அஜ்மீர் பயணம்-6

அஜ்மீரின் பழையபெயர் அஜயமேரு. வெல்லமுடியாதவனின் மாமலை. பதினொன்றாம் நூற்றாண்டில் சகமான [சௌகான்] ஆட்சியாளரான அஜயதேவரால் உருவாக்கப்பட்ட நகரம் இது. 1193ல் இது டெல்லியின் சுல்தான் ஆட்சிக்கு கீழே சென்றது. ஆனால் தொடர்ந்து சௌகான் வம்சத்தார் இந்த நகரின் ஆதிக்கத்துக்காகப் போராடிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்.

இந்நகரின் மையம் இன்று மாறிவிட்டது. முன்பு இது இங்குள்ள ஆரவல்லி மலைத்தொடரின் நீட்சியாகிய உயர்ந்த மலைமேல் அமைந்திருந்தது. அது தாராகர் கோட்டை என அழைக்கப்படுகிறது. அஜயபால சௌகான் கட்டிய கோட்டை இது பின்னாளில் சௌகான் ஆட்சியாளர்களால் இது விரிவாக்கப்பட்டது. மிகச்செங்குத்தான மலை. அதன்மேல் வளைந்து வளைந்து ஏறும் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. முன்பு கரடுமுரடான பாறைவழிகளில் குதிரைகளில்தான் மேலே சென்றிருக்கமுடியும். மலையுச்சியில் மணிமுடி சூட்டியதுபோல கோட்டை அமைந்துள்ளது. இன்று பெரும்பாலும் சிதைந்து ஆங்காங்கே சுவர்களாக கோட்டை எஞ்சியிருக்கிறது.

கோட்டைக்கு மூன்று வாசல்கள் இருந்தன. லட்சுமிபோல், புடா தர்வாசா, காகுடி கி பதக் ஆகியவை. அவற்றில் ஒன்று மட்டுமே இன்று கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. கோட்டைக்கு மேல் மழைநீரை சேர்த்துவைக்கும் குளங்கள் பாறைகளில் வெட்டப்பட்டிருந்தன. இன்று சுற்றுலாப்பயணிகள் வந்து பார்ப்பதற்கென எஞ்சியிருப்பவை சில சிறிய ஆலயங்கள் மட்டுமே.

கோட்டைக்குமேல் ஒரு தர்கா உள்ளது. இது சையத் ஹுசெய்ன் கிங் சர்வார் என்பவரின் சமாதி. இவர் மீரான் சாகிப் என அழைக்கப்படுகிறார். அஜ்மீரை கைப்பற்றிய முகம்மது கோரி அவரை கோட்டையின் கிலாதார் ஆக நியமித்தார். மீரான் சாகிப் மனிதநேயராகவும் நீதிமானாகவும் அனைத்து மக்களையும் சமானமாகக் கருதுபவராகவும் இருந்தமையால் அனைவராலும் விரும்பப்பட்டார்.

1202ல் கோட்டையை தாக்கிய ராஜபுதனவீரர்களால் அவர் கொல்லப்பட்டார். கோட்டையை சௌகான்கள் மீண்டும் உரிமைகொண்டனர். மீண்டும் தாரா ஷுகோதான் இக்கோட்டையை கைப்பற்றி முகலாய ஆட்சிக்குக் கீழே கொண்டுவந்தார். ஆனால் சௌகான் ஆட்சி நடந்தபோதுகூட கோட்டைவாசிகள் மீரான் சாகிப் அவர்களை தொடர்ந்து மதித்து வழிபட்டனர். கல்லால் ஆன சிறிய சமாதி ஒன்று அங்கே அமைக்கப்பட்டது. உள்ளூர் பழங்குடிகளும் இஸ்லாமிய பக்கிரிகளுமே வழிபட்டு வந்தனர். முந்நூறாண்டுகளுக்குப் பின்னரே அக்பர் காலத்தில் அது தர்காவாக ஆகியது.

