அஜ்மீர் பயணம்-2

அஜ்மீர் பயணம்-1

அக்டோபர் 11 அன்று காலை சில வேலைகள் இருந்தன. வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. காலையில் இருந்தே மழை. நான் வங்கி வாசலில் நின்றிருந்தபோது நீர்க்கூரை உடைத்துக் கொட்ட ஆரம்பித்தது. எங்கும் ஆட்டோ கிடைக்கவில்லை. ஆகவே மழையை பார்த்தபடி நின்றிருந்தேன். மழைத்தாரைகள் கரிய தார்ச்சாலையில் அறைந்து பல்லாயிரம் பூக்களாக விரிந்து மறைந்து கொண்டிருந்தன. மழை மழை மழை என உள்ளம் நிகழ்ந்தது.

ஆட்டோ கிடைத்து வீட்டுக்கு வந்து பதினொரு மணிக்குத்தான் பெட்டியில் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். மடிக்கணினி எடுத்துச் செல்லவில்லை. மின்னஞ்சல்கள் தவிர இணையம் தேவையில்லை என்பது முடிவு. குளித்துவிட்டு அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தேன். ஷாகுல் ஹமீது  நண்பர் சுப்ரமணியம் [சூப்பர் சுப்ரமணி என்னும் பெயரால் நண்பர்களுடன் அன்போடு அழைக்கப்படுபவர். சாகச வாழ்க்கை கொண்டவர்] காரில் வந்தார். மழைச்சாரல் வீசியறைந்து கொண்டிருந்தது.

ஷாகுல் ஹமீது [கப்பல்காரன்]

நாகர்கோயில் ரயில் நிலையம் நனைந்திருந்தது. ரயில்நிலையங்களில் ஒரு பக்கமிருந்து காற்று வேகமாக பெய்துகொண்டிருக்கும். ரயில்நிலையம் ஒரு சுவர்போல காற்றை மறைப்பதனால் வீசும் பெருக்கு சுழலாகி வளைவதன் விளைவு அது. காற்றில் ஈரத்துளிகள். ரயில்நிலையம் ஓர் ஊர்தி போல எங்கோ விரைந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.

திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் கூட்டமே இல்லை. எங்களைத் தவிர ஒரு பெரிய குடும்பம். ஏராளமான பெண்குழந்தைகள். அவர்கள் ஏதோ கருவியை வைத்துக்கொண்டு சேர்ந்து பாடி பதிவுசெய்துகொண்டே வந்தனர். உற்சாகமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். நீண்ட இடைவேளைக்குப்பின்  பயணம் செய்பவர்களாக இருக்கும்.

திருவனந்தபுரத்தை மதியம் இரண்டு மணிக்குச் சென்றடைந்தோம். மூன்றரை மணிக்கு அகமதாபாத் ரயில். [16334 Veraval Express] திருவனந்தபுரம் மழையில் பளபளத்துக்கொண்டிருந்தது. மழைப்பொழுதுக்குரிய தளர்வான உடலசைவுகளுடன் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். ரயில் ஏற்கனவே நின்றிருந்தது. எங்கள் இடத்தில் அமர்ந்தபோது உடன் எவருமே இல்லை.

வீட்டில் இருந்து கிளம்பியதுமே அஜ்மீர் பயணத்துக்கான உளநிலையை அடைந்துவிட்டேன். ரயில் கேரள நிலத்தின் வழியாக ஓடிக்கொண்டிருக்கையில் முழுமையான நிறையுணர்வுநிலை கூடிவிட்டது. உரையாடல்கள், வேடிக்கை பார்த்தல்கள் எல்லாம் அதன்மேல்தான் நிகழ்ந்துகொண்டிருந்தன.

மழைக்கால கேரளம் பார்க்க மிக அழகானது. கண் நிறைக்கும் பசுமையும் கலங்கிய நீரின் பொன்னிறமும் கலந்த காட்சிவெளி. ஆறுகள் எல்லாம் நிறைந்தொழுகின. நிறைந்தோடும் ஆற்றின் நீரசைவு விந்தையானது. மெல்லிய பட்டுத்துணி ஒசிந்தும் முறுகியும் நெளிந்தேகுவதுபோல. காயல்கள் அதே ஆழ்ந்த நீலவிரிவாக ஒளிகொண்டு கிடந்தன.

