இமையத்தின் கோவேறு கழுதைகள், வெங்கி

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி”

எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின் கிராமத்தை?

”இலக்கியம் என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு பதிலாய் இருக்கும், ”கோவேறு கழுதைகள்” வாசித்து முடித்த, கோடைக்காற்று வீசும் இக்கென்யப் பின்னிரவில், நெகிழ்ந்து உணர்வு வசப்பட்டுக் கிடக்கும் இம்மனநிலையை எப்படி விவரிப்பது?. 4500 கிலோமீட்டர்களுக்கு அப்பால், கடல்தாண்டி இருக்கும், ஓர் ஆப்பிரிக்க நாட்டில், எழுதி இருபத்தைந்து வருடங்களுக்குப் பின், வாசித்து முடித்த ஒரு படைப்பு மனதை இந்த அளவிற்குப் பாதித்து, வசியம் செய்து, பரவசப்படுத்தி, வளர்ந்த கிராமத்தின் பதின்ம நினைவுகளையெல்லாம் தொட்டெடுத்து மீட்டி, மனம் நிறைத்து, பின்னிரவில் தூக்கம் மறக்க வைத்து, மங்கிய நிலவொளியில், கிளைகள் அசையும் மரங்களினூடே இப்படி நடக்க வைக்கிறதென்றால்…”இலக்கியம்” எனும் பேராற்றல் முன் வணங்கி நிற்கத்தான் முடிகிறது.

“ஆரோக்கிய நிகேதனம்” படித்து முடித்த இரவிலும், அம்ரிதாவின் “பிஞ்சர்” பார்த்த இரவிலும், “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” படித்து முடித்த இரவிலும் இப்படித்தான், பண்ணையின் பசுங்குடில்களுக்கு நடுவே சூரிய சக்தி விளக்குகளின் வெளிச்சத்தில் இலக்கில்லாமல் மேலும் கீழும் நடந்துகொண்டிருந்தேன்.

ஆரோக்கியத்தின் வாழ்வு இலக்கியத்தில் பதியப்பட்டு, சாகாவரம் பெற்றுவிட்டது. அவர் வாழ்வு மட்டுமல்ல, அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வியல் எழுத்தாணி கொண்டு பொறிக்கப்பட்டு விட்டது. இலக்கியம் இதற்குத்தானே?. ராச்சோறு எடுக்கும் ஆரோக்கியத்தின் “சாமி, உங்க வண்ணாத்தி மவ வந்திருக்கேன் சாமி” என்ற வீட்டுவாசல் குரல், என் கிராமத்து நண்பன் ஆறுமுகம் வீட்டுவாசலில் எண்பதுகளில் கேட்ட அக்கம்மாவின் “அக்கம்மா வந்திருக்கேன்…சோறு போடுங்க தாயி…” குரலை துல்லியமாக காதுகளில் ஒலிக்கவைத்தது. முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின், அக்கம்மாவின் அக்குரல் இந்த நள்ளிரவில் மனதில் மேலெழுந்து கண்களில் நீர் துளிர்க்க வைக்கிறது.

