குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்

முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார். அவருடைய கஸல் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில் சில இறையுணர்தல் நிகழும் முன்னர் எழுதப்பட்டவை, பெரும்பாலானவை அதன் பின்னர் இயற்றப்பட்டவை. நான் இப்போது இறையுணர்தல் என்பதை எனக்குத் தெரிந்த தெளிவான சிறந்த வரையறையான மெஹர் பாபாவால் (in Discourses Sufism Reoriented, San Francisco 6th Edition 1967) வரையறுக்கப் பட்டதை சொல்ல முயற்சிக்கிறேன்.

“உண்மையான சுய அறிவை அடைவது என்பது இறையை உணர்தல் ஆகும். இறையுணர்தல் என்பது ஒரு தனித்துவமான உணர்வு நிலை. அது ஏனைய உணர்வு நிலைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மற்ற நிலைகள் தனிப்பட்ட மனதின் வாயிலாக உணரப்படுகின்றன. இறையுணர்தல் எனும் அறிதல் நிலை எந்த வகையிலும் தனிப்பட்ட மனம் அல்லது வேறு எந்த ஊடகத்தையும் சார்ந்தது அல்ல. ஒருவரின் சுயத்தைத் தாண்டிய மற்றொன்றை அறிய ஒரு ஊடகம் அவசியம். ஒருவரின் சுயத்தை அறிந்து கொள்வதற்கு எந்த ஊடகமும் தேவையில்லை. உண்மையில், மனதோடு இதைத் தொடர்புறுத்திக்கொள்வது இறையுணர்தலுக்கு உதவியாக இருப்பதை விட தடையாகவே அமையும். தனிமனித மனம் என்பது தன்முனைப்பின் இருக்கை அல்லது தனித்திருக்கிறேன் என்று பிரித்தறியும் உணர்வு. இது எல்லைகளுக்குட்பட்ட தனித்துவத்தை உருவாக்குகிறது. இருமை, காலம், மாற்றம் என்னும் மாயைகள் இதை உண்டும் உணவிட்டும் வளர்கிறது. எனவே சுயத்தை தெரிந்துகொள்ள நனவை(consciousness) தனிப்பட்ட மனதின் எல்லைகளில் இருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனம் மறைந்து போக வேண்டும், நனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்… தனிப்பட்ட மனதுடன் இணைந்திருந்த நனவு இப்போது விடுவிக்கப்பட்டு, தடைகள் இன்றி இறுதி மெய்மையுடன்(Ultimate Reality) நேரடியாக ஒன்று சேர்கிறது. இப்போது நனவுக்கும் இறுதிமெய்மைக்கும் இடையே திரைகள் ஏதும் இல்லாதிருப்பதால் நனவு பூரணத்துடன்(Absolute) இணைந்திருக்கிறது. அதில் நித்தியமாக நிலைத்திருக்கிறது. எல்லையற்ற அறிவு மற்றும் கட்டற்ற ஆனந்தத்தின் நிலையை ஊக்குவிக்கும் வண்ணம் பூரணத்துடன் பிரிக்க முடியாத அம்சமாக அமைகிறது…

“இறையறிதல் என்பது நனவின் தனிப்பட்ட நிலை; ஆன்மாவுக்குரியது; மனதின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. மற்ற ஆன்மாக்களும் தங்கள் நனவில் இருந்து தன்முனைப்பின்(Ego) எடையை துறந்து, தனிப்பட்ட மனதின் எல்லைகளை அகற்றி விடும் போது இறையறிதல் அமையும். அதுநாள்வரை அவை தளைக்கப்பட்டிருக்கும். எனவே இறையறிதல் என்பது காலம் எனும் செயல்பாட்டில் இருந்து வெளிப்பட்ட ஆன்மாவுக்கு மட்டுமே நேரடி முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு ஆன்ம சாதகன் பிறரது உதவியின்றி, தன் சுய முயற்சிகள் வழியாக, இருத்தலின் தளத்தை அடையலாம். ஆனால் மனதைத் துறப்பதற்கு தன் தனிப்பட்ட இருப்பை சரணடையச் செய்யவேண்டும். இறையுணர்ந்த ஒரு குருவின் உதவியின்றி இந்த இறுதியான, மிக முக்கியமான அடியை எடுத்துவைக்க முடியாது.”

