அஜ்மீர் பயணம்-3

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இந்தியாவின் சூஃபி மரபின் மையப்பெரும் ஆளுமைகளில் ஒருவர். இசையில் அல்லது இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் அப்பெயரை அவ்வப்போது கேட்டிருக்கலாம். இந்திய சூஃபி, கஸல் இசைமரபுகளின் ஊற்றுமுகம் அவரே. கவிஞர், பாடகர், மெய்ஞானி என்னும் முகங்கள் கொண்டவர்.

முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி [Muhammad Mu’in ud-din Chishti] என்னும் இயற்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கைக்காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. (1141-1230). இந்தியாவில் இஸ்லாம் நுழைந்த காலகட்டம். கரீப் நவாஸ், ஏழைகளின் காவலன் என்று அவருக்கு பட்டப்பெயர் உண்டு. அவருடைய மாணவர்களில் முதன்மையானவர் பக்தியார் காகி. அவரிடமிருந்து பாபா ஃபரீத், நிஜாமுதீன் அவுலியா என ஒரு நீண்ட குரு-சீட வரிசை உண்டு. இந்தியாவெங்கும் ஏராளமான சூஃபி ஞானிகள் அஜ்மீரி என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மொய்னுதீன் ஷிஷ்டி அவர்களின் மரபைச் சார்ந்தவர்கள் என்பது நம்பிக்கை.

மொய்னுதீன் சிஷ்டி அவர்கள் ஆப்கானிஸ்தானின் சிஷ்டான் என்னும் ஊரில் பிறந்தவர். அவர் முகமது நபியின் குருதிவழியில் வந்தவர், ஆகவே சையத் என்னும் குடிப்பெயர் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் பாரசீகத்தில் [இன்றைய ஈரானில்] வளர்ந்தவர்.  பாரசீகமே சூஃபி பண்பாட்டின் விளைநிலம்.

இளமையில் குடும்பவழியாகப் பெற்ற தன் திராட்சைத் தோட்டத்தில் கொடிகளுக்கு நீரூற்றிக்கொண்டிருந்தபோது புகழ்பெற்ற சூஃபி ஞானியான ஷேக் இப்ராகீம் க்யிண்டுஸி [Shaikh Ibrahim Qunduzi] அவர்கள் அவரைச் சந்தித்து சூஃபி மெய்ஞானத்தை அளித்தார். கதைகளின்படி மொய்னுதீன் அவர்கள் ஷேக் இப்ராகீம் அவர்களுக்கு திராட்சைகளை பரிசாக அளித்தார். அவர் பதிலுக்கு ஒரு துண்டு ரொட்டியை அளித்தார். ஓதி அளிக்கப்பட்ட அந்த ரொட்டி மொய்னுதீன் அவர்களை இவ்வுலகிலிருந்து இன்னொரு உலகுக்கு கொண்டுசென்றது. சூஃபி மெய்ஞானத்தின் திறப்பை அடைந்த அவர் தன் உடைமைகளைத் துறந்து மெய்ஞானக்கல்விக்காக புகாரா நகரத்திற்குப் பயணமானார்.

மொய்னுதீன் அவர்கள் புகாரா, சமர்கண்ட் போன்ற நகர்களில் இஸ்லாமிய கல்வி அளிக்கும் பல்வேறு அமைப்புகளில் கற்றிருக்கிறார். இறுதியாக சிஷ்டி மரபைச் சேர்ந்த மெய்ஞானியான உதுமான் ஹாருனி [Uthman Haruni] அவர்களின் மாணவரானார். அவருடன் மெக்காவுக்கும் மதினாவுக்கும் சென்றார். பின்னர் நபிகள் நாயகம் அவர் கனவில் வந்து அளித்த ஆணையை ஏற்று இந்தியாவுக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இந்தியாவுக்கு சிஷ்டி மரபை அறிமுகம் செய்தவர். சூஃபி மரபில் தாரிகா [tariqa] என்னும் சிந்தனைப்போக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று சிஷ்டி மரபு. ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகர் அருகே உள்ள சிஷ்ட் என்னும் சிற்றூரில் தோன்றிய சிந்தனை மரபு என்பதனால் இப்பெயர். பொதுயுகம் 930 வாக்கில் இது உருவானது. உருவாக்கியவர் அபு இஷாக் ஷாமி [Abu Ishaq Shami]. என்னும் ஞானி. சிஷ்டி, குவாத்ரி, சுஹ்ரவர்தி, நாக்ஸ்பந்தி என்னும் நான்கு மரபுகள் சூஃபி மெய்ஞானத்திற்குள் உள்ளன. (Chishti, Qadiri, Suhrawardi, Naqshbandi) குவாஜா மொய்னுதீன் ஷிஷ்டி அபு இஷாக் ஷாமியின் மாணவர் வரிசையில் ஏழாவது தலைமுறையினர்.