காயலோரத்தில் தென்னந்தோப்புகள் எல்லாம் நீரால் நிறைந்து ஒளிகொண்டிருந்தன. தென்னங்கூட்டங்கள் தலைகீழ் தென்னங்கூட்டங்கள் மேல் நின்று தளும்பின. எங்கும் நிறைந்திருக்கும் பறவைகள் குறைவாகவே தென்பட்டன. நனைந்த இறகுகளுடன் அவை திளைத்துத் துழாவி வானில் சென்றுகொண்டிருந்தன.

நான் சில நூல்கள் எடுத்து வந்திருந்தேன். நண்பர் கொள்ளு நதீம் பரிந்துரைத்த கிரானடா என்னும் நாவல். எகிப்தியப் பெண் எழுத்தாளர் றள்வா அஷூர் எழுதியது. அரபு மொழியில் இருந்து நேரடித் தமிழாக்கம் பி.எம்.எம்.இர்ஃபான். ஸ்பானிஷ் பதினைந்தாம் நூற்றாண்டின் மதவிசாரணைக் காலகட்டத்தில் இஸ்லாமிய மதம் ஸ்பெயினில் தடைசெய்யப்பட்டு ஒடுக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையின் சித்திரத்தை அளிக்கும் நாவல். மாலைக்குள் அதைப் படித்து முடித்துவிட்டேன்.

இரவு எர்ணாகுளம் சென்றுவிட்டோம். நான் எட்டுமணிக்கே படுத்துவிட்டேன். காலை நான்கரை மணிக்கு மங்களூரின் ஓசை கேட்டு எழுந்துகொண்டேன். எழுந்து சென்று பார்த்தபோது மழைத்தாரைகள் கொட்டிக்கொண்டிருந்தன. ரயில்நிலையத்தின் ஒளியில் அவை சுடர்கொண்டிருந்தன. கனவில் எழுந்து நின்றிருப்பது போலிருந்தது. மீண்டும் ஒரு சிறு தூக்கம். ஆறுமணிக்கு உடுப்பிக்கு முன்பு பாடுபிதிரி என்னும் சிறிய ரயில் நிலையம்.

காலை ஐந்து மணிக்கே டீ கொண்டு வந்து கூவத்தொடங்கிவிட்டனர். பல்தேய்த்துவிட்டு டீ குடித்தேன். கழிப்பறைக்குச் சென்று ஈரத்துண்டால் உடல் துடைத்து சட்டை மாற்றி வந்தேன். அமர்ந்து வெளியே இருள் விலகிக்கொண்டிருந்த கர்நாடக நிலப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். மிக அகன்ற கண்ணாடிச்சாளரம் கொண்ட ரயில். நிலவெளி மேல் பறந்து ஒழுகிச்செல்வதுபோன்றே தோன்றியது.

மேற்குக்கரை வழியாக எப்போது பயணம் செய்தாலும் பேரழகையே காண்போம். ஆனால் ஜூன், ஜூலை மாதங்களும் அக்டோபர், நவம்பர் மாதங்களும் மேலும் அழகு மிக்கவை. ஜூன் ஜூலையில் ஏராளமான அருவிகள் ரயில்மேல் கொட்ட அவற்றை பிளந்துகொண்டு நாம் சென்றுகொண்டிருப்போம். ஆறுகள் மேலேறி காடுகளை பாதி மூழ்கடித்திருப்பதைக் காண்போம்.

உலகின் பல நாடுகளிலாக நான் இதுவரை பயணம் செய்த ரயில்பாதைகளில் மேற்குக்கரை ரயில்பாதையே அழகானது. எத்தனைகாலம் அப்படி நீடிக்குமெனச் சொல்லமுடியாது. முழுக்கமுழுக்க மலையும் காடுகளும்தான். பாலங்கள் வழியாக, குகைகள் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பெரும்பாலும் ரயில் அடர்காட்டின்மேல் உயரத்தில் அமைந்துள்ளது. ஆகவே தாழ்வாக விமானத்தில் பறந்தபடி பார்த்துக்கொண்டே செல்லும் அனுபவம்,

மின்னும் நீர்ப்பெருக்கு அசைவற்றதென ஒழுகிய ஆறுகள். கடல்முகங்களில் அவை ஊழ்கத்திலென நிலைகொண்டிருந்தன. கண்நிறைக்கும் பசுமை. சஸ்யசியாமளம் என்னும் சொல்லின் பொருள் அங்கே தெரியும். பசுமையே இருளென்றாவது. ஏன் திருமாலை பச்சைமால் என்றும் கரியமால் என்றும் நீலவண்ணன் என்றும் சொல்கிறார்கள் என்று தெரியும். மூன்றும் ஒன்றோ என விழிமயங்கும்.

