மின்பரப்பியமும் மாற்றும்

அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும்

அன்புள்ள ஜெ,

சமஸின் அருஞ்சொல் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் பல்வேறு இணைய இதழ்களையும் அச்சிதழ்களையும் வாசிக்கிறேன்.

அச்சிதழ்கள் பெரிய நிறுவனங்களால் வெளியிடப்படுபவை. ஆகவே அவற்றுக்கு ஒரு நம்பகத்தன்மையும் உறுதிப்பாடும் இருந்தது. இன்றைக்கு வெளிவரும் இணைய இதழ்கள் சிலர் கூடி சிறிய செலவில் வெளியிடும் குடிசைத்தொழில் இதழ்கள். அல்லது அரசியல் அமைப்புக்களால் பணம் தந்து உருவாக்கப்படும் பிரச்சார மீடியாக்கள். அல்லது வம்புகளையும் கிசுகிசுக்களையும் நம்பி நடத்தப்படும் மஞ்சளிதழ்கள்.

பெரிய நிறுவனங்களும் இணைய இதழ்களை கொண்டுவரலாம். ஆனால் அவற்றுக்கும் சாதாரண குடிசைத்தொழில் இணைய இதழுக்கும் ஒரே வகையான வாசிப்புதான் கிடைக்கும். அந்நிலையில் பெரிய இதழ்களுக்கு போதிய நிதி இல்லாமல் அவை படிப்படியாக நின்றுவிட நேரும்.

இன்றைக்கே நடந்துகொண்டிருப்பது இதுதான். பெரிய நிறுவனங்கள் அச்சிதழ்களின் இணையப்பதிப்புகளையே வெளியிடுகின்றன. இணைய இதழ்களாக மட்டுமே அவற்றால் வெளியிடப்படுபவை குடிசைத்தொழில் இணைய இதழ் போல பெரும்பாலும் ஒரே ஒரு ஊழியரைக்கொண்டு நடத்தப்படுகின்றன. பல்வேறு திறன் மிக்க பங்களிப்பாளர்களை உள்ளே கொண்டுவர முடிவதில்லை. செய்திக்காகவும் கருத்துக்காகவும் பணம் செலவு செய்யும் நிலையே இருப்பதில்லை.

அச்சிதழ்கள் நின்றுவிட்டால் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்ட, முறையான செய்தி என்பதே இல்லாமலாகிவிடும். செய்தித்தாள்களுக்கு முன்பு செய்தி என்பதே இல்லை. தன்னிச்சையாகப் பரவும் தகவல்கள்தான் இருந்தன. அவற்றில் எவை உண்மை எவை பொய் என்றே கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அதாவது வதந்தியே செய்தி. செய்தி என்பதை உருவாக்கியவையே மாபெரும் அச்சு ஊடகங்கள்தான். அவை அழிந்தால் மீண்டும் உலகம்  ‘செய்தியில்லாத’ உலகமாக ஆகிவிடுமா?

ஆர். எஸ்.ராகவ்

அன்புள்ள ராகவ்,

முதல் விஷயம், அச்சிதழ்களால் ’செய்தி’ என்பது உருவாக்கப்படவில்லை. செய்தியை ஒரு விற்பனைப்பொருளாக, ஒரு நிறுவனமாக ஆக்கியதே அச்சிதழ்களின் சாதனை. அதற்கு முன்னரும் செய்தி வேறு வதந்தி வேறு என்றே இருந்தது.

கும்பமேளாக்கள், மகாமகங்கள், புஷ்கரங்கள் போன்ற பெருங்கூடுகைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓர் இடத்தில் நிகழ்பவை. அங்கே அத்தனை தரப்புகளும் கூடும் முறைமை இருந்தது. கும்பமேளாக்களில் எவர் எங்கே அமரவேண்டும் என்பதே வகுக்கப்பட்டிருந்தது. அங்கே முறையான செய்திகள் விவாதிக்கப்பட்டன, ஏற்கப்பட்டன. அவையே அங்கிருந்து நாடெங்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட்டன. செய்தி என்பது எவரால் சொல்லப்படுவது என்பதை ஒட்டியே ஏற்கப்பட்டது.

