காதல் துடித்ததாக வேண்டும்.

காதலர்கள் குறிஞ்சி காண செல்லும் அந்த சஞ்சாரம் புனைவின் எல்லை. காடு மறைந்து மேகம் மட்டுமே சூழ்ந்த பாறை வெளியில் கிடைக்கிற வெறுமையுமே பேருண்மை. ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும் நான் வெலவெலக்காமல் இருந்ததே இல்லை. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் திரைப்பட விழாவில் அவ்வருடம் வெளியான ஒரு கறுப்பு வெள்ளைப் படம் இவ்விதமான முடிவை அடைவதைப் பார்த்தபோது நான் நாவலை தான் நினைத்துக் கொண்டேன். உணர்ச்சிகரமாக இருந்தது.

கபிலனுக்கு இந்நாவலின் சுவையில் பங்குண்டு.கம்பனுக்கு கூட உண்டு.இவர்களின் பாதிப்பு என்று கூட இல்லை, அதற்கும் மேலான பார்வை இருப்பதாலே இந்நாவலின் சொற்கள் பதப்பட்டு கூழாங்கற்களாக குளிர் கொள்கின்றன. அல்லவெனில் புளிப்பும் இனிப்புமான சுவையில் நெஞ்சில் இறங்கி விட்ட மலைத்தேன் மெதுவாக மயக்கம் தூண்டித் ததும்பி நினைவின் திரியில் சுடர் ஏற்றுகின்றன. நமக்கு ஆதரவான ஒரு வழுக்கலுடன் கூடிய ஒரு மலையிறக்கம். போத்தியோ, நாடாரோ, அய்யரோ நமது அகம் நோக்கி மட்டுமே பேசுகிறார்கள். குட்டப்பனும், சிநேகம்மையும் கூட. நமக்குள் இருக்கிற நூறு திசைகளுக்கு வாகான நியாயங்கள், யாருக்கு என்ன கிடைத்து, கிடைக்காமல் போனாலும் சொல்லி முடிக்கிறார்கள். அசைக்கவோ, ஆற்றுப்படுத்தவோ செய்கிறார்கள்.

ஒருபகுதியில் வெறுமனே ஒரு செய்தியாக வந்து விட்டுப் போன கீறக்காதன் ஒரு பாத்திரமாக யாருடைய அபயத்திற்கோ இறைஞ்சுவது பெரும் துயர். அதற்கு பெருத்த விடுதலையாக இருந்திருக்கலாம் மேனனின் துப்பாக்கி குண்டு. ரொசாலத்தின் தேவாங்குக்கு அப்படி இருந்திருக்காது. எல்லாவற்றையும் விட இதில் வரக்கூடிய பெண்கள்! அவர்களில் சுழலுகிற ஆண்களின் வாழ்வு. நீலி வெளியே அழுது கொண்டிருக்க, கிரி அமிழ்ந்து கொண்டிருக்கிற அழிவின் புதைகுழிதான் என்ன? குறிஞ்சியில் புணர்வு நிமித்தம் இல்லாமல் எப்படி? அதன் நியாயங்களுக்கும் அவ்வளவு சுவை.

காடு பூத்த காலத்தின் வர்ணங்கள் சிதறுவது போல, நாவலில் காட்டுபன்றிகளின் மலத்தையும் மிதிக்க வேண்டி வரும். மழை மாமழையாகிப் பொழிவது பயமுன்டாக்கி ஏக்கம் நிறைக்கிறது. ஒரு முறை வழி தவறி காட்டில் தொலைகிற கிரி மெல்ல மெல்ல காடறிந்து அதன் மூலை முடுக்கெல்லாம் சென்று திரும்புவது போல நான் இந்த நாவலை அறிந்ததாக ஒரு எண்ணம் இருந்தது. அது அதிகமோ? ஆனால் இவ்வளவு முறை நான் படிப்பதில் அப்படி ஒரு எண்ணம் தான் வருகிறது. கொஞ்ச நாட்கள் போகும். படித்தது எல்லாம் மறந்தது போல மறுபடியும் படிக்கிற துடிப்பு படபடக்கும். அப்போதும் முதன்முறை படிப்பது போலவே படித்து, ஆவேசம் கொள்வேன். காட்டில் தொலைந்து மறுபடி திரும்பி விட்டதாக எண்ணிக் கொள்ளுவேன்.

ஜெயமோகன் எழுதிய காடு நாவலைப் பற்றின விமர்சனம் என்று இதை யாரும் தவறாக முடிவு செய்து விடக்கூடாது. படித்து முடித்த விறுவிறுப்பில் அதை பாராட்டி சொல்ல முயன்றேன். யாராவது படிக்கட்டும் என்பதை தூண்ட முடியுமா என்பதில் முயன்றேன். படிக்கவில்லை என்றாலும் ஒரு நஷ்டமும் இல்லை.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மொழியைக் கடித்து வைத்து ஆதாயம் கொள்ளும் கொடிய காலத்தில் ஒன்றை சொன்னால் சரியாக இருக்கும் என்று படுகிறது.

எம் கே மணி

காடு,கடிதம்

காடு- கதிரேசன்
கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்
காடு இரு கடிதங்கள்
காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி
காடு- வாசிப்பனுபவம்
கன்யாகுமரியும் காடும்
காடு-முடிவிலாக் கற்பனை
காடு -கடிதம்
காடும் மழையும்
காடு- கடிதங்கள்
காடும் யானையும்
கன்யாகுமரியும் காடும்
காடும் குறிஞ்சியும்
காடு- ஒரு கடிதம்
காடு– ஒரு கடிதம்
காடு – பிரசன்னா
காடு -ஒரு பார்வை
முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைசொல் தெளியா இசை- கடிதங்கள்