ரயில் பயணங்களில் வசதிகள் மிக மேம்பட்டுள்ளன. பெட்டிகள் தூய்மையானவை, புதியவை. தூய்மைசெய்வதும் சிறப்பாகவே உள்ளது. ரயில் உணவுதான் இன்னும் சற்றும் மேம்படவில்லை. அதை குத்தகைக்கு விடுகிறார்கள். குத்தகைதாரர் பல கைகளுக்கும் வாய்களுக்கும் படியளந்து தன் லாபத்தையும் சம்பாதிக்க வேண்டுமென்றால் மிகக்குறைவான சகிக்கமுடியாத உணவை மிக அதிக விலையில் விற்றாகவேண்டும்.

காலையில் தஸ்தயேவ்ஸ்கியின் அசடன், எ,.ஏ.சுசீலா மொழியாக்கம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இது இந்நாவலை நான் மூன்றாம் முறையாக வாசிப்பது. மலையாளத்தில் முதன்முறையாக. ருஷ்ய வெளியீடாக ஆங்கிலத்தில் மீண்டும். சுசீலாவின் மொழியாக்கத்தின் சிலபகுதிகளை வாசித்திருக்கிறேன். முழுக்க இன்னொரு முறை வாசிக்கலாமென தோன்றியது. மாலைக்குள் பாதி முடித்துவிட்டேன்.

மதியம் சற்று தூங்கினேன். மீண்டும் பசுமைமேல் பறந்துகொண்டிருந்தேன். வசிஷ்டி என்னும் அழகிய ஆறு. வசிட்டமுனிவரின் மகள். பேரழகிகள் எல்லாம் முனிவர் மகள்கள்தான். சகுந்தலை, தேவயானி. எத்தனை அழகிய ஆறுகள். கிருஷ்ணை கோதை போல பேருருவம் கொண்ட ஆறுகள் எவையுமில்லை. கடல்நோக்கி நெளியும் சிறிய ஒளிவழிவுகள்தான். அவை வந்துகொண்டே இருந்தன

கோவா. அதன்பின் ரத்னகிரி. நாங்கள் சென்ற இடங்களெல்லாம் நினைவிலெழுந்தன. கோவாவின் மாபெரும் தேவாலயங்கள். ரத்னகிரியில் திலகர் சிறையிருந்த கடற்கோட்டை. சிவாஜியின் கோட்டைகளில் முதன்மையானது அது. பழைய நினைவு. அங்கே நானும் நாஞ்சில்நாடனும் வசந்தகுமாரும் பயணமாக வந்தபோது இரவுணவுக்கு பழம் கிடைக்கவில்லை. நான் கடையில் விற்ற ஒரு பாக்கெட் புளிப்பான பழத்தை வாங்கி சாப்பிட்டு படுத்தேன். மறுநாள் என் வயிறு நிர்மலமாகியது. அது அங்கே குழம்புக்கு அரைக்கும் ஒருவகை புளி.

அந்தி இருள்கையில் பசுமை நிறம் மாறிக்கொண்டிருந்தது. சாம்பல்பசுமை, கரும்பசுமை. கண்கள் அறியும் அந்த வண்ண வேறுபாட்டை செல்பேசியில் எடுக்கப்பட்ட எளிய புகைப்படங்களே அற்புதமாக காட்டுவதைக் கண்டேன். நேரில் பார்த்து மீண்டும் செல்பேசி புகைப்படத்திலும் பார்த்து நிறைந்துகொண்டிருந்தேன்.

உண்மையில் முன்பெல்லாம் செல்லுமிடங்களில் புகைப்படம் எடுப்பது அங்கே ஒன்றுவதை தடுக்கிறது என்னும் எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் இன்று இல்லை. ஒன்றுவது ஒரு நிலை. ஆனால் மீளும் கணங்களில் செல்பேசி லென்ஸை நமது இன்னொரு கண்ணாக ஆக்கிக்கொள்ள முடியும். மேலும் ஒரு காட்சிவெளியை கண்டடையலாகும்.