*

அச்சிதழ்களின் யுகம் முடிவுக்கு வருவதைக் காண்கிறேன். கொரோனா அதை விரைவாக்கியிருக்கிறது. அது ஒரு யுகமாற்றம். தொழில்நுட்பத்தால் உருவாவது. ஒன்றுமே செய்யமுடியாது. காகிதம் செலவேறியது. மேலும்மேலும் செலவேறியதாக ஆகிக்கொண்டிருக்கிறது. அதை அச்சிடவும் வினியோகம் செய்யவும் பெரிய அமைப்பு தேவைப்படுகிறது. அதுவும் செலவேறியதே. மறுபக்கம் மின்னூடகம் அனேகமாக இலவசம் என்னும் நிலைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

நாளிதழ்கள் இன்னும் கால்நூற்றாண்டுக்காலம் வரைகூட அச்சிலேயே வெளிவரும். ஏனென்றால் இன்றும் நம் கலாச்சாரம் காலையில் ஒரு நாளிதழுடன் தொடங்குகிறது. டீக்கடைகளில் நாளிதழ் இல்லை என்றால் நாம் ஏமாற்றமடைகிறோம். நாளிதழ் இல்லாத டீக்கடைக்குச் சென்றால் அது என்னை ஏமாற்றிவிட்டது என்னும் உணர்வையே அடைகிறேன். நாளிதழ்களை வாசித்துப்பழகிய கடைசித் தலைமுறை நான். என் மகனின் தலைமுறைக்கு அச்சில் வரும் நாளிதழ் முக்கியமானதல்ல.

புத்தகங்களும் கொஞ்சகாலம் நீடிக்கும். ஏனென்றால் இன்று இந்தியாவில் வாசகர்கள் தாங்கள் வாசிப்பதற்காக வாங்கும் நூல்கள் பத்து விழுக்காடு மட்டுமே. எஞ்சியவை நூலகங்களுக்காக வாங்கப்படுகின்றன. பல்கலை மானியக்குழு கல்லூரிகளுக்கும், மத்திய கல்வியமைப்பு பள்ளிகளுக்கும் அளிக்கும் நூலகநிதிக்கு நூல்கள் வாங்கியாகவேண்டும். அவ்வாறு வாங்கப்படும் நூல்களாலேயே பதிப்புத்தொழில் இயங்குகிறது. ஆகவே அச்சுநூல்களை நூலகங்கள் வாங்குவது வரை பதிப்பகங்களும் செயல்படும்.

மெல்ல அரங்கொழிபவை வார, மாத இதழ்கள்தான். பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை [’ஃபேஷன்’], நவீனத் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான இதழ்கள் பெரும்பாலும் நடுத்தவர்க்கத்துக்கானவை. அவை இன்று இணைய இதழ்களால் ஈடுகட்டப்படுகின்றன. ஆகவே அவை நின்றுகொண்டிருக்கின்றன

இந்தியாவெங்கும் முதலில் நின்றவை சினிமா இதழ்கள் என்று ஒர் ஊடக நண்பர் சொன்னார். அதன்பின் சிறுவர்களுக்கான இதழ்களும் பெண்களுக்கான இதழ்களும். இணையத்தில் அவற்றுக்கான மாற்று குவிந்துகிடக்கிறது. சிறுவர்கள் வாசிப்பதையே விட்டுவிட்டார்கள். கணினி விளையாட்டுக்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.

இன்று செய்திப்பகுப்பாய்வு செய்யும் அச்சிதழ்களும் மறைந்து வருகின்றன. நாளிதழ்கள் செய்திகளை அளிக்கலாம். ஆனால் செய்திகளைத் தொகுத்து விவாதித்து கருத்துக்களை உருவாக்குபவை செய்தியிதழ்களே. அவை அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கருத்துக்களை ஒரு பொதுமையத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றன. அவற்றுக்கிடையே ஆக்கபூர்வமான உரையாடலை உருவாக்குகின்றன. அவற்றுடன் வாசகன் விவாதிக்கிறான். இந்தியாவில் அத்தகைய ஆங்கில இதழ்களுக்கு பெரும் செல்வாக்கு ஒரு காலத்தில் இருந்தது.

