சவரக்கத்திமுனைப் பாதை
[இக்கடிதம் நான் பெரிதும் மதிக்கும் துறவி ஒருவருக்கு எழுதப்பட்டது. அவர் வேதாந்த நூல்களைக் கற்பிக்கும் இன்னொரு துறவி ஒருவரைப் பற்றிய செய்தியை எனக்கு அனுப்பி அதை பகிரும்படி கோரியிருந்தார். அத்துறவியின் கல்வி முழுமையானது என்றும், மொழி தெளிவானது என்றும் சொல்லியிருந்தார். அவருக்கு நான் அளித்த மறுமொழி இது]
அன்புள்ள சுவாமி அவர்களுக்கு,
இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதற்கு முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த காலத்தில் இதேபோல சில வேதாந்த ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளை, மதக்கல்வி அளிப்பவர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருக்கிறேன். நம் நண்பர்கள் ஆர்வத்துடன் சென்றுமிருக்கிறார்கள். ஆனால் ஒரு மாதத்திற்குள் அவர்கள் அனைவருக்கும் ஒன்று தெரியவரும். அந்த ஆசிரியர் கடுமையான சாதிநோக்கு கொண்டவராக இருப்பார். பிராமணர்களுக்கு இது, மற்றவர்களுக்கு அது என்று பேசுவார். உயர்சாதிக்கே ஞானமும் மீட்பும் உண்டு, மற்றவர்கள் பக்தி வழியாக மறுபிறப்பில் உயர்சாதியாக பிறப்பதே ஒரே வழி என்பார்.
குறிப்பாக கீதை உரையில் சாங்கிய யோகம் வரும்போது இப்பேச்சு தொடங்கும். மெய்நூல்களான சுருதிக்களுடன் எளிய ஸ்மிருதிகளையும் ஆசாரநூல்களையும் இணைத்துக்கொள்வதில் வளரும். ஒரு கட்டத்தில் நேரடியாகவே பிராமண மேலாதிக்கம், மற்றவர்களுக்கு முக்திக்கான முழுத்தகுதி இல்லை என்ற அளவில் பேச்சு உருவாகும். கசப்படைந்து நண்பர்கள் விலகுவார்கள். என் வாசகர்களில் தலித் நண்பர்கள் பலர் உண்டு என அறிந்திருப்பீர்கள். குலத்தால்தான் குணம் அமையும், குலக்கலப்பு கூடாது, தாழ்ந்தகுலத்தில் பிறந்தால் சரணாகதியும் பக்தியும்தான் வழி, ஞானம் அல்ல என்றெல்லாம் இவர் பேசினால் அவர்கள் கொதிப்படைவார்கள். அவர்கள் என்னிடம் வந்து முறையிடுவார்கள். நான் சமாதானம் செய்யவேண்டும். நான் பரிந்துரை செய்த ஒருவர் சொல்வது நானே சொல்வதாக எடுத்துக் கொள்ளப்படும். அது இயல்பும்கூட.
மிக நல்ல வாசகர் சிலர் இரண்டு ஆண்டுக்கு முன் நான் என்ன சொன்னாலும் நிறைவடையாமல் நிரந்தரமாக பிரிந்து சென்றனர். அது என் உள்ளத்தில் ஆழ்ந்த வடு. அவர்களை நானே சிறுமை செய்ததாகவே இன்று உணர்கிறேன். ஆகவே நான் மிகக்கவனமாக இருக்கிறேன். வேதாந்தநூல் ஞானம், சம்ஸ்கிருத ஞானம் பெரிய தகுதி அல்ல. மெய்யான அகக்கனிவை அடையாமல் பெறப்படும் அக்கல்வி ஒரு பெரிய கொலை ஆயுதம்போல அத்தகையோர் கையில் திகழ்கிறது. அறவுணர்வால் தெளிந்து, பெருங்கருணையால் தூய்மையாவதே ஞானத்தின் பெறுபொருள். புலமைக்கு மதிப்பு வருவது அப்போது மட்டுமே. அது இல்லாத புலமை ஒரு வகைநோய். தொற்றுநோயும்கூட. “கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்” என நம் ஞானி சொல்லி பதினைந்து நூற்றாண்டுகளாகின்றன. அறவுணவும் கருணையும் இல்லாத மூளை என்பது ஒரு புற்றுநோய்க் கட்டியில் இருந்து வேறல்ல.
மரபுநூல்களை ’அப்படியே’ கற்று ‘அப்படியே’ ஏற்கிறோம் என்னும் பாவனை இங்குண்டு. அப்படியே ஏற்றால் இன்று எவரும் வாழமுடியாது. ஆகவே தேவையான எல்லா சமரசங்களையும் தங்களுக்காக அவர்கள் செய்துகொள்வார்கள். ஆனால் தங்களுக்கு வசதியான, தங்கள் நலன்களுக்கு உகந்தவற்றை மட்டும் மூலநூல்களைச் சுட்டிக்காட்டி, மூத்தோர்சொல்லை மாற்றக்கூடாது என வாதிட்டு ஆசாரவாதம் பேசுவார்கள்.