மொய்னுதீன் சிஷ்டி இந்தியா வந்தது சுல்தான் இல்டுமிஷ் காலத்தில். அவர் லாகூரில் சிலகாலம் இருந்தார். அங்கிருந்து டெல்லிக்கும் இறுதியாக அஜ்மீருக்கும் வந்தார். அஜ்மீரிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அஜ்மீரில் அவர் இரண்டு பெண்களை மணமுடித்தார்.  மூத்த மனைவி சையத் வாஜுதீன் என்னும் தளபதியின் மகள். இரண்டாம் மனைவி உள்ளூர் இந்து அரசர் ஒருவரின் மகள். அவருக்கு அபுய் சையத், ஃபகிர் அலாதீன், ஹூசெய்ம் அலாதீன் என்னும் மூன்று மகள்களும் பீபி ஜமால் என்னும் மகளும் பிறந்தனர்.

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் இறையியல் பங்களிப்பு என்று மூன்று விஷயங்களைச் சொல்லலாம்.

அ. அகநோன்பு. ஒருவர் தன்னுடைய மெய்யறிதலை, விடுதலையை தனக்குள் ஆழ்ந்து சென்று தன் அனுபவமாக இறையை அறிந்து அருகணைவதன் வழியாக அடையலாம். இந்த ’அகவயமான ஆன்மிகப்பயணம்’ இஸ்லாம் முன்வைக்கும் கூட்டான, அமைப்பு சார்ந்த ஆன்மிகப் பயிற்சிகளுக்கு மாறானது. ஆனால் இது சூஃபி மரபின் மையக்கருத்தும்கூட. இந்து மரபில் ஆத்மானுபூதி என்று சொல்வதற்கு மிக அணுக்கமானது இது.

ஒருவர் உலகியலை துறந்து துறந்து செல்வது சூஃபி ஞானத்தின் வழிகாட்டல்களில் முக்கியமானது. அதனூடாக அவர் தன்னை எளிமைப்படுத்திக்கொண்டே செல்கிறார். எளிமை என்பது சூஃபி மரபில் மிக அடிப்படையான கலைச்சொல். அது ஓர் ஆன்மா தன்னை தூய்மையாக்கிக் கொண்டே செல்வது. ஒரு நிலையில் ஆன்மா தன்னை முழுமையாக தூய்மையாக்கிக் கொள்கிறது. விளைவாக இறைவனுக்கும் அந்த ஆன்மாவுக்குமான இடைவெளி அகல்கிறது. அந்த ஆன்மா தன் இன்மையை உணர்கிறது. இங்குள்ள எல்லாம் இறை மட்டுமே என அறிகிறது. அதையே ’அனல் ஹக்’ என்னும் சொல்லாட்சி குறிப்பிடுகிறது. “நான் இறையே” என்று அதற்குப்பொருள்.

இந்த மெய்நிலையை குரானிலுள்ள ரப்பானிய்யா [rabbaniya] என்ற சொல்லாட்சியால் குறிப்பிடுகிறார்கள். ஹதீதுகளில் இஷான்  அல்லது  சுலுக் [ihsan, suluk] என்று சொல்லப்படும் நிலை இது. சிஷ்டி மரபில் தாரிகாத் [tariqat] என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. சூஃபி வரலாற்று நூல்களில் தாரிகாத் என்னும் சொல்லை சூஃபி மரபு ஷரியத் என்னும் சொல்லுக்கு நிகராகவே பயன்படுத்துகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஷரியத் என்பது ஓர் இஸ்லாமியன் கடைக்கொள்ளவேண்டிய அன்றாடக் கடமைகள், மற்றும் வாழ்நாள் நெறிகளை வலியுறுத்துவது. தார்காத் என்பது அவன் தன்னகத்தே கொள்ளவேண்டிய ஆன்மிகச் சுத்திகரிப்பை முன்வைப்பது