வளைந்த பாதையில் மேலேறிச் சென்றபோது கண்கூசும் வெயில் நிறைந்திருந்தது. வெயில்பரவிய பாலைநிலம் சுற்றிலும். வெறும் வானம் மேலே வளைந்திருந்தது. மீரான் சாகிப்பின் தர்காவுக்கு நிறையபேர் வண்டிகளில் வந்திருந்தனர். இன்று இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் ஆகிய மூன்று மதத்தினருமாகிய மக்கள் திரளாக வரும் இடமாக இந்த தர்கா உள்ளது. மீரான் சாகிப்பை வென்ற ராஜபுத்திரர்களும் வழிபடுகிறார்கள்.

சுன்னி இஸ்லாமியரின் தர்காவாக இருந்த இது பின்னாளி ஷியா முஸ்லீம்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏனென்றால் மீரான் அவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் சுன்னிகள்தான் அவருடைய தர்காவை கட்டியவர்கள். இந்த பூசல் இன்னமும்கூட நீடிக்கிறது. ஷியாக்களுக்கு இசை பாவம். சுன்னிகளில் சுஃபி பிரிவினர் இசையை இறைவனிடம் கொண்டுசெல்லும் வழியாக எண்ணுபவர்கள். சுஃபி தர்காவான மீரான் சாகிப் திகழ்விடத்தில் இசை ஒலிக்கலாமா கூடாதா, கவாலி பாடகர்களுக்கு அனுமதி உண்டா இல்லையா என்பது இன்றும் விவாதமாக உள்ளது. சுன்னிகள் அஜ்மீரில் மொய்னுதீன் சிஷ்டி தர்காவுக்கு அருகே மீரான் சாகிபுக்கு ஒரு சிறு நினைவிடம் அமைத்து அங்கே இசைநிகழ்ச்சிகளை நடத்திக்கொள்கிறார்கள்.

ஷியா முஸ்லீம்களே இந்த மலைமேல் வாழ்கிறார்கள். அவர்களின் சிறிய தெருக்களும் கடைகளும் சூழவும் செறிந்துள்ளன. ஒட்டகங்களிலும் குதிரைகளிலும் மலையைச் சுற்றிக்காட்ட அழைத்துச் செல்கிறார்கள். சுற்றுலாவை நம்பியே வாழ்கிறார்கள். நாங்கள் சென்றபோது உச்சிவெயில். ஆகவே கோட்டையைச் சுற்றிப்பார்க்க முடியவில்லை. தர்காவுக்கு மட்டும் சென்றோம்.

தர்காவின் காதிம்கள் ஷியா முஸ்லீம்கள். அவர்களின் அலுவலகங்கள் தர்கா செல்லும் வழியில் வரிசையாக உள்ளன. அங்கே மெத்தைமேல் கம்பிளி விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து அவர்கள் தந்த டீயை குடித்தோம். சிஷ்டி அவர்களின் தர்காவைப் போலவே சத்தர் எனப்படும் சால்வையும் ரோஜா மலரும்தான் வழிபாடு. காதிம் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அக்பரால் கட்டப்பட்ட மிகப்பெரிய சலவைக்கல் நுழைவாயில். உள்ளே வெண்சலவைக்கல்மேல் வெயில் நின்றிருந்தது. செருப்பில்லா கால்களுடன் செல்வது கடினமாக இருந்தது. மீரான் சாகிப் அவர்களின் திகழ்விடத்தில் மலர்வைத்து சால்வை அளித்து வழிபட்டோம். சால்வையால் எங்கள் தலையை மூடி காதுக்குள் குரான் மந்திரங்களைச் சொல்லி வாழ்த்தினார் காதிம்.

