குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் இசைப்பாடல்கள் இவை. காதல்பாடல்களின் வடிவில் அமைந்தவை. இறையனுபவத்தை இவ்வண்ணம் கூறும் பாடல்கள் சூஃபி மரபில் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு எல்லா மதங்களிலும் உதாரணங்கள் உண்டு.
1
மனமே, காதலின் அவையில் நிலைமறந்த காதலரின் வட்டத்துக்குள் வந்துவிடு.
நித்தியத்தின் மதுவை அவர்கள் உனக்கு தருவார்கள்.
வா, ஈருலகை ஆறு வாயில்களுக்கு* உள்ளே வைத்து விடு.
இந்த சூதாட்டத்தில் ஒட்டுமொத்த மெய்மையை பணயம் வைத்துவிடு.
என்றுமுள்ள இருப்பை நீ தேடினால்
இல்லாமல் ஆவதன் வழியைத் தேடு.
பொய்த்தோற்றங்களை கைவிடாமல் இறைவனை அணுகமுடியாது.
மன்னனின் கையில் இருந்து பறந்தெழுந்த மன்னனின் பருந்து நீ.
அவனது ஒப்புதல் இன்றி பறந்தலையாதே.
அவனிடம் திரும்பிவிடு.
மானுடத்தின் இருள்வழியை கடக்கும் போது
ஆழத்தில் இருந்து தெய்வீகத்தின் உச்சம் வரை நீ காண்பாய்.
காதலின் புராக்^ நூறடிகள் எடுத்து உன்னைத் தேடி வருகிறது.
தயக்கத்தைக் உதறி விடு.
துணிந்து காலடிஎடுத்து வை.
உனது காதலனைத் தேடி ஒவ்வொரு வாயிலாக எவ்வளவு காலம் அலைவாய்?
உள்ளே பார், நீ ஒரு ஆடி, அழகைப் பிரதிபலிப்பாய்!
காதலின் மேகம் நேசத்தைப் பொழியும்போது
பூமியில் மலர்கள் தானாக மலருமா என வியப்படையாதே.
உனது உருவம் எனும் திரையை உன்னுள் இருந்து அகற்றி விடு.
யாருடைய அழகு மிஞ்சி இருக்கிறதென நீ காண்பாய்.
கண்ணீரால் உடலின் துருவை அகற்றி மெருகூட்டு.
உனது ஆன்மாவின் ஆடியில் அவனது பேரழகைப் பார்.
உனது கண்களின் தூசியை அகற்ற முயற்சி செய்.
தெய்வீகஒளி தழல் கொண்டு எரிவதை காண முடியும்.
தெய்வீகஒளியின் மிளிர்வை நீ விவரிப்பதாக இருந்தால்
மொய்ன், உனது அழகிய உருவில் இருந்து
அழியக்கூடிய திரையை அகற்றிவிடு.
* ஆறு வாயில்கள் – மாயையின் ஆறு அடுக்குகள், ஏழாவது வாயில் கடவுள்
^ புராக் – வெள்ளை நிறமான விலங்கு, கோவேறு கழுதை போன்றது, இறகுகள் கொண்டது, நபிகள் நாயகத்தை சொர்கத்துக்கு ஏற்றிச் சென்றது
2
என்னுடைய பாதையில் யாரொருவர் தினமும் ஒரே ஒரு அடி முன்னேறினாலும்
உல்லாச அரண்மனையின் விருந்துக்கு வந்து சேரலாம்.
எனக்கும் என் காதலனுக்கும் இடையே பல்லாயிரம் திரைகள் இருந்தன.
என் தேம்பலின் பெருமூச்சின் ஒற்றைச் சுடர் அவற்றை முழுமையாய் எரித்தது.
காதலின் பாதையில் வலி மிகுந்த இதயத்தின் துணை போதும்.
இதயத்தின் தனிமையில் விடியலின் புலம்பல் தோழியாகும்.
வாழ்வைத் துறந்தபோது நான் கடவுளின் உறைவிடம் ஆனேன்.
என்னை நான் எரித்தபோது என்னவானேன் என சொல்லக்கூடுமோ?
உலகில் அனைவரும் தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள்.
ஆனால் என் நண்பனே, நான் மரணத்தில் எரிக்கப்பட விழைகிறேன்.