மும்பையின் வெளிநிலையமான பன்வேலுக்கு ரயில் சென்றபோது நான் தூங்கிவிட்டிருந்தேன். இரவு ரயில் மகாராஷ்டிரத்தைக் கடந்து குஜராத்துக்குள் நுழைந்தது. காலை ஐந்து மணிக்கு வடோதராவின் ஓசைகளில் விழித்துக்கொண்டேன். அதன்பின் அரைத்துயில். அகமதாபாதை ஏழரை மணிக்குச் சென்றடைந்தோம். அதற்குள் காலைக்கடன்களை ரயிலில் முடித்திருந்தோம். ரயிலில் விடியற்காலை என்பது ஓர் அருங்கனவு. காலை எழுந்ததும் சட்டென்று மாபெரும் நிலவெளி நம்மைச் சூழ்ந்துகொண்டு சுழல்வது வேறெங்கும் நிகழாதது. இல்லை, வங்கத்தில் படகுப்பயணங்களில் அது நிகழ்வதுண்டு.

அகமதாபாத் ரயில் நிலையத்தில் மூன்றுமணி நேரம். எங்கள் ரயில் புரியில் இருந்து கிளம்பி அஜ்மீர் செல்வது. [18421 – Puri Ajmer Express]. அது வந்து சேரவேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி நடத்தும் ரயில் நிலையக் காத்திருப்பு அறையில் தண்ணீர் இல்லை. அதை முன்னரே சொல்லிவிட்டனர். கழிப்பறைகள் நாறிக்கிடந்தன. அங்கிருந்த சோபாக்களில் அமர்ந்தோம்.

ஓர் இளைஞன் டை கட்டிக்கொண்டு மொழமொழ ஆங்கிலத்தில் ஐ.ஆர்.சி.டி.சியின் வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வெறும் ஆயிரத்தைநூறு ரூபாய் கொடுத்து எடுப்பதன் நன்மைகளைச் சொல்லி ஒரு வழவழ விளம்பரத்தை எங்களிடம் காட்டிக் கவர முயன்றான். சிரிப்பதா என்று தெரியவில்லை. நவகுஜராத்தின் இரண்டு முகங்கள் என்று நினைத்துக்கொண்டேன். பையனைப்பார்க்க பாவமாக இருந்தது.

ஷாகுலை அமரச்செய்துவிட்டு ரயில்நிலையத்திற்கு வெளியே ஒரு காலைநடை சென்று வந்தேன். ரயில்நிலையத்திற்குள்ளேயே இரண்டு பெரிய மினாரங்கள் நின்றிருக்கின்றன. வேலியிடப்பட்டு தொல்லியல்துறையின் பாதுகாப்பிலிருக்கும் கட்டுமானங்கள் என அறிவிப்புடன் தெரிந்தன. செங்கல்லால் ஆனவை. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டவை. குதுப் மினாரை நினைவூட்டுபவை.

அகமதாபாதின் மிக உயரமான மினாரங்கள் இவை. பொதுவாக நடுங்கும் மினாரங்கள் என அழைக்கப்படுகின்றன. இணையத்தில் அபத்தமான ஏராளமான விவரணைகள் காணக்கிடைக்கின்றன. இந்த மினாரங்கள் மண்ணுக்கு அடியில் ஒற்றைச் செங்கல் அடித்தளம் மீது கட்டப்பட்டிருக்கலாம். அந்த அடித்தளம் பலவீனமாகியிருக்கலாம். ஆகவே ஒரு மினாரத்தை அடித்து அதிரச்செய்தால் சில கணங்கள் கழித்து இன்னொரு மினாரமும் அதிர்ந்திருக்கிறது. இதை ஒரு விந்தை எனக்கொண்டு தொடர்ந்து தட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மினாரங்கள் மிகப்பழுதடைந்த நிலையில் இருப்பதனால் அரசு அருகே செல்வதை தடைசெய்திருக்கிறது. மிக அருகே ரயில்பாதைகள். அவற்றில் ரயில்கள் செல்லும்போது நடுங்கியபடி இவை இன்று நின்றுள்ளன. பழுதுபார்க்கவோ மீட்டெடுக்கவோ இயலாதபடி பழுதடைந்தவை என்றாலும் செங்கல் கட்டுமானத்தின் நேர்த்தியும் சிற்ப ஒருமையும் வியப்படையச் செய்பவை.