அப்துல் கரீம் இப்னு இப்ராஹிம் அல்-ஜிலி (‘Abdu ‘l-Karim ibn Ibrahim al-Jili – 1365ல் பிறந்தவர்) என்னும் சூஃபி ஞானி குறித்த புத்தகத்தில் (‘The Perfect Man’ (Insanu ‘l-kamil) of his Studies in Islamic Mysticism Cambridge University Press 1921),  R. A. நிக்கல்சன் இரண்டாவது அத்தியாயத்தில் ஒரு கட்டுரையை இவ்விதம் தொடங்குகிறார்:

சூஃபிக்கள் ‘முழுதமைந்த மனிதரைப்’(al-insanu ‘l-kamil), பற்றி பேசும்போது என்ன பொருள் கொள்கிறார்கள்? இது புகழ்பெற்ற இப்னு எல்-அரபி (Ibnu ‘l-‘ Arabi) முதன்முதலில் பயன்படுத்தியதாகத் தோன்றும் ஒரு சொற்றொடர். ஆனால் இதன் அடிப்படைக் கருதுகோள் சூஃபியிசத்தைப் போலவே பழமையானது. இக்கேள்வி பல விதங்களில் விளக்கப்படலாம். ஒரு பொது விளக்கம் சொல்வதென்றால், முழுதமைந்த மனிதன் என்பவன் தான் எந்த தெய்வீக பேரிருப்பின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறானோ, அந்த பேரிருப்புடன் தனது அடிப்படை ஒருமையை முழுமையாக உணர்ந்து கொண்டவன். இந்தப் பேரனுபவம், தீர்க்கதரிசிகள் மற்றும் ஞானியரால் உணரப்பட்டு மற்றவர்களுக்கு அதன் நிழல் மட்டும், குறியீடுகளாக உணர்த்தப்படுவதே சூஃபி இறையியலின் அடித்தளமாகும்.

ஆகவே முழுதமைந்த மனிதர்கள் எனும் வகைமையில் ஆதாம் முதல் முஹம்மது வரையான தீர்க்கதரிசிகள் மட்டுமல்லாது, சூஃபிக்களிடையே உன்னதத் தேர்வு((khususu ‘l-khusus) பெற்ற ‘அவுலியா’ என்றழைக்கப்படுபவர்களும் அடங்குவார்கள். அவுலியா என்னும் சொல்,  அருகாமை என்னும் பொருள்கொண்ட ‘வாலி’ (wali) என்ற சொல்லின் பன்மை. இது நண்பன், பக்தன், ஆதரவில் இருப்போன் போன்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘வாலி’ அல்லது துறவி என்பவர் முழுதமைந்த மனிதனின் புகழ்பெற்ற ஒரு வகைமை என்பதால், முகமதியரின் துறவின் சாராம்சம் முக்கியமான பகுதி.

“புலன்களின் திரை அகற்றப்பட்டு, சுயமானது “ஒரு உண்மையான ஒளி” யின் மகிமையில் மறைந்து போகும் போது உணரப்படும் தெய்வீக ஒளி, கண் உணராதவற்றையும் அறியப்படாதவற்றையும், முன் உணரும் தரிசனம்” என்பது தீர்க்கதரிசனம் சொல்லும் அனுபவம். இதைவிட முகமதியரின் துறவின் சாராம்சம் எவ்விதத்திலும் குறைவானதல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இறையோடு இணைந்திருக்கும் பரவச நிலை ‘வாலி’. இது பாதையின்(tariqa) முடிவு. அப்பாதையின் ஒழுக்கம் என்பது சீடனை பக்குவப்படுத்தி, அளவிட முடியாத பரிசாகிய தெய்வீக அருளுக்கு அவனை முன்கூட்டியே ஆயத்தமாக்குவது. ஒரு மனிதன் அவனது எந்த செய்கையாலும் தெய்வீக அருளை இழக்கவோ அடையவோ முடியாது; அது அவனுக்கு அருளப்பட்ட ஆன்மீகத் திறன் மற்றும் கொள்ளளவின் விகிதத்தில் அவனுக்கு வந்து சேர்கிறது.

