அஜ்மீர்- கடிதங்கள்-2

ஜெ அவர்களுக்கு,

பொதுவாகவே பயணக்கட்டுரைகளை வாசிக்கும் போது மனதில் ஒருவித ஏக்கம் வந்து நிறையும். இந்த கட்டுரைகள் அதை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன.

மேலும், ஆறுகள், ஏரிகள், காயல்களின் புகைப்படங்கள் உங்கள் சொற்களுக்கு மேலும் மெருகூட்டின. உடனடி பயணம் செய்ய வேண்டும் என தூண்டுகின்றன. பார்க்கலாம்.

– ராஜசேகரன்.

***

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

அஜ்மீர் பயணம் கட்டுரை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். அகநோன்பு பகுதியில் குறிப்பிட்ட ஆன்மீகப்பயணம், இஸ்லாமிய கூட்டார்ந்த வழிபாடுகளுக்கு மாற்றமானது இல்லை. மாறாக இந்த கலையை நபிகள் நாயகத்தின் வாழ்விலிருந்தே சூஃபியாக்களின் சிந்தனைகூடங்கள் பெற்றுக்கொள்கின்றன. இதனை சிந்தனைக்கூடத்தின் கலைசொற்களில் ‘கல்வத்’(இறைத்தனிமை) என்பார்கள். கல்வத்தின் மூலவேர்  எங்கிருந்து தொடங்குகிறது என்றால், முகம்மது நபி தன்னுடைய நாற்பதாவது நபித்துவம் முதிர்ச்சியடைக்கூடிய ஹிரா மலைகுகை தனிமைகாலங்களிலிருந்து பெறுகின்றது. இந்தியாவில் பெரும்பான்மை வகிக்கும் சூபிஃத்துவ ஆன்மீகம் பயிலகங்களான ஷிஸ்தியா, காதிரியா ,நக்ஸபந்தியா சுகரவர்த்தியா, சர்த்தாரியா, ரிபாயியா இவற்றுள் ஷிஸ்தியாவும் காதிரியாவும் பிரபலமானவை. காதிரியாவின் முக்கிய ஆளுமையாக தென்னிந்தியாவில் நாகூர் சாகுல் ஹமீதுவும், ஷிஸ்தியாவின் ஸ்தாபகராக அஜ்மீர் க்வாஜா மொய்னுத்தீன் ஷிஸ்தியும் இடம்பெறுகிறார்கள்.

இச்சிந்தனைக்கூடங்கள் கல்வத் எனும் தனித்திருத்தலை இறைவனை அடையும் வழியாக மீளுருவாக்கம் செய்கின்றன.தனிமையில் இறையை குறித்து சிந்திந்து கழிக்கும் காலத்தை சுலுக் எனும் ஆன்மீகபயணத்தில் பிராயணிக்கும் ஒவ்வொரு சாலிக் எனும் மெய்யடியார்கள் தமக்கு தாமே கடமையாக்குகிறார்கள். நித்தியமான அருவத்தை இறைத்துதி மூலம் தன்னைத்தானே அறிந்துக்கொள்ள பயிற்றுவிக்கும் கலையை கற்றுக்கொள்கிறார். மன் அரஃப நப்ஸஹூ ஃபகத் அரஃப ரப்பஹூ ‘தன்னை அறிவதன் மூலம் தன் இறைவனை அறியமுடியும்’ எனும் நபிகள் நாயகத்தின் ஹதீது, ஆன்மீகத்தின் தோற்றுவாயாக சூஃபிகளுக்கு அககாட்சியாகவம் தரிசனமாகவும் திறந்துக்காட்டுகிறது.

சூஃபியாக்கள் மற்றும் அதன் தஸவ்வுஃப் எனும் கலை  குறித்த சிறிய எளிமையான விளக்கம், இலங்கை கலாநிதி எம் ஏ எம் சுக்ரி எழுதிய ‘ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும்’ என்ற நூலை பரிந்துரைப்பேன். அச்சிறிய நூல் முகம்மது நபி, நபித்தோழர்கள் காலத்தின் ஆன்மீகத்தை எப்படி சூஃபித்துவம் தத்தமது காலங்களிலும் நிலத்திலும் பிராந்தியத்திலும் பக்தாதில் காதிரியாவாக, இந்தியாவில் ஷிஸ்தியவாக, ஆப்ரிக்காவில் சன்னூசியாவாக மீளுருவாக்கம் பெற்றது என அறிமுகத்தை திறந்துவைக்கிறது.

முகம்மது ரியாஸ்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

அஜ்மீர் பயணக்கட்டுரைகள் இந்த தளத்தில் வெளிவந்த பயணக்கட்டுரைகளிலேயே ஒரு தனிப்பெரும் சாதனை என நான் நினைக்கிறேன். ஒர் இலக்கியவாதி செய்யக்கூடிய பயணங்கள் சில உண்டு. அந்த இலக்கணத்தை இப்பயணக்கட்டுரை உடைத்துள்ளது. இதிலுள்ள ஆன்மிக அனுபவம், வரலாறு, அன்றாட அனுபவம் ஆகிய மூன்றும் கலந்து விவரிக்க முடியாத ஒரு நிறைவை அளித்தது.

தமிழில் இஸ்லாமியச் சூழலில் அஜ்மீர் பற்றியும் சூஃபி மரபு பற்றியும் நிறைய எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கியச்சூழலில் இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் இப்போதுதான் எழுதப்பட்டிருக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அப்துல் வஹாப்.

அஜ்மீர் பயணம்- 5

அஜ்மீர் பயணம்- 4

அஜ்மீர் பயணம்-3

அஜ்மீர் பயணம்-2

அஜ்மீர் பயணம்-1

முந்தைய கட்டுரைமலையாள வாசகர், கடிதம்
அடுத்த கட்டுரைபுவியரசு 90- உரைகள்