வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். ஒரு நல்ல தகவலை நமது இலக்கிய வாசக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இங்கே திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் ஸ்வாமி பரமஹம்ஸானந்த சரஸ்வதி அவர்கள் பல துறவிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் மற்றும் தீவிர ஆர்வமுள்ள அன்பர்களுக்கும் முறையாக வேதாந்த வகுப்புகளை தமிழில் எடுத்து வருகிறார். அவருடைய வகுப்புகள் அனைத்தும் நூல்களாக அவராலும் மற்றும் அவருடைய மாணவர்களாலும் ஒருங்கிணைந்து தொகுக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பதினோரு முக்கிய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை என அனைத்திற்கும் சங்கர பாஷ்யத்தின் அடிப்படையில் இனிய தமிழ் நடையில் நூல்கள் வந்துள்ளன. கேன மற்றும் ஈசாவாஸ்யம் என இரண்டு புத்தகங்களையும் நான் முழுமையாக வாசித்துப் பார்த்து அதன் எளிமை மற்றும் ஆழம் கண்டு உள்ளத்தில் உவந்தேன். வேதாந்த வாசிப்பில் ஆர்வமுள்ள அன்பர்கள் ஸ்வாமி பரமஹம்ஸானந்த சரஸ்வதி சுவாமிஜி அவர்களை தொடர்பு கொண்டு வேண்டிய நூல்களை தபால்வழி பெற்றுக்கொள்ளலாம்.
பலர் அவருடைய நூல்களை படித்து பேரார்வம் கொண்டதன் காரணமாக இந்த விஜயதசமி முதல் அவர் இணையவழி வகுப்புகளை அடிப்படை வேதாந்தத்தில் இருந்து துவங்கி இலவசமாக வழங்க இருக்கிறார். தினம் ஒரு மணி நேரம் வகுப்பு இருக்கும். தீவிர ஆர்வம் உள்ள அன்பர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை வகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். தேவையற்ற நபர்களின் இடையூறுகளைத் தவிர்க்க சுவாமிஜி அவர்கள் அடிப்படை உரையாடலுக்குப் பிறகே அழைத்தவரின் ஆர்வம் மற்றும் தகைமையை பொறுத்து அவர்களை வகுப்பில் இணைத்துக் கொள்வதற்கான இசைவை அளிப்பார். எனது பல ஆண்டு கால துறவு வாழ்வில் நான் கண்ட எளிய இனிய உன்னதமான வேதாந்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர். வேதாந்தம் பயில தீவிர விருப்பமுள்ள நமது நண்பர்கள் சுவாமிஜி அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆர்வமும் தேவையும் அதற்கான தகுதியும் நேரமும் உள்ள எவருக்கேனும் இந்த தகவல் பயன்படும் என்ற அன்பின் காரணமாகவே இதை பகிர்கிறேன்.
தொடர்புக்கு:
ஸ்வாமி பரமஹம்ஸானந்த சரஸ்வதி
82/11 மணக்குள விநாயகர் தெரு,
விசிறி ஸ்வாமி ஆசிரமம் சாலை
ஸ்ரீ ரமணாஸ்ரமம் PO
திருவண்ணாமலை 606603