அஜ்மீர் பயணம்- 5

ஆனசாகரம்

அக்டோபர் 14 ஆம் தேதி அஜ்மீரைச் சுற்றிப்பார்க்க ஒதுக்கியிருந்தோம். அன்று முழுக்க அலைச்சலின் நாள். நாம் விரும்புவதைச் செய்ய அலையும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதன் களைப்பைப்போல இனியது வேறில்லை. நண்பர் கே.பி.வினோத் அடிக்கடிச் சொல்வார் “பயணங்களில் நம் நாட்கள் எப்படி இழுபட்டு நீண்டுவிடுகின்றன… ஒரு நாள் ஒருவாரம் போல ஆகிவிடுகிறது!” என்று. அந்நாள் ஒரு வாரம் அளவுக்குப் பெரியதுதான்.

காவலர்கள் வண்டியுடன் காலை ஒன்பது மணிக்கு வந்தார்கள். அஜ்மீரின் நகரப்பகுதிக்குள் சென்றோம். காசி போலவே பழமையை கடந்து புதியவாழ்க்கை எழுந்துகொண்டிருக்கும் நகரம். அஜ்மீரின் செல்வம் சலவைக்கல் வணிகத்தால் உருவாவது. நகரில் இருநூறு முந்நூறு ஆண்டு பழமையான கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒட்டி புதிய கான்கிரீட் கட்டிடங்கள். பழைய கட்டிடங்களில் பிளந்து எடுக்கப்பட்ட கற்பலகைகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருந்தன. சன்னல்களுக்கு மேலே நீட்சிகள் எல்லாம் கற்பலகைகள்தான். செந்நிறக் கற்பாளங்களால் ஆனவை பெரும்பாலான கட்டிடங்கள்.

புஷ்கர் ஏரி

அஜ்மீருக்குள் மூன்று ஏரிகள் உள்ளன. நகர்நடுவே ஆனசாகர் என்னும் ஒரு பெரிய ஏரி உள்ளது. இவையெல்லாம் மன்னர்களின் காலத்தில் மழைநீரைச் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. அஜ்மீரின் மூன்றுபக்கமும் மலைகள்தான். அஜ்மீர்தான் அப்பகுதியிலேயே தாழ்வான இடம். ஆகவே பெய்யும் மழை முழுக்க ஓடைகளாக அங்கே வருகிறது. அந்த ஏரிகள் அந்த மழைநீரை சேர்த்து வைத்திருக்கின்றன. நிலம் பாறையாலானது என்பதனால் நீர் வற்றுவதில்லை. அந்த ஏரிகளை நம்பியே அந்நகர் இயங்குகிறது.

அங்கே முன்னரே இயற்கையான ஏரி இருந்திருக்கலாம், நகரமே அதன் கரையில் என உருவாகியிருக்கலாம். இன்றுள்ள ஏரிகள் மன்னர்களால் விரிவாக்கப்பட்டும், தோண்டப்பட்டு உறுதியான கரைகள் அமைக்கப்பட்டு பேணப்பட்டவை. நீர்க்களஞ்சியங்கள் என்று சொல்லலாம். நீர் அறுவடை என்பது ஆண்டில் வெறும் இருபது நாட்களுக்குள்தான். அதுவும் ஜூன் முதல் செப்டெம்பர் வரை எப்போது வேண்டுமென்றாலும்.

பிரம்மா கோயில் புஷ்கர்

நகரின் மையத்தில் இருந்த ஆனசாகர் ஏரி பதிமூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. அஜ்மீர் பகுதியை 1150 வாக்கில் ஆட்சி செய்த ஆர்னோராஜா என்னும் மன்னரால் அகழப்பட்டது. அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் சகமான வம்சத்தைச் சேர்ந்தவர். அப்பெயர் சுருங்கி இப்போது சௌகான் என வழங்குகிறது. அவர்களின் தலைநகர் சபதலக்‌ஷா நாட்டை ஆண்டவர்கள். ஏழு மலைகளின் நாடு. அதன் தலைநகர் அமைந்திருந்த இடம் ஷகம்பபுரி என்னும் நகர்.

