காத்தருள்க என் மகவை- கடிதங்கள்

அன்பு நிறை ஜெ

கண்களில் நீர் கோட்காமல் இந்த கடித்ததை என்னால் எழுத முடியவில்லை. எண்ணற்ற பொழுதுகளில் எழுத்தால் உடைந்தெழுந்துருக்கிறேன்.இயல்பற்று அடிக்கடி கண்களில் நீர்சிக்கும் எண்ணற்ற பொழுகளை உங்கள் எழுத்துஅளித்துள்ளது.

தொடக்கம் முதலே என் கண் உங்களை விட்டு அகலவில்லை.சைந்தவி பாடிமுடித்த அந்த நொடிப்பொழுதில் கண்ணாடியை அகற்றி விரல்களால்கண்துடைத்தீர்கள் .உணர்ச்சிபெருநிலையில் நீலம் மலர்ந்த பொழுதில் இருந்த உளகொந்தளிப்புக்கு உங்கள் மனம் சென்றுவந்திருக்கும் .

இன்று இங்கு பங்கெடுத்து இந்த மாபெரும் கலைபடைப்பின் முன்பு அதன் பக்தனாக ஆகாமல் அதை அறிதற்கியலாது என்றுணர்ந்தேன்.தன்னை உடைத்து வார்க்காதவனுக்கு ஆன்மீகம் இல்லை , ஒரு நுண் தத்துவத்தை, ஒருகலைஅழகை உணரும்  உணர்கொம்பு என்பது எந்த உடலுறுப்பை விடவும் மகத்தானது. மிகமிகஅபூர்வமானது. பிற கோடானுகோடிகளை விட மேலான இடத்தில் ஒருவனை நிறுத்துவது. அவன்தன்னை ஆக்கிய வல்லமைக்கு என்றென்றும் நன்றிகூறவேண்டியது.

நன்றி

ரகுபதி கத்தார்.

அன்புள்ள ஜெ

கண்ணானாய் காண்பதும் ஆனாய் என்னும் வரி வண்டு ரீங்கரிப்பதுபோல சுழன்றுகொண்டே இருக்கிறது. நீலம் வாசித்த நாட்கள் கனவுபோல சென்றுவிட்டன. நான் என் மனைவியிடம் சொல்வதுண்டு, அது ஒரு ஹனிமூன் காலகட்டம் என்று. திரும்பி வராத கனவு. கொண்டாட்டம், பரவசம். பிறகு அந்த அனுபவம் வருமா என்று தெரியவில்லை. ஆனால் கையில் எடுக்க பயமாக இருக்கிறது. எடுத்தால் மீண்டும் அந்தப் பித்துநிலைக்கே சென்றுவிடுவோம் என்று தோன்றுகிறது. அந்த ஹனிமூன் மயக்கம், பித்து எல்லாம் மீண்டும் ஒரே கணத்தில் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. இனி கொஞ்சநாள் இதே மனநிலைதான். வரமா சாபமா என்றே தெரியவில்லை. மண்டை முழுக்க கிறுக்கு நிறைந்திருக்கிறது.

என். ராகவேந்திரன்

அன்புள்ள ஜெ,

நீலம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை. நான் படிப்பு படிப்பு என்றே வாழ்க்கையை விட்டவன். அதன் பிறகு வேலை. வேலையிலேயே மூழ்கி வெற்றியும் அடைந்தேன். வெண்முரசு கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக்கொண்டிருந்தேன். கொரோனா காலத்தில் நீலம் வாசித்தேன். ஒருமாதம் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை. இன்னொரு கட்டுரையில் சொல்வீர்களே கிருஷ்ண மதுரம் என்று அந்த உன்மத்தநிலையை அடைந்தேன்

கிருஷ்ணபக்தி அல்ல இது.இங்கே மனிதன் அடைவதற்கு எவ்வளவு பேரின்பங்கள் உள்ளன என்று காட்டும் ஒரு நிலை. புலன் இன்பங்களும் கனவுகளும். அழகு அழகு அழகு என்று மனசு பினாத்துமே அந்த நிலை. அதை அடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. இனி சலிப்பு கிடையாது. எவர்மேலும் புகார் கிடையாது. எனக்கு இந்த உலகவாழ்க்கை எதையுமே தரவேண்டியதில்லை. ஒரு சூரிய உதயமே போதும்.

நான் அதன்பிறகு பெரிதும் சிறிதுமாக பல பயணங்களை மேற்கொண்டேன். பல பரவசங்கள். ஒருநாள் ஒரு நீலநிற வண்டு என் வீட்டில் பால்கனி பூச்செடியில் இருந்தது. பளிச்சிடும் நீலம். எங்களூரில் ஆனந்தாப்ளூ என்பார்கள். நீலத்தழல்மணி என்று நெஞ்சு அப்படியே பொங்கிவிட்டது. நீலம் போல பேரழகு பிறிதில்லை என நினைத்தேன்.

இன்றைக்கு நீலம் இசைக்கோலம் கேட்டேன். கேட்டுக்கேட்டு பைத்தியமாக அமர்ந்திருக்கிறேன். மாயையிடம் தன் குழந்தையைக் காக்கும்படி கோருகிறாள் யசோதை.

இரண்டென்று எழுந்த மயக்கே
இங்கு இன்று இவ்வண்ணமென்று அமைந்த சழக்கே
இனியென்று ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே
யானென்று எனதென்று எழுந்த பெருக்கே
தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே
மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே
வாழ்வென்று சாவென்று காட்டும் பசப்பே
காத்தருள்க என் மகவை!
கதிரை காத்தமைவது இருளின் பொறுப்பென்று உணர்க!

முதலாவிண் 16

இருளின் பொறுப்பு ஒளியை பேணிக்கொள்வது. மெய்மையை பேணிக்கொள்வது மாயையின் பொறுப்பு. அந்த வரியில் வெண்முரசு முடியும்போது உருவான அந்த மனக்கொந்தளிப்பும் அதன் பிறகு உருவான அமைதியும் இன்னமும் நீடிக்கிறது

ராஜன் சோமசுந்தரத்துக்கு நன்றி

ஆர்.என்.சுந்தர்ராஜன்

முந்தைய கட்டுரைவெற்றி – கடிதம்
அடுத்த கட்டுரையானை முந்திவிட்டது