குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3

நீயே என் காதலன்
வேறொருவரையும்
நான் வேண்டேன்…

என் இதயத்தை வென்ற உன்னையன்றி
இன்னொருவரை
நான் வேண்டேன்!

பிரிவின் முள் என் இதயத்தை புண்ணாக்கியது
அந்த இடத்தில் வேறொரு மலரையோ ரோஜாவையோ
நான் வேண்டேன்!

உன் தரிசனத்துக்காக ஈருலகின் செல்வங்களையும் கொடுப்பேன்
நான் உனைக் காண ஏங்குகிறேன்
ஈருலகின் செல்வங்களை
நான் வேண்டேன்!

வெளியில் இருக்கும் மற்றவருக்கு
நீயும் நானும் கொண்ட நேசத்தை ஏனுரைக்க வேண்டும்?
நீயும் நானும் அறிவோம், பிறர் அறிய
நான் வேண்டேன்!

எனது ஆன்மாவின் மிக ரகசியமான இடத்தில்
வேறெவருக்கும் இடமில்லை:
ஆன்மாவின் சரணாலயத்தில் உனையன்றி ஒருவரை
நான் வேண்டேன்!

உனது கரங்கள் எனது ரத்தத்தை பருகச் செய்தன
நான் அடைந்த காதலின் வலியை
உன் மென்மையான இதயம் அறிய
நான் வேண்டேன்!

நீ தராத மதுவை அருந்துவதில்லை நான்
எனக்கு நிரந்தரமான போதை வேண்டும்
வேறொரு மதுநிரப்புவனை
நான் வேண்டேன்!

காதலை விழைகையில்
வேறெதுவும் ஈர்ப்பதில்லை
தோட்டங்களும், நீரோடைகளும், சொர்கத்தின் இன்பங்களும்
நான் வேண்டேன்!

அறியாதவர்கள் இவ்வுலகை விழைகிறார்கள்
அறிந்தவர்கள் சொர்க்கத்தை
கலங்கிய காதலியோ உனையன்றி வேறொன்றும்
நான் வேண்டேன்!

உனது சுயநினைவென்னும் மணிமுடியைத்
துறந்துவிடு மொய்ன்
அவ்விதம் தலையில் அமரும் ஒன்றை
நான் வேண்டேன்!

எனது வாழ்வு முடிந்தது
நித்திய வாழ்வே எஞ்சி இருக்கிறது
பிரிவின் வலியை
உனது சங்கமத்தின் சாத்தியத்தை எண்ணி கடக்கிறேன்

எனது நண்பனாக
உனை மட்டுமே விழைந்தேன்
நீ என் இதயத்தை கவர்ந்து கொண்டாய்
வேறெந்த அன்பையும் விழையவில்லை நான்

எனது வாழ்வெனும் மாளிகையில்
உனைத்தவிர யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை
அந்த அந்தரங்க இடத்தில்
நீயன்றி யாருக்கும் இடமில்லை

அறியாதவர்கள் இவ்வுலகை விழைகிறார்கள்
அறிந்தவர்கள் மறுவுலகை
நான் காதலில் இதயத்தை தொலைத்தவள்
உன்னையே வேண்டுகிறேன்

என்னை வாழ்த்தியபடி
வீதியில் நீ ஓரடி முன்வைத்தால்
நேசத்தில் நான் நூறடிகள்
முன்வைத்து வருவேன்

காதலின் கடலில்
நான் நிற்கிறேனா, நகர்கிறேனா
அலைப்புறுகிறேனா என்றறியேன்
என் மனம் செயலில் இல்லை

மொய்ன், காதலின் நெருப்பில்
உன் இருப்பை எரித்துவிடு
நீ எரிந்துதீராவிடில்
புகையில் குழம்பிப் போவாய்

 

ஓ நெஞ்சே, அவனது அன்புக்குரிய நீ
விதி விடுக்கும் அம்புகளுக்கு
இலக்காகிறாய் நீ

காதலின் உலை
ஏக்கத்தின் பெருநெருப்பை ஏற்றுமென்றால்
தூய தீப்பொறியென வெளித்தெறிப்பாய் நீ

எனது உடல் ஒரு வட்டம்.. அதன் மையத்தில் ஆன்மா ..
அல்லது இதயம் ஒரு வட்டம்..
அதன் மையத்தில் நீ

நான் கேட்டேன் .. உனைத் திரைமறைவில் நிறுத்துவது எது?
நீ சொன்னாய் – உனது இருப்பே எனது திரை
மறைந்திருப்பது நீ

ஒரு மனித வடிவம் அங்கா-வின்* காதலை தாங்குமா?
உணவுக்கும் நீருக்குமாய்
கூண்டுக்குள் சிக்கிய பறவையாக நீ?

ஒரு வட்டம் போல வாயிலில் காத்திருக்கிறாய்
நீ தேடுபவன் உன் இல்லத்தில்
இருப்பதை அறியாதவன் நீ

மொய்ன் அவைக்கு வந்து காதலின் மொழியைப் பேசு
இன்று காதலின் மலர்படுக்கையில்
கூவும் இசைப்பறவை நீ

* அங்கா – கடந்த நிலையையும், கடவுளையும் குறிக்கும் ஒரு பறவை

இறையே..
ஆன்மாவின் ஆடியில்
தெரிவது யார்?

உள்ளுறையும் திரைச்சீலையில்
தீட்டப்பட்ட
அழகிய ஓவியம் யார்?

படைப்பின் ஒவ்வொரு அணுவும்
முழுமையில் இருக்கிறது
அனைத்திலும் நிறைந்திருப்பவன் யார்?

ஒவ்வொரு தூசித்துகளிலும்
கதிரென
ஒளிர்வது யார்?

இந்த வெளிஉருவில் எலும்பென நாம்
அதன் மஜ்ஜையில்
சாரமென யார்?

சில நேரங்களில் ஆன்மாவில் அமைதியின் புதிய பாடல்
அது திறக்கும் திரைகளுக்கு அப்பால்
தொடப்படுவது யார்?

ஒன்று மற்றொன்றாகி அனைத்தையும் நேசிக்கிறது
நேசிக்கப்படும் அனைவரின் பெயராலும்
நேசிப்பது யார்?

மொய்ன், நீயும் நானும் எவ்வளவு முறை ஈர்க்கப்படுகிறோம்?
உனது நோக்கத்தையும் எனது நோக்கத்தையும்
ஒன்றாக்கியது யார்?

***

தமிழாக்கம் சுபஸ்ரீ

முந்தைய கட்டுரைகுவாஜா ஜி மகாராஜா!
அடுத்த கட்டுரைஅஜ்மீர் பயணம்-3