அவ்விதழ்களின் இடத்தை இன்று தொலைக்காட்சிகளின் செய்திவிவாதங்களும்,  சமூகவலைத்தளங்களின் அரட்டைகளும், கட்டற்றுப்பெருகும் தனிப்பட்ட இணையப்பக்கங்களும், யூடியூப் காணொலி நிலையங்களும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. செய்திவிவாதம் இன்று அவற்றில்தான் நிகழ்கிறது. அரசியல் கொள்கைகள், வரலாற்றுச் செய்திகள், சமூகவியல் கருத்துக்கள் எல்லாமே அவற்றில்தான் பேசப்படுகின்றன. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக இன்றைய செய்திக்களத்தை ஆள்வது மின்பரப்பியம் என்று வகுக்கலாம். [Electronic Populism]. எப்போதுமே பரப்பியம் இருக்கும். [பரப்பியம்] அது ஜனநாயகத்தின் ஒரு விளைகனி. ஒரு ஜனநாயக சக்தியும்கூட. பாப்புலிசம் அல்லது பரப்பியம் என்பது மூன்று அடிப்படைகள் கொண்டது.

அ. மக்களை பெருந்திரளாக மட்டுமே அணுகுவது.

ஆ. மக்கள்திரளின் விழைவையும் உணர்வுகளையும் கணித்து அதற்கு உகந்த கொள்கைகளை உருவாக்கி அவர்களுக்கு அளிப்பது. அவர்களை தங்கள் கருத்துநோக்கி இழுக்காமல் அவர்களை நோக்கி தாங்கள் செல்வது. அவர்கள் சொல்வதையே பெரிதாக்கி அவர்களுக்குச் சொல்வது.

இ. மக்கள்திரளின் ஏற்பைப் பெற்று அதிகாரம் நோக்கிச் செல்வது.

உலகம் முழுக்க ஜனநாயகத்தை பரப்பியமே இன்று தீர்மானிக்கிறது. புரட்சிகர இயக்கங்களேகூட பரப்பியத்தையே வழிமுறையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால்  இதுவரை இருந்த பரப்பியத்திற்கும் மின்பரப்பியத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு. மின்பரப்பியம் பரப்பியத்தின் உச்சகட்ட வடிவம். ஒரு ராட்சத அலை.

ஏன் மின்பரப்பியம் என்னும் சொல்லை பயன்படுத்துகிறேன்? அதுவும் ஓர் ஊடகம்தானே? காகிதத்திற்குப் பதில் மின்பக்கம் வந்துவிட்டால் அடிப்படை மாறிவிடுமா?

மாறிவிடும் என்பதையே கண்கூடான நிகழ்வுகள் காட்டுகின்றன. எப்படி என்பதை சில இயல்புகளைக் கொண்டு விளக்கலாம். அச்சிதழ்களின் காலத்தில் அனைவரும் அச்சிதழ்களை நடத்த முடியாது. அதை பரவலாக நடத்த பெரிய நிறுவன அமைப்பு தேவை. அத்தகைய பெருநிறுவனங்களுக்கு மாற்றாக சிற்றிதழ்கள் நடத்தப்படலாம். இந்தியாவில் ஆங்கிலத்தில் செய்தி விமர்சனங்களுக்காகவே சிற்றிதழ்கள் பல வந்தன. பலவற்றை நான் வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அவை குறைவாகவே வெளிவரமுடியும். மாத இதழ் அல்லது மும்மாத இதழாக. வெளிநாட்டு இதழ்கள் கிடைப்பது அரிது.

ஆகவே ஒட்டுமொத்தமாக நமக்கு கிடைக்கும் அச்சிதழ்கள் ஓர் எல்லைக்குட்பட்டவை. அவற்றுக்குள் நாம் நம் தெரிவை நடத்திக்கொள்ளலாம். ஆனால் இன்றைய மின்னூடகப் பரப்பு எல்லையே அற்றது. பல்லாயிரம் இணையதளங்கள். பல்லாயிரம் தனிப்பட்ட சமூகவலைதளப் பக்கங்கள். ஒவ்வொரு நாளும் நமக்கு இணைப்பு அளிக்கப்படும் பலநூறு காணொலிகள், வலைப்பக்கங்கள். வாட்ஸப்பில் சுற்றிவரும் செய்தித்துண்டுகள் மற்றும் கருத்துக்கள்.

இந்த ‘கட்டற்ற பெருக்கம்’ உருவாக்கும் முதல்விளைவு நம்முடைய தெரிவுக்கான வாய்ப்புகளை இல்லாமலாக்குவதுதான். நமக்கு கிடைப்பவற்றை நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். தர்க்கபூர்வமாக நமக்கானவற்றை தெரிவுசெய்ய நமக்கு வாய்ப்பே அமைவதில்லை. இத்தனை ஆயிரம் வாய்ப்புகளில் இருந்து நாம் நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்ள நம்மிடம் அளவுகோலே இல்லை. அதற்கான பொழுதும் பயிற்சியும் நமக்கு இல்லை.

