வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் – சிகாகோ – கடிதம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம்தானே?

அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக சிகாகோவில் வெண்முரசு நாவல் பற்றிய ஆவணப்படம் கடந்த ஞாற்றுக்கிழமை (செப்டம்பர் 26, 2021) மதியம் 3:00 மணியளவில்  திரையிடப்பட்டது.

திரு. பாலா நாச்சிமுத்து மற்றும் திருமதி.ஜமீலா இருவரும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை அறிந்தவுடன், நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். திரு. சௌந்தர் மற்றும் திரு.ராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் படி நாங்கள் மூவரும் சேர்ந்து கடந்த மூன்று வாரமாகத் திட்டமிட்டு பல்வேறு முறையில் இந்த திரையிடல் பற்றிய செய்திகளை அவரவர் உள்ளூர் மக்களைச் சென்றடையச் செய்தோம். தமிழ் “ஆர்வலர்கள்” இதனை எப்படிப் பரிசீலிப்பார்கள் என்று தெரிந்திருந்ததால், அவர்களை விட உங்கள் எழுத்துக்களைப் படித்து ருசித்திருக்கும் பலபேர் இங்கு இருப்பார்கள் அவர்களையாவது இத்திரையிடல் செய்தி சென்றடைய வேண்டும் என்பதே எங்களுடைய குறைந்தபட்ச நோக்கமாக இருந்தது.

பாலா

நான் தனிப்பட்ட முறையில் இந்த ஆவணப்படத்தைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருந்தேன். ஆதலால், நாட்கள் நெருங்க நெருங்க மனதுக்குள் ஒரு களியாட்டம் மெல்ல ஆரம்பித்திருந்தது. என் மகளும், மகனும் புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள். அவர்களிடம் ஏற்கனவே வெண்முரசு புத்தகம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருந்ததால், இந்த ஆவணப்படம் பற்றிய தகவலை சொன்னவுடன் என் மகள் மகிழ்ந்து, “அப்புத்தகத்தை ஒரு சூப்பர் ஸ்டார் போல கொண்டாடுகிறீர்கள்” என்றாள். முந்நூறு மைல்கள் கார் பயணம் செய்ய வேண்டியிருந்ததால், நான் முதல் நாளே கிளம்பி சிகாகோவில் தங்கிக்கொண்டேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் பேசிக்கொண்டபடி, என் நான்கு வரிகளே கொண்ட “நன்றியுரையை” சிகாகோவிலிருந்த கோவில் ஒன்றில் அமர்ந்து மனதுக்குள் தொகுத்துக் கொண்டு பெருமிதமாக நிமிர்கையில், எதிரில் இருந்த விவேகானந்தர் சிலை கண்டு திடுக்கிட்டுத் திரும்பி அமர்ந்து கொண்டேன்.

அன்று மதியம் திரு.பாலா குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் பட்டு வேஷ்டி சட்டையுடன் வந்திருந்தது மனதுக்குள் ஒரு விழாவுக்கு வந்திருப்பதை உறுதிசெய்தது. சிறிது நேரத்தில் திருமதி.ஜமீலாவும் பட்டுச் சேலை சர சரக்க வந்து சேர நாங்கள் மூவரும் ஒரே மன நிலையில் இருப்பதைக் காட்டியது. நாங்கள் மூவரும் முதல் முறையாகப் பார்த்துக்கொண்டாலும், எங்களிடம் எந்த விதமான தயக்கமும் வேறுபாடும் இல்லாமல் பேசிக்கொண்டது உங்களின் எழுத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதுகிறேன். நீங்கள் உங்கள் எழுத்தின் வழியே எங்களை எப்போதும் இணைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அது ஒரு மாயவலையைப் பின்னிக்கொண்டே எங்கள் அனைவரையும் இணைக்கிறது என்பது நிஜம்.

ஜமீலா

மற்ற பார்வையாளர்களும் வருவதற்குள் நாங்கள் பிற வேலைகளை முடித்து வைத்தோம். பலபேர் வருவேன் என்று சொல்லியிருந்தாலும் வரும் வரை எந்த உறுதியும் இல்லை என்பதால் பாலா பதட்டமாகவே இருந்தார். ஒரு இந்திய ஜோடி உள்ளே நுழைந்தவுடன் நாங்கள் கைகூப்பி புன்னகையுடன் வரவேற்பதைக் கண்டு மிரண்டு போனவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஒரு தெலுங்கு படம் பார்க்க வந்திருந்தவர்கள் என்று தெரிந்தவுடன் பாலாவின் பதட்டம் இன்னும் அதிகமாகியது. சிறிது நேரத்தில் தெரிந்த முகங்கள் ஒவ்வொருவராக வர அந்த இடத்தின் சூழ்நிலை இயல்பாகி, அறிமுகங்கள், விசாரிப்புகள், சிரிப்புகள், ஆச்சரியங்கள், புகைப்படங்கள் எனப் பற்றிக்கொண்டது.