ஷகம்பபுரி நகரம் ஷகம்பாரி என்னும் மாபெரும் உப்பு ஏரியின் கரையில் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் நீர் இறங்கி வற்றி இயற்கையாகவே உப்பு விளையும் அந்த ஏரி ஒரு பெரிய செல்வக்குவை. ஒரு காலத்தில் அங்கிருந்தே உப்பு வட இந்தியா முழுக்கச் சென்றது. ஏரியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சௌகான்கள் ஆற்றல் மிக்க அரசர்களாக இருந்தார்கள். இன்று அந்த ஏரி சாம்பார் ஏரி என அழைக்கப்படுகிறது. உப்புக்கே சாம்பார் என்னும் பெயர் புழங்கியது. உப்பு போட்ட பருப்புக்குழம்பு சாம்பார் டால் எனப்பட்டது. இன்று அது தமிழகத்தில் சாம்பார் எனப்படுகிறது.

ஆர்னோராஜா மிகப்பெரிய ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார். இங்குள்ள பிற ஆட்சியாளர்களை வென்று கப்பம் கொண்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானின் கஸ்னாவிட் வம்சத்து இஸ்லாமிய ஆட்சியாளர்களை வென்றிருக்கிறார். பின்னாளில் அவர் தன் மகனாலேயே கொல்லப்பட்டார். அவருடைய மகன் ஜக்கதேவரை அவருடைய தம்பி விக்ரகராஜா கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

அந்தக் கொடிவழியில் வந்த மூன்றாவது பிருத்விராஜ் சௌகான்தான் இந்தியாவெங்கும் ராணி சம்யுக்தையின் கதை வழியாக புகழ்பெற்றவர். முகமது கோரியால் தோற்கடித்துக் கொல்லப்பட்டவர். ராஜபுதன மன்னர்களின் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம் அவர்களின் தொடர்ச்சியான பூசல்கள். அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டனர். அண்ணனும் தம்பியும், தந்தையும் மைந்தனும் போரிட்டனர்.

புஷ்கர்

ஆனசாகர் ஏரி நீர் நிறைந்து நீலமாக விரிந்திருந்தது. செப்டெம்பர் வரை ஓரளவு மழைபெய்திருந்தது. ஏரியின் கரைகள் ஷாஜகான் மன்னரால் கட்டப்பட்டவை. அன்றுமுதல் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டவை. அமர்வதற்கான இருக்கைகள், நடைபாதைகள் என நகரின் மையமான பொழுதுபோக்கிடமாக உள்ளது ஏரிக்கரை.

ஆனால் சென்ற நாற்பதாண்டுகளில் நகர் விரிவாக்கம் செய்யப்பட்டபோது நகரின் மொத்தச் சாக்கடையும் ஏரியில் திறந்து விடப்படுகிறது. நீர் சாக்கடைத் தேக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. மொத்த நீரையும் வெளியேற்றி, தூர்வாரி, சாக்கடைகள் நகரிலிருந்து ஏரிக்குள் வராமல் செய்தாலொழிய ஏரியை காப்பாற்ற முடியாது. நகரின் இதயம் அந்த ஏரி, அது மலினமாகிவிட்டிருக்கிறது.

சாவித்ரி கோயில்

இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத் போன்று மைய நகரங்களில் எல்லாம் அரசர்கள் வெட்டிய ஏரிகள் உள்ளன. நகரமே அவற்றை நம்பி இயங்குகிறது. நவீன ஜனநாயக ஆட்சி அவற்றை சாக்கடைத் தேக்கங்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றிய அக்கறை அதனால் பாதிக்கப்படும் மக்களிடையேகூட இல்லை. நான் வாழும் நாகர்கோயிலிலேயே பேச்சிப்பாறையில் இருந்து தூயநீர் பெருகிவரும் கால்வாய்களில் அரசே நகரின் அத்தனை சாக்கடைகளையும் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அஜ்மீரில் இருந்து பன்னிரண்டு கிமீ தொலைவில் உள்ள புஷ்கர் என்னும் நகரம் செய்திகளில் தோன்றுவது அங்கே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுநிலவுநாளில் நிகழும் மாபெரும் ஒட்டகச்சந்தைக்காக. குதிரைச்சந்தையும்கூட. உலகின் மாபெரும் விலங்குச்சந்தை என அது அழைக்கப்படுகிறது. அதைக்காண ஐம்பதாயிரம் சுற்றுலாப்பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள்.