இந்த கட்டற்றப்பெருக்கம் பற்றி பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் எண்பதுகளிலேயே எழுதியிருந்தனர். டில்யூஸ்- கத்தாரி, லியோடாட் போன்றவர்களின் ஊடக ஆய்வுகள் ‘பெருக்கமே இன்மையாக ஆவது’ என்னும் விபரீத நிலை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார்கள். ஒளியால் குருடாவது போன்ற நிலை இது.

செய்திகளில் ‘பொதுப்போக்கு’ [டிரெண்டிங்] எல்லாக் காலத்திலும் உண்டு. ஆனால் அது ஒரு மைய ஒழுக்கு, பிற சரடுகளும் கூடவே இருக்கும். இன்று பொதுப்போக்கு மட்டுமே உள்ளது. மற்றவற்றை கவனப்படுத்த வழியே இல்லை. சென்ற ஓராண்டில் நீங்கள் கவனித்தவை என்னென்ன என்று பாருங்கள். அந்தந்தக் காலகட்டத்து பொதுப்போக்குகளை மட்டுமே என்று காண்பீர்கள். ட்ரென்டிங் செய்திகள், டிரெண்டிங் பொழுதுபோக்குகள்…

டிரெண்டிங் என்பது மிகச்செயற்கையானது. அது திட்டமிட்டு பணம் செலவிட்டு கட்டமைக்கப்படுவது. ஒன்று டிரெண்ட் ஆனால் அது மேலும் டிரெண்ட் ஆவது ஒருவகை அற்புதம். மானுட உள்ளத்தின் இயல்பை அது காட்டுகிறது. அது நீர் போல, ஒரு திறப்பு கிடைத்தால் அவ்வழியே பெருக்கெடுக்கிறது. டிரெண்டிங் உச்சகட்டத்தை அடைந்து இன்று இரண்டு நாளுக்கு ஒரு டிரெண்ட் உருவாகிறது. அனைவருமே அதைப்பற்றிப் பேசுகிறார்கள். அடுத்தது உடனே வந்துவிடுகிறது. முந்தையதை அது அப்படியே கவனத்தில் இருந்து மறைத்துவிடுகிறது.

இன்று எந்தச் செய்தியையும் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்றால் அதை டிரெண்ட் ஆக்கவேண்டும். ஆனால் டிரெண்ட் என்பது சிலநாட்களுக்கே நீடிக்கும். ஒரு மாபெரும் மானுட அழிவு அல்லது அநீதி டிரெண்ட் ஆகும். இரண்டு நாட்களிலேயே ஒரு சினிமாப்பாட்டு டிரெண்ட் ஆகி அதை அழித்துவிட்டு வந்து அமரும்.

இங்கே தனிச்சிந்தனைக்கே இடமில்லை. தனித்த தேடல்களே இல்லை. இருப்பது ஒட்டுமொத்தமான ஒரு மானுட வெள்ளப்பெருக்கு. இதுபோன்ற ஒரு சூழல் உலகவரலாற்றில் முன்பு இருந்ததில்லை. பல்லாயிரம் கோடிப்பேர் தொழில்நுட்பத்தால் ஒன்றாகத் திரட்டப்பட்டுவிட்டனர். ஒரே உள்ளம் கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். இதையே மின்பரப்பியம் என்கிறேன்.

மின்பரப்பியத்தின் இன்னொரு பக்கமாக இந்த ஒருங்குதிரட்டப்பட்ட மக்கள்பெருக்கின் கூட்டான விழைவைச் சொல்லலாம். மக்கள் பிரச்சினைகள் எப்போதும் ஒரு வட்டாரம், ஒரு சமூகம் சார்ந்தவை. மக்கள் நாடளாவ, உலகளாவ திரட்டப்படும்போது அவற்றுக்கெல்லாம் இடமே இல்லாமலாகிறது. நாடளாவ, உலகளாவ ஒரு விழைவு அல்லது தேவை உருவாகி வருகிறது. அத்தனை பேருக்கும் பொதுவான ஒன்று. அதுவே முன்னிற்கும். மற்ற அனைத்தும் இல்லாமலாகும். மின்னூடகம் அதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்.