இந்த மினாரங்கள் இங்கே இருந்த சிதி பஷீர் என்னும் ஆட்சியாளரால் 1452ல் கட்டப்பட்ட மசூதி ஒன்றின் முகப்பாக இருந்தவை என்று கருதப்படுகின்றன. ஆகவே சிதி பஷீர் மசூதி என அழைக்கப்படுகிறது. இவர் குஜராத் சுல்தானாகிய முதலாம் அகமது ஷாவின் அடிமைகளில் ஒருவராக இருந்தவர். சிலர் குஜராத் சுல்தான்களில் புகழ்பெற்றவரான மஹ்மூத் ஷாவின் அமைச்சரான மாலில் சரங் என்பவரால் 1511ல்  கட்டப்பட்ட மசூதி என்கின்றனர்.

1753ல் மராட்டியர்கள் படையெடுத்து வந்து குஜராத் சுல்தான்களை தோற்கடித்தபோது இந்த மசூதி இடித்தழிக்கப்பட்டது. இரண்டு மினாரங்களுடன் மசூதியின் நுழைவாயில் மட்டும் எஞ்சியது.எண்ணூறுகளில் பிரிட்டிஷார் ரயில்நிலையம் அமைத்தபோது இடிபாடுகளின் செங்கல்களை பயன்படுத்திக் கொண்டனர். மினாரங்கள் மட்டும் வரலாற்றின் எச்சங்களாக நிலைகொள்கின்றன.

பதினொரு மணிக்கு ரயில் வந்தது. அதில் பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். ஒரிசாவிலிருந்து கிளம்பிய பின் பல்வேறு இடங்களிலிருந்து ஏறியவர்களாக இருக்க வேண்டும். நள்ளிரவில் பலர் நாக்பூரில் ஏறியிருப்பார்கள். எழுந்தவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அவர்கள் ராஜஸ்தான் வணிகர்கள் எனத் தெரிந்தது. அவர்களின் வணிகச்சுற்று அது.

”ஆரல்வாய்மொழி கணவாய் கடந்து பணகுடிப்பக்கம் போய்ட்ட மாதிரி இருக்கு சார்” என்று ஷாகுல் கருத்து தெரிவித்தார். வெயில் எரிந்தது. கண்தொடும் எல்லையில் கரடுமுரடான மொட்டைப்பாறைக்குவியல்களாக உயரமில்லாத மலைகள். அவற்றில் கருவேலமரக்குடைகள்.

ஆனால் நான் நாற்பதாண்டுகளுக்கு முன்பு பார்த்த ராஜஸ்தான் அல்ல. அன்று பெரும்பாலும் நிலம் வெறுமை மண்டிய செம்மண்வெளியாக கிடக்கும். இப்போது நிலத்தில் பெரும்பகுதி விவசாயத்திற்குள் வந்துவிட்டது. நிலத்தடிநீரை பேணும் வழக்கம் முன்பே இங்கே இருந்தது. ஆகவே ஆழ்குழாய்கள் வழியாக விவசாயம் செய்கிறார்கள்.

இன்றைய ராஜஸ்தான் ஷாகுல் சொன்னதுபோல தமிழகநிலம் போலத்தான் இருக்கிறது. ஜெய்சால்மர் தவிர எங்கும் பாலைவனம் இல்லை. அங்கும் மிகக்குறைவாகவே மணல்பாலை உள்ளது. அங்கே தேயத்தேய சினிமா எடுத்துவிட்டார்கள்.