வாலியின் இரண்டு சிறப்புச் செயல்பாடுகள், துறவிகளின் வழிபாட்டு முறையை மறைஞான தத்துவத்துடன் இணைத்து மேலும் விளக்குகிறது – (1) ஒரு இணைப்பாளராக அவரது செயல்பாடு (2) ஒரு பிரபஞ்ச ஆற்றலாக அவரது செயல்பாடு. நமது விவாதத்தில் விளக்கப்படவிருக்கும் ‘முழுதமைந்த மனிதன்’ –  ஒருமையுடன் பன்மையை இணைப்பது. எனவே பிரபஞ்சம் அதன் தொடர்ச்சியான இருப்புக்கு அவரைச் சார்ந்துள்ளது. முகம்மதிய மத வாழ்க்கையில் வாலியின் இடம் அதே போல மையத்தில் இருப்பவர்தான். மனிதனுக்கும் முற்றிலும்கடந்தமைந்த கடவுளுக்கும் இடையே குரான் மற்றும் அறிவார்ந்த தத்துவங்கள் உருவாக்கி இருக்கும் இடைவெளியை கடந்து சென்று அவர் இணைக்கிறார். துயரத்திற்கு ஆறுதல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உடல்நலம் , பிள்ளையற்றோருக்கு குழந்தைகள், பசித்தவர்களுக்கு உணவு, அவர்களது ஆத்மாவை சமர்பித்தோருக்கு ஆன்மீக வழிகாட்டுதல், அவருடைய கல்லறையைப் பார்வையிடும் மற்றும் அவரது பெயரில் அல்லாஹ்வை அழைக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதம் – போன்றவற்றை தருபவர் அவர்.

சுவர்கள், மிக உயர்ந்தது முதல் தாழ்ந்தவை வரை, படிநிலைகளாக அமைந்திருக்கின்றன. குதுப் அதன் தலைமையில் இருக்க, “ஞானியரின் நிர்வாகக் குழு உலகின் கண்ணுக்கு தெரியாத அரசாங்கத்தை நடத்துகிறது”. குதுப் என்னும் நிலைக்கு கீழே இருக்கும் அவ்தத் (Awtad) என்னும் நான்கு துறவிகளின் வரிசை குறித்து சொல்லும் போது  ஹுஜ்விரி (Kashaf al-Mahjub of Al-Hujwiri, R.A. Nicholson translation Luzac & Co, London 1911) சொல்கிறார்:

“ஒவ்வொரு இரவும் உலகம் முழுவதும் சுற்றி வருவது அவர்களின் அலுவல். அவர்களின் பார்வை படாத இடத்தில் ஏதேனும் இடம் இருந்தால், மறுநாள் அந்த இடத்தில் சில குறைபாடுகள் தோன்றும்; பின்னர் அவர் குதுபிற்கு இதை அறிவிக்க வேண்டும். இதன் வழியாக குதுப் தனது கவனத்தை பலவீனமான இடத்திற்கு திருப்பவும், அவருடைய ஆசீர்வாதத்தால் அக்குறையை சரிசெய்யவும் முடியும்.”

“கடவுள் மற்றும் மனிதனின் இயல்பு பற்றிய ஊகங்களின் விளைவு அல்லது காரணியே இத்தகைய அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகள் எனலாம். இந்த ஊகங்கள் குரானின் ஓரிறைக் கொள்கையிலிருந்து விலகி அத்வைதம், இயற்கை வழிபாடு வரை விலகிச் செல்கிறது. குர்ஆனை பரவசமான தியானத்தில் ஓதும் சூஃபி, அவர் குரல் எழுப்பிய வார்த்தைகளில் கேட்பது தனது குரலை அல்ல; கடவுளின் குரலைக் கேட்கிறார். அவரால் அல்லாஹ் மற்ற உயிரினங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்ற மரபுவழி கருத்தை கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கோட்பாடு ஒரு தெய்வீக மெய்ம்மை (அல்-ஹக்) மீதான நம்பிக்கையால் நிறுவப்பட்டது; அனைத்திற்கும் ஆதாரமான படைப்புக் கொள்கை மற்றும் இறுதி நிலமாக இருக்கும் கடவுள் என்னும் மெய்மை.

