அஜ்மீர் பயணம்-1

இரண்டு காதலியர்

காட்டிருளின் சொல்

அஜ்மீருக்கு நான் 1981ல் சென்றேன். ஊரைவிட்டு ஓடிப்போய் அலைந்த காலகட்டத்தில். அந்த அஜ்மீரே என் நினைவில் நின்றிருந்தது. 2019-ல் வெண்முரசு திரண்டு வந்து போரில் உச்சம்கொண்டிருந்த நாட்களில் அஜ்மீர் செல்வதுபோல ஒரு கனவு வந்தது. நித்ய சைதன்ய யதியும், சுவாமி தன்மயாவும் உடனிருக்கிறார்கள். நான் கையில் ஏதோ பை வைத்திருக்கிறேன்.

காலை எழுந்து அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். ஏன் அக்கனவு வந்தது என. எனக்கு கனவுகளில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அவை என் ஆழம் எனக்குக் காட்டும் மெய்மைகள், எனக்கிடும் ஆணைகள். என் குருநாதர்களும் தெய்வங்களும் வாழ்வது அங்குதான். ஆனால் அஜ்மீர் ஏன்?

நான் முன்னர் சென்ற அஜ்மீர் என் நினைவில் காசி போன்ற ஓர் ஊராக நினைவில் நின்றது. அங்கே எங்கும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த கவாலி- கஸல்- சூஃபி இசை. இடுங்கலான தெருக்களின் வலைப்பின்னல். அவற்றில் சிதல்கள் என நிறைந்திருந்த பல்லாயிரம் மக்கள். சிவந்த கல்லால் ஆன பழமையான கட்டிடங்கள். அவற்றுக்குள் சுரங்கப்பாதை போன்ற வழிகளுக்குள் ஏராளமான வாசல்கள். நகர்மையமாக மிகப்பெரிய நுழைவாயில்கள் கொண்ட தர்கா. அதன் வெண்ணிற குவைமாடம்.

உண்மையில் நான் ஓச்சிற தர்காவுக்கு ஒருமுறை செல்லவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். கிராதம் நாவலை ஓச்சிற உப்பூப்பா பீரான் அவுலியா [ரலி] அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். நித்ய சைதன்ய யதிக்கு மிக அணுக்கமான ஆன்மிக ஞானி அவர். அவர்கள் சேர்ந்து தொழுகை செய்யும் புகைப்படமும், அதன் ஓவியவடிவமும் புகழ்பெற்றவை.

நித்யா, நடராஜ குரு இருவருமே அஜ்மீர் சென்றிருக்கிறார்கள். நித்யாவின் உரைகளில் சைதன்ய மகாப்பிரபு, மீரா, புனித ஜான் ஆகியோருடன் அஜ்மீரில் அமைந்திருக்கும் புனிதர் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களும் குறிப்பிடப்படுவதுண்டு.

நான் நண்பர் ஷாகுல் ஹமீதிடம் அஜ்மீர் செல்வதைப் பற்றிச் சொன்னேன். அது 2019 டிசம்பரில். உடனே செல்லலாம் என முடிவுசெய்தோம். ஆனால் ஷாகுல் உடனே கப்பலுக்குச் செல்லவேண்டியிருந்தது. திரும்ப வந்தபோது கோவிட் தொற்று. அவர் மீண்டும் கப்பலுக்குச் சென்றார். இம்முறை ஓராண்டுக்காலம் கடலில் இருந்தார்.

அவர் திரும்ப வந்தபோது மேலும் தாமதிக்க வேண்டாம், சென்றுவிடலாம் என முடிவுசெய்தோம். உடனே ரயிலில் இருக்கைகள் முன்பதிவு செய்தோம். அக்டோபர் 11 மாலை திருவனந்தபுரத்தில் இருந்து அஜ்மீர். ஏன் ரயில்? விமானப்பயணம்தான் வசதியானது. திருவனந்தபுரத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானம் உண்டு. அங்கிருந்து இரண்டு மணிநேரத்தில் அஜ்மீர் செல்லலாம். ஆனால் நான் ரயிலை விரும்பினேன்.

விமானம் நம்மை தொடர்ச்சியான பதற்றங்களில் வைக்கிறது. பல்வேறு வரிசைகளில் நிற்கவேண்டும். சோதனைகளில் தேறவேண்டும். தொடர்ச்சியான அமைதியான மனநிலை அமைவதில்லை. இத்தகைய பயணங்களுக்கு ரயில் உகந்தது. ஏறி அமர்ந்தால் அதன்பின் மெல்ல ஒழுகிச்செல்கிறது. நாம் மக்கள் மத்தியில் இருக்கலாம், தனிமையையும் உணரலாம்.

