அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும்

https://www.arunchol.com/

சமஸ் தொடங்கியிருக்கும் புதிய ஊடகம் அருஞ்சொல். இப்போது இணையப்பத்திரிகையாக உள்ளது. எதிர்காலத்தில் அச்சிதழாகவும் வெளிவரும் என நினைக்கிறேன். காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் சுதந்திரமான ஊடகங்களின் தேவை மேலும் மேலும் பெருகிவருகிறது. இன்று வெறிகொண்ட ஒற்றை நிலைபாடுகளே கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன. நேற்றுவரை அறிவுத்தளத்தில் அத்தகைய ஒற்றைப்படைக் கூச்சல்கள் மேல் இருந்த ஒவ்வாமை இன்று அருகிவிட்டது. கூட்டத்துடன் சேர்ந்து கூச்சலிடுவதன் நலன்களை அறிவுஜீவிகள் கண்டடைந்துவிட்டனர். பொதுக்கூச்சலை மேலும் ஓங்கி ஒலிப்பவர்களாக மாறிவருகின்றனர்.

தமிழில் இலக்கியத்துக்காகத் தொடங்கப்பட்ட காலச்சுவடு, உயிர்மை போன்ற நடு இதழ்களின் சரிவுக்கு அவை எடுத்த அதீத அரசியல் நிலைபாடு, அதன் விளைவான பிரச்சார நெடியே காரணம். ஒரு நிலைபாடு எடுத்து கூச்சலிட்டால் அதன் ஆதரவாளர்களான சில வாசகர்கள் உடனடியாக வந்து சேர்வார்கள். நீண்டகால அளவில் இலக்கிய வாசகர்கள், பொதுவாசகர்கள் ஆர்வமிழந்து விலகிச் செல்வார்கள். அதுவே இங்கே நிகழ்ந்தது.

ஆகவே இங்கே விவாதத்துக்கான பொதுக்களம் இல்லை. பொதுவாசகன் எல்லா தரப்பையும் அறிந்துகொள்ளும் நடுநிலை ஊடகமே இல்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மிகைச்சொல்லாடல்கள் இல்லாமல் செய்திகளும் கருத்துக்களும் முன்வைக்கப்படும் தளம் என ஒன்று இல்லை. அவ்வாறு சில ஊடகங்கள் உருவாகியே ஆகவேண்டும். இல்லையேல் நம்முடைய சிந்தனைத் திறனே இல்லாமலாகிவிடக்கூடும்.

நேற்றுவரை ஊடகம் என்பது எப்படியோ அதன் நிதியாதாரத்துக்கு கட்டுப்பட்டிருந்தது. நிதியாதாரத்தை அரசு கட்டுப்படுத்த முடியுமென்ற சூழலும் இருந்தது. இன்றைய சூழலில் மிகக்குறைவான முதலீட்டுடன் சுதந்திரமான ஊடகங்கள் உருவாக முடியும். அவற்றின் நம்பகத்தன்மையே அவற்றின் முதலீடு. ஆங்கிலத்தில் அதற்கான சிறந்த முன்னுதாரணங்கள் ஏற்கனவே உள்ளன.

சமஸ் அவருடைய நிதானமான அணுகுமுறை, அனைத்துக் குரல்களையும் ஒலிக்கவைக்கும் பொதுப்பார்வை ஆகியவற்றுக்காக ஏற்கனவே அறியப்பட்டவர். அவர் தொடங்கியிருக்கும் அருஞ்சொல் என்னும் இணையஊடகம் தமிழில் அத்தகைய ஒரு தொடக்கமாக அமையவேண்டும்.

ஏற்கனவே தமிழ் ஹிந்து அப்படி ஒரு அடையாளத்தை நோக்கிச் சென்றது. அது நம்பிக்கையூட்டியது. ஆனால் அதில் சட்டென்று ஒரு அசட்டு திமுக ஆதரவு மனநிலை உருவாக ஆரம்பித்தது. அதிலுள்ள சிலர் தங்கள் முதிரா அரசியலுக்கான ஊடகமாக அதை ஆக்கியதன் விளைவு அது. அவ்விதழின் நிர்வாகத்தேவையும் காரணமாக இருக்கலாம். தமிழ் ஹிந்து ஒற்றைப்படையாக ஒலிக்க ஆரம்பித்தது. அதில் ‘போற்றிப்பாடும்’ குரல்கள் எழுந்து அதன் நம்பகத்தன்மை அடிவாங்கியது. இன்று எவ்வகையிலும் அது வாசக ஏற்புள்ள ஊடகம் அல்ல. நாம் போற்றிப்பாடடியை வாசிக்க வேண்டுமென்றால் அதற்கே உரிய ஊடகங்கள் இருக்கின்றன.