ஓ மொய்ன், காதலனோடு இணைவதற்கு உயிரை அளிக்க வேண்டும்
வாழ்வை இழப்பது காதலில் அடைவதென்றாகும் அக்கணமே
நபியின் இரக்கத்தின் ஒரு துளி ஈரம் கனிந்து இவ்வுலகாயிற்று
ஆதாம் அவரது காலடி மண்ணின் ஒரு கைப்பிடித் துகள்
ஆதாம் அவனது இனிய உறக்கத்திலும் அகல விழித்திருந்தான்
கடந்த காலத்தின் இருப்பு மகத்தானது
அவன் அனுப்பப்பட்ட சக்தி
இயேசு சூரியனைப் போல வானில் தனது கூடாரத்தை இட்டார்
அவரது பதாகையின் நிழல் வெல்ல ஆசைகொண்டார்
அவர் வெளிப்படும் சக்தி
சமுத்திரத்தின் வயிற்றில் ஒளிந்திருக்கிறது முத்து
அவரது இதயமோ சமுத்திரம் நூறு சமுத்திரங்களை உள்ளடக்கியது
அவர் பின்தொடரும் சக்தி
நரகத்தில் இருந்து விடுதலை பத்திரம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும்
அந்த ஒருவரின் அடிமை என்னும் சாசனத்தையும் வைத்திருக்கிறார்கள்
அவர் உண்மையான சக்தி
அவரை பின்பற்றுபவர்களுக்காக இவ்வுலகின் மகிழ்ச்சியைத் துறந்தார்
அந்த மகிழ்ச்சிகளை அவர் அறிவார், எனில் துன்பத்தையே தேர்ந்தெடுத்தார்
அவர் மோன சக்தி
உங்கள் நற்குணங்கள் சிறியவை, தீமைகள் பெரியவை என்று அவர் கண்டபோது
அவருடைய துக்கம் அதிகம் மகிழ்ச்சி குறைவு என நான் அறிவேன்
அவர் இல்லாத சக்தி
ஒவ்வொரு மூச்சிலும் அவரோடு கலக்கவென்று கனலும் இவ்வாழ்வு
அவரது மூச்சோடு என்னுடையது கலப்பதற்காகவே காத்திருக்கிறது
சக்தி!
உனது அகந்தையின் முகத்திரையை எறிந்துவிடு
உண்மையின் அழகிய ஆடைகளை அணிந்துவிடு
கௌரவத்தின் கண்ணாடியை அவமதிப்பின் கல்லால் நொறுக்கிவிடு
காதலின் பாதையில் போலி பக்தியின் துகிலை உரித்துவிடு
சொர்க்கத்தின் நந்தவனம் என் குடிலில் நீளும் சிறு கிளைதான்
உலகு விதைத்த பார்லி மணிகளை நான் வாங்க வேண்டியதில்லை
இரு உலகிலும் விழி திறப்பேன் என அவன்மீது உறுதி அளிக்கிறேன்
அவன் அழகை என் விழிகள் அறியும் வரை
என் இருப்பெனும் மரத்தின் ஒவ்வொரு இலையிலும்
மோசஸிடம் அது சொன்ன காதலின் ரகசியங்களை கேட்கிறேன்
உனது அன்பென்னும் நெருப்பில் நான் எரிந்து போவது அதிசயமா?
நான் தாங்குவதுபோல தூர் மலை உனது கதிரொளியை தாங்கமுடியாது
மொய்ன், காதலனின் அழகு அறிவின் கண்களால் பார்க்கப்படுவதல்ல
லைலாவின் அழகு மஜ்னுவின் கண்களுகே தெரியும்.
3
எனது இதயமும் ஆன்மாவும்
கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது அழகிய
அவனது பெயரால்..
எனது உலர்ந்த உதடுகள் நனைக்கப்பட்டன
தூய்மையின் துளியென்ற
அவனது பெயரால்..
இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இரு
அவனோடு கலக்க வேண்டுமென்றால்.
கலப்பதென்பது அவன் பெயரோடு இணைந்திருத்தலே
என்றறிவாய்.
பெயருக்கும் பெயரிடப்பட்டதற்கும்
இடைவெளி மறையும்போது
அதன் மகத்துவத்தை உணர்வாய்
அவனது பெயரால்..
