வெண்முரசு, சிகாகோ- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ

செப் 26 ஞாயிறு அன்று சிகாகோவில் வெண்முரசு ஆவணப்படம்  வெளியாகப் போகிறது என்றவுடன் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. சித்திரைத் திருவிழாவுக்கு வண்டி கட்டிச் செல்வது போல் நண்பர்களாய்ச் சேர்ந்து சிகாகோ சென்று சேர்ந்தோம்.

விஸ்கான்சின் பாலா, செயிண்ட் லூயிஸ் வெங்கட் ஆகியோரிடம் பலமுறை தொலைபேசியிருந்தாலும் இப்போதுதான் நேரில் பார்க்கிறோம். எங்கள் மூவருக்கு உள்ளும் இருக்கும் ஜெயமோகன் ஒருவரை ஒருவர் அணுக்கமாக உணர வைத்தார். அவர்கள் இருவரும் அவ்வளவு சுறுசுறுப்பு. திரையரங்கில் அனைவரும் குழுமிய பின் பாலா வரவேற்க, நான் உங்களைப் பற்றி சிறு அறிமுகம் தர, வெங்கட் நன்றியுரை கூறி முடிக்கவும் திரைப்படம் தொடங்கியது.

பனி படர்ந்த காலைப் பொழுதில் கதிரவன் ஒளியில் காட்சிகள் துலங்குவது போல் மென்மையாக ஆரம்பித்த இசை பிரம்மாண்டமாக பேருருவம் கொண்டு திரையரங்கை மூழ்கடித்தது. வெண்முரசு இசைக்கொண்டாட்டம் என்பது சரியான தலைப்பு. ராஜன் சோமசுந்தரம் அவர்கள் அமைத்த  இசையைப் பற்றி

பேசிக்கொண்டே இருக்கலாம். பொதுவாக இசையமைப்பாளர்கள் முதலில் சினிமாவில் காலூன்றி விட்டு பின்னர் மனநிறைவின் பொருட்டு கலைப்படங்களுக்கோ அல்லது சினிமா அல்லாத இசைச் சாதனைகளுக்கோ சென்று சேர்வார்கள். இவர் அப்படியே நேர் எதிர். எடுத்தவுடன் காலத்தால் அழியாத இலக்கியத்திற்கு அதிலுள்ள கவித்துவத்திற்கு தன் இசையைப் படைக்கிறார். அவர் மனதின் ஆழத்தில் தோன்றிய இசை நம் மன ஆழங்களுக்குள் சுழித்துப் பாய்ந்து பரவசம் தருகிறது.

அதிலும்”ஞானப் பெருவிசையே” என்று தொடங்கி “மோனப் பெருவெளியே இங்கு எழுந்தருளாயே” என கமல் பாடும்போது பின்னணி இசைக் கருவிகள் ஒன்றிணைந்து “திடும் திடும்” என விண்ணதிர மண்ணதிர உளமதிர நம்மை ஆட்கொள்ளுகிறது. கேட்டு நான்கு நாட்களாகியும் இன்னும் என்னிலிருந்து அகலவில்லை. ஸ்ரீராம் பார்த்தசாரதி “அமைக என் தலைமேல் அமைக என் புவிமேல்” என்று பாடும்போது கிருஷ்ணனின் மென்மையான பாதங்களை என் தலைமேல் உணர்ந்தேன்.அந்தக் கண்ணனும், கடல் அலையும்.

ராஜன் இசைக்கு நடனமாடுகிறார்களா அல்லது அவர்கள் நடனத்தைப் பார்த்து இவர் இசையமைத்தாரா என்று விழிமயக்கு ஏற்பட்டது. சில இடங்களில் அந்த சூழலுக்கு ஏற்ப சில இடங்களில் சிறு இசைத்துணுக்கை வாசித்திருப்பார். அரங்கா(அரங்கநாதர்) எழுந்தருளும்போது போது நாதஸ்வரம் வாசிப்பது முறைதானே!  அது போல பழங்குடியினர் பற்றி பேசும்போதும் அவர்களுக்கே உரிய இசைத் துணுக்கு அவர்களைக் கண் முன் கொண்டு வந்தது.மரங்கள் சூழ நீங்கள் மட்டும் கடற்கரையில். அன்று இதே போன்ற கடலின் அருகில் மனக்கொந்தளிப்புடன் நீங்கள் நின்றிருந்த காட்சி மின்னல் போல வெட்டி மறைந்தது. இதோ இன்று அலைகளுக்கு நடுவில் ஞானாசிரியனாய் விஸ்வரூபம் எடுத்து புன்னகையுடன் நிற்கிறீர்கள். நினைவில் அழியாது நின்ற காட்சி.