இதனடிப்படையில் சூஃபி மரபு இரண்டு நடைமுறைகளை முன்வைக்கிறது. ஒன்று மக்கள் பணி, ஏழைகளுக்கான சேவை. இதை பேதமில்லாமல் அனைத்து மானுடருக்கும் ஆற்றவேண்டும். இது மானுடசேவை அதாவது கிதாமத்-இ-கலக் [Khidmat-e-Khalq] எனப்படுகிறது.  இரண்டாவது ஒரு ஆன்மசாதகன் தன்னுள் பெருகும் உலகியல் வேட்கை, உடைமைவெறி, ஆணவம், சினம் ஆகிய அழுக்குகளுக்கு எதிராக சலிக்காமல் போராடி ஆன்மாவை தூய்மை செய்துகொண்டே இருத்தல். இதை ஆன்மப்போர் அதாவது ஜிகாத்-பில்-நஃபிஸ் [jihad bil-Nafs] என்கிறது. சூஃபி மரபு சொல்லும் புனிதப்போர் என்பது இதுதான்.

ஆ. இசையும் கலையும். ஆன்மசுத்திகரணம் என்பதை முன்னிலைப் படுத்துவதனால் சூஃபி மரபு, குறிப்பாக சிஷ்டி மரபு இசையையும் கலையையும் மெய்மைக்கான வழியாகக் காண்கிறது. இசை போகத்துடன் தொடர்புடையது என்பதனால் ஆசாரவாத இஸ்லாம் அதை பாவம் என விலக்கியது. ஆனால் மொய்னுதீன் சிஷ்டி இசை ஆன்மிக அனுபவமாக அமையும் என்றால், சினம் ஆணவம் போன்ற அகமலங்களை அழிக்கும்படியாக இசைக்கப்படும் என்றால், அது ஆன்மிக மீட்புக்கான கருவியே என்று சொன்னார்.  அவருடைய இந்த வழிகாட்டல்தான் இந்தியாவில் இஸ்லாமிய இசைப்பெருமரபு ஒன்று உருவாகி நிலைகொள்ள வழிவகுத்தது.

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களே பெருங்கவிஞர். அவர் இயற்றிய இசைப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவரே பாடகரும்கூட. கஸல் இசைவடிவத்தின் தொடக்கப்புள்ளியான அமிர் குஸ்ரு போன்ற பெருங்கவிஞர்கள் அவருடைய மரபில் வந்தவர்கள். பிற்காலத்தில் மிர்ஸா காலிப் வரையிலான இஸ்லாமியப் பெருங்கவிஞர்களின் முதலாசிரியர் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களே.

இ. ஒத்திசைவு இஸ்லாம் எல்லா ஒருங்கிணைவுள்ள மதங்களையும்போல தன் தரிசனத்தை முன்வைத்து பிறவற்றை மறுக்கும் நோக்கு கொண்டது. அதற்குள் சூஃபி மரபு, குறிப்பாக சிஷ்டி மரபு இரண்டு அடிப்படைக் கருத்துக்களை முன்வைக்கிறது. ஒருவடோருவர் புரிந்து இசைந்து அமைதல் அதாவது சுல்ஹ்-இ-குல் [Sulh-e-Kul] முதன்மையானது. மாற்று மதங்கள் மற்றும் சிந்தனைகளை சிறுமைசெய்யாமல், ஒடுக்காமல் அவற்றுடன் உரையாடலை நிகழ்த்துவதும் அவற்றின் இருப்பை ஏற்றுக்கொள்வதும். இரண்டாவது, மாற்றுத்தரப்புகளுடன் அடிப்படை ஞானங்களை பரிமாறிக் கொள்வது அதாவது முஷ்டாரகா அக்தர் [Mushtaraka Aqdar]

