அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
வெண்முரசு நாவல் நிரையின் முதல் வாசிப்பில் முதற்கனலை துவங்குகையில் வெண்முரசின் மொழிச்செறிவு எனக்கு தயக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது, எனினும் துணிந்து அந்த ஆழத்தில் இறங்கினேன் மெல்ல மெல்ல வெண்முரசின் மொழிக்கு என்ன பழக்கப்படுத்திக் கொண்டேன் ஆனால் வண்ணக்கடலுக்கு அடுத்து நீலத்தில் என்னால் உடனே நுழைய முடியவில்லை .
நீலம் அதுவரை நான் பழகியிருந்த வெண்முரசின் மொழிநடையில் இருந்து பெரிதும் மாறுபட்டதாக, வசனகவிதை போல, சந்தங்களுடன் கூடிய பாடலைப் போல என்னை விலக்கி வைத்தது மேலோட்டமாக வாசித்துவிட்டு பிரயாகைக்கு சென்று விட்டேன். ஆனால் ஒரு நிறைவின்மை என்னுடன் ஒட்டிக்கொண்டது. தேர்வுக்கு செல்லும் முன்னால் முக்கியமான பகுதியை படிக்க விட்டுபோன உணர்வு வருமே அதுபோல, பயணத்துக்கு முன்பாக மிகத் தேவையானதொன்றை வீட்டில் மறந்து வைத்து விட்ட உணர்வு வருமே, அதைப்போல பிரயாகைக்குள் முழு நிறைவுடன் என்னால் இறங்கி வாசிக்க முடியவில்லை மீண்டும் நீலத்துக்கு திரும்பினேன்.
மெல்ல மெல்ல அதை அறிந்து கொண்டு நீலத்தை என் மீதள்ளி அள்ளி பூசிக் கொண்டு நீலப்பித்தில் முழுமையாக திளைத்தேன் எனினும், 26 நூல்களில் மீள மீள பலவற்றை வாசிக்கும் நான் நீலத்தை பின்னர் மீள் வாசிப்புக்கு எடுக்கவேயில்லை, வாசிப்பின் போது கூடிய அந்த பித்துநிலை என்னை அச்சுறுத்தியது .
கடலூர் சீனு இன்று நீலம் குறித்த சிறப்பு உரையின் பொருட்டு சொல்முகம் கூடுகைக்கு வந்திருந்தார். சொல்முகம் கூடுகை தொடங்கிய நாளிலிருந்து இன்றைய கூடுகையில் தான் அதிக வாசகர்கள் கலந்துகொண்டிருந்தனர். நிறைய புதுமுகங்கள், அதிலும் இளையவர்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஈரோடு கிருஷ்ணன், குவிஸ் செந்தில், மீனாம்பிகை உள்ளிட்ட பலர் நீல உடையில் வந்திருந்தனர். மிகச்சரியாக 10 மணிக்கு நரேன் அறிமுகத்துக்கு பின்னர், சீனு உரையை துவங்கினார். நீலத்தை அவர் தொடவே அரைமணி நேரமாயிற்று இந்திய பண்பாடு, தொன்மம், அரசியலமைப்பு என்று ஒரு பெருஞ்சித்திரத்தை முதலில் விளக்கினார் பண்பாடும், அரசு பரிபாலனமும் ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்தியதையும், பகவத்கீதை அதற்கு அடித்தளமாக இருந்ததையும் சொல்லி, கிருஷ்ணனுக்கு அடுத்து, ஷண்மத சங்கிரகம், சங்கரர், தத்துவரீதியாக கீதையை கட்டமைத்தது எல்லாம் விளக்கினார்.
பின்னர் நாராயண குரு, அவரை தொடர்ந்து உலகப்போர் சூழலில் நடராஜ குரு, அவரைத் தொடர்ந்து குரு நித்யா என்று அந்த மரபின் தொடர்ச்சியை, விரிவாக ஆனால் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொன்னார் இந்த மரபில், எழுத்தையே யோகமாக கொண்ட நீங்கள் வந்து வெண்முரசு எழுதியதை சீனு சொல்ல கேட்கையில் பெரும் திகைப்பு எனக்கு உண்டானது. வெண்முரசின் மீதிருக்கும் பிரமிப்பு மேலும் மேலும் பெருகியபடியே இருந்தது
வெண்முரசின் விதை விஷ்ணுபுரத்தில் இருப்பதை பல உதாரணங்களுடன் அழகாக சீனு விளக்கினார். வெண்முரசென்னும் இப்பேரிலக்கியத்தை வாசிப்பவர்கள் எல்லாம், வெறும் வாசகர்கள் மட்டுமல்ல, இப்பேரிலக்கியத்தின் பங்குதாரர்கள் என்றார். இதை கேட்கையில் உடல் மெய்ப்பு கண்டது. எனக்கு வெண்முரசு முழுவதும் புரிந்தது என்பதே என் இத்தனை வருட வாழ்வின் ஆகச்சிறந்த பெருமையாக, கெளரவமாக நான் எப்போதும் நினைப்பேன் என்னை வெண்முரசின் வாசகியாக எப்போதும் எங்கும் மிகப் பெருமையுடன் முன்வைப்பேன். இன்றைய இந்த கூடுகைக்கு பின்னர் அந்த பெருமிதம் பல மடங்காகி விட்டிருக்கிறது.
வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் அசுரகுல, நாகர்குல வரலாறுகளை சுட்டிக்காட்டி, இந்தியப் பண்பாடு எதைப் பேசுகிறதோ அதையே பேசும் வெண்முரசு, மாமனிதர்களின் வரலாறை காவிய அழகுடன் சொல்லும் பேரிலக்கியத்தின் கூறுகளை கொண்டிருப்பதை விளக்கினார்.
வெண்முரசின் ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது எனபதை, நிலையாக இருப்பதற்கு துருவன், நிலையற்றவளாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கை, பெருந்தன்மையின் வடிவமாக திருதிராஷ்டிரர் ஆகியோரை சொல்லி, ஸ்தாயி பாவம், விஷயபாவம் என்று பெரிய முக்கியமான விஷயங்களையும் எளிமையாக அங்கிருந்த அனைவருக்கும் புரியும்படி விளக்கினார்.
நீலத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் எப்படி வேறு வேறு ஆளுமையாக வருகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொன்ன சீனுவின். இன்றைய உரையின் சிறப்பான பகுதியாக ராதா மாதவ பாவம், பகவத்கீதை இந்த இரு முனைகளுக்கிடையேயான ஊசலாட்டத்தை அவர் விவரித்ததை சொல்லுவேன்.
மேலும் நீலம் எதை சொல்கிறது என்பதை விட எப்படி சொல்லுகின்றது என்பதை கவனிக்க வேண்டும் என சொல்லியபோது மீண்டும் திகைப்படைந்தேன். வெண்முரசை முழுமையாக வாசித்தவள் என்னும் என் பெருமிதங்களை சீனு உடைத்துக் கொண்டே இருந்தார்.
கம்சனின் குரோதமும் ராதையின் பிரேமையுமாக எப்படி இரு பாதைகளும் கண்ணனையே சேருகின்றது என்பது மிக புதிதான ஒரு திறப்பாக இருந்தது எனக்கு.
பின்னர் கண்ணனின் லீலைகளை படிப்படியாக சொல்லிக்கொண்டு போனார் முதலில் அன்னையிடம் காட்டிய லீலை பின்னர் தோழர்களுடன், பின்னர் கோபியர்களுடன். ராதையின் பிரேமையை, பித்தை சொல்லுகையில் சீனுவின் அன்னையை குறிப்பிட்டார். அவர் மீது பெரும் காதல் கொண்டிருந்த தந்தையின் மறைவுக்கு பின்னர் //அவர் இல்லாத உலகில் தான் எதற்கு வாழவேண்டும் என்னும் உணர்வும், அவர் விரும்பி வாழ்ந்த மிக அழகிய உலகிலிருந்து ஏன் போகவேண்டும் என்னும் உணர்வுமாக// இரு நிலைகளில் ஊசலாடிய அவரது அன்னையின் மனத் தடுமாற்றத்தை சீனு சொன்னது ராதா மாதவபிரேமையை எனக்கு மிகச்சரியாக சொல்லிவிட்டது. மீண்டும் எனக்கு உடல் மெய்ப்பு கொண்டது.
அவரது சொல்லாட்சி பிரமாதமாயிருந்தது இன்றைய உரை முழுவதிலுமே. //ஹளபேடில் கல்லால் வடித்த காளிங்க நர்த்தனத்தை நீலத்தில் ஜெயமோகன் சொல்லால் வடித்திருக்கிறார்// என்றார்.
நீலக்களேபரம், நீலத்தாலான இருட்டிலிருந்து ராதை என்னும் சொல் வருவது இவற்றையெல்லாம் சொல்லுகையில், தெளிவாக உரையை கேட்கும் பொருட்டு மின்விசிறிகள் அணைக்கப்பட்டிருந்த அந்த நிசப்தமான அறையில் சீனுவின் தொடர் உரையில் நீலப்பெருங்கடலலைகள் பெருகிப் பெருகி வந்து எங்களை மூழ்கடித்து, கரைத்து காணாமலாக்கியது.