சாவித்ரி கோயில்

புஷ்கர் என்றால் நீர்த்தேக்கம் என்று பொருள். இங்குள்ள இயற்கையான பெரிய ஏரி இந்துக்கள் சீக்கியர்கள் இருசாராருக்கும் நீத்தார்கடன்கள் செய்விப்பதற்குரிய புனிதத்தலமாக கருதப்படுகிறது. ஏரியில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. ஒரு படித்துறை குரு கோவிந்த் சிங்குக்காக சீக்கியர்கள் கட்டிய கோவிந்த் சிங் படித்துறை.

நாங்கள் சென்றபோது புஷ்கரில் கூட்டமே இல்லை. கடைகளில் சிலர் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். ஏரியில் ஒருசிலர் நீத்தார்கடன்கள் செய்துகொண்டிருந்தனர். பாசிபடிந்த நீர் தூய்மையானதாக இல்லை. அங்கும் சாக்கடைகள் ஏரியில் கலக்கின்றன. நீரில் இறங்கி ஓரிரு சொட்டுகள் தலையில் விட்டுக்கொண்டோம்.

புஷ்கர் மிகத்தொன்மையான தலம். மகாபாரதத்தில் புஷ்கரம் என இது குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள். கிபி ஒன்றாம் நூற்றாண்டு முதலே புஷ்கர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அங்கே மொகஞ்சதாரோ காலகட்டத்து பானையோடுகளும் செங்கல்கட்டமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அசோகருக்கு முந்தைய பிராமி எழுத்துருவில் அமைந்த தொல்பொருட்களும் கண்டடையப்பட்டன. புஷ்கர் அருங்காட்சியகத்தில் அவை உள்ளன. எங்கள் ஒருநாள் பயணத்தில் அவற்றைச் சென்று பார்க்க நேரமில்லை.

முகமது கோரி புஷ்கரைச் சூறையாடினார். இங்கிருந்த எண்ணூறு ஆலயங்கள் அவரால் அழிக்கப்பட்டன எனப்படுகிறது. அதன் பின் பலமுறை புஷ்கரில் இருந்த ஆலயங்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் தகர்க்கப்பட்டன. ஔரங்கசேப் புஷ்கரின் எல்லா ஆலயங்களையும் இடிக்க ஆணையிட்டார்.  பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் மீண்டும் கட்டப்பட்ட சலவைக்கல் ஆலயங்களே இன்று இங்குள்ளன.

அவற்றில் முதன்மையான ஆலயம் பிரம்மா – காயத்ரி கோயில். மையத்தெய்வம் காயத்ரி தேவியுடன் அமர்ந்த பிரம்மா. உலகிலுள்ள ஒரே பிரம்மா கோயில் இது என்று சொல்லப்படுகிறது. காயத்ரி சந்தம் பிரம்மாவின் மனைவியாக இங்கே கருதப்படுகிறது. பிரம்மனுக்கு அருகிலேயெ தேவி அமர்ந்திருக்கிறாள். பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இடிக்கப்பட்ட ஆலயத்தின் அடித்தளம் மீது நூறாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயம் இது. கட்டிடக்கலைநுட்பம் என ஏதுமில்லை.

மையமாக இருக்கும் பிரம்மாவின் சிலையும் சிற்பமுறைமைப்படி அமைந்தது அல்ல. சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு முகங்கள் கொண்ட வடிவம் ஊழ்க அமர்வில் உள்ளது. ஆதிசங்கரர் இங்கே பிரம்மாவை பதிட்டை செய்தார் என்பது தொன்மம். நான்கு கைகளில் விழிமணிமாலை, ஏடு, குசப்புல், கமண்டலம் ஏந்தியுள்ளது. இடப்பக்கம் காயத்ரிதேவியும் வலப்பக்கம் சரஸ்வதிதேவியும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆனசாகரம், சாவித்ரி மலைமேல் இருந்து