சிஷ்டி மரபு மிக எளிதாக சாமானிய மக்களிடம் பரவுவதற்கும் அன்றைய சாதியமைப்பின் இறுக்கத்தால் அடிமைப்பட்டிருந்த பல்லாயிரம்பேரை இஸ்லாமுக்குள் கொண்டு செல்வதற்கும் காரணமாக அமைந்தவை இவ்விரு கொள்கைகளும்தான். சிஷ்டி மரபுடன் இந்துக்களுக்கும் ஆழ்ந்த ஆன்மிக உறவு இருந்தது. இந்து அரசர்களும் செல்வந்தர்களும் அதை புரந்தனர். எளிய இந்துக்கள் அதை நோக்கி எப்போதும் ஈர்க்கப்பட்டனர். இன்றும் அவர்கள் வந்துகொண்டிருப்பது அதனாலேயே. குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இன்று அனைவராலும் வணங்கப்படும் மெய்ஞானியாக கருதப்படுவதன் அடிப்படையும் இதுவே.

குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் பல நூல்கள் இன்று கிடைக்கின்றன. அவற்றில் சூஃபி வாழ்க்கை நெறிகளை விளக்கும் அனிஸ் அல் அர்வா போன்ற நூல்களும், சூஃபி மெய்ஞானத்தை விளக்கும் ஹதிஸ் உல் மரிஃப் போன்ற நூல்களும் உள்ளன. அவருடைய பாடல்களே கஸல்-கவாலி வடிவில் அனைவரிடமும் பெரும்புகழுடன் உள்ளன. அவர் தனக்குப்பின் தன் முதன்மை மாணாக்கராகவும் தன் கொள்கைகளின் பரப்புநராகவும் குத்புதீன் பக்தியார் காகி அவர்களை தெரிவு செய்தார். அந்த மரபு பல தலைமுறைக்காலம் நீண்டது.

அஜ்மீரில் சிஷ்டி அவர்கள் சமாதியான இடத்தில் தசுல்தான் இல்டுமிஷ் ஒரு தர்காவை அமைத்தார். 1332ல் அன்றைய டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக், மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடத்திற்கு வந்தார். அதன்பின் முகலாயச் சக்கரவர்த்தி அக்பர், மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் தர்காவை விரிவாக்கம் செய்தார். தர்காவின் மையக் கும்மட்டமும் சுற்றுமதிகளும் சுல்தான் இல்டுமிஷ் கட்டியவை.

மாளவத்தை ஆட்சி செய்த கியாஸுதீன் கில்ஜி இரண்டு மாபெரும் நுழைவாயில்களை கட்டினார். மூன்றாவது பெருவாயில் ஹைதராபாத் நைஜாமால் 1912ல் கட்டப்பட்டது. உள்ளே இருக்கும் அக்பரி மசூதி முகலாயச் சக்கரவர்த்தி அக்பரால் கட்டப்பட்டது. மையக்கும்மட்டத்தின் பொன்வேய்ந்த மையமலர் பரோடாவின் மன்னர் மன்னரால் அளிக்கப்பட்டது. ராஜபுதன இந்து மன்னர்களும் பஞ்சாபின் சீக்கிய மன்னர்களும் தர்காவுக்கு கொடையளித்து திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.

முதலில் தெரியும் தர்காவின் மூன்றாம் வாயில் முகப்பு இன்றைய நவீன முறைப்படி கட்டப்பட்டிருப்பது ஒரு குறை என்றே தோன்றியது. செருப்புகளை அங்கே விட்டுவிட்டு உள்ளே சென்றோம். நுழைவாயிலின் கதவின்மேல் செம்புத்தகடுகளில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றை தொட்டு கண்ணிலொற்றிக்கொண்டும் தலைசாய்த்து வணங்கிக்கொண்டும் உள்ளே சென்றுகொண்டிருந்தனர்.