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அக்கம்மாவின் குடும்பம் எங்கள் கிராமத்தில் சலவைத் தொழில் செய்யும் குடும்பம். தெப்பக் குளத்தின் தெற்குப்புறம் கடைசியில் இருந்த காலனியில் பின்பக்கமாயிருந்தது அவர்கள் வீடு. மண்வீட்டின் முன் கருவேல மரத்தில் கழுதை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ராச்சோறு எடுப்பதற்கு அக்கம்மாவோ, அவர் கணவனோ, சிலநாட்கள் அவர் பெண் பூரணமோ முன்னிரவில் வீடு வீடாகச் செல்வார்கள். பூரணத்திற்கு என்னைவிட ஐந்தாறு வயது அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னிரவு நேரத்தில், தெப்பக்குள சுற்றுச்சுவற்றில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சில நாட்களில், துவைத்த துணிகளை வீடுகளில் கொடுப்பதற்காக, பெரிய மூட்டையை தலைமேல் தூக்கிக் கொண்டு அக்கம்மாவுடன் செல்லும் பூரணத்தைப் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் சாயங்காலம் சென்னம்பட்டியிலிருந்து பள்ளிக்கூடம் விட்டு சைக்கிளில் வரும்போது, தெப்பத்தின் கிழக்கு மூலையில் ஆலமரத்தடியில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தில், சைக்கிளை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, பக்கத்தில் கூட்டத்தினருகே சென்று எட்டிப்பார்த்தேன். பஞ்சாயத்து போர்டு பிரெஸிடண்டோடு இன்னும் மூன்று நான்கு பெரியவர்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். இடுப்பில் துண்டோடு பூரணத்தின் அப்பா கைகூப்பி முதுகு வளைத்து நின்றிருந்தார். பக்கத்தில் அக்கம்மாவும், பூரணமும் தலைகுனிந்து கண்ணீரோடு நின்றிருந்தார்கள். பெரியப்பாவும், மாமாவும் தனியே மடக்கு சேரில் உட்கார்ந்திருந்தார்கள். காலனிப் பையன் ஒருவன் சட்டையில்லாமல் கிழிந்து போன பனியனோடும், இடுப்பில் துண்டோடும் எல்லோர் காலிலும் விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. “இருபது ரூபா ஜாஸ்திங்க சாமி, தயவு பண்ணணும்” அந்தப் பையன் மறுபடியும் ஒரு பெரியவரின் காலில் விழுந்து கும்பிட்டான். ”நீ பண்ண தப்புக்கு இருபது ரூபா கம்மிடா” என்றார் ஒருவர். என்னைப் பார்த்துவிட்ட சீனி மாமா, முறைத்து வீட்டிற்குப் போகச்சொல்லி சைகை காட்டினார். நான் நகர்ந்து போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். வீடு வரும்வரைக்கும், பூரணத்தின் கண்ணீர் நிரம்பிய அந்தக் கண்கள்தான் மனதில் நின்றிருந்தது.

பத்து/பனிரெண்டு வயதில் நான் பார்த்து, ஆழ் மனத்திற்குச் சென்று மறைந்து போன அக்குடும்பத்தை, இந்த நாற்பத்தாறு வயதில், “கோவேறு கழுதைகள்” ரத்தமும், சதையுமாய் கண்முன் கொண்டுவந்தது. அக்கம்மாவும், ஆரோக்கியமும் வேறுவேறல்ல. படிக்கும்போது அக்கம்மாவும் இப்படித்தானே வாழ்ந்திருப்பார் என்று யோசித்து யோசித்து மனம், நெடுகிலும் நெகிழ்ந்துகொண்டேயிருந்தது. இப்போது பூரணம் எங்கிருக்கிறாரோ, என்ன செய்துகொண்டிருக்கிறாரோ…பெருமூச்சுடன் அவருக்காக பிரார்த்தித்துக்கொண்டேன்.

“உருட்டுக் கட்டையாட்டம் இருக்கிற இந்த உடம்பாலதான் ஊருல எல்லார்கிட்டயும் எனக்குச் சண்டை வருது. கீழ்ச் சாதின்னு கூடப் பார்க்காமக் கடிக்க வரானுங்க. மீசை நரைச்ச கெயவன்கூட எங்கிட்டக் கேலி பேசுறான். கோவமா வருது. என் அடி வவுத்தையே பாக்குறாங்க. நா இனிமே துணி எடுக்கப் போகல” மேரியின் அழுகைக் குரல் மனதை என்னவோ செய்கிறது. எது நடந்துவிடக் கூடாது என்று மேரி பயந்துகொண்டிருந்தாளோ, அச்சம்பவம் நடந்த அத்தருணம்…சடையனிடம் மாட்டிய மேரியின் கெஞ்சும் குரல்…மனதை அறுப்பது…

“வாண்டாம் சாமி…”

“தப்பு சாமி…”

“நல்லதில்ல சாமி…”

“மானம் மருவாத பூடும் சாமி…”

“தெருவுல தலகாட்ட முடியாது சாமி…”

“குடும்பம் அயிஞ்சுபூடும் சாமி…”

“வண்ணாத்தி சாமி…”

“வாக்கப்படப் போறவ சாமி…”

“சாதிக் குத்தமாயிடும் சாமி…”

“உசுரப் போக்கிப்பேன் சாமி…”

“உங்களுக்குக் காலுக்குக் கும்பிடுறேனய்யா…”

“உங்களுக்கு மவளாப் பொறக்கறனய்யா…”

மேலே வாசிப்பைத் தொடரமுடியாமல் தவித்த இடம் அது.

