நீலம் கடலூர் சீனு உரை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.  யாருளர் நம் இனிய சீனுவைப்போல்? சொல்முகத்தின் இம்மாத வெண்முரசு கூடுகையில் கடலூர் சீனுவின் நீலம் குறித்த உரை இனிது நிகழ்வுற்றது.  சீனுவுடன் பாண்டிச்சேரி நண்பர்கள் சிலர் ஈரோடு கிருஷ்ணனுடன் ஈரோடு நண்பர்கள் சிலர் அத்துடன் கோவை நண்பர்கள் பலர் என சொல்முகம் சுடர்முகம் கொண்டது.

நீலம் குறித்து ஏற்கனவே பல உரைகள் நிகழ்த்தி இருந்த சீனு நீலத்தின் உணர்ச்சிகரம் தவிர்த்தே இந்த உரை நிகழ்த்தபோவதாக துவங்கினார்.  உணர்ச்சிகரம் தவிர்க்கக் கூடியதா என்ன நீலத்திற்கும் சீனுவிற்கும்? வெண்முரசு பற்றிய ஒரு விரிவான வரைபடத்தை அளித்தார்.  வேத காலத்திலிருந்து இன்று 2020 வெண்முரசு வரை இந்தியா என்னும் இப்பெருநிலத்தில் நடைபெற்ற சங்கிரஹம் என்னும் தொகுப்பு செயல்முறையை விளக்கினார்.

கீதை இதைத் தொடங்கியது.  அதற்குமுன் இம்மண்ணிலிருந்த மெய்யியல் வழிமுறைகள் அனைத்திலும் -அசுரர்களுடையது நாகர்களுடையது என அனைவருடையவற்றிலும் ஏற்கவேண்டியதை ஏற்று தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து கண்ணன் அதைச் செய்தான்.  பின்னர் கீதையின் வழியை சங்கரர் தொடர்ந்தார் வேத மதத்துடன் வேதாந்த அத்வைதம், பௌத்தர்களின் அனாத்மா, சூனியமென்னு கொள்கைகளை மாயாவாதம் என்று உள்ளிழுத்துக் கொண்டு அவர் எட்டாம் நூற்றாண்டில் இப்பெருநிலத்தின் அனைத்தையும் தொகுத்தார்.

ஒவ்வொரு யுகசந்தியிலும் இம்மண்ணில் தொடர்ந்து நடைபெறும் இப்பணியை சங்கரருக்குப் பிறகு நவீன யுகத்தில் ஸ்ரீ நாராயணகுரு தொடர்ந்து நடராஜகுரு, குரு நித்யா, ஜெயமோகன் வெண்முரசு என்று நிகழ்ந்திருப்பதை விவரித்தார்.  பின்லாந்தில் நடைபெற்ற சங்கிரஹம் எவ்வாறு அவர்களது தொன்மை பாகன் பண்பாட்டை மெய்யியலை மீளகொணர்ந்தது என்பதையும் அவ்வாறான ஒன்று அமெரிக்க செவ்விந்தியர்களிடம் நடைபெறாமல் போனதன் காரணங்களையும் விளக்கினார்.

மெய்யியல் வரலாறு பண்பாடு மட்டுமல்லாம் நவீன உளவியல் நரம்பியல் என 2020 வரையிலான அனைத்தையும் வெண்முரசு தன்னுள் கொண்டிருப்பதைச் சுட்டினார்.  வெண்முரசின் விரிவின் முன் பின் நவீனத்துவத்தின் எல்லைகள் எவ்வாறு சிறியவை ஆகின்றன என்று விளக்கினார்.  விளிம்புநிலையினரை மையப்படுத்தும் பணியை வெண்முரசு எவ்வாறு விரிவாக மேற்கொள்கிறது என்பதை கூறி வண்ணக்கடல் கூறும் அசுரர் குலத்தின் கதைகளையும் அவர்களுடன் வெண்முரசு நாவல்கள் முழுவதும் விரவிக்கிடக்கும் நாகர்களின் வரலாற்றையும் சுட்டினார்.