இந்த மக்கள்பெருக்கு தனக்கு என்ன வேண்டுமென்று ஆணையிட்டுக் கொண்டே இருக்கிறது. ஊடக ஆய்வு என இன்று நிகழ்வன எல்லாமே மக்கள்பெருக்கின் விழைவென்ன என்று அறியும் கணக்குகள் மட்டுமே. தொலைக்காட்சி ஊடகத்தை டிஆர்பி தீர்மானிக்கிறது. சமூகவலைத்தளங்களை பல்வேறு ‘அல்காரிதம்’கள் தீர்மானிக்கின்றன. ராட்சத வடிவம்கொண்ட மக்கள் திரள் ஆணையிடுவதையே மின்னூடகம் அளிக்கமுடியும். வேறுவழியே இல்லை. ஆகவேதான் அதை மின்பரப்பியம் என்கிறேன்.

இன்றைய மின்பரப்பியத்தின் மிகமூர்க்கமான விசைக்குக் காரணமென ஒன்றைச் சொல்லமுடியும். முன்பு பரப்பியத்தை எதிர்கொள்ளும் விசையாக மறுபக்கம் இருந்தது ‘நிபுணர்கள்’ என்னும் விசை. இதழியலில், வெவ்வேறு அறிவுத்துறைகளில் தேர்ந்த நிபுணர்கள் அச்சு ஊடகங்களில் எழுதினார்கள். அவர்களின் கருத்துக்களை ஊடகங்கள் வலிமையாக முன்னிறுத்தின. வாசகர்கள் அவற்றை வாசித்து எதிர்வினையாற்றினர்.

நிபுணர்களை வாசகர்களின் பெருந்திரள் மனநிலை வழிநடத்த முடியாது. பெருந்திரளின் தேவைக்கு ஏற்ப அவர்கள் கருத்துக்களை உருவாக்குவதில்லை. தங்கள் துறைசார் அறிவின் விளைவாகவே கருத்துக்களைச் சென்றடைந்தனர். அவர்களின் குரலை வாசகர்கள் ஏற்றும் மறுத்தும் தங்களுக்குள் விவாதித்து தங்கள் தரப்பை அடைந்தனர். பெருந்திரள் ஒருபக்கம் மறுபக்கம் நிபுணர்கள் என ஒரு முரணியக்கம் இருந்தது. அதுவே அன்று பரப்பியத்தை கட்டுப்படுத்தியது.

இன்று மின்னூடகங்களில் நிபுணர்களுக்கான இடம் இல்லாமலாகி விட்டிருக்கிறது. நிபுணர்கள் இங்கும் வந்து பேசுகிறார்கள். ஆனால் உடனடியாக அவர்களும் பொதுத்திரளின் ஒரு துணுக்காக ஆகிவிடுகிறார்கள். அவர்களின் தனித்தன்மை மறுக்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கள் சிறுமையாக்கப் படுகின்றன.

மின்னூடகங்களில் உள்ள ‘அனைவருக்கும் இடம்’ என்னும் வாய்ப்பே இதை உருவாக்குகிறது. முன்பு அச்சு ஊடகங்களில் பொதுமக்களின் குரல் பதிவாகும். ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றில் உணர்ச்சிகளில் நிதானமும், அறிவார்ந்த அடிப்படையும் கொண்ட எதிர்வினைகளே பிரசுரமாகும். மின்னூடகங்களில் எவரும் வந்து எதுவும் சொல்லலாம்.

அவ்வாறு கிடைக்கும் வெளியை பெருந்திரள் எவ்வாறு பயன்படுத்திறது என்று பார்க்கவேண்டும் என்றால் இணையத்திலுள்ள எந்த ஒரு காணொலிக்கு கீழேயும் எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தால்போதும். பெரும்பாலும் மனச்சிக்கலின் வெளிப்பாடுகள். எஞ்சியவை அறியாமையின் பதிவுகள். மேலே இருக்கும் பேசுபொருளுடன் ஏதாவது ஒருவகையில் தொடர்புள்ள எதிர்வினைகளே அரிதினும் அரிது. பேச ஓர் இடம் கிடைத்தால் அங்கே சொற்களை கக்கி வைப்பது, அறியப்பட்ட ஆளுமைகளை வசைபாடுவது, அவ்வளவுதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் முகமிலிகளும்கூட.