அருகே அக்பராலும் பின்னர் ஔரங்கசீபாலும் கட்டப்பட்ட நுழைவாயில்களும் மசூதியும் இருந்தன. நான் திரும்ப வந்து காதிமின் அலுவலகத்தில் காத்திருந்தேன். ஷாகுல் சென்று நமாஸ் முடித்துவிட்டு வந்தார். காதிம் அலுவலகத்தின் மெத்தைத்தரைமேல் ஒரு பயணியர் கூட்டம் அமர்ந்திருந்தது. அவர்களின் குழந்தைகள் மெத்தைமேல் கும்மாளியிட்டன

அவர்களில் ஒருவன் அலி. இரண்டு வயது இருக்கும். குண்டுப்பையன், செல்லப்பிள்ளை ஆகவே ‘சட்டம்பி’ என்று தெரிந்தது. அவனுடைய சகோதரிகளையும் சகோதரர்களையும் அடிப்பது உதைப்பது கூச்சலிடுவது குட்டிக்கரணம் அடிப்பது என்று ஆக்ரோஷமாக இருந்தான். ஒவ்வொரு முறை எவரையாவது உதைத்த பின்னரும் பால்பற்கள் தெரிய சிரிப்பு.

அவன் அக்கா அவனை ஒரு மெல்லிய தட்டு தட்டினாள். அவ்வளவுதான் அப்படியே விழுந்து புரண்டு கைகால்களை அடித்துக்கொண்டு உக்கிரமான அழுகை. ஆனால் அவன் அப்பா அவன் அழுகையை பொருட்டாகவே நினைக்காமல் இடதுகையைப் பிடித்து தூக்கி சூட்கேஸ் போல கொண்டுசென்றார். செல்லும்வழியில் ஒட்டகம். அழுகையை நிறுத்தி அதை வியந்து நோக்கி சுட்டுவிரலால் காட்டி ஏதோ சொன்னான். வியந்த முகம் அந்த வியப்புடன் அப்பால் மறைந்தது.

காரில் கீழே வந்தோம். மலையின் அடிவாரத்தில் பிருதிவிராஜ் சௌகானுக்கு ஒரு நினைவிடமும் அதைச்சுற்றி ஒரு பூங்காவும் அமைத்திருக்கிறார்கள். பூங்காவில் அனேகமாக எவருமில்லை. கிளிகள் செடிகள் நடுவே கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. சரிந்து செல்லும் நிலம் ஆகையால் எப்போதுமே நம் காலடிக்குக் கீழே ஒரு காடு தெரிந்தது. அங்கிருந்து பார்க்கையில் உச்சிக்கிளைகளில் குருவிகள் எழுந்தமர்ந்து விளையாடுவதைக் காணமுடிந்தது. நல்ல பசுமையான பூங்கா. புத்திசாலித்தனமாக நிறைய தண்ணீர் தேவைப்படும் செடிகளையோ மரங்களையோ நடவில்லை. பாலைவனத்தில் வளரும் செடிகளையும் மரங்களையும் கொண்டே அதை அமைத்திருந்தனர்

பிருத்விராஜ் சௌகான் ராணி சம்யுக்தாவின் கணவராக கதைகளில் நாம் அறிந்தவர். சௌகான் வம்சத்தின் மூன்றாம் பிருத்விராஜ்தான் நாமறிந்த பிருத்விராஜ். சௌகான் வம்சத்தின் மிகப்பெரிய ஆட்சியாளர் இவர்தான். ராஜஸ்தானிலும் குஜராத்திலும் பஞ்சாபிலும் பெரும்பகுதியை ஆட்சி செய்தார். வடக்கே இமையமலை விளிம்பு வரை இவர் அரசு அமைந்திருந்தது. இவருடைய தந்தைபெயர் சோமேஸ்வரர். பிருத்விராஜ விஜயம், பிருதிவிராஜ ரசோ போன்ற பிருதிவிராஜ பிரபந்தம் போன்ற நூல்கள்தான் இவரை இந்தியாவின் மாபெரும் கதாநாயகர்களில் ஒருவராக நிலைநிறுத்தின.