சலவைக்கல் ஆலயம் காலைவெயிலிலேயே வெம்மைகொள்ள ஆரம்பித்திருந்தது. அங்கே வருவதற்கு உகந்த காலம் அல்ல. உகந்த பொழுதும் அல்ல. பிறிதொருமுறை அங்கே வந்து அந்த புனிதநகரை பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அப்போது அங்கே மீண்டும் விழாக்கோலம் உருவாகியிருக்கவேண்டும். புஷ்கரின் சிறப்பே ஒட்டகங்கள், சுற்றிலுமிருக்கும் அரைப்பாலை நிலம், மொட்டைக்குன்றுகள் ஆகியவைதான். அதற்கென வந்து ஒட்டகவண்டிகளில் அல்லது ஒட்டகங்களில் ஏறி பாலைநிலத்தைச் சுற்றி வருவதுதான் அங்கே நாம் அடையவேண்டிய அனுபவம்.

புஷ்கர் முழுக்க ஒட்டகவண்டிகளும் ஒட்டகங்களும் சென்றுகொண்டிருந்தன. யானைக்கு அடுத்தபடியாக பேருருவம் கொண்ட விலங்குகள். ஆனால் மிக அரிதாகவே எவரையாவது தாக்குகின்றன. அமைதி தவழும் முகம். உலகையே மேலிருந்து பார்ப்பதனால் விழிகள் தழைந்து ஒரு களைத்த கருணைப்பாவனை அவற்றில் கூடியிருக்கிறது.

புஷ்கர் நகரைச் சுற்றி பல சிறு குன்றுகள் உள்ளன. பெரும்பாலானவை செங்குத்தானவை. அனைத்திலும் உச்சியில் சிறிய ஆலயங்கள் உள்ளன. பல ஆலயங்கள் சென்ற நூறாண்டுகளில் எடுத்துக் கட்டப்பட்டவை. அவற்றில் ரத்னகிரி என்னும் குன்றின்மேல் உள்ள சாவித்ரி ஆலயம் உயரமானது. அங்கே செல்ல ரோப்கார் வசதி உள்ளது. படிகளில் ஏறியும் செல்லலாம். சர்ப்பம் போல படிக்கட்டு சுழன்று சுழன்று மேலேறியது. அந்தக் கோடையில், வெயில் வந்தபின் ஏறுவது இயலாது.

ரோப் கார் வசதியானது. அந்த நிலத்தை முழுமையாகப் பார்க்க வசதியானது. அதில் ஏறி அமர்ந்து மெல்ல மிதந்து மேலே சென்றோம். நடுவே கொஞ்சநேரம் நிறுத்தி வானிலேயே வைத்திருந்தனர். போதிய பயணிகள் இல்லை என்பதனால். அங்கிருந்து சுற்றிலுமிருக்கும் பாலைநிலத்தை பார்க்கமுடிந்தது. பச்சைப்பசேலென்றுதான் தெரிந்தது. ஆனால் நம்மூர் உடைமுள் போன்ற ஒரு முள்மரம், அது கோடையில் இன்னும் பசுமைகொள்வது. நடுவே சிவந்த மண்புழுக்களைப்போல சாலைகள் ஓடின.

சாவித்ரி ஆலயம் சமீபத்தில் கட்டப்பட்டது. பணி முடியவுமில்லை. சிமிண்டாலும் சலவைக்கல்லாலும் ஆனது. வட இந்தியாவின் சமீபகால இந்து கோயில்கள் எந்த ரசனையும் இல்லாமல், எந்த சிற்பநூல் முறைமையும் இல்லாமல் காமாசோமாவென கட்டப்படுகின்றன. இதுவும் அத்தகைய ஆலயம்தான்.

இந்த ஆலயத்தின் தொன்மமும் ஆர்வமூட்டக்கூடியது. சாவித்ரி தேவி பிரம்மாவின் இன்னொரு மனைவி. சவிதா என்றால் சூரியன். சாவித்ரி சூரியனின் மகள். பிரம்மமுகூர்த்தம் கடந்து வரும் இளங்காலைப் பொழுதே சாவித்ரி எனப்படுகிறது. பொன்னிறப்பொழுது அது. சவிதாவை துதிக்கும் வேத மந்திரம் காயத்ரி சந்தத்தில் அமைந்துள்ளது. அது சாவித்ரி மந்திரம் எனப்படுகிறது.  இங்குள்ள தொன்மப்படி பிரம்மா காயத்ரியை தன் அருகே வைத்துவிட்டதனால் சாவித்ரி ஊடல்கொண்டு இப்படி தனியாக மலைமேல் அமர்ந்திருக்கிறாள்.