ஆசாரவாதம் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் உதவுகிறது என்றால், அதை அவர் பற்றுகோலெனக் கொண்டிருக்கிறார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கை, அவர் கொண்ட வழி. அதனுடன் நான் உரையாட மாட்டேன். பொதுவெளிக்கு வந்து பிறரை சிறுமைசெய்ய முற்படாதவரை அது எப்படி இருந்தாலும் என் பிரச்சினையும் அல்ல. ஆனால் ஆசாரவாதத்தை மெய்ஞானத்துடன் ஒருவர் கலந்தால் அதை மறுத்தாகவேண்டும். ஆசாரவாதம் அடிப்படையில் உலகியல் சார்ந்தது, தன்னலம் சார்ந்தது, தேங்கிப்போனது. மெய்ஞானத்தை அது மலினப்படுத்துகிறது. மெய்ஞானம் என்பது ஒரு பரிணாமம், ஒரு மலர்வு. ஆசாரவாதத்தில் நகர்வும் மலர்வும் இல்லை.
மெய்ஞானத்துக்கும் உலகியல் அறத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்வதே இன்றைய ஆன்மிகக்கல்வியில் முக்கியமான அம்சம். உலகியல் அறம் என்பது காலந்தோறும் மாறுவது, மாறியே ஆகவேண்டியது. மெய்ஞானநூல்கள் கற்பிப்பது உலகியல் நெறியையோ தன்னலவழியையோ அல்ல. மெய்ஞான நூல்கள் ஆசாரங்களை வகுத்துரைப்பன அல்ல. ஆணைகளை விடுப்பவை அல்ல. உய்த்துணர்வதற்கான சொற்களை மட்டுமே அவை முன்வைக்கின்றன. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வெளிப்படுத்துகின்றன, வெளிப்படுத்தப்பட முடியா விரிவு அவற்றுக்கு அப்பால் நீண்டுகிடக்கிறது.
அவற்றை உய்த்துணர்வதே மெய்ஞானக் கல்வி. அதற்கே ஞானியர் அணுக்கமும் கற்றோர் வழிகாட்டலும் தேவை. கால இடத்துக்கு என மாறாதது மட்டுமே மெய்ஞானம் என்னும் தெளிவை அதன் விளிம்பைத் தொட்டவர்களே அடைந்துவிட்டிருப்பார்கள். அத்தகையோரை நான் கண்டிருக்கிறேன், அடிபணிந்து அமர்ந்திருக்கிறேன் கால. இடம் கடந்த மெய்ஞானம் ஒரு காலஇடச்சூழலில் மொழியில் வெளிப்பட்டமைதான் மெய்ஞான நூல்கள் எனப்படுகின்றன. ஆகவே அவற்றை கற்பதல்ல, கற்றபின் செல்வதே மெய்ஞானப்பயணம்.
மெய்ஞானத்தை உணர்த்தும் நூல்களே சுருதிகள், ஆணைகளையோ வழிகாட்டுதல்களையோ அளிப்பவை ஸ்மிருதிகள். ஸ்மிருதி என்பது ஒரு நூலின் இயல்பிலிருந்து வரும் அடையாளம். எந்த ஸ்மிருதியும் கால இடத்துக்கு உட்பட்டது. ஒவ்வாமலாகும் கணமே தூக்கி வீசப்படவேண்டியது. சுருதிகளில் இருந்து தெளிவை அடைபவரால் ஸ்மிருதிகளை நிராகரிக்கமுடியும். நிராகரித்த ஞானிகளை ஏற்று ஒழுகுவதும் இயலும். ஸ்மிருதிகளில் சிக்கி நின்றிருப்பவர்கள் வெறும் ஆசாரவாதிகள். எல்லா மதங்களிலும் காலந்தோறும் ஞானிகள் தோன்றி மெய்மையை ஆசாரவாதத்தின் பிடியிலிருந்து மீட்க முயன்றுகொண்டே இருக்கிறார்கள். அவ்வண்ணம் மீட்டுக்கொண்டேதான் இருக்கவேண்டும்.