இவர் சௌகான் வம்சத்தில் சோமேஸ்வரரின் மைந்தராக பிறந்தார். இரண்டாம் பிருதிவிராஜின் மரணத்திற்குபின் இவருடைய தந்தை சோமேஸ்வரர் அரசர் ஆனார். அவருக்குப்பின் மணிமுடி இவரை தேடிவந்தது. அப்போது இவருக்கு வயது 11 தான் எனப்படுகிறது. இளமையிலேயே பெருவீரராகவும் சிறந்த ஆட்சியாளராகவும் பிருத்விராஜ் அறியப்பட்டார்.

இவருடைய அமைச்சர் கதம்பவாசர் என்பவர் [கைமாசர், கைலாசர் என்னும் பெயர்களிலும் அறியப்படுபவர்] ராஜஸ்தானின் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவர். தெனாலிராமன் போல விவேகியான அறிஞராக நாட்டார் கதைகளில் இடம்பெறுபவர். இவர் இஸ்லாமியர்களின் ஒற்றர் என்று பிரதாப சிம்மன் என்னும் தளபதி சூழ்ச்சியால் பிருத்விராஜை நம்பவைத்தார். பிருத்விராஜ் அந்த அந்தணரை கொலைசெய்ய ஆணையிட்டார். பிருதிவிராஜ ரசோ என்னும் நூல் கதம்பவாசர் பிருத்விராஜின் ஆசைநாயகியான கர்நாடி என்பவளின் படுக்கையறையில் பிடிபட்டதனால் தான் கொல்லப்பட்டார் என்கிறது. அந்தப்பழியால்தான் சௌகான் வம்சம் வீழ்ச்சி அடைந்தது என்னும் கதை ராஜஸ்தானில் உண்டு.

பிருத்விராஜ் இளமையில் தன் தாய்மாமனான புவனைகமல்லர் என்னும் தளபதியின் உதவியுடன் ஆட்சி செய்தார். 1180ல் அவர் ஆட்சிமேல் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் அவருக்குத் தன் குடும்பத்திற்குள் இருந்து எதிர்ப்பு வந்தது. அவருடைய தாய்மாமன் விக்ரஹராஜாவின் மகன் நாகார்ஜுனன் அவருக்கு எதிராகக் கலகம் செய்தார். குடபுரா என்னும் ஊரைக் கைப்பற்றிக் கொண்டார். குடும்பமே இரண்டாக பிளந்தது.

பிருத்விராஜ் நாகார்ஜுனனை தோற்கடித்தார். நாகார்ஜுனரின் அமைச்சர் தேவபட்டர் தொடர்ந்து போரிட்டார். அனைவரையும் வென்ற பிருத்விராஜ் அவர்களின் மனைவி குழந்தைகள் என அத்தனை பேரையும் கொன்றொழித்தார். அவர்களின் தலைகளைக் கோத்து மாலையாக ஆக்கி அஜ்மீரின் கோட்டை முகப்பில் அணிவித்தார் என பிருத்விராஜின் வெற்றியைப் பாடும் பிருத்விராஜ விஜயம் வர்ணிக்கிறது.

பிருத்விராஜ் சிலை அஜ்மீர்பிற ராஜபுத்திர மன்னர்களை வென்று ஏறத்தாழ முழு ராஜபுதனத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பிருத்விராஜ் மிகக்கொடூரமான படையெடுப்பாளர் என அவரைப்புகழும் நூல்கள் சொல்கின்றன. எதிரிகளை வென்று அவர்களின் குடிகளைச் சூறையாடும் வழக்கம் இருந்தது. பிகாரின் சந்தால அரசர்கள், குஜராத்தின் வடக்குச் சாளுக்கியர்கள், மௌண்ட் அபுவை ஆண்ட பரமார வம்சத்தவர்கள் அவரால் வெல்லப்பட்டார்கள்.

