26 ஆம் தேதியின் நிகழ்வுகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – செயல்பாடுகள் / பணிகள்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தற்சமயம் முக்கியமாக இரண்டு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
1) ஆவணப்படங்கள், இசை, ஒலி, ஒளி என காட்சி ஊடகங்களை வெளியிட்டு தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் சிறப்பிப்பது, உலகறியச் செய்வது.
2) தமிழில் வெளிவந்த, தேர்ந்த விமர்சகர்களால், சிறந்த கதைகள் அல்லது நாவல்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவது.
முதலாவது பணியைப் பற்றி இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தோம், மேற்கொண்டு செய்துவரும் மொழிபெயர்ப்பு பணியைப் பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
ஜூலை மாதம் இறுதியில், மொழிபெயர்ப்புக்கென்று ஒரு குழு அமைத்தோம். சுசித்ரா ராமச்சந்திரன், ரெமிதா சதீஸ் மற்றும் R.S.சகா மெய்ப்பு பார்க்கும் பணியை ஏற்றுக் கொண்டார்கள். எழுத்தாளர் சுசித்ரா-வின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் – பெரியம்மாவின் சொற்கள், படுகை, போன்றவை வாசகர்களிடையே பெயர்பெற்றவை. அவரைப் பற்றிய அறிமுகம் அதிகம் தேவையில்லை. ரெமிதா, நீலம் பற்றி ஆங்கிலத்தில் விமர்சனம், வெண்முரசு ஆவணப்படத்திற்கு ஆங்கில வசனங்கள், நீலம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு என்று தனது முத்திரைகளை பதித்துள்ளார்.
சகா, பிறந்தது இந்தியாவில், வளர்ந்ததும் கற்றதும் அமெரிக்காவில். அவர் ஆறு வருடங்களாக ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளையும், கட்டுரைகளையும் தொகுத்து Hireath எனும் நூலாக ஜனவரியில் வெளியிட்டுள்ளார். தமிழை தங்குதடையின்றி பேசுபவர். அவரது வாழ்க்கையின் நேரடி அனுபவமும், பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசும் தமிழும் இந்த மொழிபெயர்ப்பு பணிக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. இரண்டு கட்ட மொழிபெயர்ப்பு என்று வரும்பொழுது, இவரது அமெரிக்க வளர்ப்பு, ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களின் புரிதலை குழுவிற்கு எடுத்துச் சொல்ல வழிவகுக்கிறது.
மெய்ப்பு பார்க்கும் குழுவுடன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திடம் சமர்ப்பிக்கும் படைப்புகளை வாசித்து தரம் பார்க்க குழுவிற்குள் குழு ஒன்றும் உள்ளது. வேணு தயாநிதி, ஹூஸ்டன் சிவா, பாஸ்டன் பாலா, ஜெகதீஸ் குமார், மதன் மற்றும் விஷ்வநாதன் மகாலிங்கம் வாசித்து, விவாதித்து உதவுகின்றனர். ஹூஸ்டன் சிவா, மதன் மற்றும் ஜெகதீஸ் தமிழ் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
மொழிபெயர்ப்பு பணி என்று வரும்பொழுது, வெவ்வேறு வகைகளில் பங்காற்றுகிறோம்.
அ) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை தரம் பார்த்து, மெய்ப்பு பார்த்து அமெரிக்க வட்டத்திற்கு என்று உள்ள தளத்தில் பிரசுரம் செய்கிறோம். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வெள்ளிக்கிழமை இரவுகள் (Friday Nights), ஹூஸ்டன் சிவாவால் மொழிபெயர்க்கப்பட்டு, ரெமிதாவின் மேற்பார்வையில் வெளியிடப்பட்டது.
ஆ) மொழிபெயர்ப்பிற்கு ஒரு படைப்பை எடுப்பதற்கு முன்னர், ஏற்கனவே அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா, மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், அதை மேலும் ஒரு முறை முயற்சித்தால், மூலத்தின் சாரத்தை எட்டமுடியுமா என்ற பரிசோதனையையும் செய்கிறோம். உதாரணத்திற்கு கோபல்ல கிராமம், ஏற்கனவே M.விஜயலக்ஷ்மி என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அதை ஆங்கிலம் மட்டும் அறிந்தவர் படிக்கும்பொழுது இருக்கும் சிக்கல்களை களையவும், விடுபட்டுப்போன சில விஷயங்களை சேர்ப்பதன் மூலம் படிக்கும் வாசகனுக்கு நல்ல புரிதலைக் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும், கோபல்ல கிராமத்தை, சகாவும், ராதாவும், இரண்டாம் முறையாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க எடுத்து, பணியை செவ்வனே செய்து வருகின்றனர். சுசித்ரா மெய்ப்பு பார்த்து உதவுகிறார். இதுவரை தளத்தில் ஆறு அத்தியாயங்கள் வந்துள்ளன.