பெண்பித்தின் மெய்யியல் என்கிறார் நீலத்தை சீனு. வந்து கொண்டிருக்கும் கண்ணனும், காத்திருக்கும் ராதையுமாக இருக்கும் சித்திரம், காத்திருக்கும் கண்ணனாகவும், வந்துகொண்டிருக்கும் ராதையாகவும் தலைகீழானது, அப்போது உடலால் அடையப்படும் இரு நிலையின் போது உணர்வுரீதியாக என்ன நிலைமாறுதலும், நிலையழிவும் உண்டாகின்றது என்பதை சொல்ல விஷ்ணுபுரத்தின் சாருகேசியை உதாரணமாக சொன்னது மிக பொருத்தமாக அழகாக அமைந்தது .
கோபியர்கள் மற்றும் ராதையின் ஊடலை, ஞானச்செருக்கை, ராதையின் அணிபுனைதலில் துவங்கும் கண்ணனின் ராசலீலைகளை எல்லாம் சீனு சொல்ல சொல்ல நான் நீலம் இன்னும் வாசிக்கவில்லை என்று எனக்கு தோன்றியது புத்தம் புதிதாக நீலத்தை, என் முன்னே ஒவ்வொரு பக்கமாக சீனு திறந்து வைத்துக்கொண்டே இருந்தார்
இடையிடையே ராமகிருஷ்ண பரமஹம்சரை, விவேகானந்தரை, பின் தொடரும் நிழலின் குரலை, ஏசுகிறிஸ்துவை, இணைத்தும் விளக்கினார். நீலம் போன்ற பெரும்படைப்பை எப்படி வாசிப்பது என்னும் ஒரு பயிற்சியை சீனு இன்று எங்களுக்கு அளித்தார் என்று சொல்லலாம்.
குழலிசையை, பீலியை, பிரேமையை, குழந்தைகளின், குருதியில் நனைந்த வாளை எல்லாம் சீனு சொல்ல சொல்ல கனவிலென கேட்டுக் கொண்டிருந்தேன். நீலத்தை வாசிக்கையில் வரும் பித்தை சீனு சொல்ல சொல்ல மீண்டுமடைந்தேன். நீலம் அளிக்கும் கற்பனையின் சாத்தியங்களை எப்படி விரிவாக்குவது என்பதை பலமுறை, பலவற்றை உதாரணமாக காட்டி சொல்லிச் சென்றார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக சரளமாக எந்த தங்குதடையுமின்றி இடையில் நீர் கூட அருந்தாமல், எந்த குறிப்பையும் பார்க்காமல் தன் மனமென்னும் நீலக்கலமொன்றிலிருந்து எடுத்து எடுத்து அளிப்பது போலவும், சீனுவே நீலமென்றாகி தன்னையே எங்கள் முன்னால் படைபப்து போலவும் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். அவர் முகத்தின் பாவங்கள் அவர் சொல்லும் பகுதியின் உணர்வுகளுகேற்ப குரலின் ஏற்ற இறக்கங்களுடன் ஒரு நடனக்கலைஞரின் முகம் போல இருந்தது. நீலத்தை வேறெப்படி பேச முடியும்?
குடுமியும், தாடியுமாக ரிஷிகுமாரனை போலவும், ரஷ்யஎழுத்தாளரை போலவும் இருந்த, தாடியின் நிறபேதங்களுக்கிணையான நிறத்திலிருந்த உடையணிந்திருந்த, சீனுவின் தேசலான அந்த தேகத்தினுள்ளிருந்து அவரை இத்தனை விசையுடன் எது இயக்குகிறது என்றுதான் யோசனையாக இருந்தது. இடைவேளையிலும் அவர் தேநீர் அருந்தவில்லை
10 நிமிட இடைவேளைக்கு பிறகு நீலம் குறித்த சீனுவின் உரையின் மீதான கலந்துரையாடல் நிகழ்ந்தது.
நீலம் போன்ற இலக்கியத்தை அணுக என்ன தடைகள் இருக்கும் என்பதை முதலில் விவாதித்தோம்
அதன் மொழிச்செறிவு முதல் தடையாக இருக்கலாம் என்றாலும் அந்த மொழிச்செறிவுடன்தான், எந்த குறுக்குவழியுமில்லாமல் அம்மொழியின் ஆழத்தில் இறங்கினாலே நீலம் வாசிக்க முடியுமென்னும் சீனுவின் கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது
பக்தி மரபு வழியே நீலத்துக்கு வரலாம் என்னும் யோசனையும் சீனுவால் முன்வைக்கப்பட்டது ஆழ்வார் பாடல்களை சொல்லி சொல்லி பழகுதல் போல நீலத்தை வாய்விட்டு பாடியும் உச்சரித்தும் கூடு வாசிப்பிலும் மனதுக்கு அம்மொழியை பழக்கலாமென்று உரையாடல் தொடர்ந்தது.