அத்தகைய புகழ்மொழிகள் ஒரு நடுநிலை ஊடகத்தால் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். உதாரணமாக, ‘தெற்கில் இருந்து ஒரு சூரியன்’ என ஒரு நூலை ஓர் ஊடகம் வெளியிடுமென்றால் அந்த ஊடகம் மேல் அக்கணமே நம்பிக்கை போய்விடுகிறது. காந்தியைப் பற்றிக்கூட அப்படி ஒரு மிகைச்சொல் பயன்படுத்தப்படலாகாது, ஆசிரியர் குறிப்புகளில் மகாத்மா என்ற சொல்லையே தவிர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

இன்றைய ‘அருஞ்சொல்’ நிதானமான மொழியில் அமைந்த பலதரப்பட்ட கட்டுரைகளால் ஆன நல்ல இணைய இதழாக உள்ளது. இது மேலும் விரிவாக வேண்டும். கட்டுரைகளில் வேகம் இருக்கலாம், ஆனால் வம்புகள் அல்லது நேரடித் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும். புகழ்மொழிகளும் வசைமொழிகளும் இருக்கலாகாது.

அத்துடன் ஒரு புதிய செய்தியை, அல்லது கருத்தை முன்வைக்காமல் பொத்தாம் பொதுவாக எதையாவது எழுதும் கட்டுரைகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழில் அத்தகைய கட்டுரைகள் ஏராளமாக எழுதப்படுகின்றன. தினமணி நடுப்பக்க கட்டுரைகள் அனைத்துமே அத்தகையவைதான்.

இலக்கிய இதழ்கள் ஏற்கனவே நிறைய வருகின்றன. ஆகவே அதற்கு அதிக இடம் அளிக்க வேண்டியதில்லை. இணையத்தில் ஏற்கனவே பேசி நைந்த விஷயங்களை தவிர்த்துவிட வேண்டும். இலக்கியம் பற்றியோ சினிமா பற்றியோ கட்டுரைகள் வெளிவருமென்றால் ஏற்கனவே பேசப்பட்டவற்றுக்கு மேலதிகமாக அவை எதையாவது சொல்லியிருக்க வேண்டும்.

என் ஆலோசனைகள் சில உண்டு. அவை செவிகொள்ளப்பட்டால் நன்று.

அ அனைத்துத் தரப்புகள்

சமூகவலைத்தளச் சூழலில் உள்ள சில்லறைத்தனங்களான நக்கல், நையாண்டிகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் மீம் ஆக மாற்றும் மனநிலை, எதையுமே ஒருவகை பொறுக்கித்தன பாவனையில் அணுகும் போக்கு ஆகியவற்றுக்கு இடமே அளிக்கலாகாது. எவராயினும் அத்தளத்தில் மதிக்கப்படுபவர்களே எழுதவேண்டும்.

தெளிவான மொழியில், தாக்குதல்நோக்கு இல்லாமல் முன்வைக்கப்பட்டால் அத்தனை அரசியல் தரப்புகளையும் கேட்டு வாங்கி வெளியிடலாம். இடதுசாரிக் குரல்கள், திராவிட அரசியல் குரல்கள், தலித் அரசியல்குரல்கள், இந்த்துவ அரசியல் குரல்கள் அனைத்தும் ஒன்றையொன்று மறுத்து தங்கள் தரப்பை முன்வைத்து வாதிட இடம் அளிக்கப்பட வேண்டும். மறுப்புகள் வழியாகவே விவாதம் ஆழமானதாக ஆகும்.