தளத்தில் பிரசுரிக்கும் படைப்புகளை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒலி வடிவிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் திட்டம் உள்ளது. கோபல்ல கிராமத்தின் முதல் மூன்று அத்தியாயங்கள், சகா, ஆங்கிலத்தில் பேசி பதிவு செய்த ஒலிவடிவங்களை தளத்தில் கேட்கலாம். ராதா, தமிழ் ஒலி வடிவங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் தளத்தில், கோபல்ல கிராமம், தமிழ் ஒலிவடிவிலும் இருக்கும்.
இ) ஆங்கில இதழ்களுக்கு சமர்க்கிப்பட விருக்கும் படைப்புகளை கூடி வாசித்து எண்ணங்களை பகிர்கிறோம். செய்யவேண்டிய திருத்தங்களையும் சொல்கிறோம். ஜெகதீஸ் குமார் மொழிபெயர்த்த, ஆங்கில இலக்கிய இதழ்களில் பிரசுரமான குமிழிகள் (bubbles), மலைகளின் உரையாடல் (mountains’dialogue) கதைகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களின் வாசிப்பு பங்களிப்பை பற்றி அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஈ) தமிழ் படைப்புகள், ஏற்கனவே என்ன என்ன ஆங்கிலத்தில் வந்துள்ளன என்பது போன்ற விபரங்களை அறிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. ஒரு எழுத்தாளரின் பெயரை சொல்லி, அவரது கதையை ஆங்கிலத்தில் எங்கே படிக்கலாம் என்று ஒருவர் கேட்டால், இதோ இங்கே என்று எதையும் எளிதாக சுட்டிக்காட்ட முடியவில்லை. உதாரணத்திற்கு, ஜெயமோகனின் நாவல்கள், சிறுகதைகள் இதுவரையில் என்ன என்ன ஆங்கிலத்தில் வந்துள்ளன என்று தேடினால், விக்கிப்பீடியாவில், ‘பெரியம்மாவின் சொற்கள்’ asymptote-ல் வந்தது மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். இணையத்தில் தேடினால், யானை டாக்டர் கதைக்கு மட்டும் நான்கு விதமான மொழிபெயர்ப்புகள் உள்ளன. அவற்றில் சில நிரல்களை கிளிக் செய்தால் வேலை செய்யாது.
எழுத்தாளர் பவா செல்லதுரையுடனான தனிப்பட்ட உரையாடலில், அவரது கதைகள், கிட்டத்தட்ட அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன என்று அறிய வருகிறோம். இந்த விபரம் அவரது தளத்திலோ, அவருக்கென உள்ள விக்கிபீடியாவிலோ இல்லை. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் விபரங்களை தேடினால், விக்கிபீடியா, இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்று ஒற்றை வரியில், சொல்கின்றன. அவரிடம் கேட்டால், எட்டுத்திக்கும் மதயானை (Against All Odds), சூடிய பூ சூடற்க (A New Beginning), மிதவை, போன்றவை மொழிபெயர்க்கப் பட்டுள்ளன எனவும், மேலும் சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் சொன்னார். இதற்கு அனைத்திற்கும் விடையாக, தமிழ்படைப்புகளை ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு சுட்டிக்காட்டும் தளமாக உருவெடுப்பது.
காட்சி ஊடகப் பணிகள், மொழிபெயர்ப்பு பணிகள் இரண்டும் தொடந்து தங்குதடையின்றி நடைபெறவும், தன்னார்வலர்கள் அல்லாதவரின் சேவையும் தேவை இருப்பதால், நிதியின் தேவை அத்தியாவசியமாகிறது. தேவையறிந்து இலக்கிய ஆர்வலர்களும், வாசக நண்பர்களும் நிதி உதவி வழங்குகின்றனர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) இலாப நோக்கமற்ற சேவை நிறுவனமாக 501(C)(3) பதிவு செய்யப்பட்டுள்ளதால், கொடுக்கப்படும் நிதிக்கு வரிவிலக்கு உண்டு.
ஆஸ்டின் சௌந்தர்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)