வெண்முரசுக்குப் பின் ராமன் கதையா?

அன்புள்ள ஜெ

நலம் தானே. சில இளைய தலைமுறை (20-40) நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் மகாபாரதம் குறித்த சில கூடுதல் புரிதல்களை அவர்கள் வெண்முரசின் மூலம் அடைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  பெற்றோரால், ஆசிரியர்களால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை, அணுக முடியாத தளத்தை உங்களால் செய்ய முடிந்திருக்கிறது என்பது மிகப் பெரிய விஷயம்.

அந்த வரிசையில், இராமாயணத்தையும் நீங்கள் முன்னெடுத்து உங்களது ஆக்கத்தில் வெண்முரசைப் போன்ற விரிவான வடிவத்தில் கொடுப்பது மனித குலத்திற்கு நீங்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய விஷயமாக இருக்கக் கூடும். தாங்கள் முனைவீர்களா. உங்களால் மட்டுமே இதை இத்துனை நேர்த்தியாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க முடியும் என்பதினாலாயே இந்தக் கோரிக்கையை உங்கள் முன்னர் வைக்கிறேன்.

இது குறித்த உங்கள் எண்ணத்தை தெரியப்படுத்தினால் மகிழ்வாக இருக்கும்.

நன்றி

கிருத்திகா ஸ்ரீதர்

அன்புள்ள கிருத்திகா,

நான் வெண்முரசை எழுதுவதற்கான காரணங்கள் பல. முதலில் நீண்ட நாட்களாகவே மகாபாரதத்தை எழுத வேண்டுமென்னும் கனவு இருந்தது. இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக. அதற்காக தகவல்கள் சேகரித்துக் கொண்டும், பயணங்கள் செய்துகொண்டும், அறிஞர்களுடன் உரையாடியபடியும் இருந்தேன். மகாபாரதத்தை ஒட்டி பல கதைகளை எழுதினேன். 1988ல் வெளிவந்த திசைகளின் நடுவே தொடங்கி தொடர்ச்சியாக அவை வெளிவந்தன. அவை எல்லாமே இன்று வெண்முரசில் அடக்கம்.

ஆனால் மகாபாரத மறுபுனைவை பலமுறை எழுதத் தொடங்கி சரியாக அமையாமல் கைவிட்டேன். பல கைப்பிரதிகள் இன்னும் உள்ளன. மெல்ல மெல்ல அதை எழுத என்னால் இயலாது என்று எண்ணினேன். ஆகவே மெல்ல மெல்ல எழுதவேண்டிய தேவையில்லை என்று எண்ணத்தலைப்பட்டேன். அத்திட்டத்தைக் கைவிட்டேன்.

நடுவே கீதைக்கு ஓர் உரை எழுதத் தொடங்கினேன். ஆனால் அதை என்னால் தொடரமுடியவில்லை. என் வாசிப்பை விட என் தன்னறிதல் குறைவென்று உணர்ந்தேன். நான் ஊழ்கம் வழியாக அறியாமல் மேலே எழுதலாகாது என்று தோன்றியது. ஆனால் தூய ஊழ்கப்பயிற்சி எனக்குரியது அல்ல என்பது என் ஆசிரியரின் வழிகாட்டல். என்னுடையது வேறொரு முறை. அதை படைப்பூழ்கம் எனலாம். பிரதிபா யோகம் எனலாம்.

அதைச் செய்யும்பொருட்டு பலவகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். சட்டென்று வெண்முரசு எழுதும் எண்ணம் உருவானது. அது மிகக்கடினமான ஓர் அறைகூவல். ஆனால் ஓர் ஊழ்கம் என்னும் நிலையில் அவ்வளவு கடினமானதும் அல்ல. அதை எழுதத் தொடங்கி ஓரு யோகப்பயிற்சியிலுள்ள எல்லா அலைக்கழிப்புகள், கொந்தளிப்புகள், வீழ்ச்சிகள், எழுச்சிகள், பேரின்பங்கள், நிறைநிலைகள், மெய்யறிதல்கள் வழியாக வந்து நின்றேன். கண்டடைந்தபின் எழுதியதல்ல அது, எழுதுவதனூடாகக் கண்டடைந்தது.

இன்று மீண்டும் வெண்முரசு எழுதிய தொடக்க நாட்களுக்குச் செல்லமுடியாது. இன்று எழுதியதென்றால் குமரித்துறைவி. அதிலுள்ள மங்கலமும் அழகுமே இயல்பாக வருகிறது. சாதாரணமாக ஒரு புனைவெழுத்தாளன் அவன் எழுதும் பெரும்புனைவின் உச்சியில் அடையும் நிறைநிலை அது. அது அந்நாவலின் எல்லாப் பக்கங்களிலும் உள்ளது.

இன்று ராமாயணத்தை எழுதுவதென்றால் ராமனின் மங்கலத்தை எழுதலாம். துயரை, போரை என்னால் எழுத முடியாது. அது வெண்முரசை எழுதத்தொடங்கிய போதிருந்த உளநிலை கொண்டிருந்தால் மட்டுமே எழுதத்தக்கது. இனி நான் என்ன எழுதுவேன் என்று சொல்லத் தெரியவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஇதழியலாளன் மொழியாக்கம் செய்தல்…
அடுத்த கட்டுரைபேட்டிகள், கடிதங்கள்