மலையாள வாசகர், கடிதம்

ஒரு மலையாள வாசகர்

அன்புள்ள ஜெ,

தங்கள் அபிமான கேரள வாசகர் ஜ்யோதிஷ் குறித்தான பதிவு மற்றும் வீடியோ கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். ஆனால், சில வருடங்களுக்கு முன்னால், நான் கேலிகட் பல்கலைக்கழகத்தில்  கருத்தரங்கின் பொருட்டு சென்று இருந்தேன். காலையும், மாலையும் அவர் ஆட்டோவில் தான் பயணம் புரிந்தேன். நான் அவரின் பெயராக புரிந்து கொண்டது “ஜோதி” என்று. மிகவும் ரசனையுடனும் வாஞ்சையாக உரையாடினார்.

அவர் ஆட்டோவில் புத்தகங்கள் இருந்ததை கண்டு, வாசிப்பீர்களா ஜோதி? என வினவிய போது தான், அவர் உங்கள் மீது கொண்டிருந்த அபரிதமான நேசத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. தங்கள் அலைபேசி எண் என்னிடம் இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேச வேண்டுமா எனக் கேட்ட போது, அவர் முகத்தில் அப்படிவொரு மலர்ச்சி. தான் சில கடிதங்கள் தங்களுக்கு அனுப்பி இருந்ததாக குறிப்பிட்டார். நான் அலைபேசியில் அழைத்த சில நொடிகளில், உங்களிடம் அவரை பற்றி சில வார்த்தைகள் மட்டும் கூறிவிட்டு, அவரிடம் அலைபேசியினை கொடுத்தேன். நீங்கள் அவரிடம் சில மணித்துளிகள் பேசினீர்கள். அவருக்கோ சந்தோஷமான சந்தோசம்.

இந் நிகழ்வு குறித்து, நான் அன்று, என்னுடைய முகனூலிலும் பதிவிட்டு இருந்தேன். உங்களின் எத்தனையோ, அன்புமிகுந்த  வாசகர்களில் அவரும் ஒருவர். அவர் குறித்தான பதிவினை வாசித்த பொழுது, நீங்கள் அவரிடம் பேசி இருக்கிறீர்கள் ஜெ… என என் மனம் கூவியதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இந்த மின்னஞ்சல்.

மிக்க அன்பு

கி.ச.கல்யாணி

https://m.facebook.com/story.php?story_fbid=3558736747515675&id=100001381558181

***

அன்புள்ள கல்யாணி

நினைவிருக்கிறது. ஜோதிதான் ஜ்யோதிஷ் என அறிந்தது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. கோழிக்கோட்டில் இருந்து நீங்கள் அழைத்து அவரிடம் பேசிய நினைவு இனியது.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு இசைக்கொண்டாட்டம், செய்திகள்
அடுத்த கட்டுரைஅஜ்மீர்- கடிதங்கள்-2