இந்த ஆலயம் இரண்டாயிரமாண்டுகளாக இருக்கிறது. இடிபாடுகளில் இருந்து நூறாண்டுக்கு முன் மீட்டுக் கட்டப்பட்டது. காயத்ரியுடன் சாவித்ரி ஊடல்கொண்ட இந்தக் கதைக்கு மெய்யியல் சார்ந்த உட்பொருள் என்ன? படைப்பிறைவனின் மனைவியர் பொற்காலைதேவியும் அவளைப் பாடும் இசையின் தேவியும். அவர்களிருவரும் முரண்பட்டு படைப்பிறைவனுடன் ஊடல் கொள்கிறார்கள். விந்தைதான்.

மேலே சென்று சாவித்ரி தேவியை வணங்கிவிட்டு அங்கிருந்த சிமிண்ட் மண்டபத்தில் நின்றபடி கீழே பார்த்தோம். தொலைவில் அஜ்மீர் தெரிந்தது. ஆனசாகர் ஏரி ஒரு வட்டக்கண்ணாடி போல நடுவே ஒளிவிட்டது. சுற்றிலும் முள்மரங்கள் மண்டிய பாறைக்குன்றுகள். அவற்றில் கோடையில் வெந்து உடைந்த பாறைகள் அமைந்திருந்தன. தொடுவானம் கண்கூசும்படித் தெரியும் அகன்ற வெளி.

அங்கே கருமந்திகள் உலவிக்கொண்டிருந்தன. பொதுவாக கருமந்திகள் தொந்தரவு தராதவை. இன்றைய நவீன இளைஞர்களின் மோஸ்தரின் தலைமுடி வைத்திருந்தன. நீளமான வாலை நீட்டி அவை அமர்ந்திருக்க அதை மிதிக்காமல் கடந்து செல்வதுதான் கடினமான பணி.

மலைக்குமேலே நின்று அந்நிலத்தை பார்த்தபோது ஐநூறாண்டுகளுக்கு முன் அது எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் வந்தது. கிரானைட்டும் மார்பிளும் பயன்பாட்டுக்கு வராத காலத்தில் அது முழுக்கமுழுக்க வெற்றுநிலம் மட்டுமே. கொள்ள எதுவுமே இல்லை. ஆனால் அந்நிலத்துக்காக போர் நிகழ்ந்திருக்கிறது. குருதி பலநூறாண்டுகள் சிந்தப்பட்டிருக்கிறது.

ஜாவர்சந்த் மக்கானி

இப்பகுதியின் படைப்பாளி என்றால் ஜாவர்சந்த் மக்கானிதான். அவருடைய ’சோரட் உனது பெருகும் வெள்ளம்’ என்னும் நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது. குஜராத்தின் கட்ச் முதல் ராஜஸ்தானின் தெற்குப்பகுதி வரை விரிந்துகிடக்கும் வெற்றுநிலத்தின் கதாசிரியர் அவர்.

இங்கே திகழ்ந்த அரசுகள் வீழ்ச்சி அடைந்து பிரிட்டிஷ் ஆட்சி உருவானபோது பழைய அரசின் படைவீரர்கள் கொள்ளையர்களாக மாறினார்கள். அதற்கு முன்னரேகூட இந்த முள்நிலத்தில் கொள்ளை என்பது ஒரு மையத்தொழிலாகவே இருந்துள்ளது. கொள்ளையர் ஆட்சியாளர்களாவதும் ஆட்சியாளர் கொள்ளையர்களாவதும் மிக இயல்பான ஒரு நிகழ்வு இங்கே. குஜ்ஜார், மீனா போன்ற சில தொல்குடிகள் மரபாகவே கொள்ளைத்தொழிலும் செய்பவர்கள்.