மொத்த வெண்முரசில் கண்ணன் அமைந்திருக்கும் விதம் பற்றிக் கூறினார்.  மாறாப் பெருந்தன்மை கொண்ட திருதிராஷ்டிரரின் ஸ்தூல பாவத்தையும் விஷயி பாவம் மட்டுமே கொண்டு விளங்கும் கண்ணன் இணையற்ற mystic-க்காக இருப்பதையும் குறிப்பிட்டார்.  நீலத்தின் கண்ணனை ராதையும் கம்சனும் நேரெதிர் திசைகளில் இருந்து சென்றடைந்தது. நந்தகோபர், யசோதை, பூதனை என அனைவருக்கும் அவன் வழங்கும் வாய்ப்புகளைக் விளக்கினார்.  எல்லை கடக்கவொண்ணாதென தாய், தந்தை என்றே நின்றுகொள்ளும் நந்தகோபரையும் யசோதையையும் குறிப்பிட்டார்.

யோகியர் அடையும் அனுபவங்கள் அவர்கள் அறியும் இருள் என மெய்மைக்கான பாதை அமைந்திருப்பதைக் குறிப்பிட்டார்.  கனவுக்குள் கனவு என பீலியின் பெருமை என விழிகள் என நீக்கமறநிறை நீலம் என கண்ணனின் வண்ணங்கள் மீண்டு தீட்டப்பெற்றது சீனுவின் இவ்வுரையில்.  ஆழ்வார்களின் பாசுரங்களிலும் கம்பராமாயணத்திலும் நிகழ்ந்திருக்கும் மொழியின் எழில் நீலத்தில் உச்சமென நிகழ்ந்திருப்பதை விவரித்தார்.  நீலம் உணர்த்திய தமிழனாய் இருப்பதன் சுவையை பயனைக் குறிப்பிட்டார்.  நீலத்தின் சந்தங்கள் – அது எவ்வாறு இசையுடன் துய்த்தற்கு உரியது அகனமைவது ஆழங்கொள்வது நேரடி ஆன்மிக அனுபவமாவது என்பதை விளக்கினார்.

தாங்கள் நீலத்தின் முன்னுரையில் குறிபிட்டவாறு ஆத்மானந்தர் குறித்துக் கூறி அத்வைதத்தின் இறுக்கம் விலக்கி ராதாமாதவம் பெருங்காதல் எனப்பெறும் பேரன்பில் அவர் திளைத்தது கூறி ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உடலில் கூட பெண்மைக்குரிய மாற்றங்கள் விளைவித்த அதனியல் குறிப்பிட்டார்.

அத்துடன் குருதியால் ஈடுசெலுத்தப் பெறும் பாவம் என்னும் கிறிஸ்துவ கருத்தைக் குறிப்பிட்டு கண்ணன் அதனுடன் பொருந்தும் இடம் கூறினார்.  தெய்வமெனவே நிற்கும் கண்ணனும் மானுடகுமாரனாக நிற்கும் ஏசுவும் வேறுபடும் விதமும் விளக்கினார்.  அவிர்பாகத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி இந்திரனிடமிருந்து அதைப்பறித்து இந்திரஜித் ஆகிய கண்ணன் எவ்வாறு ஒவ்வொரு வெண்முரசு நாவலிலும் ஒவ்வொருவனாகிறான் என்பதைக் குறிப்பிட்டு அத்துடன் நீலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கூட அவன் ஒவ்வொருவனாவதைச் சுட்டினார்.

சீனு உரை முடித்தபோது லோகமாதேவி நீலம் வாசித்ததாகவே தோன்றவில்லை.  இனிதான் வாசிக்கவேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது என்று கூற சீனு ”அதுதான் வேணும்” என்று புன்னகைத்தார்.

உண்மையில் இவ்வுரை ஒரு வாசகரின் உரை என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை.  ஒரு யோகியின் உரை.  சத் சங்கத்தின் பெருமை அறிந்தவர்கள் உணர்வார்கள்.  இங்கு நான் குறிப்பிடுபவை சிலவே அத்துடன் சீனுவின் உரையை என் சிறு திறனுக்கு ஏற்ப கொண்டவை.  உண்மையில் ஆகாயகங்கையை தலையில் தரிக்க வல்லவன் அரனே எனினும் தன் தலைக்குமேல் தொலைவில் விண்ணில் பாயும் அக்கங்கையின் எழிலை மண்நின்று கனவெனக் காணும் ஒருவனின் பேருவகை எனக்கு வாய்த்தது.

சீனுவிற்கு நன்றி.  என்றுமுள்ள தங்களுக்கு என்றுமுள்ள நன்றி.

அன்புடன்

விக்ரம்

கோவை

முந்தைய கட்டுரைபேட்டிகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகனவிலே எழுந்தது…