சென்றமுறை பாலைநிலப் பயணம் சென்றபோது செல்வேந்திரன் கேட்டார் “ராஜஸ்தான் பாலைன்னு சொன்னாங்க ஜெ, பசுமையாத்தானே இருக்கு?” நான் சொன்னேன். “பாலைவனம்தான். ஆனா நீ சாத்தான்குளம் உவரி அளவுக்கு எதிர்பாக்கக்கூடாது”

அஜ்மீரை மாலை ஏழரைக்குச் சென்று சேர்ந்தோம். செல்லும் வழி நெடுக மாபெரும் கட்டுமானங்கள் நடந்துகொண்டிருந்தன. மேம்பாலங்கள்,ஆறுபட்டைச் சாலைகள். ராஜஸ்தானின் முக்கியமான ‘விளைபொருள்’ இன்றைக்கு சலவைக்கல்தான். அது அம்மாநிலத்தை வளமானதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள்தொகை குறைவு. வீடுகள் நகரங்களை ஒட்டித்தான். எவரும் ஏறி இறங்காத தனியான ரயில்நிலையங்களை பார்த்துக்கொண்டே சென்றேன்.

ரயில்நிலையத்திற்கு என் நண்பர் செங்கதிரின் ஊழியர்கள் வந்திருந்தனர். அவர் அங்கே காவல்துறை தலைவராக இருக்கிறார். முன்பு தர்மபுரியில் என் இளவலாக இருந்தவர். சொல்புதிதில் அழகிய மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். ஒருகாலத்தில் தமிழகத்தின் பெரும்படைப்பாளிகளில் ஒருவர் அவரிடமிருந்து உருவாவார் என எண்ணியிருந்தேன். வாழ்க்கையின் திசைவழிகள் முடிவற்றவை.

அஜ்மீர் தர்காவின் மிக அருகிலேயே விடுதியறை போடப்பட்டிருந்தது. தர்கா சாலை மேலிருந்து ஒரு தாள்விழுந்தால் மண்ணில் விழமுடியாத அளவுக்கு நெரிசலாக இருந்தது. பல்லாயிரம்பேர் தர்கா நோக்கி நீர்ப்பெருக்கென ஒழுகிச் சென்றுகொண்டிருந்தார்கள். அஜ்மீரின் அப்பகுதியில் அறைகள் எல்லாமே சிறியவை. அங்கேயே அறைவேண்டும் என சொல்லியிருந்தோம். எங்கள் அறைமுன் நின்றால் தர்காவின் மிகப்பெரிய நுழைவாயிலைப் பார்க்கமுடியும்.

நான் எண்ணியது போலவே என் நினைவிலிருந்த அஜ்மீர் அங்கே இல்லை. பழைய கட்டிடங்கள் எல்லாமே கான்கிரீட் கட்டிடங்களாக, விடுதிகளாக மாறிவிட்டிருந்தன. சிவப்புக்கற்களாலான பழைய சத்திரங்களை தேடித்தான் பார்க்கவேண்டும். மக்கள் திரளில் எல்லாவகை முகங்களும் இருந்தன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் தர்காவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு தென்னகத்தார் நிறைய வந்தனர். இன்று கொஞ்சம் குறைவு என நினைக்கிறேன்.

நான் அங்கே கூட்டம் குறைந்திருக்குமென எண்ணியிருந்தேன். தர்கா வழிபாட்டை இஸ்லாமியர்களில் அடிப்படைவாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். கல்லறை வழிபாடு என இழிவுசெய்கிறார்கள். அங்கே இந்துக்கள் செல்வதற்கு எதிராக இந்துத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அங்கிருந்த கூட்டம் அவற்றுக்கு அப்பால் இந்தியாவின் எளியமக்களிடம் அந்த தர்காவின் இடம் பெரிதாக மாறுபடவில்லை என்றே காட்டியது. அது அளித்த நிறைவு சாதாரணமானது அல்ல.

சாலையில் சென்றுகொண்டிருந்தவர்களில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். குடும்பம் குடும்பமாக சென்றனர். பொட்டுவைத்து சரிகை ஆடை முக்காடு போட்ட பெண்கள். பைஜாமா அணிந்து பெரிய தலைப்பாகை அணிந்த ராஜஸ்தானிய ஆண்கள். அன்று ஒரு முக்கியமான நாள். தர்காவில் சிறப்பு வழிபாடு உண்டு என்று சொன்னார்கள். ஆகவே உடனே அறைக்குச் சென்று குளித்துவிட்டு தர்காவுக்குக் கிளம்பினோம்.

[மேலும்]

கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்

தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்

முந்தைய கட்டுரைக்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!
அடுத்த கட்டுரைமரபு, உரை- ஒரு கடிதமும் பதிலும்