இல்லம்தேடி கல்வி- ஒரு மாபெரும் வாய்ப்பு

ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும்
ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்

தமிழக அரசு இல்லம்தேடி கல்வி என்னும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. கோவிட் தொற்று காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டமையால் கிராமப்புறங்களில் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டது. அதை ஈடுசெய்யும் விதமாக தன்னார்வலர்களைக் கொண்டு குழந்தைகளை வீடுதேடிச்சென்று ஆரம்ப எழுத்தறிவிப்பை நிகழ்த்தும் திட்டம் இது. ஒருவகையில் இந்தியாவுக்கே முன்னோடியான முயற்சி. இது வெல்லவேண்டும்,

இல்லம்தேடி கல்வி என்னும் இணையதளம் வழியாக அரசு தன்னார்வலர்களுக்காக அழைப்பு விடுத்துள்ளது. இதில் நண்பர்கள், அவர்களின் மகன்களும் மகள்களும் தன்னார்வலர்களாகச் சற்றேனும் பங்குபெறவேண்டுமென விரும்புகிறேன். சேவை என்பதற்கு அப்பால் இது மெய்யாகவே நம் சமூகமும் நம் கிராமங்களும் எப்படி உள்ளன என்று இளைஞர்கள் அறிவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும். அது பெரிய ஒரு திறப்பு.

முன்பு வயதுவந்தோர் கல்வி இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த நண்பர்கள் பலர் தங்கள் வாழ்க்கைக்கான அடிப்படைக் கல்வி அந்த கிராம அனுபவங்கள் வழியாகவே கிடைத்தது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வயதுவந்தோர் கல்வி இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்த பலர் விற்பனை- விரிவாக்கம் சார்ந்த துறைகளில் சாதனை புரிய இந்த அனுபவமே அடித்தளமாக அமைந்தது. அவர்களின் தயக்கத்தை உடைத்து, அவர்கள் தங்கள் திறன்களை கண்டடைய வழியமைத்தது.குறிப்பாக முறைசார் கல்விக்கு அப்பால் வாழ்வனுபவமே இல்லாத நகர்ப்புற இளைஞர்களுக்கு இது ஆளுமைப்பயிற்சிக்கான களம்.

மக்களைத் தொடர்புகொள்வது, ஏற்கவைப்பது, ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் இருக்கும் திறமையே நவீனத் தொழில்- வணிகக் கல்வியின் அடிப்படையாக இன்று உள்ளது. வருங்காலத்தில் மேலும் அது முக்கியமாக ஆகும். ரிஷிவேலி பள்ளி போன்ற உயர்தரக் கல்வியமைப்புகளில் அவர்கள் பல ஆண்டுகளாக இதை அவர்களே ஒருங்கிணைத்து மாணவர்களை பயிற்றுவிக்கின்றனர். அமெரிக்கக் கல்விநிலையங்களில் இருந்து மாணவர்களை மூன்றாமுலக நாடுகளுக்கே அனுப்பி இந்த அனுபவத்தை அடையவைக்கின்றனர். குறிப்பாக ஆப்ரிக்காவுக்கு. என் நண்பரின் மகள் கனடாவில் இருந்து அவருடைய கல்லூரியால் தமிழகத்தில், திருவண்ணாமலையில் இருளர்களிடம் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டார்

இந்த வாய்ப்பு உயர்தரக் கல்வி நிறுவனங்கள் அல்லாதவற்றில் பயில்பவர்களுக்கு இன்று அரிது.அக்கல்விநிறுவனங்கள் இப்படி ஓர் இயக்கத்தை ஒருங்கிணைக்க முடியாது. அவர்களுக்கு இது பெரிய வாய்ப்பு. இதில் ஈடுபடுபவர்கள் முடிந்தவரை சிற்றூர்களுக்குச் சென்று பணியாற்றவேண்டும். எனில் இது அளிக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஆற்றலாக, இனிய நினைவுகளாக எஞ்சும்.

அரசுசார் செயல்பாடுகளுக்கு பலவகையான முறைமைகள் உண்டு. பல்லாயிரம் பேர் சேர்ந்து செயல்படும் இயக்கம் அதற்கான உள்முரண்பாடுகளும் ஊடுபாவுச் சிக்கல்களும் கொண்டுதான் இயங்கும். ஒட்டுமொத்தமாக இத்தகைய இயக்கத்தின் கனவும் பங்களிப்பும் மிகப்பெரிதாக இருக்கையில் தனித்தனி அலகுகளில் அது மிகுந்த நடைமுறைத் தன்மையுடனேயே இருக்கும். இலட்சியக்கனவுகளுக்கும் நடைமுறைக்கும் இடையேயான இயக்கவியலை, அரசுத்துறைகளின் செயல்பாட்டுமுறைமைகளை அறிய இளைஞர்களுக்கு இது வழியமைக்கும்.

நன்னம்பிக்கையுடன் , சாதகமான உளநிலையுடன் செயல்படவேண்டும். எளிதில் சோர்வுறாமல் செயல்புரியும் பொறுமை வேண்டும். அவற்றை அடைவதைப்போல வாழ்வுப்பயிற்சி வேறில்லை. இளமையிலேயே எதையாவது செய்துவிட்டோம் என்னும் எண்ணம் அளிக்கும் தன்னம்பிக்கை வாழ்க்கை முழுமைக்கும் நீள்வது. எங்கும் தயங்கிநிற்காமல் மேலே செல்லவைப்பது. உண்மையில் ஒரு மாபெரும் கல்வி வாய்ப்பு என எண்ணி பெற்றோர் தங்கள் மைந்தர்களை அனுப்பிவைக்கவேண்டிய பணி இந்த தன்னார்வலர் இயக்கம்.

இல்லம்தேடி கல்வி இணையதளம்