சொல் தெளியா இசை

போங்கோலி அல்லது நம் மொழியில் வங்காள மொழிப் பாடல்களை நான் முதல்முறையாகக் கேட்பது 1991ல் அலைந்து திரியும் காலத்தில் வங்காளத்திற்குச் சென்றபோது. அப்போது ஒன்றை அறிந்தேன், ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அன்றெல்லாம் ரேடியோ என்பது உலகையே நாம் துழாவிப்பார்க்கும் சிறு துளை.

அன்றெல்லாம் வேறெந்த உலகத்தொடர்பும் இல்லை. நாளிதழ்கள் உண்டு, ஆனால் அவற்றில் எதிர்பாராத ஆச்சரியங்கள் அமைவது அரிது. ஒரு டிரான்ஸிஸ்டர் ரேடியோ கிடைத்தால் அதை மெல்லமெல்ல சுழற்றி அதன் மெல்லிய நூலால் உலகத்தையே மெல்ல வருடி பார்ப்பது அக்காலத்தைய எல்லா பயல்களும் செய்வது. அதன் எல்லை முடிந்தபின்னரும் திருகி டயல் உடைந்து அடிவாங்கிய அனுபவம் அனேகமாக எல்லாருக்கும் இருக்கும்.

சம்பந்தமில்லா மொழிகளில் சம்பந்தமில்லா குரல்கள் எழுந்து நம்மை அதட்டும். நம்மிடம் ஆவேசமாக அறைகூவும். உருக்கமாகப் பேசும். எவரோ எவரிடமோ அழுவார்கள், கொஞ்சுவார்கள். நாம் அறியவே முடியாத செய்திகள் ஆணித்தரமாக ஒலிக்கும். ரேடியோ மிக மர்மமான ஒரு பொருள். மிகமிக ஆழம் கொண்டது. அதைவைத்து நாம் வானில் எழுந்து பறக்கமுடியும். அங்கிருந்துகொண்டு கீழே பூமியைப் பார்க்கமுடியும்.

நான் அவ்வாறு பல மொழிகளுக்குள் சென்று விழுந்திருக்கிறேன். பல நகர்களில் பல நிலங்களில். குறிப்பாக பின்னிரவுகளில் ரேடியோவை துழாவுவது ஒரு பித்தெழும் அனுபவம். தமிழில் அதை கவிஞர்கள் எவரும் எழுதியதில்லை. நான் எழுதியிருக்கிறேன், பின் தொடரும் நிழலின் குரல் நாவலில்.

அவ்வாறு கேட்டதுதான் வங்கமொழி. எந்தமொழியானாலும் பாடல்கள் நமக்கு தெரிந்தவையாக ஆகிவிடுகின்றன.அவற்றின் சொற்கள் புரியாதபோதும் உணர்வுகள் வந்தடைந்துவிடுகின்றன. நான் வங்கப்பாடல்களை ஓரிருமுறை கேட்டு கனவில் ஆழ்ந்திருக்கிறேன். ஆனால் அவை வங்கமொழிப்பாடல்கள் என்றே தெரிந்திருக்கவில்லை.

எண்பதுகளில் எல்லா டீக்கடைகளிலும் ரேடியோ ஓடிக்கொண்டிருக்கும். வெளியே நின்று பாட்டு கேட்கலாம். கங்கைவழியாக படகில் செல்லும்போது ரேடியோ ஒலித்துக்கொண்டே இருக்கும். அக்காலத்தில் பிலிப்பைன்ஸின் ஏதோ ரேடியோ வங்காளத்தில் கேட்கும். அவர்கள் நள்ளிரவிலும் பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிலவில், கங்கைமேல், படகில் குளிருக்கும் கொசுவுக்கும் அஞ்சி முட்டப்புதைத்து போர்த்திக்கொண்டு வங்கமொழிப்பாடல்களை கேட்டபடி மிதந்து செல்வது கனவுபோல நினைவில் எழுகிறது

ஹேமந்த் குமார் முகர்ஜி

அக்கனவை நீண்ட இடைவெளிக்குப்பின் இப்பாடலைக் கேட்டபோதும் அடைந்தேன். 1957ல் வெளிவந்த சேஷ் பரிச்சய் என்னும் வங்கமொழிப்பாடல். இசைமையமைத்து பாடியவர் ஹேமந்த்குமார் முக்கர்ஜி. வங்கமொழியின் இசைமேதைகளில் ஒருவராகக் கருதப்படுபவர். எழுதியவர் பிமல் குமார்

பிமல் சந்திர கோஷ்

கொஞ்சம்கூட சொற்பொருள் தெரியாத ஒரு பாடல் விசித்திரமான உணர்வுப்பொருள் கொண்டிருக்கிறது.எண்பதுகளின் வங்கக் கிராமப்புறங்கள் சாணிவாடையும் சேறு உலரும் மணமும் கலந்தவை. நீரின் பளபளப்பு கண்களை மங்கச்செய்யும். வங்கமே ஒரு பெரிய கப்பல் போல நீரில் மிதந்துகிடப்பதாக, ஒழுகிச்செல்வதாகத் தோன்றும். மீண்டும் அந்நிலத்தில் இருந்தேன்.

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

முந்தைய கட்டுரைகுதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்
அடுத்த கட்டுரைஉயிர்மை ஒரு வினா