வாரணாசியையும் கன்யாகுப்ஜத்தையும் [கன்னோஜ்] தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த கஹடவால பேரரசின் அரசர் ஜெயச்சந்திரனிடம் போர்புரிந்த பிருத்விராஜ் அவரை வெல்லமுடியாத நிலையில் இருந்தார். ஜெயச்சந்திரன் ஒருங்கிணைத்த ராஜசூய வேள்வியை புறக்கணித்து அவரை பேரரசராக ஏற்க மறுத்தார். அவர் நிலத்தை கைப்பற்றும் பொருட்டு அவர் மகள் சம்யோகிதா அல்லது சம்யுக்தாவை கடத்தி மணம் புரிந்துகொண்டார். ஆகவே ஜெயச்சந்திரன் பிருத்விராஜ் மேல் கடும் சினம் கொண்டிருந்தார். ஜெயச்சந்திரன் தன் மகளுக்கு ஒருங்கிணைத்த சுயம்வரத்தில் புகுந்து சம்யுக்தாவை அவர் கடத்தியதாகக் கதை. இன்று திரைப்படங்கள் வழியாக புகழ்பெற்றிருக்கும் இக்கதை அபுல் ஃபாசலில் அயினி அக்பாரி உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது ஆப்கானிஸ்தானின் குரிட் [Ghurid] வம்சத்து ஆட்சியாளரான முகம்மது கோரி இந்தியா மேல் படையெடுத்துவந்தார். சிந்துவை கடந்து வந்த அவர் பஞ்சாபை கைப்பற்றினார். பிருத்விராஜிடம் தூதனுப்பி கப்பம் கேட்ட அவரை பிருத்விராஜ் எதிர்த்தார். பல சிறு போர்களுக்குப்பின் 1190ல் தராய்ன் என்னும் ஊரில் நிகழ்ந்த போரில் கோரியை பிருத்விராஜ் வென்றார். போரில் காயமடைந்த கோரி தப்பி ஓடினார். படை சிதைந்தது. அது ஒரு முழுமையான வெற்றி. இந்தியாவின் சக்கரவர்த்தியாக பிருத்விராஜ் ஆகும் வாய்ப்பை அவருக்கு அளித்தது அது.

தராய்ன் போர், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியம்

பிருதிவிராஜ் சௌகான் கோரியை துரத்திச்சென்று முழுமையாக வென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அதற்கு முயலவில்லை. அவர் பிற ராஜபுதன அரசுகளிடம் சிறு போர்களில் ஈடுபடுவதையும் வெற்றிவிழாக்களை கொண்டாடுவதையுமே செய்துகொண்டிருந்தார். அவர்களை இணைத்துக்கொண்டு ஒரு படையை உருவாக்குவதற்குப் பதிலாக அவர்களை எதிரிகளாக ஆக்கிக்கொண்டிருந்தார். கோரியின் ஆற்றலை அறியும் நுண்ணறிவு பிருத்விராஜுக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்தண அறிஞர்களின் பின்புலம் இருக்கவில்லை.

பிருத்விராஜ் கன்னோஜை வெல்ல திட்டமிட்டார். பிருத்விராஜை அஞ்சிய கன்னோஜின் அரசர் ஜெயச்சந்திரன் முகம்மது கோரிக்கு தூதனுப்பி அவருடன் ராணுவ உடன்படிக்கை செய்துகொண்டார். ஓராண்டுக்குப்பின் மீண்டும் தராய்ன் பகுதியில் நடந்த போரில் கோரி ஜெயச்சந்திரனின் உதவியுடனும் பிற ராஜபுத்திரர்களின் உதவியுடனும் பிருத்விராஜை தோற்கடித்தார். புகழ்க்கதைகள் பிருத்விராஜ் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்ததாக பாடுகின்றன. ஆனால் வரலாற்றுச் செய்திகளின்படி கோரி பிருத்விராஜை கைதியாக பிடித்தார். அவரிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு அஜ்மீரை அவரிடமே அளித்து தனக்கு கப்பம் கட்டும்படி கோரினார். பிருத்விராஜ் அதை ஏற்று கோரிக்கு கீழே அஜ்மீரை ஆளும் அரசப்பிரதிநிதியாக ஆனார்.