அஜ்மீர் பயணம் மொத்தம் 56 மணிநேரம். அவ்வளவே மணிநேரம் திரும்பி வரவும் ஆகும். திருவனந்தபுரம் வரை ஒரு ரயில். அங்கிருந்து அகமதாபாத் வரை ஒரு ரயில். அங்கே மூன்று மணிநேரம் காத்திருப்புப்பு பின் அஜ்மீர் ரயில். அதாவது ஐம்பத்தாறு மணிநேரம் நீளும் புனிதபயணம். நம்மில் நாம் அமைய அவ்வளவு நேரம் கிடைக்கிறது

நீண்ட ரயில்பயணம் அலுப்பூட்டுவது என உடனே சிலர் சொன்னார்கள். ஆனால் நான் என் இளமைமுதலே boredom என்பதை உணர்ந்ததே இல்லை என்றால் நான் சொல்வதை உணர்பவர்கள் நம்புவார்கள். அலுப்பும் சலிப்பும் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்து மானசீகமாக எங்கோ சென்றபடியே இருப்பவர்களுக்குரியது. கற்பனையற்றவர்களுக்கு நிகழ்வது. Bore என்னும் சொல்லைச் சொல்பவர் ஆன்மிகநிலையில் மிகக்கீழே நிற்பவர். என்னால் எங்கும் சலிப்பே இல்லாமல் வேடிக்கை பார்த்தபடி, எதையாவது கற்பனைசெய்தபடி அமர்ந்திருக்க முடியும். ரயிலோ இந்தியாவிற்கு நெடுக்காக ஓடுகிறது. அது கனவில் மிதந்து ஒழுகிச்செல்லுதல்தான்.

இப்பயணத்தில் நான் தனியாகவே செல்ல விரும்பினேன். என் தனிமையை எவ்வகையிலும் கலைக்காதவர் என்பதனால் ஷாகுல் ஹமீது. அவர் ஆன்மிகமான அமைதி கொண்டவர். ரயிலின் நெரிசல் நடுவிலும் கால்நீட்ட இடம் தேடி ஐந்துமுறை தொழுகையை முடித்துவிடுவார். நல்ல இந்தி பேசுபவர். அனைத்துக்கும் மேலாக நான் அறியாமலேயே என் தேவைகளை உணர்ந்து செய்துகொண்டே இருப்பார். நான் எதைப்பற்றியும் எண்ண வேண்டியதில்லை. மானசீகமாக ஒரு சேவையாளர். எவருக்கும் உடனடியாகச் சேவை செய்ய ஆரம்பித்துவிடுபவர். பல நலப்பணிகளுடன் தொடர்புடையவர்.

வெண்முரசு இசைவெளியீட்டு விழாவின் இறுதியில் பேசும்போது அஜ்மீர் தர்காவுக்கு வழிபாட்டுக்குச் செல்லவிருப்பதைச் சொன்னேன். பல நண்பர்களுக்கு ஏமாற்றம். நான் சொல்லியிருந்தால் உடன் வந்திருப்போமே என மின்னஞ்சல்கள், மனக்குமுறல்கள். எனக்கே அஜ்மீர் இப்போது எப்படி இருக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே நெரிசலான நகரம். அந்நகரை விரும்புபவர்களை அன்றி உடன் சேர்க்க முடியாது.

இன்னொரு தரப்பினர் சிறு அதிர்ச்சிகளை அடைந்து கடிதங்கள் எழுதினர். அவர்கள் எவரும் என் தொடர் வாசகர்கள் அல்ல. சமீபத்தில் என் எழுத்து அறிமுகமாகி வாசிக்க ஆரம்பித்தவர்கள். பலர் ‘பிறர்’ சொல்லி எழுந்த ஐயங்களை குழப்பங்களை எழுதியிருந்தனர். தனித்தனியாக விளக்கமளிக்க விரும்பவில்லை. ஆகவே இப்போது.

