என் விழிகள்
எதைப் பார்த்தாலும்
அது நீயே – என்பதை
நான் காண்கிறேன்
அனைத்திலும்
உனைக்காண்பதையே
நான் விழைகிறேன் என
நான் காண்கிறேன்.
உனைக் காணவே இவ்விழிகள்
உன்முகம் என்னிடம் வாராதென்றால் –
ஏதுமில்லை எனக்கென
நான் காண்கிறேன்
கண்டேன் மதுகொணர்பவனின் அழகு
எங்கும் ஒளிர்வதை
கோப்பையில் மதுவில் எங்கெங்கும்
நான் காண்கிறேன்
விழிகளின் புரிதலுக்கு அப்பால் உள்ள
உனது வெளிப்பாட்டை
இதயம் கண்டுகொள்வதை
நான் காண்கிறேன்!
உனக்காகத் திறக்கும் இதயத்தின்
ஆயிரம் கதவுகளில்
எல்லா வாயிலிலும் நீ எனக்காகக் காத்திருப்பதை
நான் காண்கிறேன்.
முதலில் உனைக் காண்பதற்கே
வாழ வேண்டுமென நினைத்தேன்
இன்று உனைக் காண்பதற்கே மரணம் என்று
நான் காண்கிறேன்!
உனக்கான மொய்னின் இன்றைய ஏக்கத்தில்
இறுதி நாளுக்கான பொறுமை இல்லை –
உனைச் சேர என
நான் காண்கிறேன்!
‘நானே மெய்’ என
நான் சுயவிருப்பத்தில் சொல்லவில்லை
எவ்விதம் சொல்லாமல் இருப்பது அன்பே,
நீ அதை சொல்லுமாறு ஆணையிடும்போது?
முன்னர் நீ சொன்ன யாதொரு ரகசியத்தையும்
வெளியே சொல்லாதே என்றாய்!
இப்போது ஏன் என்றறியேன்
அனைத்தையும் சொல்லுமாறு ஆணையிடுகிறாய்!
தெய்வீக ரகசியங்கள்
கனிந்தவர்களுக்கும் சொல்ல முடியாதவை
சந்தை வெளியில் வெளியிடுமாறு
நீ..என் அன்பே ஆணையிடுகிறாய்!
மன்சூரின் செய்திகளை
இனி மறைக்க என்னால் இயலாது
தூக்குக்கயிற்றின் சுருக்கைக் காட்டி
அவன் ஆணையிடும்போது!
நான் கேட்டேன்.. என்னிடம் ரகசியம் உள்ளது
சொல்லும்படி யாரும் இல்லை?
விடை: சொல்க கதவுகளிடமும் சுவர்களிடமும்
என்று ஆணையிடுகிறாய்!
தெய்வீக அன்பின் தீ அணைந்தது
எனது ஆன்மாவின் மரத்தில் இருந்து
மோசஸிடம் கூறப்பட்ட ரகசியங்கள் என்னிடம் கூறப்பட்டன
நான் சொல்லுமாறு ஆணையிடுகிறாய்.
குழலிசைப்பவன் என
என்னில் உன் மூச்சை நிறைக்கிறாய்
இதை யாரிடமும் சொல்லமாட்டேன்
நீயோ சொல்லுமாறு ஆணையிடுகிறாய்!
காலைக் காற்றே, மொய்னின் செய்தி
யாதென்று யாரேனும் கேட்டால்
உனக்கும் கடவுளுக்கும் இடைவெளி என்பது தொலைந்து போனது
என்று சொல்லுமாறு ஆணையிடுகிறாய்!
வழியைத் திற, இதயம் மேலான வெளிகளுக்கு
பறந்தெழத் துடிக்கிறது
திரையை விலக்கு, ஆன்மா தன்னை
வெளிப்படுத்த விழைகிறது!
நித்தியத்தின் மாளிகையில் இருந்து
இதயம் இறங்கி வந்தது
அங்கே மீண்டு பறந்தெழ
இதயம் துடிக்கிறது.
இந்த இதயம் சூனியத்தில் இருந்து
முடிவின்மைக்கு பயணித்தது..
இச்சிறு பறவை அங்கா*வுடன்
இணைய சிறகுவிரிக்கிறது!
நானாக செல்லாவிட்டால்
அவன் என்னை இழுத்துக்கொள்வான்
அவனுக்கும் எனக்குமான உறவு
அவ்விதம் இருக்கிறது!
சில முறை எனை இழுக்கிறான்,
சில முறை விரட்டுகிறான்
ஆ.. காதலன் காதலியிடம் சரசமாடும் விதம்
அவ்விதம் இருக்கிறது!
நூறு திரைகளுக்கு அப்பால் தெரிகிறது அம்முகம்..
அது மகிழ்ச்சியின் நாளாக இருக்கும்
திரையின்றி முகம்
காணும் நாள் வருகிறது!
அவன் இடங்களுக்கு அப்பாற்பட்டவன்
கடவுள் ஆணையாக
என் இதயத்தில் அவனுக்கு இரவும் பகலும்
இடம் இருக்கிறது!
முடிவில் காதலனின் முகத்தை
காண முடியும்
இதயத்தின் ஆடி
துருவின்றி இருக்கிறது!
ஓ மொய்ன்.. நிலவின் அழகு
கதிரென சுடர்கிறது
கண்கள் இருப்பவனால்
காண முடிகிறது.
தமிழாக்கம் சுபஸ்ரீ