நீலம் முதன்மையாக காட்டுவது காட்சி அனுபவமா? மொழி அனுபவமா? ராதையைவிட கம்சன் ஒரு படி மேலே வைத்து சொல்லப்படுகிறானா? என்றெல்லாம் விவாதம் மிக சுவாரஸ்யமாக தொடர்ந்தது.
ஈரோடு கிருஷ்ணன் நத்தை கொம்புணரும் காலம் பாடலை சொல்லி ’’காலில்லா உடலிலெழுந்த புரவி’’ என நத்தை சொல்லப்படுவதை விளக்கி மொழியின் இனிமையை சுட்டிக் காட்டி, ’மொழிக்கு பின்னரே காட்சி, என்றார்
அடிப்படையில் உணர்வுபூர்வமானவர்களுக்கு நீலம் அணுக்கமானதாகிவிடும் என்ற வாதத்தின் போது, பிற இலக்கியங்களைப் போல காரண காரியங்களின் தொடர்ச்சியை சொல்லி, அந்த சங்கிலியால் நீலம் முன்னகர்த்த படவில்லை, ஒற்றைப் பேருணர்வின் வேறு வேறு பக்கங்களை காட்டும் நூலென்பதால் சந்தங்களுடன் கூடிய பாடல்கள் வாசிப்பிற்கு துணையாகிறது என பாலாஜி சொன்னது அழகான பொருத்தமான விளக்கமாக இருந்தது. சுபாவின் குரல்பதிவுடன் வாசிப்பையும் இணைப்பது நல்ல அனுபவமாக இருக்கிறதென்பது அதை முயன்றவர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.
சீனு சந்தங்களுடனான பாடல் இல்லாத குமரித்துறைவியும் நீலத்தை போல வேதானென்று சொன்னதும் அழகு. நீலத்தின் குழலிசையின் வேறு வேறு பொருளையும் பேசினோம் அக்ரூரருக்கு கொல்லும் இசையாக, அந்தணர்களுக்கு இடையூறாக, ராதைக்கு பிரேமையின் பித்தெழச்செய்யும் இசையாக இருக்கும் குழழிசை என்று தொடர்ந்த உரையாடல், நீலம் அத்வைதத்திற்கா அன்றி விசிஷ்டாத்வைததுக்கா எதற்கு மிக அருகில் இருக்கிறது என்று நீண்டது. சீனு ரதிவிகாரி குறித்த கேள்விக்கு மிக அழகாக காமத்தில் இணையாமல் காமத்தில் விளையாடுவதை விளக்கினார்.
விவாதத்தில் கம்சனின், சிசுபாலனின் வெறுப்பின் வேறுபாடுகளும் அலசப்பட்டது.. அதீத வெறுப்புக்கும் அதீத விருப்புக்கும் இடையே நின்றாடும் கண்ணனை அனைவருமே உணர்ந்தோம் இன்று.
குரூரங்களின், வன்முறையின் அதிகபட்ச சத்தியங்களை கம்சன் மீறுவதையும், பிரேமையின் மானுட எல்லைகளின் சாத்தியங்களை ராதை மீறுவதையும் பேசினோம்.
யோகம், அன்னம், ஞானம், பிரேமம் என பல பாதைகள் வழியே சென்று சேரும் ஓரிடம் குறித்தும், இமைக்கணத்தின் பாஞ்சாலியை, நீலத்தின் ராதையுடன் ஒப்பிட்டும் உரையாடல் தொடர்ந்தது.
மதியம் கூடுகை நிறைவுற்றது. இளங்காற்றில் மேகப்பிசிறுகளின்றி துல்லிய நீலத்திலிருந்த வானை பார்த்தபடி ஊர் திரும்பினேன். ஒரு பேரிலக்கியத்தை எப்படி வாசிப்பது என்னும் அறிதலும், அதன் அழகிய கூறுகளை அருமையாக விவாதித்து அறிந்துகொண்ட நிறைவுமாக மனம் எடை கூடியிருந்தது. கூடவே நீலம் நான் இன்னும் வாசிக்கவில்லை என்னும் உணர்வும் நிறைந்திருந்தது. மீண்டும் நாளையிலிருந்து நீலத்தை வாசிக்க துவங்குகிறேன்.
அன்புடன்
லோகமாதேவி