உள்வட்டத்திற்குள் உள்வட்டம் என பெருவாயில்கள். உள்ளே ஒரு நகரமே இருப்பது போலிருந்தது. விளக்கொளிகள், சரிகைப் பளபளப்புகள், குழந்தைகளும் பெண்களும் எழுப்பும் ஒலிகள் உள்ளே ஏராளமான கடைகள். வழிபாட்டுக்குரிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டும்தான். இங்கே மலர்த்தட்டமும் சால்வையும்தான் ஹஸ்ரத் அவர்களுக்கு வழிபாடாக அளிக்கப்படுபவை. வேறுமலர்கள் பயன்படுத்தப்படுமா என்று தெரியவில்லை. சிவந்த ரோஜாக்கள் மட்டுமே கண்ணுக்குப் பட்டன.

எங்களை அழைத்துச் செல்ல தர்காவை நன்கு அறிந்தவரும் சிஷ்டி மரபை கற்றவருமான  பிரேமாராம் பண்டிட் என்னும் அந்தணரை செங்கதிர் ஏற்பாடு செய்திருந்தார். உடன் காவலர்களும் வந்தனர். பிரேமாராம் தர்காவின் வரலாற்றையும் அங்குள்ள கட்டிடங்களையும் விளக்கினார். அக்பர் கட்டிய மசூதி பெரிய செந்நிறத் தூண்களுடன் வரலாற்றுத் தொன்மையுடன் நின்றிருந்தது. தர்காவுக்குள் சிஷ்டி அவர்களின் மகள் பீபி ஜமால் உட்பட அவருடைய மாணவர்கள், மைந்தர்கள் ஆகியோரின் சமாதிகளும் உள்ளன. அங்கும் வழிபாடு நிகழ்ந்து கொண்டிருந்தது.

தர்காவின் வழிபாடுகளை நிகழ்த்தும் பொறுப்பு காதிம்கள் என்னும் உள்வட்டத்தினருக்குரியது. அவர்கள் சிஷ்டி அவர்களின் கொடிவழி வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. எங்களை அத்தகைய ஒரு காதிம் அவர்களிடம் அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு காதிம் குடிக்கும் அவர்களுக்கான தனி இடங்கள் அங்குள்ளன. பெரிய பெட்டிகளால் தடுக்கப்பட்ட அறை போன்ற இடங்கள். அங்கே திண்டு தலையணை போட்ட மெத்தைமேல் அமர்ந்தோம்.

காதிமின் பெயர் அன்னு மியான் என்னும் ஹாஜி பீர் சையது அன்வர் சிஷ்டி நியாஸி. அவர் ஹாஜி பீர் சையது குலாம் முகம்மது நியாசி என்னும் பியாரி மியானின் மகன். பெரியவர்தான அங்கே பொறுப்பு. ஆனால் அங்கே அப்போது இருந்தவர் அன்னு மியானின் மைந்தர். இளவரசர்களுக்குரிய தோற்றம். சரிகைக்குல்லாய். மென்மையான குரலில் அணுக்கமாகப் பேசினார். பிரேமா ராம் பண்டிட் அவருக்கு நெருக்கமானவர் என நினைக்கிறேன்.

நாங்கள் என்னென்ன வழிபாடுகள் செய்ய விரும்புகிறோம் என்று கேட்டார். நான் வழக்கமான வழிபாடுகளைச் செய்ய விரும்பினேன். ஆகவே ஒரு சால்வையும் மலர்த்தட்டமும் வாங்கிக் கொண்டோம். சால்வைக்கு சட்டர் என்று பெயர். அவற்றை பெரிய மூங்கில்கூடையில் வைத்து தருவார்கள். அவற்றை ஏந்தியபடி தர்காவுக்குச் சென்றோம்.

அவ்வேளையில் நல்ல நெரிசல் இருந்தது. காதிம் எங்களை வழிகாட்டி உள்ளே அழைத்துச்சென்றார். அவர் இருந்தமையால் எளிதாக உள்ளே நுழைய முடிந்தது. சிறிய சலவைக்கல் வாசல் வழியாக தர்காவுக்குள் நுழைந்தோம். குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடம் சலவைக்கல்லால் ஆனது. அதைச்சுற்றி சலவைக்கல் வேலி. காதிம்கள் மட்டுமே உள்ளே செல்லமுடியும். வேலிக்கு வெளியே நின்று வணங்கினோம்.