”இப்போதெல்லாம் நீங்கள் நிறைய மாறிவிட்டீர்கள் என்கிறார்களே” என்பதே அதிகமாக வந்த கேள்வி. இது பலமுறை எழுந்து வந்த கேள்விதான். நான் சொல்வதெல்லாம் நான் எழுதும் எந்தக் கட்டுரையிலும் உள்ள மையமான சொற்களை சேர்த்துப் போட்டு என் தளத்தில் தேடுங்கள் என்பதுதான். இந்த தளம் தொடங்கிய நாள் முதலே பெரும்பாலும் மாற்றமே இல்லாமல் அரசியல், இலக்கியம், பண்பாடு, மதம் சார்ந்த கருத்துக்களைச் சீராகச் சொல்லிவந்திருப்பதை எவரும் காணமுடியும். பலசமயம் சொற்றொடர்களேகூட அப்படியே முன்பும் பலமுறை சொல்லப்பட்டிருக்கும். என் தர்க்கங்கள் மேலும் வளர்ந்திருக்கும் அவ்வளவுதான். மற்றபடி முரண்பாடுகளோ மாற்றங்களோ இருக்காது.

ஏனென்றால் என் அடிப்படைப்புரிதல்கள் 1997 வரையிலான காலத்தில் நித்யாவுடன் இருந்தபோதே திடப்பட்டுவிட்டவை. என் சொற்கள் இந்த கால விரிவில் மேலும் கூர்மையும் ஒழுங்கும் கொண்டிருக்கின்றன. மிக அரிதான சில விஷயங்களில் இன்று மேலதிகமான உறுதி கொண்டிருக்கிறேன், அவை ஆன்மிக அனுபவம் சார்ந்தவை. என் தன்னனுபவத்தில் இருந்து சிலவற்றைச் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். அதன் வழியாக நித்யாவை மேலும் நெருங்கியிருக்கிறேன்.

இன்னொரு வினா, இவ்வாறு தர்காவுக்குச் செல்வதை இந்து மதநூல்கள் அனுமதிக்கின்றனவா என்பது. அப்படி இந்துக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் நூல் என ஏதுமில்லை. அமைப்பும் இல்லை. இருக்க வாய்ப்பும் இல்லை. இந்து மதம் என்பது ஒருங்குதிரட்டப்பட்ட அமைப்பு அல்ல. ஓடைகள், சிற்றாறுகள் இணைந்து பேராறாக ஆவதுபோல மெய்ஞானத்தின் பல வழிகள் இணைந்து ஒன்றெனச் செல்லும் ஒரு பெருக்கு. இதன் வழிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

இன்னும் சிலர் இவ்வண்ணம் இந்துக்கள் தர்க்காக்களில் வழிபடலாமா என்று கேட்டிருந்தனர். எவர் வழிபடலாம், எவர் வழிபடலாகாது என்று விளக்கம் கோரியிருந்தனர். இந்து மதத்தின் சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெரும்பிரிவுகளிலும் உபாசனை என ஒன்று உண்டு. ஒரு தெய்வத்தை, அத்தெய்வத்தின் துணைத்தெய்வங்களுடன் முழுமையாக தன்னை அளித்து வழிபடுவது உபாசனை. அதற்கு உரிய ஆசிரியர்களிடமிருந்து மந்திர உபதேசம் பெறவேண்டும். அதற்குரிய சடங்குகளும் நெறிகளும் உண்டு. உபாசனை செய்பவர்கள் பிறதெய்வங்களை வழிபடலாகாது. பிறவழிபாட்டு முறைகளுக்குள் செல்லலாகாது. உதாரணமாக சைவ தீட்சை எடுத்தவர்கள் பெருமாளையோ பிற தெய்வங்களையோகூட வழிபடக்கூடாது. அது பிழை.

இவர்களன்றி தாங்களே இஷ்டதெய்வ வழிபாடு செய்பவர்கள் சிலர் உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வம், குறிப்பிட்ட வழிபாட்டுமுறைக்குள் நின்றுகொண்டு நெறிகளையும் முறைமைகளையும் பேணுபவர்கள். அவர்களும் பிறவழிபாடுகளுக்குள் செல்லாமலிருப்பது நன்று. ஆனால் பிழை அல்ல.

ஆனால் இவர்கள் மிகச்சிலரே.  எஞ்சிய இந்துக்கள் பலதெய்வ வழிபாட்டுமுறை கொண்டவர்கள். அவர்களின் அன்றாட வழிபாடுகளே பல அடுக்குகளால் ஆனவை. குலதெய்வம், குடித்தெய்வம், ஊர்த்தெய்வம் என நாட்டார் தெய்வங்களின் அடுக்கு ஒன்று. பெருந்தெய்வங்களின் அடுக்கு ஒன்று. இவ்விரண்டுக்கும் மேலே ஊழ்கம், யோகம் என அருவமான தத்துவத்தெய்வத்தை அணுகும் இன்னொரு அடுக்கு.  ஓர் இந்துவுக்கு இவற்றுக்கு நடுவே முரண்பாடு இல்லை. இவை ஒன்றையொன்று நிரப்புவன.