பொதுவாக முஸ்லீம்களைப் போலவே சூஃபிகள் கடவுளின் எல்லைகடந்த ஆழ்நிலையை உறுதிப்படுத்துகிறார்கள். அவதாரம் (ஹுலுல்) என்ற கருத்தை நிராகரிக்கிறார்கள். ஆன்மீக ஒன்றிணைவின் பொருளை துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு இஸ்லாத்தில் முதல் முயற்சிகளில் ஒன்று கடவுளின் இரண்டு இயல்புகளை சொல்லும் கிறிஸ்தவ கோட்பாடு என்பது ஒரு சுவாரஸ்யமான உண்மை. ‘அனல் ஹக்’, ‘நான் ஹக்’ என்று சொல்லத் துணிந்த ஹல்லாஜ், அதன் மூலம் ஒரு புனிதர் “கடவுளின் உயிருள்ள மற்றும் தனிப்பட்ட சாட்சியாகிறார்” என்று அறிவித்தார்.”

கடவுள் தனது சொந்த உருவத்தில் ஆதமைப் படைத்தார் என்ற யூத தொன்மம் ஒரு ஹதீஸாக(நபியின் கூற்று) மீண்டு வந்தது. முகமதிய தத்துவவாதிகளால் விசித்திரமான பயன்பாடுகளுக்கு அது பயன்படுத்தப்பட்டது. மரபுவாதியான கஜாலி கூட எந்நிலையிலும் அவரை வெளிப்படுத்த தூண்டாத ஒரு பெரிய மர்மத்தின் திறவுகோல் இங்கே உள்ளது என்று அதைச் சொல்கிறார்.

ஹல்லாஜின் கூற்றுப்படி, கடவுளின் சாராம்சத்தின் சாரம் அன்பு. படைப்புக்கு முன் கடவுள் தன்னை பரிபூரண ஒருமையுடன் நேசித்தார். அன்பின் மூலம் தன்னைத் தனக்கு மட்டுமே வெளிப்படுத்தினார். பின்னர், அந்தத் ‘தனிமை மீதான அன்பை’, பிறிதொன்றிலாத, ‘இருமைகள் அற்ற காதலை’ தக்க வைத்துக் கொள்ள விரும்பி, அதை தன்னில் இருந்து வெளியே ஒரு புறப்பொருளாகக் காண விரும்பி, அவர் தனது அனைத்து பண்புகளையும் பெயர்களையும் கொண்ட ஒரு உருவத்தை இன்மையில் இருந்து உருவாக்கினார். இந்த தெய்வீக உருவம் ஆதாம். அவர் வாயிலாக கடவுள் வெளிப்படுத்தப்படுகிறார், தெய்வீகம் மனிதகுலத்தில் புறவயப்படுத்தப் படுத்தப்படுகிறது. இருப்பினும், ஹல்லாஜ் மனித இயல்பை (nasut) தெய்வீகத்திலிருந்து (lahut) வேறுபடுத்துகிறார். ஒன்றுபட்டிருந்தாலும், அடிப்படையில் அவை ஒன்றல்ல, ஒன்றுக்கொன்று மாற்று அல்ல. ஒன்றிணைந்த பின்னும் ஆளுமை எஞ்சுகிறது: மது நீருடன் கலந்தாலும் தண்ணீர் மது ஆகாது. அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வசனங்களில் ஒன்றான, ஒரு பொருத்தமான உருவகத்தைப் பயன்படுத்தி,  ஹல்லாஜ் கூறுகிறார்:

நான் நேசிப்பது என்னை – என்னை நேசிப்பவன் நான்

நாங்கள் இரு ஆன்மாக்கள் வாழ்கிறோம்… ஓருடலில்

என்னை நீ கண்டால்.. அவனைக் காண்கிறாய்,

அவனை நீ கண்டால்..இருவரையும் காண்கிறாய்.