கோரி பெயரும் பிருத்விராஜ் பெயரும் கொண்ட நாணயம்

அவ்வாறு நடந்திருக்கவே வாய்ப்பு. ஏனென்றால் கோரியால் நேரடியாக ஓர் அன்னிய மண்ணை ஆள முடியாது. வென்றவர்கள் தோற்றவர்களிடம் நாட்டை ஒப்படைத்து அவர்களை கப்பம் கட்டிவிட்டு ஆளும்படி கோருவதே வழக்கம். பழைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே உறுதியான ஆட்சிமுறையை உருவாக்கியிருப்பார்கள். மேலும் அன்றைய அரசதிகாரம் என்பது குடிமக்களின் ஏற்பின் விளைவாக அமைவது. அந்த ஏற்பு முழுக்க முழுக்க தொன்மங்கள் மற்றும் குலநம்பிக்கைகள் சார்ந்தது. இன்னொருவர் அந்த அதிகாரத்தை எளிதில் அடையமுடியாது. அதற்கு மாபெரும் அடக்குமுறை தேவையாகும்

அஜ்மீரில் கிடைத்த பழைய நாணயங்களில் பிருத்விராஜின் பெயரும் அவருடைய குதிரைச்சின்னம் ஒருபக்கமும் மறுபக்கம் முகமது கோரியின் தளபதியான முகம்மது பின் சாம் பெயர் மறுபக்கமும் உள்ளது. ஆகவே குறைந்தது சில ஆண்டுகளாவது பிருத்விராஜ் கோரியின் பிரதிநிதியாக அஜ்மீரை ஆட்சி செய்திருக்கலாம். இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஹஸன் நிஜாமியின் குறிப்புகளின்படி பிருத்விராஜ் கோரிக்கு எதிராக சதிசெய்தபோது பிடிபட்டு சுல்தானால் மரண தண்டனை அளிக்கப்பட்டார்.

பிருத்விராஜ பிரபந்தம் கூறுகிற கதை இது. பிருத்விராஜ் முகமது கோரி தங்கியிருந்த மாளிகைக்கு மிக அருகே சிறைவைக்கப்பட்டிருந்தார். அவர் தன் படைத்தலைவர் பிரதாபசிம்மனிடம் தனக்கு ஒரு அம்பும் வில்லும் கொண்டுவந்து தரும்படிச் சொன்னார். பிரதாபசிம்மர் அம்பும் வில்லும் கொண்டுசென்று கொடுத்தார். ஆனால் செய்தியை கோரியிடம் தெரிவித்துவிட்டார். தன் சிறையில் சாளரம் வழியாக கோரியை கொல்ல முயன்ற பிருத்விராஜ் பிடிபட்டு ஒரு குழியில் வீசப்பட்டு கற்களை வீசி கொல்லப்பட்டார்.

சமண அறிஞர் நாயசந்திர சூரியால் பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஹாம்மிரா மகாகாவியா என்னும் குறுங்காவியம் பிருத்விராஜ் தோல்விக்குப்பின் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டதாக சொல்கிறது. பல நாட்டார் பாடல்களில் அவர் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் ரஸோ என்னும் நூல் அவர் கோரியால் கண்கள் தோண்டி குருடாக்கப்பட்டார் என்றும் சிறையில் கொல்லப்பட்டார் என்றும் சொல்கிறது. விருத்த விதி வித்வன்சா என்னும் நூல் அவரை கோரி கைகளாலேயே களத்தில் கொன்றார் என்கிறது.

