குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5

உனது காதலின் நெருப்பில்
என் இதயம் தழலாகி வெடிக்கிறது இப்போது..
அமைதியும் மௌனமும்  கலைந்து
நான் நொறுங்குகிறேன் இப்போது!

எனது ஒவ்வொரு ரத்த நாளமும்
உனது கரங்களால் காயமானது:
விந்தையானதா அதற்காக
நான் அழுவது இப்போது?

எனது இதயம் துன்பத்தின் வாள் தரும்
வலியை உணர்கிறது
இத்துயர் பொறுப்பதன்றி
என்செய்வேன் இப்போது?

இதய நகரம் அழிந்து போனது
காதலின் அரசன் கைப்பற்றியபோது ..
வீதியெங்கும் அவனது செல்வங்களை
காண்கிறேன் இப்போது!

நகரம் ஏன் அழிந்தது என்று சொல்ல
அனைவரும் விழைகிறார்கள்
அது அழியவே இல்லை – இதுவே உண்மை
அது செழித்திருக்கிறது இப்போது!

எனது சுயநலத்தின் வழிகள்
எனை சிறையிட்டிருந்தன;
எங்கிருந்தோ வந்த கரம்
விலங்குகளை அவிழ்க்கிறது இப்போது.

தெய்வீக விருந்தின் மதுக்கதவை
மதுகொணர்பவன் திறந்தான்..
நூறாயிரம் கோப்பைகள்
நான் பெறுகிறேன் இப்போது

மதுகொணர்பவனின் அழகிய முகம்
திரை விலகியபோது
எனது இருப்பின் அடித்தளம்
நடுங்குகிறது இப்போது!

தூய மதுவின் எண்ணற்ற கோப்பைகள்
மொய்ன் அருந்தினான்
இன்னும் தேவையென தேடல்
தொடரும் இப்போது!

 

நான் உன்னைத் தேடுகிறேன், ஆனால்
நீ விலகி ஓடுகிறாய்
என்னிடம் இருந்து:

நான் உன்னைக் காண்கிறேன், ஆனால்
முகம் திருப்புகிறாய்
என்னிடம் இருந்து!

ஆறு திசைகளுக்கு அப்பால் நான்
எனை எங்கும் தேடுகிறாய் நீ:
எவ்வளவு காலம் தப்பி ஓடுவாய்
என்னிடம் இருந்து?

ஓ அறியாமை கொண்டவனே, நீ
என்னோடு இருக்கவே நாடுகிறாய்
நன்றாகக் கேள், நான் உன்னை விலக்குவதே இல்லை
என்னிடம் இருந்து.

நான் சமுத்திரம் நீ அதில் எழுந்த முகில்
கவலை கொள்ளாதே
உன் கண்ணீரில் பசுமை மலரும் – அது வருவது
என்னிடம் இருந்து

நான் கேட்டேன், எவ்வளவு காலம்
திரைக்குப் பின்னால் இருப்பாய்..
இதுவே தருணம் ஒளியாதே
என்னிடம்  இருந்து?

விடை: திரையில் இருப்பது நான் அல்ல
உனது இருப்பே திரை ஆனது
நீ இருக்கும் வரை ஆயிரம் திரைகள் மறைக்கிறது
என்னிடம் இருந்து

சில பெயர்களை சொல்லி
கடவுளுடன் இருக்க முடியுமா?
உனது பொய்யான இருப்பே விலக்குகிறது
என்னிடம் இருந்து!

மொய்ன் ஆடியில் நீ கண்டதென்ன?
என்னை ஏன் கேட்கிறாய்? நீ அறிவாய்
நீ எதை மறைத்தாய் என
என்னிடம் இருந்து!

அப்படி ஒரு நெருப்பு என்னில் பற்றியது
உடலும் ஆன்மாவும்
எரிந்து போனது..

இதயத்தின் பெருமூச்சில்
நாவும் வாயும் தழலென
எரிந்து போனது!

நரகத்தின் எரியை விட
பிரிவின் எரி சூடானது
காணும் உடல், காணாத இதயம், ஆன்மா துன்பத்தில்
எரிந்து போனது!

நரகத்தின் நெருப்பு
பாவியின் தோலைத்தான் எரிக்கும்:
பிரிவுத்தீயில் எனது எலும்பின் மஜ்ஜைகள் கூட
எரிந்து போனது!

முதலில் இரு உலகின் இன்பங்களை
இதயம் ஆசைப்பட்டது
காதல் வந்ததும் இரு உலகங்களும்
எரிந்து போனது!

இப்போது இருப்பது
அவனுக்கான அன்பும் ஏக்கமும்தான்
அவனைக் கண்டதும் மண்ணும் விண்ணும் தரும் இன்பமும்
எரிந்து போனது!

உலகில் சொர்கத்தின் சந்தை
மதிப்பு மிக்கது என எண்ணினேன்..
கடவுளின் அன்பின் சந்தையில் நுழைந்ததும் அவை
எரிந்து போனது!

பயனற்ற ஆசைகளின் பாலைவெளியில்
எனது தாகம் காதலனைக் காண்பது:
தாகத்தின் ஆசை தீவிரமானது, எனது ஆன்மா
எரிந்து போனது!

எரிந்து போவதன் முதல் அடையாளம்
சுய நினைவு தவறுவது
எனது பெயரை அகற்றினேன் என் அடையாளம்
எரிந்து போனது!

ஆன்மாவின் ஆடியில்
காதலனின் உருவை பார்த்தபோது
அக்காட்சியின் மகிமையில் எனது இருண்ட இருப்பு
எரிந்து போனது!

எனக்கும் காதலனுக்கும் இடையில்
நூற்றுக்கணக்கான திரைகள் இருந்தன
எனது பெருமூச்சின் ஒற்றைப் பொறியில் அத்தனையும்
எரிந்து போனது!

மொய்ன் பார்க்காத போது,
காதலனின் அழகு சொல்லப்படுவதில்லை:
பார்த்து விட்டாலோ அவனது கவிதையின் ஆற்றலும்
எரிந்து போனது!

நீ உண்மையை அறிய விரும்பினால்
உன்னைத் தாண்டிச் செல்க
நீ மட்டுமே என்றறிக
உன்னிடம் உண்மையை மறைப்பது

உன் இதயத்தின் பசியை
சொர்க்கம் தீர்ப்பதில்லை
இதயம் விடுதலை அடைய
அது காதலனை நாடுகிறது

ஆன்மா அவனது உலகில் இருந்து
மண்ணுக்கு வந்தது
அதன் இல்லமாகிய
இறுதி இலக்குக்கே அது மீள்கிறது

காதலின் பறவை, புனித வெளிகளின்
எல்லையற்ற கூடுகளில் இருந்து விடுபட்டது
கதைகளின் ஜிராக்* போல
இதயம் அதை வலையிட்டு பிடிக்கிறது

இரு உலகங்களின் பொக்கிஷங்களும்
அரசனின் செல்வத்தின் முன் ஒன்றுமில்லை
அது அன்பின் செல்வம்
ஒருவருடைய இதயத்துள் இருக்கிறது

மொய்ன் இதயம் துன்பத்தில் இருந்து விடுபட
இதயத்திடம் சொல்க
காதலில் இதயம் துயருறும் போது
துயரிலிருந்து இதயம் மீள்கிறது

* – பாடும் பறவை

மொழியாக்கம் சுபஸ்ரீ

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்

முந்தைய கட்டுரைநிலம் பூத்து மலர்ந்த நாள் – வாசிப்பனுபவம் 
அடுத்த கட்டுரைஅஜ்மீர் பயணம்- 5