“… ஜிலி சூஃபியிச பள்ளியைச் சேர்ந்தவர். இருப்பது ஒன்றுதான், அனைத்து வெளிப்படையான வேறுபாடுகளும் மெய்மையின் வெளிப்பாடுகள், அம்சங்கள், வழிகள் மட்டுமே; அற்புதமானவை எல்லாம் உண்மையின் தோற்ற வெளிப்பாடுகள் என்று சொல்வது சூஃபியிசம். பெயர்கள் மற்றும் பண்புகளால் குறிப்பிடப்படும் சாரத்தை வரையறுப்பதில் இருந்து அவர் தொடங்குகிறார்; அது இருக்கக்கூடியதாகவோ இல்லாததாகவோ இருக்கலாம். அதாவது, ‘அன்கா’ என்ற அற்புதமான பறவையைப் போல கற்பனையில் மட்டுமே இருக்கலாம். உண்மையில் சாரம் இரண்டு வகைகளில் உள்ளது: (1) தூய இருப்பு அல்லது கடவுள், (2) இருப்பற்றவற்றுடன் இணைந்திருத்தல், அல்லது  ‘உருவாக்கப்பட்ட பொருட்களின் உலகம்’. கடவுளின் சாராம்சத்தை நாம் அறிய இயலாது; அதன் பெயர்கள் மற்றும் பண்புகளின் வழியாக நாம் அது குறித்த அறிவைப் பெற வேண்டும்.

இது இரண்டு விபத்துகளால் ஆன பொருள் – நித்தியம் மற்றும் அழிவற்றது; இரண்டு குணங்கள் கொண்டது  – படைப்பாற்றல் மற்றும் படைப்புயிர்த்தன்மை; இரண்டு விளக்கங்கள் கொண்டது – உருவாக்கப்படாதது மற்றும் காலத்தில் தோன்றியது; இரண்டு பெயர்கள் கொண்டது – ஆண்டவன், அடிமை (கடவுள், மனிதன்); இரண்டு அம்சங்கள் கொண்டது – புறவயமானது  அல்லது காணக்கூடியது – இது நிகழ் உலகம், மற்றும் அகவயமானது அல்லது கண்ணுக்கு தெரியாதது – இது வரவிருக்கும் உலகம்; அதன் தேவை மற்றும் தற்செயல் ஆகிய இரண்டுமே கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அது தன்னளவில் இல்லாதது, ஆனால் மற்றவருக்கு இருப்பது; அல்லது மற்றவருக்கு இல்லாதது, ஆனால் தன்னளவில் இருப்பது என கருதப்படலாம்.

தூய இருப்புக்கு, பெயரோ பண்போ இல்லை; அது அதன் முழுமையிலிருந்து படிப்படியாக இறங்கி வெளிப்பாட்டின் உலகுக்குள் நுழையும் போதுதான், பெயர்கள் மற்றும் பண்புக்கூறுகள் அதில் படிகின்றன. இந்த பண்புகளின் ஒட்டுமொத்தம் பிரபஞ்சம். இதன் அற்புதத்தன்மை என்பது – புறவயம் என்னும் வடிவில் இது மெய்மையைக் காட்டுகிறது. இந்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, சாரம் மற்றும் பண்புக்கு இடையிலான வேறுபாடு ஒத்துக்கொள்ளப் படவேண்டியது என்றாலும், இரண்டும் உண்மையில் ஒன்றே – நீர் மற்றும் பனி போன்ற ஒன்று.

இந்த அற்புதமான உலகம் – பண்புகளின் உலகம்-ஒரு மாயை அல்ல: இது பூரணத்தின் மறு உருவாக அல்லது சுய வெளிப்பாடாக உண்மையில் இருப்பது. சாராம்சத்திற்கும் பண்புக்கும் இடையில் ஏதும் உண்மையான வேறுபாடு இல்லை என்று மறுப்பதன் வழியாக, ஜிலி இருப்பை எண்ணத்துடன் நிகர் வைக்கிறார். கடவுள் பற்றிய கடவுளின் கருத்தை உலகம் வெளிப்படுத்துகிறது. அல்லது இப்னு ‘எல்-அரபி சொல்வது போல்,‘ நாமே கடவுளை விளக்கும் பண்புகள்; நமது இருப்பு அவரது இருப்புக்கான ஒரு புறவயப்படுத்தல் மட்டுமே. நமது இருத்தலுக்கு கடவுள் நமக்குத் தேவைப்படுகிறார்; அதே சமயம் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள நாம் அவருக்கு தேவையாக இருக்கிறோம்.’