இந்தப் பெருந்திரள் அத்தனை அறிஞர்களையும் நிபுணர்களையும் ‘காலி செய்து’ விடுகிறது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் பேச வந்தார்கள் என்றால் சில நாட்களிலேயே அவர்களை பொறுமையிழக்கச் செய்து அவர்களையும் இவர்களின் தரத்துக்கு இழுத்துவிடுவார்கள். ஓர் அறிஞரின், துறைநிபுணரின், ஆய்வாளரின் நீண்டநாள் உழைப்புப் பின்புலமும் சாதனைகளும் இந்த பெருந்திரளுக்கு ஒரு பொருட்டே அல்ல. மாறாக அதுவே இவர்கள் அவர்களை சிறுமைசெய்ய, இழிவுசெய்ய காரணமாகவும் அமைகிறது. அற்பமான ஓர் அரசியல்கட்சித் தொண்டன் ஒரு மூத்த ஆய்வாளரை இழிவாக ஏளனம் செய்ய, மேலும் நூறு அற்பர்கள் கூடிக் கெக்கலிப்பதை நாம் ஒவ்வொரு நாளும் இணையவெளியில் காண்கிறோம்.

பெருந்திரள் இன்றைய அறிவுச்சூழலை ஊடுருவ, ஆக்ரமிக்க, திரித்து அழித்து பொருளற்றதாக ஆக்க மின்பரப்பியம் வழியமைக்கிறது. பெருந்திரள் கண்டடைந்த வழிகள் இரண்டு. ஒன்று போலிச்செய்திகள், ஆதாரமில்லாத கருத்துக்களை தாங்களும் உருவாக்கி பெருக்கி பரப்பி சூழவிடுவது. நிபுணர்களின் பேச்சும் அதிலொன்றாக ஆகிவிடுகிறது.

உதாரணமாக சித்தர்கள், அல்லது கீழடி, வேதமரபு, இஸ்லாமிய அறிவியல்  என எதையாவது தேடிப்பாருங்கள். திகைக்கவைக்கும் அறியாமைகளே பல்லாயிரக்கணக்கில் கிடைக்கும். அறிஞர்களின் குரல் அவற்றிலொன்றாக எங்கோ கிடக்கும். எளிமையாக்கல்கள், வெற்றுக்கற்பனைகள், சாதிமதஇனப் பெருமிதங்கள், காழ்ப்புகள். பொய்யான எதிரிகளைக் கட்டமைக்கும் வெறுப்பரசியல்.

பாமரப்பெருந்திரளுக்கு அவர்களைப் போலவே ஒரு பாமரர் பேசினால்தான் புரிகிறது. அவருடைய பாமரத்தனத்துடன் அடையாளம் கண்டுகொள்வதனால் அது பிடித்திருக்கிறது. ஓர் அறிஞனின் குரலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் பயிற்சி தேவையாகிறது. அதற்கு அவர்கள் சித்தமாக இல்லை. ஆகவே எது ஆகப்பெரிய முட்டாள்தனமோ அதுவே பெரும்புகழ் பெறுகிறது.

மின்னூடகத்தின் தானியங்கிக் கணிப்புமுறை அதையே அனைவருக்கும் பரிந்துரைக்கிறது. அதுவே டிரெண்ட் ஆகிறது. உதாரணமாக ஹீலர் பாஸ்கர் பெரும் எண்ணிக்கையில் பார்க்கப்படுகிறார். எந்த மருத்துவ அறிஞரும் கவனிக்கப்படுவதில்லை. இதுவே மின்பரப்பியத்தின் இயங்குமுறை.

பெருந்திரள் இன்றைய அறிவியக்கத்தை எதிர்கொள்ளும் இரண்டாவது வழி என்பது கேலி, நையாண்டி, இளக்காரம். இதையே நாம்  ‘மீம் கலாச்சாரம்’ என்கிறோம். எல்லாவற்றையும் எள்ளி நகையாடுவது. எல்லாவற்றையும் சிறுமைசெய்வது. ஆரம்பத்தில் சில முதிராப்புரட்சியாளர்களும் குழம்பிய கலகக்காரர்களும் அது ‘அதிகாரத்துக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்புமுறை’ என்றெல்லாம் விளக்கமளித்தனர். ‘பகடியே அதிகாரத்துக்கு எதிரான ஆயுதம்’ என எழுதினர். அன்றே நான் இது பெருந்திரளின் சிறுமையின் வெளிப்பாடாக மட்டுமே அமையும் என எழுதியிருந்தேன்.