ஏனென்றால் இறை என்பது அருவுருவான ஒன்று என்றும், அத்தனை தெய்வங்களும் அதன் வெளிப்பாடுகளே என்றும் அவன் அறிவான். இறைமையின் வெளிப்பாடுகள் அனைத்தையும் வழிபடுவதையே அவனுடைய மதம் அவனுக்கு கற்பிக்கிறது. அதில் பேதம் ஏதும் இல்லை. இந்து மதத்தின் சாராம்சமாக அமைவது வேதாந்தமே. அது அனைத்து மெய்ஞானங்களாகவும் அறியப்படுவது பிரம்மமே என்று உரைக்கிறது. ஆகவேதான் ராமகிருஷ்ண மடத்திலோ நாராயணகுருகுலத்திலோ கீதையுடன் பைபிளும் குரானும் ஓதப்படுகின்றன. ஊட்டியில் கபாலா ஓதப்படுவதையும் நான் கண்டிருக்கிறேன்.

தர்கா இஸ்லாமிய மதத்திற்குள் உள்ள ஓர் தனி வழிபாட்டு முறை. இறையறிந்த மெய்ஞானியரின் திகழ்விடத்தை வழிபடுவது அது. சிலர் சொல்வதுபோல இறந்தவர்களை வழிபடுவதல்ல அது. கல்லறை வழிபாடும் அல்ல. அவர்கள் அடைந்த மெய்ஞானத்தை வழிபடுவதுதான். அதன் தொடர்ச்சியை உள்வாங்கிக் கொள்வதுதான். ஒரு மெய்ஞானி திகழ்ந்த இடம் அவரே என்பதனால் அங்கு சென்று வழிபடுவது அவரை அணுகி அறிவதற்கு நிகர். அவ்விடத்தில் தலைதாழ்த்தி வணங்குவது நாம் நம் சிதறல்களை, சிறுமைகளை உணர்ந்துகொள்ளவும் அதனூடாக நம்மை தூய்மைசெய்து கொள்ளவும் வழியமைக்கிறது.

இறைவன் முன் மானுடர் அனைவரும் நிகரே. ஆனால் அனைவரும் இறையறிதலை முழுமையாகச் சென்றடைவதில்லை. அதற்காக முழு வாழ்க்கையையும் அளிப்பதில்லை. அதன்பொருட்டு பிற அனைத்தையும் துறப்பதில்லை. சில அம்புகளுக்கு விசை மிகுதி. சில பறவைகளுக்குச் சிறகுகள் பெரியவை. முழுமையறிவு அரிதாகச் சில மானுடரிலேயே நிகழ்கிறது. அவர்களையே ’இறைநேசர்கள்’ என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஓர் இந்துவுக்கு அவர்கள் இறையை அறிந்து அருகமைந்தவர்கள். ஆகவே இறையருளை அளிக்கும் மையங்கள். அவர்கள் வாழ்ந்த இடம், அமைந்த இடம் அவ்வகையில் முக்கியமானது. வழிபடற்குரியது.

அஜ்மீர் தர்கா இஸ்லாமியர்களுக்கு இணையாகவே இந்துக்களாலும் ஐநூறாண்டுகளாக வழிபடப்படுகிறது. அதை கட்டியவர்களில் இந்து மன்னர்களும் பலர் உண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான தர்காக்களில் வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களே. அது ஐந்துநூற்றாண்டுகளாக இங்குள்ள மரபு. மெய்ஞானியர் எவராலும் அது விலக்கப்படவில்லை. மாறாக ஏற்கப்பட்டு பரிந்துரைக்கவும் பட்டுள்ளது.

