நீலம், ஒலிவடிவில்

அன்புநிறை ஜெ,

கண்ணன் பிறந்த கருநிலவு நாள் தொடங்கி அனுதினமும் நீலம் வாசிப்புக்கெனவே காலை விடிந்தது, இரவு விரிந்தது. அதிகாலைகளும் பின்னிரவுகளுமே நீலம் வாசிப்பதற்கு உகந்த பொழுதுகள்  என உணர்ந்தேன். ஓசைகள் அடங்கிய பிறகே ஒலிப்பதிவு இயல்வது புறக்காரணம். இனிமை, தனிமை, மேலும் இனிமை, மேலும் தனிமை. இனித்திருப்பதற்கு தேவையான தனிமை. இனி என்ற சொல்லே இல்லாத நிலைகூடி இக்கணம் மட்டுமே என நிறைந்திருந்த பொழுதுகள், இனி வேறென்ன வேண்டுமெனும் இனிமை.

ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமேனும் வாசிக்க வேண்டுமென எண்ணியிருந்தேன். இன்றோடு சரியாக ஒரு மாதம், நீலம் வாசித்து நிறைவு செய்திருக்கிறேன். இன்னும் சில நாட்கள் நாளுக்கு ஒன்றென வலையேறும். இதில் வரிசையாகக் கேட்கலாம்.

நீலம் – முழுமையாக கேட்க 

வெண்முரசை ஒட்டுமொத்தமாக வாசித்த பிறகு ஒரு மனநிலை இருந்தது. இனிமேல் பிறிதொன்று வாசிக்கவோ, வாழ்ந்து பார்க்கவோ, அறிந்து கொள்ளவோ தேவை இல்லை என்பது போன்ற விலக்கம். அப்போது ஒருமுறை மீண்டும் நீலம் முழுமையாக வாசித்தேன். அதன் தொடர்ச்சியாக முதலாவிண்ணின் கண்ணன் பிள்ளைத்தமிழை வாசித்து முடியும் போது, ராதையாகி கல்விழியோடு அவன் குழலிசைக்கு காத்திருக்கும் தவம் இயல்வதுதான் எனத்தோன்றியது.

அதன் பிறகும் நாலைந்து முறை நீலத்தில் முழுவதும் அமிழ்ந்திருக்கிறேன். இம்முறை வாய்விட்டு நீலம் வாசித்தது வேறொரு அனுபவம். சொல்லும் இசையுமாகி, காமமும் யோகமுமாகி, ராதையும் கண்ணனும் கம்சனும் யசோதையும் நந்தனும் தேவகியும் வசுதேவரும் பூதனையும் திருணவிரதனும் வேதியர் குலப்பெண்ணும் மூதாயரும் வரியாசியும் அக்ரூரரும் நீலச்சிறுகுருவியும் அனைத்துமாகி அவனை அறிந்த அனுபவம். தாங்கள் நீலம் எழுதிய பேரனுபவ வெள்ளத்தில் சிறுதுளிகள் மேலே தெறிப்பதுவே தாளவியலாது இருக்கிறது. நீலம் வாசிப்பை எப்போதும் சொல்லாக்குவதில்லை நான். எப்போதும் எங்கோ ஒன்று குறைந்து விடுவது, அல்லது உணர்ச்சிகளை மிகையாக்கி சொல்லிவிடுவதுபோல உணரச் செய்யும். அல்லது மிக மிக அந்தரங்கமான ஒன்றை அம்பலத்தில் ஏற்றுவதன் தயக்கம் இருக்கும்.

இம்முறை இது ஒரு பயணம் என உணர்ந்தேன். இது உருவாக்கும் பித்தும் அதில் திகைத்து அலையும் திசையறியாத் துயரும், முட்டிமோதி அடையும் மின்னல்கண வெளிச்சங்களுமே இதன் கொடை என்றுணர்ந்தேன்.