குணங்கள் மற்றும் அதற்கிடையேயான உறவுகளைத் தவிர, இந்த எளிய சாரத்தை ஜிலி, ‘இருண்ட மூடுபனி’ (அல்-அமா) என்று அழைக்கிறார். இது வெளிப்பாட்டின் மூன்று நிலைகள் வழியாகக் கடந்து, அதன் எளிமையை மாற்றியமைப்பதன் மூலம் நனவை வளர்க்கிறது. முதல் நிலை ஒன்றாதல் (Ahadiyya-அஹதியா), இரண்டாவது நிலை அவன்-ஆதல் (Huwiyya – ஹுவிய்யா), மூன்றாவது நிலை நான்-ஆதல்(Aniyya – அனியா). இந்த இறங்கி வருதலின் மூலம் பூரணத்தின் பேரிருப்பு,  சிந்தனையின் அறிபவனாகவும் அறிபடுபொருளாகவும் மாறி, இருப்பின் முழு வரிசையையும் உள்ளடக்கி, தனித்துவமான பண்புகளுடன் தன்னை தெய்வீகமாக வெளிப்படுத்தியுள்ளது.

படைக்கப்பட்ட உலகம் வெளிப்புற அம்சம். கடவுள் அதன் உள்ளார்ந்த அம்சம். எனவே பூரணத்தில் பன்முகத்தன்மையின் கொள்கையைக் காண்கிறோம். பண்பு மற்றும் அதற்கிடையிலான உறவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் இருந்து இறங்கிவந்து, அதன் வெளிப்படையான ஒருமையைக் கடந்து,  பூரணம் பன்முகத்தை அடைகிறது. கணக்கற்ற பெயர்கள் மற்றும் பண்புகளுடன் தன்னை அணிசெய்து, இயற்கையின் எல்லையற்ற வகைமைகளில், நம் கண் காணும் வடிவங்களை அது எடுக்கிறது. ஆனால் ‘ஒருமை நிலைக்கிறது, பன்மை மாற்றம் கொண்டு மறைகிறது’. பூரணம் பன்முகத்தன்மையில் நிலைத்திருக்க முடியாது. இருமைகள் சமரசம் கொண்டு ஒன்றிணைய வேண்டும், பன்மை ஒருமை ஆக வேண்டும். ஜிலின் உருவகத்திற்கு மீண்டும் சென்று நீர் பனிக்கட்டியாகவும், பின்னர் மீண்டும் தண்ணீராகவும் மாறுவது போல, பண்புகளின் உலகில் படிகமாக்கப்பட்ட சாரம் எளிமையான சுயத்திற்கு திரும்ப முயல்கிறது என்று கூறலாம். அவ்வாறு மீள, அது மேலேறிச் செல்ல வேண்டும். பூரணத்தில் இருந்து கீழிறங்கிய திசையை மாற்றி மேல்நோக்கி அது செல்ல வேண்டும்.

மெய்மை, மெய்மையாக இருந்துகொண்டே தோற்றத்தின் வடிவத்தில் தன்னை எப்படி முன்வைக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்: அப்படி என்றால், தோற்றம் தோற்றமாக இருப்பதை நிறுத்தி, எவ்வாறு மெய்மையின் ஆழ்ந்த இருளில் மறைந்து போகிறது?