ஸ்லீமான்

பரம்பரைக் கொள்ளையரும் புதுக்கொள்ளையரும் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிண்டாரிகள், தக்கர்கள் என்னும் மாபெரும் கொள்ளையர்க் கூட்டங்களாக உருவெடுத்தனர். தக் என்னும் சொல்லே அதில் இருந்து வந்ததுதான். இவர்களில் முஸ்லீம்கள், ஷத்ரியர்கள், பழங்குடிகள் ஆகிய எல்லா சமூகக்குழுவினரும் உண்டு. இஸ்லாமியர் உட்ப இவர்கள் அனைவருமே காளியை வழிபட்டு பலிகொடுத்தபின் கொள்ளைக்குச் செல்பவர்கள். காளிவழிபாடு இவர்களின் குற்றவுணர்ச்சியை இல்லாமலாக்கியது. ஆகவே ஈவிரக்கமில்லாத கொலைகாரர்களாக ஆனார்கள்.

உடைமைகளை திருடியபின் பறிகொடுத்தவர்களை ஒருவர் கூட விடாமல் முழுமையாகவே கொன்றுவிடுவார்கள். உடல்களை புதைக்க பல இடங்களை வைத்திருந்தார்கள். பழைய ராஜஸ்தானின் பெரும்பாலான நிலம் எவருக்கும் உரியதல்லாத வெற்றுப்பரப்பு. ஆகவே பலகாலம் இவர்களின் இருப்பே கண்டறியப்படவில்லை. இவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் கிட்டத்தட்ட ஒருலட்சம் பேர் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்களால் பதினைந்து லட்சம்பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம்.

தக்கர்கள்

கட்சும் ராஜஸ்தானும் தென்னிலத்தில் இருந்தும் மேற்கில் இருந்தும் டெல்லிக்கும் பிற கிழக்கு நிலத்திற்கும் செல்வதற்கான வழிகளால் ஆனவை என்பதனால் இவர்கள் செழித்தனர். பல ஜமீன்தார்களும் குறுநில மன்னர்களும் இவர்களை ஆதரித்தனர்.

இவர்களின் கொலைமுறைகள் வேறுபட்டவை. இவர்கள் பயணிகள் மற்றும் வணிகர்குழுக்களை வேவுபார்த்தபின் சாமியார்கள், சூஃபி பயணிகள், குறவர்கூட்டங்கள் என்னும் பாவனையில் அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். பாலைவனத்தில் வழிகாட்டிகள் தேவை என்பதனால் அவர்கள் இவர்களை நம்புவார்கள். அவர்களை வழிதவறசெய்து தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வார்கள். அங்கே மேலும் பலர் காத்திருப்பார்கள்.

இவர்கள் இனிமையாக சுவாரசியமாக பேசுபவர்கள். பலமொழிகள் தெரிந்தவர்கள். பேச்சு சென்று கொண்டிருக்கையிலேயே சட்டென்று தாக்குவார்கள். சரசரவென ஆண் பெண் அனைவரையும் கொல்வார்கள். அதன்பின்னரே கொள்ளை. பலசமயம் நூறுபேரை கொன்று ஒரு துண்டு தங்கமோ வெள்ளியோ பணமோ கிடைக்காமலாவதும் உண்டு. அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

இவர்களில் இஸ்லாமியர் தங்கள் தலையில் கட்டும் துவாலையால் கொல்லப்படுபவரின் கழுத்தை பின்னாலிருந்து இறுக்குவார்கள். முன்னால் நின்று பேசிக்கொண்டிருப்பவர் அவர் காலை பிடித்து முன்னால் இழுப்பார். இந்துக்கள் பட்டுநூலை பயன்படுத்துவார்கள். ஒரு நிமிடத்தில் கொலை நிகழ்ந்துவிடும். குருதி சிந்தப்படுவதில்லை. உடல் புதைக்கப்படும்.  ஆகவே தடையங்களே இருக்காது.

புஷ்கர்

வில்லியம் ஸ்லீமான் என்னும் பிரிட்டிஷ் படைத்தலைவர் தற்செயலாக நாடெங்கும் நிகழும் வழிப்பறிக் கொள்ளைகள் இப்படிப்பட்ட ஒரு ‘கல்ட்’ டால் செய்யப்படுபவை என்பதை கண்டறிந்தார் அதை அவர் அன்றைய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இப்படி இரு ’கல்ட்’கள் இருக்கின்றன என நம்பவைக்க அவர் பெரிதும் போராட வேண்டியிருந்தது.