வாசிப்பில் சில நாட்கள் ஒற்றை வரியில் ஆட்பட்டு நின்றன. ஒற்றைச் சொல், ஒற்றை வரி விதை கிழித்து வேர் பரப்பி கிளை விரித்து விழுதிறக்கி என் நிலம் மறைத்த நாட்கள் . சில பகுதிகள் முற்றிலும் தியான அனுபவமாகவே இருந்தன.

‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ – முதல் அடியில், முதற் சொல்லில், முதல் எழுத்திலேயே கூட முழுப்பொருள் முற்றமைந்து விடுகிறது காவியங்களில். அந்த ஒரு பொருளை நோக்கிய அகப்பயணம் நீலம். உலகறிந்து – என்ற ஒற்றைச் சொல்லாகவும் இதைத் திரட்டிக்கொள்ளலாம். உ என்ற உள்நோக்கிய ஒன்றைச் சுட்டும் முதல் ஒலி.

‘ஏனுளேன்?’ ராதை விழித்ததும் எழும் முதல் வினா. அந்த ஒற்றை வினாவாக மனம் இருந்த நாட்கள். ஏன் இங்குள்ளேன்? இம்மண்ணில் இவ்விதம் இப்பிறப்பு எதற்காக? ககன வெளியில் சின்னஞ்சிறு துகள். இதற்கெதற்கு இத்தனை அலைக்கழிப்புகள்? யார் காணும் மேடைக்கான நாடகம் இது? ஆயிரம் சிதல் சேர்ந்தெழுப்பும் ஒற்றை கோபுரத்தில் ஒரு மணற்பரல் தூக்கி அளித்து விட்டுச் செல்வதுதான் இவ்வாழ்வு எனில் எதற்கு தனி எண்ணம்? தனித்த ஆணவம்? நான் வேறு என்பதாக எதற்கு இந்த மயக்கங்கள்?  ஒவ்வொரு சொல்லும் எடை கொண்டு நாள் மீது பரவிய பொழுதுகள்.

“உன் புளிப்பும் துவர்ப்பும் மறைந்துவிட்டன தோழி. மதுரமாகி நிறைந்துகொண்டிருக்கிறாய்” என்பது போல நீலம் வாசித்த நாட்களில் முழுமுற்றாய் மதுரமாகி வழிந்தன சில நாட்கள். ஆம் மதுரம் மதுரம், வேறேதும் இல்லை. மனதும் உடலும் மொத்தமும் இனிதாக இருக்க, அதில் தோய்ந்திருந்ததென் அகம்.  மதுரமாகி நிறைகிறேன். என் சிறுகிண்ணத்து எல்லைகள் ததும்பி வழிகிறது. ஓசைகளற்ற தேன்பொழிவு. கலம் மேலும் விரிகிறது. ஒவ்வொரு துளியிலும் நிறைகிறது கலம், மேலும் ஒரு துளிக்கு இடம்காட்டி விரிகிறது அகம். நில்லாமல் ததும்பாமல் நிறைகிறது அமுதம்.

அவ்விதம் சில பொழுதுகள்.

அணிபுனைதல், காத்திருத்தல், கருத்தழிதல், கடத்தல், குவிதல், குலைதல், குமிழ்தல், அழிதல் என பிரேமையின் விரிநிலத்தில் செல்லும்தோறும் அனைத்தும் கரைந்தழிந்தது. வீணையாய் அதிர்கிறது அகம். ஏதோ ஒரு விரல் மீட்டிக் கொண்டே இருக்கிறது ஒற்றைத் தந்தியை. அதற்கு மேல் ஏதும் ராகமோ தானமோ பாடலோ இல்லை. விண்நோக்கி விரல் திறந்த ஷட்ஜம். முதல் ஸ்ருதியிலேயே நின்றதிரும் ஒற்றைத் தந்தி மீட்டல். இசை மதுரமாகிறது. அதுவே  உடலாகிறது. அடுத்த ஸ்வரத்தை மீட்டச் சொல்லி இறைஞ்ச முடியாத வீணை விரலின் கருணைக்கு காத்திருக்கிறது. ஒவ்வொரு சொல்லாலும் உருகியபின்னும் மிச்சமிருக்கிறது ஒன்று.