“மனிதன், அவனது சாராம்சத்தின் அடிப்படையில் பார்த்தால், பிரபஞ்ச சிந்தனை ஓர் உருவெடுத்து வந்தவன்; முழுமையின் பேரிருப்பை இயற்கையான உலகத்துடன் இணைப்பவன். ஒவ்வொரு தோற்றமும் மெய்மையின் சில பண்புகளைக் காட்டும். மனிதன் என்பவன் அனைத்துப் பண்புகளும் ஒன்றிணைந்த நுண்ணுலகு. அவனிடத்தில் மட்டுமே பூரணம் அதன் பல்வேறு தன்மைகள் குறித்த விழிப்புணர்வை அடைகிறதா? இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், பூரணமானது, மனித இயல்பில் தன்னை முழுமையாக உணர்ந்துகொண்டு, மனித இயல்பு ஊடாகத் தன்னுள் மீள்கிறது; அல்லது இன்னும் நெருக்கமாக சொல்வதென்றால், கடவுளும் மனிதனும் முழுதமைந்த மனிதரில் ஒன்றாகிறார்கள். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு இணைக்கும் பாலமாக மெய்மறந்த தீர்க்கதரிசி அல்லது துறவியின் மதம்சார்ந்த செயல்பாடு இருக்கிறது. அதேபோல மெய்மை மற்றும் தோற்றத்தின் எதிரெதிரான விதிமுறைகளை ஒன்றிணைக்கும் கொள்கையாக அவரது ஆன்மீக செயல்பாடு இருக்கிறது.

எனவே வெளிப்பாட்டின் வெளியில் இருந்து வெளிப்படுத்தப்படாத சாரத்திற்கு செல்லும் முழுமையின் மேல்நோக்கிய நகர்வு ஆன்மாவின் ஒருங்கிணைந்த அனுபவத்தின் வழியாக நடைபெறுகிறது. இவ்விதம் மறைஞானத்துடன் தத்துவத்தை பரிமாறிக் கொள்கிறோம்.

ஜிலி மூன்று கட்டங்களாக ஆன்மீக வெளிச்சம் அல்லது வெளிப்பாடு (tajalli – தஜல்லி) ஆகியவற்றை வேறுபடுத்துகிறார். இவை பூரணம் நனவின் வெளிக்கு இறங்கி வருவதன் மூன்று கட்டங்கள் ஆகிய ஒன்றாதல், அவன்-ஆதல், நான்-ஆதல் என்னும் மூன்று நிலைகளுக்கு இணையாகச் செல்பவை.

‘பெயர்களின் வெளிச்சம்’ என்று அழைக்கப்படும் முதல் கட்டத்தில், கடவுளின் ஒவ்வொரு பெயரிலும் உணர்த்தப்படும் ரகசியத்தை முழுதமைந்த மனிதர் பெறுகிறார், அப்பெயராகிறார். அவர் அப்பெயரால் கடவுளை அழைக்கும் எந்தவொரு நபரின் பிரார்த்தனைக்கும் பதிலளிக்கும் வகையில் அமைகிறார்.

இரண்டாவது கட்டத்தில் அவர் ‘பண்புகளின் வெளிச்சத்தைப்’ பெற்று அவற்றுடன் ஒன்றி விடுகிறார். தெய்வீக சாராம்சம் அதன் பல்வேறு பண்புகளால் அறியப்படுவது: வாழ்க்கை, அறிவு, சக்தி, விருப்பம், மற்றும் பல. உதாரணமாக, கடவுள் தன்னை வாழ்க்கையின் பண்பு மூலம் சில ஆன்மீகவாதிகளுக்கு வெளிப்படுத்துகிறார். அத்தகைய ஒரு மனிதன், முழு பிரபஞ்சத்தின் வாழ்க்கை என்று ஜிலி கூறுகிறார்; அந்த வாழ்க்கை அனைத்து மகத்தான மற்றும் லட்சிய விஷயங்களையும் ஊடுருவி இருப்பதை உணர்கிறார். எல்லா வார்த்தைகள், செயல்கள், உடல்கள் மற்றும் ஆன்மாக்கள் அவரிடமிருந்து தங்கள் இருப்பைப் பெறுகின்றன. அவர் அறிவார்ந்த பண்பு கொண்டவராக இருந்தால், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால இருப்பு ஆகியவற்றின் முழு உள்ளடக்கத்தையும் அவர் அறிந்திருப்பார். ‘அனைத்தும் எப்படி வந்தது அல்லது வருகிறது அல்லது வரப்போகிறது’, ‘ஏன் இல்லாதது என ஒன்று இல்லை’ – போன்றவை அனைத்தும் அவருக்கு ஒருங்கிணைப்பின் வழியாகவும் பகுப்பாய்வின் வழியாகவும் தெரியும். தெய்வீகப் பண்புகளை ஆசிரியர் நான்கு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்துகிறார்: (1) சாராம்சத்தின் பண்புகள், (2) அழகின் பண்புகள், (3) கம்பீரத்தின் பண்புகள், (4) பரிபூரணத்தின் பண்புகள். இங்கு படைக்கப்பட்டவை அனைத்தும் ஆடிகள், அவற்றில் முழுமையான அழகு பிரதிபலிக்கிறது என்கிறார். எது அழகின்றி இருக்கிறதோ, அது அழகாக இருப்பதற்கு நிகராகவே தெய்வீக முழுமைக்கு உரியது. தீமை என்பது சார்புநிலை மட்டுமே. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ‘முழுதமைந்த மனிதன்’ ஒருமை மற்றும் நித்தியம் போன்ற அனைத்து தெய்வீக பண்புகளையும் பிரதிபலிக்கிறான். இந்த உலகில் அல்லது அடுத்த உலகில் வேறு எவரும் அது போல இல்லை.