மேல்நாரியப்பனூர் அந்தோணியார் கோவிலுக்குப் போவதிலிருந்து துவங்கும் நாவல், அம்மக்களின் வாழ்வை அச்சு அசலாய் அத்தனை இயல்பாய் அக்கிராமத்தின் எல்லாப் பின்னணியோடும் கண்முன் விரிக்கிறது. கிராமத்தின் எழவு வீட்டின் காரியங்கள், அறுவடைக் காலம், களம் தூற்றும் நிகழ்வுகள், ஊர்ச் சோறு எடுப்பது சம்பந்தமாக ஆரோக்கியத்திற்கும் சகாயத்திற்கும் நடக்கும் சண்டைகள், தெரசா, திரவியராஜ் குடும்பம், திரவியம்-மேரி-யின் கல்யாணம், திரவியராஜின் மரணம், பெரியானின் வாழ்க்கை, தைப் பொங்கலில் கிராமத்தின் முகம், மேரிக்கும் ராணிக்கும் இடையிலான நட்பு, குடுகுடுப்பைக்காரனின் இரவு வாக்கு, மாரியம்மன் கோவில் திருவிழா, ஆடு, மாடு, பன்றித் தலைகளுக்கு நடக்கும் பஞ்சாயத்து, ஊர்ச்சோறு எடுக்கும்போது ஆரோக்கியத்தின் அனுபவங்கள், கிராமத்தில் தேர்தலின் முகம், அந்த மழை, வளரும் பெரியானின் பேத்தி, கிராமத்தில் நடக்கும் பிரசவம், ஆரோக்கியம் நீக்கும் பால்கட்டு…

நாவல் படித்து முடித்தபோது, என் கிராமத்தில் மறுபடி வாழ்ந்து வெளியில் வந்ததுபோல் இருந்தது.

இந்து தமிழ் திசையில் வெளியான, அரவிந்தன் எடுத்த இமையத்தின் பேட்டியை, “கோவேறு கழுதைகள்” படித்துமுடித்த அந்த இரவில்தான் வாசித்தேன். ஒரு நள்ளிரவில் தான் கேட்ட ஆரோக்கியத்தின் அழுகுரல்தான், “கோவேறு கழுதைகள்” நாவலை உருவாக்கியது என்று சொல்லியிருந்தார். அந்த நள்ளிரவின் அடர்ந்த இருட்டில் சாதாரணமாய் கரைந்து போயிருந்திருக்கக் கூடிய ஓர் ஒட்டுமொத்த வாழ்வின் அழுகுரலை அழுத்தமாய் பதிவு செய்ததற்காக இமையத்தை கட்டிக்கொள்கிறேன். பேட்டியில் செடல் எனும் தெருக்கூத்தாடும் அழகான பெண் குறித்து சொல்லும்போது…

”ஒரு கரிநாள் அன்று பொங்கல் காசு கேட்பதற்காக வந்த செடல் “மாமன் மகனே பொங்க காசு தாங்க சாமி” என்று கேட்டு காலில் விழுந்து கும்பிட்டு, “பால் பொங்கிடிச்சா?” என்று கேட்டார். அவர் என் காலின் முன் விழுந்து கிடந்த அந்த கணத்தில்தான் தமிழ் நாவல் இலக்கியத்தின் மாபெரும் கதாநாயகி செடல் என்று தோன்றியது”

என்று குறிப்பிடுகிறார். இந்த ஒரு வரியே என் மனதை நிரப்பப் போதுமானதாய் இருந்தது. செடல், எங்கள் கிராமத்தின் ”வெள்ளையம்மா”-வாக இருக்கலாம். மனம் இப்போதே பரபரக்கிறது. வரும் நாட்கள் செடலுடன்தான்.

வெங்கி

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்திய முகங்கள்