ஒற்றைச் சொல் ஆளும் கணங்கள் –  கள்ளப்பெருந்தெய்வம் எனும் ஒரு சொல்லே அகமாகி அமைந்திருந்த ஓரிரவு! தெய்வம் அறியாத ஆழங்கள் இல்லை, அதற்கும் விழிமறைத்து ஒளித்து வைக்கும் களவொழுக்கத்தில் நிற்கும் காதல் நிறைந்த அகம். அங்கும் நுழைந்துவரும் கள்ளன், அவனோ பெருந்தெய்வம். களவைக் கலையெனக் கற்பித்த கள்ளப்பெருந்தெய்வம்.

ஆயர்கள் கோகுலம் விட்டு விருந்தாவனம் குடியேறியதும் வெண்ணை வைக்கும் உறி கட்ட வேண்டிய இடத்தை நீலச்சிறுவிரல் சுட்டும். எங்கு ஒளித்து வைத்தாலும் உன் உள்ளுருகும் வெண்ணையெல்லாம் எனக்கே எனும்போது இங்கேயே வை நான் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக என சிறுவிரல் நீட்டும் நீலன்.  எங்கிருக்கிறாய் என்னவனே! எடுத்துக்கொள் என்றே ஏந்தப்பட்ட கலமாக ராதை. எங்கிருக்கிறாய் சிறியவனே! எடுத்துவிடுவாயா நீ எனும் அறைகூவலாகவே கம்சன்.  இரண்டையும் ஒரே புன்னகையோடு அள்ளிச் சூடிக் கொள்ளும் மாயன். இரு நுனியும் பற்றி எரியும் திரியில் ஒற்றைப் பெரும் ஒளிர்நீலச்சுடர்.  நீலம் என்பதே ஒன்றென இருப்பது தன்னை இரண்டெனக் காட்டி, ஒன்றை ஒன்றை முற்றறிந்து, முற்றளித்து, முற்றிழந்து மீண்டும் முழுமை என்றாவது.

“இங்குளேன்! ஏனுளேன்?” என்பதே ராதை விழித்ததும் அகத்தில் எழும் முதற்சொல். அங்கிருந்து தொடங்கி “உடல்கொண்டதனாலேயே ஓரிடத்திலமையும் விதிகொண்டிருக்கிறேன். விரிந்து எழுந்து இந்த விருந்தாவனத்தை நிறைக்கலாகுமா? உடைந்து சிதறி இந்த உலகெங்கும் ஒளிரமுடியுமா?” என்ற எண்ணத்தோடு நிலவிரவில் நிறைகிறாள் ராதை. அதுவே நீலத்தின் பயணம். “அவள் தேடியது எதை? கண்டடைந்து நிறைந்தது எதை?”  என அவள் குடியினரும் சுற்றத்தினரும் இன்னும் அறியவில்லை. இதைக் கண்டடைவது அவரவர் பயணம்.

அவளது முதல் கேள்வியில் இருந்து இறுதிக் கேள்வி வரை ஊற்றென ஊறிப் பெருகி நுரைத்துக் கொந்தளித்து விரிந்து படர்ந்து கடல் சேர்ந்து விண் ஏறுகிறது நீலம் எனும் காளிந்தி.

“பிரம்மன் படைத்தவற்றில் யுகங்களுக்கு ஒரு கனி மட்டுமே விண்ணை நோக்கி உதிர்கிறது.” அவ்விதம் உதிர்வது எப்படி?, அதற்காக “பிச்சியாவதென்ன, பேய்ச்சியாவதென்ன, இங்குள ஏதுமாவதென்ன” என்று அவளைப் போலவே உன்மத்தம் மனமெங்கும் நிறைகிறது.

மிக்க அன்புடன்,

சுபா

நீலம் – முழுமையாக கேட்க 

முந்தைய கட்டுரைஇன்றைய தற்கொலைகள்
அடுத்த கட்டுரைகவிதைகள் பற்றி, ஒரு கடிதம்