தக்கர்க‌ள் பதினான்காம் நூற்றாண்டு முதலே ஒரு வகை கண்காணா அமைப்பாக, ஒருவகை மதமாக இருந்து வந்தனர். கொலை கொள்ளை மதம் எனலாம். காளி அதன் தெய்வம். பிரிட்டிஷ் ஆட்சியில் உள்ளூர் படைகள் கலைக்கப்பட்டபோது தக்கர்களின் எண்ணிக்கை பற்பல மடங்காகப் பெருகியது. வில்லியம் ஸ்லீமான் தக்கர்களிலும் பண்டாரிகளிலும் ஒற்றர்களை ஊடுருவ விட்டார்.

இவர்கள் தங்களால் கொல்லப்படும் பயணிகளிடம் இருக்கும் கைக்குழந்தைகளை எடுத்து வளர்ப்பது வழக்கம். அக்குழந்தைகளும் கொலைகாரக் கொள்ளையர்களாக மாறும். அவர்களில் சிலருக்கு மங்கலாக தங்கள் பெற்றோரின் நினைவுகள் எஞ்சியிருந்தன. அவர்கள் இயக்கத்தை வெள்ளையர்களுக்கு காட்டிக்கொடுத்தனர். வில்லியம் ஸ்லீமான் பத்தாண்டுகள் போரிட்டு தக்கர்களை வேரோடு அழித்தார். வட இந்தியாவில் குற்றங்களை கட்டுப்படுத்தினார்.

தக்கர்களைப் பற்றி தமிழிலும் நல்ல நூல்கள் வெளிவந்துள்ளன. இரா.வரதராஜன் எழுதிய தக்கர்கொள்ளையர்கள் [கிழக்கு] ஒரு நல்ல நூல். ஆனால் இன்றும்கூட ராஜஸ்தானில் கொள்ளைக்குழுக்கள் உள்ளன. பவாரியா என்னும் கொள்ளைக்குழு தமிழகத்தில் நிகழ்த்திய தொடர்கொள்ளைகள் புகழ்பெற்றவை. அவர்களை கைதுசெய்யச் சென்ற தமிழகத்துக் காவலர் கொல்லப்பட்ட நிகழ்வினூடாக அவர்கள் இங்கே பேசப்பட்டனர். இன்றும் அவர்கள் ஒருங்கிணைந்த கொள்ளையர் வலைப்பின்னலாக தேசம் முழுக்கச் செயல்படுகின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று என்னும் சினிமா அவர்களை சித்தரிக்கிறது.

மீனா, குஜ்ஜார் போன்ற சாதிகள் மிகப்பெரியவை. அவை முன்பு கொள்ளையில் ஈடுபட்டிருந்தன. அவர்களை பிரிட்டிஷார் குற்றபரம்பரையாக முத்திரையிட்டுக் கண்காணித்தனர். விடுதலைக்குப்பின் அந்த முத்திரை நீக்கப்பட்டது. அச்சமூகங்கள் இன்று முன்னேறிய சமூகங்கள் ஆகிவிட்டன. எங்கள் வண்டி ஓட்டுநராகிய காவலரேகூட ஒரு மீனாதான்.

சோரட் உனது பெருகும் வெள்ளம் இந்த குற்றம்சார் குடிகளைப் பற்றிய நாவல். அஜ்மீரின் வறண்ட மலைகளைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தபோது வெவ்வேறு கற்பனைகள் வந்து அறைந்து என்னை அதிரச்செய்து கொண்டிருந்தன. நான் இந்நிலத்தை நேரில் பார்த்து அறிந்ததைவிட ஜாவர்சந்த் மக்கானி வழியாக அறிந்தது மிகுதி. எழுதப்பட்ட நிலமே வாழும் நிலம். காயத்ரியும் சாவித்ரியும் சூழ பிரம்மன் அமர்ந்திருப்பது அதைக் குறிக்கிறதா?

[மேலும்]

நீர்க்கூடல் நகர் 2

தக்கர் கொள்ளையர்கள்- வரதராஜன்

முந்தைய கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல்நூல்