சொல்லுரைத்துச் செயல்காட்டி…கடிதங்கள்

அன்புள்ள ஜெ

வெண்முரசு இசைக்கோலம் பற்றி எழுதிய பல கடிதங்கள் அதை அப்படியே நீலத்துடன் சம்பந்தப்படுத்தியிருந்தன. நீலம் வாசித்த உணர்வை அவை எழுப்பின. ஆனால் அவை வெண்முரசின் நிறைவில் முதலாவிண் பகுதியில் வரும் பிள்ளைத்தமிழ். கண்ணன்பிள்ளைத்தமிழ்.

நீங்கள் உங்கள் ஏற்புரையில் சொன்னீர்கள், மகாபாரதத்தின் மெய்மையின் வெறுமையை வெற்றிக்கொள்ள எழுதியது என்று. ஒரு வட்டம் சுழன்று அத்தனைக்குப்பின்னரும் நீலத்துக்கே வெண்முரசு சென்று நின்றுவிட்டது.

எனக்கு அதில் பிடித்த வரி இது. ”களியாடும் கன்னியர் தோழியர் கையிலெடுத்து கழற்சியாடும் மாமலை” மாமலை. ஆனால் கன்னியரும் தோழியரும் கையில் எடுத்து வீசி சுழற்றி கழச்சி ஆட அனுமதிப்பது. கண்ணனைப்பற்றிய அற்புதமான வரி அது.

ராஜன் சோமசுந்தரம் உள்ளுணர்ந்து உருகி இசை அமைத்திருக்கிறார். உச்சங்களில் குரலும் இசையும் இணையும் விதம் பெரும் கொந்தளிப்பை உருவாக்குகிறது. கடைசியில் அந்த அமைதியும் நெஞ்சை நிறைக்கிறது

சாரங்கன்.

அன்புள்ள ஜெ

ராஜன் சோமசுந்தரம் இசையில் வெண்முரசு இசைக்கோலம் அற்புதமாக உள்ளது. கேட்டுக்கொண்டே இருந்தேன். முதலாவிண் பகுதியில் உள்ள நீலம் நாவலின் நீட்சி. நீலம் நாவலையே இசையுடன் கேட்டதுபோலிருந்தது. ஆனால் இந்த தாலாட்டு வேறுவகையானது. ”சொல்லுரைத்து செயல்காட்டிச் சென்ற அரசே, இங்கு சொல்லவிந்து செயலமைந்து மயங்குக” என்ற வரி கீதை சொல்லி, போர்முடித்துச் சென்ற கிருஷ்ணனுக்கே பொருந்தும் இல்லையா?

அர்விந்த்

அன்புள்ள ஜெ,

ராஜன் சோமசுந்தரம் நன்றிக்குரியவர். இரவுமுழுக்க நீலம் ஓடிக்கொண்டே இருந்தது. அன்னை பாடும் பிள்ளைத்தமிழ். ”பறக்கும் கருவறையே தொட்டிலென்றறிக! அங்கே நீ காணும் கனவுகளில் உடன் வந்தாடும் அந்த மழலைச்சிறுமியே உன் அன்னையென்றுணர்க!” என்ற வரியை என் அம்மாவிடம் ஒருநாள் சொன்னேன். அழுதுகொண்டே கைகூப்பிவிட்டாள். தொட்டிலில் கண்ணன் காணும் கனவுக்குள் அவன் அம்மா யசோதையே ஒரு சிறுமியாக வந்து கூட விளையாடுகிறாள்.

சைந்தவியின் குரலும் உணர்ச்சியும் மட்டும் அல்ல அவருடைய பாவங்களும் கையசைவுகளும்கூட அற்புதமானவை. கேட்டுக்கொண்டே கைகூப்பிவிட்டேன்.

நாகராஜ்

அன்புள்ள ஜெ

கண்ணன் பிள்ளைத்தமிழில் ஒரு வரி ”விழிவிரித்து மகிழ்ந்து, தன் விழியெண்ணி அஞ்சி, அன்னை கொள்ளும் அலைவுக்குச் சப்பாணி கொட்டி அருள்க” பிள்ளையை பார்த்து மலைத்து, உடனே தன் கண்படுமோ என எண்ணி அஞ்சி அம்மா கொள்ளும் அலைக்கழிப்பு அதை அடைந்தவர்களுக்கு தெரியும். என் கண்கள் படக்கூடாது என்றுதான் வேண்டிக்கொள்கிறேன்

ஆர். ஜெயலக்ஷ்மி

https://music.apple.com/in/album/a-musical-tribute-to-venmurasu/1589737305

 

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம், மதிப்புரை
அடுத்த கட்டுரைவேலிகள்- அருண்மொழி நங்கை