இந்தக் கதைகள் அனைத்திலும் சில பொதுவான அம்சங்கள் உள்ளன. அது பிருத்விராஜின் அமைச்சர்கள் மற்றும் படைத்தலைவர்கள் நடுவே இருந்த போட்டியும் காழ்ப்பும். அவர்கள் ஒருவரை ஒருவர் வஞ்சகம் செய்து கோள்மூட்டி அழிக்கிறார்கள். எதிரிக்கு துப்பு கொடுத்து பிருத்விராஜ் தோற்க வழியமைக்கிறார்கள். பிருத்விராஜ் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார் என்னும் கதையைக் கட்டமைக்க இவை சொல்லப்பட்டாலும்கூட அவருடைய அரசகுடிக்குள் அவர் முடியேற்ற நாள்முதலே இருந்துவந்த எதிர்ப்பையும் சூழ்ச்சியையுமே இவை காட்டுகின்றன என்று படுகிறது.

சிவாஜி முதல் கட்டபொம்மன், வேலுத்தம்பி தளவாய் வரையிலான இந்தியாவின் தேசியக் கதைநாயகர்கள் அனைவரின் வரலாற்றிலும் உள்ள சிக்கல்தான் இது. அவர்களின் வரலாறுகள் முதலில் பழங்கால இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாலும் பின்னர் காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களாலும் எழுதப்பட்டன. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை எதிர்மறையாகவே எழுதினர். காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களும் அதையே பின்பற்றினர். ஆகவே தேசிய வரலாற்றெழுத்து தொடங்கியபோது அவர்கள் போற்றப்பட்டனர். அதற்கான தரவுகள் தேடி கண்டடையப்பட்டன.

தேசிய வரலாற்றெழுத்து என்பது இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்த அறிவுச்செயல்பாடு. இந்தியர்களுக்கு வீரமோ, பெரும் பண்பாடோ, பெருமைக்குரிய வரலாறோ இல்லை என்னும் காலனிய முன்முடிவுகளுக்கு எதிராக எழுதப்பட்டது. ஆகவே அது மிகைகளை நாடிச்சென்றது. வாய்மொழிக்கதைகள், புகழ்பாடும் நூல்கள் ஆகியவற்றைச் சான்றாகக் கொண்டது. உதாரணமாக வீரபாண்டிய கட்டபொம்மனின் கதைக்கு கெட்டிபொம்முதுரைப் பாடல் என்ற வாய்மொழிப்பாடலே முதன்மை ஆதாரமாக கொள்ளப்பட்டது. இந்திய மன்னர்கள், போராட்டத்தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றில் பாதிக்குமேல் புனைவை நம்பி உருவாக்கப்பட்டவை.

வரலாற்றின் இயக்கத்திற்கு ஒரு யதார்த்தம் உள்ளது. அதை வரலாற்றெழுத்தாளர் உணர்ந்திருக்க வேண்டும். அந்தந்த காலகட்டத்தின் அரசியல், சமூகவியல் தேவைகளும் மனநிலைகளும் நம்பிக்கைகளுமே வரலாற்றை தீர்மானிக்கின்றன நாம் இன்று கொண்டுள்ள நம்பிக்கைகளும் பார்வைகளும் நேற்றைய வரலாற்றில் பிரதிபலிக்க வாய்ப்பில்லை. ஆகவே வரலாற்றெழுத்தில் துரோகிகளும் கதைநாயகர்களும் இல்லை. அவ்வாறு எவரையும் முற்றாக வரையறுப்பது வரலாற்றாய்வும் அல்ல.

பிருத்விராஜ் சௌகான் அன்றைய ராஜபுதனத்து அரசர்களின் பார்வையில் ஓர் ஆக்ரமிப்பாளர். கொடிய அடக்குமுறையாளர். அவர் தன் ஆட்சிக்காலம் முழுக்க போரிட்டது பெரும்பாலும் பிற ராஜபுத்திர அரசர்களிடம்தான். அவர்களை அவர் வென்று அவமதித்தார். அவர்களின் நாட்டை சூறையாடினார். அவர் பேரரசுக்கனவு கொண்டிருந்தார். அக்காலத்தின் எந்த அரசரும் கொண்டிருக்கும் கனவு அது.