[இது மதங்களுக்கு மட்டுமல்ல, எந்தச் சிந்தனைக்கும் பொருந்துவதே. மார்க்ஸியத்தையே எடுத்துப் பாருங்கள், அதன் சம்பிரதாயவாதிகளின் பிடியில் இருந்து அதன் சாரமான தரிசனத்தை மீட்கும்பொருட்டே அத்தனை புதியசிந்தனையாளர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏனென்றால் நடைமுறைக்கு வரும் எந்த மெய்மையும் உடனே உலகியல்நோக்கி புரிந்துகொள்ளப்பட்டு, காலப்போக்கில் சம்பிரதாயங்களாகவும் ஆசாரங்களாகவும் இறுகிவிடும். ]
இன்றைய அறவியல் மானுடசமத்துவத்தால் ஆனது. அதை மெய்ஞான நூல்களை கற்பிப்பவர் முழுமையாக உணர்ந்திருக்கிறாரா என்பது முக்கியம். மிகப்பெரும்பாலும் அப்படி இல்லை. துறவியர் மற்றும் மெய்யியல் நிறுவனங்களை நடத்துபவர்கள் என அறியவருபவர்களிலேயே கற்ற கல்வியை முழுக்க, ஆற்றிய நோன்புகளை முழுக்க, அடைந்திருக்கும் பதவிகளை முழுக்க தன் சொந்தசாதியின் மேன்மையை நிரூபிக்கவும் நிறுவுவவும் மட்டுமே பயன்படுத்திவருபவர்களே இங்கே மிகுதி. மெய்யியலை கற்பிப்பவர்கள் என தோன்றுபவர்களிலேயே தனக்கு பிறப்பால் ஒரு படி மேலதிகத் தகுதி உண்டு என்று எண்ணிக்கொள்பவர்கள் உண்டு
அவ்வெண்ணம் ஒரு துளி இருந்தால், ஒரு சாயல் தெரிந்தால்கூட அவர் அடைந்திருப்பது ஞானம் அல்ல, மாபெரும் இருள் என்றே பொருள். மீட்பில்லாத அகழி அது. அறியாமையும் பழியும் கொண்டு வாழும் தீயூழ் கொண்ட எளியமக்களுக்காவது மீட்புண்டு. இவர்கள் கற்ற கல்வியால் மாபெரும் சுவரை தாங்களே கட்டி தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டவர்கள். ஆகவே ஒருபடி கீழானவர்கள். அத்தகையோரிடம் நான் என்னை நம்பி வந்து வாசிக்கும் என் வாசகர்களைச் செலுத்துவேன் என்றால் அவர்களுக்கு பெருந்தீங்கு இழைப்பவன் ஆவேன்.
ஆகவே இப்போது மிகக்கவனமாக இருக்கிறேன். எந்த துறவியானாலும், எந்தப் பண்டிதரானாலும், அவர் என்ன கற்பிக்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்கிறேன். அவருடைய மெய்யான தகுதி என்ன என்பதை மதிப்பிடுகிறேன். என் முதல் அளவுகோல் அவருடைய அறவியல் என்ன என்பதே. மானுடரில் பேதம் பார்ப்பவர் என்றால், ஒரு அணுவேனும் அவ்வெண்ணம் கொண்டவர் என்றால், அதன்பின் அவரை ஒரு பொருட்டென எண்ணுவதில்லை. அவருடைய இருள் என்னை தொட்டுவிடலாகாது, என் அகப்பயணங்களையும் பயிற்சிகளையும் மலினப்படுத்திவிடலாகாது என்றே கவனம் கொள்வேன். அவரை எந்நிலையிலும் வணங்க மாட்டேன். வெறும் முகமன் கூட அவருடன் உரையாடமாட்டேன். ஏனென்றால் நாம் பல ஆண்டுக்கால ஊழ்கத்தால் எய்தியவற்றை அவர் ஒரே கணத்தில் அழித்துவிடக்கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன் என் இல்லத்திற்கு நான் மதிக்கும் ஒரு துறவியுடன் இன்னொரு துறவி வந்திருந்தார். அவர் பின்னாளில் ஒரு பெரிய ஆன்மிக நிறுவனத்தின் தலைமையில் இருந்து சமீபத்தில் இறந்தார். தீவிரமான சாதிநோக்கு கொண்டவர். அன்று அது எனக்கு தெரியாது. ஆனால் அன்று அவருடைய அருகமைவு என் நுண்ணுணர்வுகளை கூசவைத்தது. ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு கிரிமினல் என் வீட்டுக்கு வந்துவிட்டதைப்போல. பின்னர் இணையத்தில் அவர் உரைகளை கேட்டேன், இழிந்த சாதியவாதம் பேசிக்கொண்டிருந்தார். அவரை சந்திக்க நேர்ந்ததை ஈடுசெய்ய நான் உடனே ஊட்டி குருகுலம் சென்று நித்யாவின் நிறைவிடம் அருகே அமரநேர்ந்தது.
நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நடுங்கும் சுடரை பொத்திக் கொண்டு செல்வதைப்போல. என்னை இலக்கியவாதி என ஏற்பவர்களுக்கு அந்த ஒளியை மட்டுமே அளிக்கவேண்டும். அதுதான் என் உறுதி
ஜெ