பெண்கள் அதிகமும் பங்கேற்றதே இந்த ஆவணப்படத்தின்  வெற்றிக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அடுத்தது வெண்முரசு பற்றிப் பேசியவர்களின் பார்வைகளும் பாவங்களும் அருமை. எடுத்துக்காட்டாக அமைதியாகக் கருத்தை முன்வைத்த தோழி ராதா, முப்பாட்டன் கதை என் முழங்கிய கமல்,  நோபல் பரிசுக்குரியவர் ஜெயமோகன் என்று  அழுத்தம் திருத்தமாக  இலங்கைத் தமிழில் இனிமையாகப் பகன்ற அய்யா அ. முத்துலிங்கம், வெண்முரசை குழந்தைகளிடம் ஊட்டி வளர்க்கும் லோகமாதேவி, வெண்முரசோடு ஒவ்வொரு நாளும் வாழும் சுபா,  புயலின்  விரைவுடன் பேசிய அருண்மொழி நங்கை, சிங்கம் போன்று சிரித்து முழங்கிய ஜெயகாந்தன், சிறு வயது துக்கத்தை ஆழ்ந்த குரலில் சொன்ன சிஜோ, வெண்முரசு கூறும் கலங்கள், நாவாய்கள் படி வியந்த சாகுல், வெண்முரசில் பெற்ற நன்மையை உணர்ச்சிபூர்வமாகக் கூறிய மீனா,பரிசுத்தமான வார்த்தைகள் பேசிய அசோகமித்திரன்,வெண் முரசின் சொற்களின் எண்ணிக்கையை கூறிய (வில்லுக்குப் பார்த்தன் போல் சொல்லுக்கு பேர்பெற்ற) நாஞ்சில் நாடன், வெண்முரசுவை ரயில் பயணத்தில் அனுபவித்த பழனிஜோதி, “humanist”என்று ஜெயமோகனைப் புகழ்ந்த அமெரிக்கப் பேராசிரியர்கள் என்று விதவிதமான பாவனைகளையும், பார்வைகளையும் அடுத்தடுத்து  அமைத்து நேர்த்தியாகத் தரமாக எடிட்டிங் செய்த எடிட்டர்  பாராட்டுக்குரியவர். நான் சொல்லாமல் விட்டது நிறைய.இறுதியாக ஒலித்த “வெண்முரசு தீம் மியூசிக்” தான் இந்த ஆவணப் படத்தின் உச்சம்.

ராஜனின் இசை சண்முகவேலின் ஓவியங்களுக்குள் புகுந்து பெண்மையின் கனிவும், கொடூரமும், போரின் உக்கிரமும், வாழ்வின் நிலையின்மையும் கண்முன்னே கொண்டு வந்தது தனிச்சிறப்பு. இசைக்கருவிகள் தனித்தும் , ஒன்றோடு ஒன்று இயைந்தும் நடத்திய வர்ணஜாலங்கள் முத்தாய்ப்பாக அமைந்தது நிறைவாக இருந்தது..இந்த ஆவணப்படத்தில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து திரைக்கதை, இசை, எடிட்டிங் என ஒவ்வொன்றிலும் கூடவே இருந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு  இந்தப் படத்தை எடுத்த ஆஸ்டின் சவுந்தர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்! படம் நிறைவு பெற்றதும் சொல்லி வைத்தது போல் அனைவரும் எழுந்து கையைத் தட்டினர்.

இறுதியில் குழுவாகப் புகைப்படங்கள் எடுத்தோம். நிச்சயமாக வாசிக்கத் தொடங்கப் போகிறோம் என்று பலரும் தெரிவித்து விடை பெற்றார்கள். திடீரென தோழி திவ்யா என் ஒரு காதிலிருந்த தங்க நகையெங்கே என்று கேட்க அப்போதுதான் நகை காதிலிருந்து நழுவியது அறியாமல் இருந்ததை உணர்ந்தேன். அங்கிருந்த நண்பர்களனைவரும் ஆளுக்கொரு பக்கம் தேடினர். ஆனால் கிடைக்கவே இல்லை. மனதிற்கு நிறைவாக நடந்த நிகழ்ச்சியில் திருஷ்டி மாதிரி ஆகி விட்டதே என்று வருந்தினர். “ஊழ் அப்படித்தானென்றால் அப்படியே ஆகட்டும்” என்ற பாலாவின் பொன்மொழியை இரவல் வாங்கிக் கூறி அனைவரையும் அனுப்பி வைத்தேன்.

காரில் ஏறும்போது எங்களுடன் வந்த தோழி திவ்யா “இன்னும் கொஞ்ச நேரம் தேடியிருக்கலாம்” என்று வருந்தினார். அப்போது என் கணவர் “நமக்குச் சொந்தம் என்று நினைப்போம், விருப்பத்துடன் பற்று வைப்போம். ஆனால் ஒரு நிமிடத்தில் இந்த உடம்பை விட்டு உயிர் போய் விடும். உடம்பே சொந்தமில்லை எனும்போது இந்த நகை எம்மாத்திரம்! ” என்று புன்னகைத்தார். நான் முகமலர்ந்து அவரைப் பார்த்தேன். எனக்கு மீண்டும் வெண்முரசு படித்த திருப்தி!

இப்படிக்கு,

உங்கள் தீவிர வாசகி,

ஜமீலா. G (இஷ்ரஜ்)

முந்தைய கட்டுரைதன்னைச் செலுத்திக்கொள்ளுதல்
அடுத்த கட்டுரைதன்மீட்சி, சாவு- ஒரு கடிதம்