அவனோடுதான் அமர்ந்திருக்கிறாய்
இரவும் பகலும் என்றுணர்ந்துகொள்
உனது உற்றதுணை நினைவில் இருக்கும்
அவனது பெயரானால்..
விண்ணக உலகின் வெளியில்
நீ சிறகு விரித்து பறக்கலாம்
இறைவனின் பெயர் என்னும்
தெய்வீகச் சிறகுகளை துணைக்கொண்டால்
அதன் வியப்பிலும் மகிழ்விலும் அழகிலும்
நான் எனை மறக்கிறேன்
நூறு வாழ்வை தரச் சித்தமாவேன்
அவன் பெயரின் மகிமையை கேட்பதற்கு
இறைவனின் பெயரை உச்சரிப்பதில்
மொய்ன் எப்போது பொறாமை கொண்டிருக்கிறான்?
இறைவனின் பெயர் மீதும் பொறாமை கொள்ளக் கூடுமோ?
ஒருவரின் இதயம் ரகசியங்களை அறிந்துவிட்டால்
இறைவனை அறிதலே அறிவென்று தெரியும்
கடவுளின் தரிசனத்தைத் தேடுபவனின் ஆன்மா
ஆவதன் நிலையே ஆன்மா என்று தெரியும்
மறைவாய் புதைத்த செல்வம்
சந்தைக்கு வரும்போது
வாங்குவதற்கு வந்து சேரும் பக்தன்
ஆசீர்வதிக்கப்பட்டவன்
தெய்வீக காதலன் ஆடியாகிய என்னில்
தன்னை நோக்குகிறான்
அதனால் தேடுபவனும் தேடப்படுவதும் ஒன்றாகிறது
நகைக்கு அதன் மதிப்பு தெரியாது
அதை செதுக்கி விலைமதிப்பற்றதாக்கும்
பொற்கொல்லன் அறிவான்
தூசியும் துளியும் படிந்த திரையை
இதயத்தில் இருந்தும் ஆன்மாவில் இருந்தும் அகற்று
உனது இருப்பில் இருந்த இருள் ஒளியால் நிறைவதை பார்ப்பாய்
இருப்பெனும் அவையில்
நித்தியத்தின் கோப்பையில் இருந்து பருகுபவர்
கடவுளுடன் கலப்பதற்கான
கயிறைப் பற்றியிருக்கிறார்
சாரம் மேலேறிச் செல்கிறது
மதுவை ஊற்றுபவனின் முகபிம்பம்
மதுக்கோப்பையில் தெரியும்போது
பக்தன் மதுக்கடை நோக்கி திரும்புகிறான்
போதையில் தனைமறைக்கிறான்
உனது நீண்ட கூந்தல் இழையில் சிக்குபவன்
தியான மணிகளை உடைக்கிறான்
கயிறு இறுகுகிறது
திரை மறைவில் இருந்து வெளிப்படும்
ரகசியம் என்னவென்று கவனி
அறியாதிருந்த இதயங்கள் இப்போது அறிந்ததென்ன?
என் மேல் பொழியும்
இறைவனின் கருணையும் அருளும் உடனிருக்க
பாவியும் நினது அடிமையாகலாம்!
நீ ஒரு காலையில்
உனது நோயாளியின் நலனறிய வருவாய் என்றால்
உனக்காக உருகும் நலமுடையோர் கூட
நோய் கொள்வார்கள்
உறக்கத்தில் காதலனின் மடியில் தலை வைத்து உறங்கியதை
விழிப்பில் கண்டுகொள்ளும் தருணம்
அந்த நாள் இனிமையாகிறது
சுயத்திற்கு வெளியே ஒரு புள்ளியை வைப்பவர்
திசைமானி போல சுழன்று வட்டமிட்டு
அதை சுற்றி வருகிறார்
மொய்ன், நீ கொடுத்த மதுவின் மயக்கில்
இந்த இதயம் போதையில் மயங்கிக் கிடக்கிறது
இனி ஒருபோதும் தெளிவதில்லை
தமிழாக்கம் சுபஸ்ரீ
Source: MU’IN UD-DIN CHISTHI: SELECTED POEMS (English Translation & Introduction by Paul Smith)