இதற்கும் அப்பால் ஒன்றுண்டு, அது வேதாந்த மரபினர்களுக்குரிய முதன்மையான அறைகூவல். வேதாந்தம் முன்வைக்கும் இறையுருவகம் என்பது அருவமானது, அனைத்து அறிதல்களையும் கடந்த ஒன்று. ஆனால் அதை இங்கே முன்வைத்துப் பேச உருவமும் உருவகமும் தேவை. அழகும் ஆழ்பொருளும் வேதாந்தத்தின் நோக்கில் பிரம்மத்தின் முகங்கள். கலையும் இலக்கியமும் அதன் வெளிப்பாடுகள். ஆகவே உருவவழிபாடு வேதாந்திகளுக்கு ஏற்புடையதே. சங்கரர் முதல் நாராயணகுரு வரை சிவனையும் விஷ்ணுவையும் காளியையும் எல்லாம் பாடியிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு வேதாந்த மரபில் இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒன்று, வடிவத்தெய்வத்தை வழிபடும் பாடலிலேயேகூட அதை அருவப்பேரிருப்பு என சிறப்பிக்கும் வரியும் இடம்பெற்றாகவேண்டும். இரண்டு, உருவ வழிபாட்டில் உணர்வுகள் எல்லை கடக்குமென்றால் அருவவழிபாட்டுக்கு உடனே திரும்பிச் சென்றாகவேண்டும்.

வெண்முரசின் உச்சங்கள் வழியாக நான் உணர்வுசார்ந்த எல்லைகள் சிலவற்றை கடந்தேன் என நினைக்கிறேன். குறிப்பாக கண்ணன் பற்றிய வரிகளில். ஆகவே இந்தப்பக்கம் செல்ல வேண்டியிருந்தது. இது நானே விளக்கமளிப்பது. இது ஒரு தர்க்கபூர்வ புரிதலாக இருக்கலாம். ஆழத்து தேவை என்னவென்று என்னால் சொல்ல முடியாமலிருக்கலாம்.

போர்க்களத்தை எழுதி முடித்ததுமே ஒரு கனவு வந்து தன்னந்தனியாக கேரளத்தில் உள்ள பாச்சல்லூர் குளத்திங்கரை பகவதி கோயில்  சென்று வணங்கி வந்தேன். அங்கே மிகமிகத் தீவிரமான ஓர் அனுபவத்தை அடைந்தேன். அங்குள்ள மூத்தோள் சன்னிதியில் நான் அறிந்தது எவரையும் உருவடிவ தெய்வ வழிபாட்டில் ஆழ அமிழ்த்திவிடும் மெய்நிகர் அனுபவம். சாவுக்கு அப்பால் என எப்போதுமிருக்கும் வினாவும் திகைப்பும் அன்று இல்லாமலாகியது. இதற்கப்பால் சொல்ல விரும்பவில்லை. இது அதைப்போன்ற ஒரு பயணம். ஒரு மறுதிசை.

அனைத்துக்கும் அப்பால் கலைஞனாக என் தேவை ஒன்று உண்டு. அஜ்மீரின் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்கள் இந்திய மெய்ஞானமரபிற்கு மட்டுமல்ல இந்திய இசைமரபுக்கும் கலைமரபுக்கும் மிகமிக முக்கியமான ஒரு தொடக்கப்புள்ளி. பெருங்கவிஞர். மாபெரும் இசைக்கலைஞர்களின் அறுபடாத ஒரு பெருமரபு அவரிலிருந்து இன்றுவரை நீண்டு நம் முன் பெருகி நின்றிருக்கிறது. இந்தியாவின் கிருஷ்ணபக்தி மரபு இந்திய இசைக்கு என்ன அளித்ததோ அதற்குச் சற்றும் குறைவில்லாதது அது. இந்தியநிலத்தின் கலைப்பேராறுகளில் ஒன்றின் ஊற்றுமுகம் அஜ்மீர்.

நான் இந்நாட்களில் என் தலைமுழுக்க பித்தின் இனிய மதுவை நிறைத்துக் கொண்டிருக்கிறேன். என் உடலே மெல்லிய மின்னதிர்ச்சிகள் நிகழ்வதுபோல நடுக்கம் கொண்டிருக்கிறது. இரும்பை நாநுனியால் தொட்டால் உணர்வது போன்ற ஒரு கூச்சமா இனிமையா என்றறியாத சிலிர்ப்பு அது. எவையெவையோ எண்ணங்களாகி என் மேல் நீர்நிலைமேல் தென்றலென கடந்துசென்றபடியே இருக்கின்றன. நான் சிஷ்டி அவர்களின் பாடல்களை வாசிக்கையில் உருகி அவர் அடிகளில் படிந்துவிடுகிறேன். என் விம்மும் தலையை அவர் காலடியில் ஒருகணம் வைத்து எடுத்தாகவேண்டும் என விழைந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
அடுத்த கட்டுரைபுவியரசு 90, நிகழ்வு அழைப்பு