தர்காக்களில் எவரும் செல்லலாம். ஆண் பெண் சாதி சமய வேறுபாடில்லை. உடை சார்ந்த கட்டுப்ப்பாடுகளும் இல்லை. ஆனால் பெண்களும் ஆண்களும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். பெருந்திரளான மக்கள் அங்கே நிறைந்திருந்தனர். சுற்றிலுமிருந்த சலவைக்கல் முற்றம் முழுக்க செறிந்து அமர்ந்து வேண்டுதலிலும் தொழுகையிலும் ஈடுபட்டிருந்தனர். பலர் அழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். உணர்ச்சிக் கொந்தளிப்பான முகங்கள். இசையும் வாழ்த்தொலிகளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அஜ்மீர் தர்கா இரவும் பகலும் இருபத்துநான்கு மணிநேரமும் இதே மக்கள் கொந்தளிப்புடன், இதே ஓசைப்பெருக்குடன் இருந்து கொண்டிருக்கிறது.

காதிம் எங்கள் மலர்களை வாங்கி மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடம் மேல் வீசினார். அவற்றில் ஒரு கைப்பிடி அள்ளி எங்களுக்கும் அளித்து வீசும்படிச் சொன்னார். ஒரு மலரிதழை ஞானியின் கொடையாக மென்று உண்ணும்படி கூறினார். அந்தச் சால்வையால் எங்கள் தலைகளை மூடி அரபு மந்திரங்களைச் சொல்லி வேண்டிக்கொண்டார். நம் வேண்டுதல்களை, வணக்கங்களைச் சொல்லலாம்.

அதன்பின் சுற்றிவந்து தலைமாட்டில் இருந்த சிறிய இடைவெளியில் அமர்ந்து  தியானம் செய்யலாம். அங்கே சில பெண்கள் அமர்ந்திருந்தனர். நான் ஒரு நிமிடம் அமர்ந்து கண்மூடிக்கொண்டேன். அதன் பின் எழுந்து சுற்றிவந்து உள்ளே நுழைந்து குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடத்தின் கால்பகுதியில் சலவைக்கல்லில் என் தலையை மும்முறை வைத்து வணங்கினேன்.

அமீர் குஸ்ரு தலைவைத்த சலவைக்கல்லாக இருக்கலாம். மிர்ஸா காலிப் தலைவைத்திருக்கலாம். சிவராம காரந்த் வணங்கிய இடம். வைக்கம் முகம்மது பஷீர் அஜ்மீரிலேயே வாழ்ந்திருக்கிறார். நித்ய சைதன்ய யதி அங்கே தலைவைத்து வணங்கியிருக்கிறார். இன்னும் பல தலைமுறைகளுக்கு எவரெவரோ வருவார்கள். அக்பர் முதல் சோனியாகாந்தி வரையிலான ஆட்சியாளர்கள். அறிஞர்கள், செல்வந்தர்கள். பேரரசுகள் வெறும் பெயராக மறைந்தன. நாடுகள் உருமாறின. ஞானியென மெய்யறிந்து, கவிஞன் என சொல்லெடுத்தவரின் அரசாங்கம் மட்டும் ஒருகணம்கூட குடிகளின் வணக்கம் ஒழியாமல் பொலிந்துகொண்டிருக்கிறது.

வழிபாடு முடிந்து திரும்பி வந்தோம். காதிமின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். தேநீர் வரவழைத்துத் தந்தார். ஷாகுல்தான் பேசிக்கொண்டிருந்தார். நான் மொழியறியாத நிம்மதியில் இருந்தேன். வெளியே வண்ணக்கொப்பளிப்பாக ஒழுகிச்சென்று கொண்டிருந்த மக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் தலைக்குமேல் ஒரு வெண்ணிற மணிமுடிபோல ஒளிவிட்டுக்கொண்டிருந்த மினாரத்தை.

நான் என்ன வேண்டிக்கொண்டேன்? ஒன்றுமே வேண்டிக்கொள்ளவில்லை. எதை எண்ணினேன்? ஒன்றுமே எண்ணவில்லை. எண்ணங்கள் இல்லாத ஓர் அமைதி. எல்லா பறவைகளும் சேக்கேறிவிட்டபின் மரம் கொள்ளும் நிறைவு.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸ்- வாழ்த்துக்கள்