அதுவரை வெளியே பேச்சும் சிரிப்புமாக இருந்த மொத்த கூட்டத்தையும், அந்த இருளான திரையரங்கினுள் அமர்த்தப்பட்டவுடன் ஏனோ காதோடு காதாகப் பேசிக்கொண்டிருந்தது வியப்பாகவே இருந்தது. அது ஒரு பழகிய மன நிலை போல. திரு.பாலா சிறப்பான ஒரு தொடக்க உரை கொடுத்துத் தொடங்கி வைக்க, திருமதி.ஜமீலாவின் மிகச் சிறப்பான உணர்ச்சி மிகு உரையில் அங்கிருந்த அனைவரும் அவரின் பேச்சில் இருளோடு இருளாக உறைந்திருந்தோம்.  அவரின் பேச்சு முடிந்ததை ஒரு சில கணங்கள் கழித்தே உணர்ந்து சட்டென மொத்த கூட்டமும் கைதட்ட  எனக்கு ஏனோ “ஓங்காரமாக முழங்கும் இருள்” என்ற வரி நினைவுக்கு வந்து போனது. என் நன்றியுரையுடன் முடித்துக்கொள்ள, ஆவணப்படம் தொடங்கியது.

வெங்கட்

ஆவணப்படம் எந்த விதத்திலும் எங்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. பெரும் தொற்று காலத்தில் இவ்வளவு சிறப்பான ஒரு ஆவணப்படம் எடுப்பது என்பது சரியான திட்டமிடல் இருந்தாலொழிய சாத்தியமேயில்லை. மிக நேர்த்தியாக, பேட்டியும் காட்சிகளும் பின்னப்பட்டு அதன் ஊடே தேவையான இடங்களில் பின்னணி இசையை நுழைத்து எங்குமே தொய்வில்லாமல் இருந்தது இந்த ஆவணப்படத்தின் மிகப் பெரிய வெற்றி. பெயர்கள் மட்டுமே அறிந்திருந்த பலர் முகம் பார்த்து பரவசம் அடைய வைத்தது. இதிலிருந்த ஒரு மகத்தான அம்சம் ஒவ்வொருவரும் வேறு வேறு கோணத்தில் வெண்முரசு நாவலை அணுகியிருக்கும் விதத்தை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தியது. திரு. ராஜன் அவர்கள் பேசும்போது “நீலம்” நூலிலிருந்து வரிகளைப் பொறுக்காமல் கை விட்டு அள்ளி எடுத்ததெல்லாம் கவியாக இருந்தது என்று சொல்லியபோது எனக்கு மயிர்க்கூச்செறிந்ததது. அதில் தொகுப்பட்ட பாடலும் அதன் இசையும் எங்களை “கட்டி போட்டுவிட்டது” என்று சொல்லுவது சம்பிரதாயமான வார்த்தை என்றாலும், அதை விட வேறு சிறப்பான சொல் எங்களின் நிலையை விளக்க இல்லை என்றே எண்ணுகிறேன். வெண்முரசு நாவல் மதங்களைக் கடந்து, மனித உணர்வுகளைப் பேசுகிறது என்பதை இந்த ஆவணப்படத்தில் பேசியவர்கள் குறிப்புணர்த்தியது சிறப்பு. திரு.ஷண்முகவேல் அவர்களின் ஓவியத்தைக் காணும் போதெல்லாம் நம் மனசுக்குள் ஏற்படுத்திய அந்த உணர்வை இசையால் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. படம் முடிந்து வெளியே வந்தவர்களின் பலருடைய மனநிலை எங்களைப் போன்றே இருந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

வெண்முரசு நாவலைப் பற்றி இலக்கிய எழுத்தாளர்கள் பலர் பேசியது, வாசகர்களாக எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. நாங்கள் வாசிக்கும், மதிக்கும்  மற்ற சமகால இலக்கிய எழுத்தாளர்கள் திரு. எஸ்.ராமகிருஷ்ணன், திரு. பவா செல்லத்துரை, திரு. சாரு நிவேதிதா மற்றும் பலரும் வெண்முரசு நாவலைப் பற்றிய அவர்களின் கோணத்தைப் பேசியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பெரும் தொற்று காலத்தில் ஒருவரைச் சந்திப்பதென்பது சிரமமான காரியம்தான்.

வாழ்க்கையில் மிகப்பெரிய  மன எழுச்சியை வெண்முரசு நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு எங்களுடைய நன்றிகளும், வணக்கங்களும்.

இத்துடன் ஒரு சில புகைப்படங்களையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

அன்புடன்,
வெங்கட்.சு

முந்தைய கட்டுரைமின்பரப்பியமும் மாற்றும்
அடுத்த கட்டுரைகுழந்தைகளும் நாமும் – கடிதம்