காந்தியப் பொருளியல் நோக்குடன்  கட்டுரைகள் வந்தால்  அதை மறுத்து முதலாளித்துவ பொருளியல் நோக்குடன் எழுதப்படும் கட்டுரையும், அவற்றை மறுக்கும் இடதுசாரிப் பார்வையுடன் எழுதப்படும் கட்டுரையும் ஒரே இடத்தில் வெளியாக வேண்டும். அப்படி ஒரு ஊடகம் உருவாகுமென்றால் அது மிகப்பெரிய ஒரு வரவாக இருக்கும்.

தமிழில் ஒரு வழக்கம் உண்டு. ஓர் இதழ் ஒரு குறிப்பிட்ட கருத்தை வெளியிட்டால் அந்தக் கருத்தின் எதிர்ப்பாளர்கள் அந்த இதழையே எதிர்த்தரப்பாக எடுத்துக் கொண்டு வசைபாடுவார்கள். அந்த இதழை முத்திரை குத்த முயல்வார்கள். அத்தகைய மூளைக் கொதிப்பாளர்கள் ஒரு சூழலின் சிந்தனைத் திறனையே மழுங்கடிப்பவர்கள். அவர்கள் சமூகவலைத்தளங்களை நாறடித்திருக்கிறார்கள். அவர்கள் அங்கேயே கிடக்கட்டும்.

இன்றைய இதழ் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும். எல்லா தரப்பும் ஒலிக்க இடமளிக்கும் ஓர் ஊடகம் அந்த வசையை எதிர்கொண்டாலும் காலப்போக்கில் ஒரு வலுவான அறிவுமையமாக நிலைகொள்ளும். நடுநிலையாளரும் அனைவருக்கும் இனியவருமான சமஸ் அவர்களால் அது இயலும்.

ஆ. இந்திய விரிவு.

தமிழ் ஊடகங்கள் செய்யாத ஒன்று இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைப் பற்றிய செய்திகளை அங்குள்ளவர்களைக் கொண்டு நேரடியாக எழுதி வாங்கி வெளியிடுவது. அந்தந்த பகுதிகளில் வெளிவரும் இதழ்களில் இருந்து கட்டுரைகளை வெளியிடலாம்தான். ஆனால் அவை அவற்றை வெளியிட்ட இதழ்களின் நோக்கு கொண்டவை. சமஸ் அவரே சான்றளிக்கும் ஒரு கட்டுரையாசிரியரின் நேரடிக் கட்டுரையை வெளியிட்டால்தான் அதற்கு மதிப்பு.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் முதல் வடகிழக்கு வரை அத்தனை அரசியல் பிராந்தியங்களில் இருந்தும் சமஸுக்கு ஏற்புடைய ஓரு நடுநிலை இதழாளர் அப்பகுதியின் அரசியல்- பண்பாடு பற்றி வாரம் ஒரு சிறு கட்டுரை எழுதலாம். ‘கேரளா குறிப்புகள்’ ‘தெலுங்கானா கடிதம்’ என்பதுபோல. சமஸுக்கே தொடர்புகள் இருக்கலாம்.

இ. உலக விரிவு

அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியக்கிழக்கு, கீழைநாடுகள் என எல்லா நிலப்பகுதியில் இருந்தும் அங்குள்ள அந்த ஊர் இதழாளரிடமிருந்து ஒரு மாதாந்திரக் குறிப்பை வாங்கி வெளியிட முடிந்தால் அது தமிழுக்கு மிகப்பெரிய வரவாக இருக்கும். இன்றுவரை அப்படி ஒன்று நிகழ்ந்ததே இல்லை. அதற்குரிய தொடர்புகள் இன்று பெரிய பிரச்சினை இல்லை. எண்ணிப் பாருங்கள் சிரியாவில் இருந்தோ ஆப்கானிஸ்தானில் இருந்தோ ஒரு நேரடி அறிக்கை தமிழில் வெளியாகுமென்றால் அதன் மதிப்பென்ன என்று.

அறைகூவலாக எடுத்துக் கொண்டு சமஸ் இதைச் செய்து வெல்லவேண்டும். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஅக்டோபர் 2 நற்கூடுகை – செயல்வழி ஞானம்
அடுத்த கட்டுரைஇன்றைய தற்கொலைகள்