அப்போது கோரி படையெடுத்து வந்தார். அவர் அன்றைய ராஜபுதன மன்னர்களின் பார்வையில் இன்னொரு ஆக்ரமிப்பாளர், பேரரசுக்கனவு கொண்ட இன்னொரு மன்னர், அவ்வளவுதான். கோரி இந்தியாவில் பின்னர் ஐநூறாண்டுக்காலம் நீடித்த இஸ்லாமிய ஆட்சிகளின் தொடக்கப்புள்ளி. ஆனால் அது  நாம் இன்று அறிவது, அன்று எவருக்கும் தெரிந்திருக்காது. ஜெயச்சந்திரன் எந்த ஆட்சியாளரும் செய்வதையே செய்தார், தன் நாட்டை காப்பாற்றிக்கொள்ள எதிரியின் எதிரியிடம் சேர்ந்துகொண்டார்.

கோரி இங்கே நாடாளவே வந்தார். இங்குள்ள ஆட்சியாளர்களை தனக்குச் சாதகமானவர்களாக ஆக்கிக்கொண்டு, அவர்கள்மேல் ஒரு ஆதிக்கத்தை உருவாக்கினால் மட்டுமே அவரால் ஆட்சி செய்ய முடியும். அதையே அவர் செய்தார். தன்னுடன் ஒத்துப்போகிறவர்களைச் சேர்த்துக்கொண்டார். தான் வென்றவர்களிடமே அரசை ஒப்படைத்து கப்பம் மட்டும் பெற்றுக்கொண்டார்.

ஆனாலும் ஒட்டுமொத்தமான பார்வையில் பிருத்விராஜ் சௌகான் ஒரு மாபெரும் வரலாற்று ஆளுமைதான். அவர் ஒரு பேரரசை உருவாக்க முயன்ற பெருவீரர் என்பதனால். வரலாற்றில் மனிதனின் உளவல்லமை சில மானுடர் வழியாக வெளிப்படுகிறது. வரலாறாக நிகழும் இயற்கையின், நியதியின் ஆதாரமான விசை சில மனிதர்களை கருவியாக்கிக் கொள்கிறது.

ஜெர்மானியக் கவிஞர் கதே அதை எலிமெண்டல் பவர் என்கிறார். நெப்போலியன் அத்தகைய ஒரு அடிப்படைவிசை என்கிறார். நெப்போலியனின் பிழைகள், அவர் உருவாக்கிய அழிவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே நெப்போலியனை ஒரு மாபெரும் நாயகன் என்கிறார் கதே. அதே அளவுகோலின்படி பிருத்விராஜும் வரலாற்றுநாயகனே.

தாராகர் கோட்டையில் குதிரைகள் வெயிலில் சோர்ந்து பயணிகளை எதிர்பார்த்து நின்றிருந்தன. பிருத்விராஜ் சௌகானின் படைகளில் இருந்த பல்லாயிரம் குதிரைகளின் வம்சம். ஒரு கொட்டகைக்கடையில் ஒரு ஸ்பெஷல் ராஜஸ்தானி- அல்லது ஷியா முஸ்லீம். டீ சாப்பிட்டோம். அது டீயும் பாலும் சிலவகை கொட்டைகளும் ரோஜா இதழ்களுமெல்லாம் போட்டு செய்யப்பட்ட ஒரு வகை பாயசம் போன்ற பானம். சுவையுடனும் மணத்துடனும் இருந்தது. மண்கோப்பைகளில் அதை தந்தனர். அதுவே ஒரு உள்ளூர் உணர்வை அளித்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6
அடுத்த கட்டுரைநற்றுணை கலந்துரையாடல்