பெருந்திரள் அதிகாரத்தை வழிபடுவது. ஆகவே அது ஒருபோதும் ஆதிக்கத்தை கேலிசெய்யாது. மெய்யான ஆதிக்கத்தைக் கேலிசெய்தால் உதைவிழும் என அதற்கு தெரியும்.பெருந்திரள் எப்போதுமே தன்னை மாற்றமில்லாமல் வைத்துக்கொள்ள முயல்வது. அறிவுக்கு எதிராக எளிய நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் முன்வைப்பது. ஆகவே பெருந்திரளால் ஏளனம் செய்யப்பட்டு அழிக்கப்படுபவை மாற்றத்துக்கான வாய்ப்புகளை அளிக்கும் புதிய சிந்தனைகளும் கலைப்படைப்புகளுமாகவே இருக்கும். அறிவியக்கத்தை கேலிசெய்து அழிக்கவே பெருந்திரளின் மீம்கலாச்சாரம் முயலும்.

ஒரு மாபெரும் நோய்போல நம்மைச் சூழ்ந்திருக்கிறது மின்பரப்பியம். நம்மைச் சிந்திக்கவே விடாமல் செய்கிறது. பழைய அச்சு ஊடகங்களை விட பல்லாயிரம் மடங்கு பெரியது இது. ஏனென்றால் இதில் நுகர்வோரே செய்தி உற்பத்தியாளரும் செய்தியை பரப்புபவருமாக இருக்கிறார். இதற்கு முதலீடோ நிர்வாகமோ தேவையில்லை. அச்சு ஊடகம் ஒரு செடி போல. அது விதையிலிருந்து முளைத்தெழுந்து வளர்ந்து விதைகளை உருவாக்க நிலமும் நீரும் வெயிலும் காலமும் தேவை. மின்பரப்பியம் என்பது வைரஸ் போல. தன்னைத்தானே பன்மடங்காகப் பெருக்கிக்கொள்வது. பெருகுவதன் வழியாகவே நிலைகொள்வது.

இன்றைய சூழலில் மின்பரப்பியத்தை எதிர்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. புயல்காற்றிலிருந்து தப்ப உறுதியான பாதாள அறைகளைக் கட்டிக்கொள்வதுபோல மின்பரப்பியத்தின் பெருங்கொந்தளிப்புகளுக்கு அப்பால் நிற்கும் செய்திவட்டங்கள், கருத்துவிவாதக் களங்களை தக்கவைத்துக்கொள்வது. மின்பரப்பியத்தை முழுமையாகவே தவிர்த்துவிடுவது.

அதற்கு பெருநிறுவனங்கள் முயலமுடியாது. அவற்றுக்கு நிதி வந்தாகவேண்டும். ஆகவே அவை பெருந்திரளுக்கு உரியவையாக ஆகவேண்டும். பெருநிறுவனங்கள் இனி மின்பரப்பியத்தின் முகங்களாகவே இருக்கும். பெரிய முதலீடு தேவையில்லாத, வலுவான மாற்று ஊடகங்களே அதைச் செய்யமுடியும். தன் எல்லையை தானே வகுத்துக்கொண்ட ஊடகங்கள். பேருருக்கொண்டு வளர்வதைவிட நீண்டகால அறிவுத்தளச் செயல்பாடே முக்கியம் என முடிவுசெய்துகொண்டவை. பெருந்திரளை முழுமையாக தவிர்த்துவிட்டு அறிவியக்கத்தை மட்டுமே முன்னெடுப்பவை. அறிவியக்கத்தில் ஈடுபாடுள்ளவர்களிடம் மட்டுமே பேசுபவை.

அத்தகைய ஊடகங்கள் அறிவுக்குழுக்களாலோ அல்லது மையமாகச் செயல்படும் ஒர் ஆளுமையாலோ முன்னெடுக்கப்படுவனவாகவே இருக்கமுடியும். அந்த ஊடகத்தின் நம்பகத்தன்மையை அந்த ஆளுமைகளே உருவாக்குகின்றன. அத்தகைய ஊடகங்களே இனி வரவேண்டியவை. மாற்றாக நிலைகொள்ள அவற்றால்தான் முடியும்.

ஜெ

பரப்பியம்

பரப்பியம் மீண்டும்

கலைச்சொற்கள்-கடிதம்

முந்தைய கட்டுரைதலைக்குமேலே
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் திரையிடல் – சிகாகோ – கடிதம்