மூன்றாவது மற்றும் கடைசி கட்டம், ‘சாராம்சத்தின் வெளிச்சம்’. இந்நிலையில் முழுதமைந்த மனிதன் முற்றிலும் பரிபூரணமாகிறான். அவனது ஒவ்வொரு பண்புகளும் மறைந்துவிட்டன. பூரணம் தன்னுள் மீண்டுவிட்டது.

இதுவரை கோடிட்டுக் காட்டப்பட்ட கோட்பாட்டில், கடவுளின் முதல் படைப்பான ஆதி மனிதன் என்னும் புராணத்தின் ஒரு வடிவத்தை நாம் காண முடியும். பருப்பொருளில் இறங்கி வந்த பின், படைப்பு விசை அவனுள் வேலை செய்கிறது, விடுதலைக்கு ஏங்குகிறது, இறுதியாக வழியைக் கண்டுபிடித்து மீண்டும் மூலத்திற்கு மீள்கிறது. ஜிலி முழுதமைந்த மனிதரை ‘பிரபஞ்சத்தைக் காப்பவர்’ என்று அழைக்கிறார். அவரே குதுப். குதுப் என்ற அந்த துருவமுனையின் மீது அனைத்து இருப்பின் உலகங்களும் சுழல்கின்றன. அவர்தான் படைப்பின் இறுதிக் காரணி. ஏனெனில் தெய்வீகப் பெயர்களையும் பண்புகளையும் முழுதமைந்த மனிதரில் அன்றி வேறெங்கும் முழுமையாய் பார்க்க முடியாது என்பதனால், கடவுள் தன்னைப் பார்க்கும் வழிமுறை அவர். அவர் கடவுளின் உருவத்தில் செய்யப்பட்ட பிரதி; ஆகையால், அவரிடம் சாராம்சம், அதன் தொடர்புடைய இரண்டு அம்சங்களான அவன்-ஆதல் மற்றும் நான்-ஆதல் வெளிப்படுகிறது. அதாவது, அகவயம் மற்றும் புறவயம், அல்லது தெய்வீகம் மற்றும் மனிதம் என்னும் அம்சங்கள்.

அவரது உண்மையான இயல்பு மும்மடங்காகும் என்று ஜிலி பின்வரும் வசனங்களில் வெளிப்படையாக அறிவிக்கிறார். இதை ஒரு முஸ்லீம் எப்படி எழுதியிருப்பார் என்று யோசிக்காமல் யாரும் இதை வாசிக்க முடியாது:

அது (சாரம்) ஒன்று என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சொல்வது சரிதான்;

அது இரண்டு என்று நீங்கள் சொன்னால், அது உண்மையில் இரண்டு.

அல்லது ‘இல்லை, அது மூன்று’ என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சொல்வது சரிதான்,

ஏனென்றால் அதுதான் மனிதனின் உண்மையான இயல்பு.”

The Perfect Master (Qutub)

Source: MU’IN UD-DIN CHISTHI: SELECTED POEMS (English Translation & Introduction by Paul Smith) நூலில் இருந்து

தமிழாக்கம் சுபஸ்ரீ

முந்தைய கட்டுரைபொலிவன, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசொல் தெளியா இசை