இமையம் பற்றிய உரை, கடிதம்

அன்புநிறை ஜெ,

இன்று திருவண்ணாமலையில் தாங்கள் எழுத்தாளர் இமையம் மற்றும் கே.வி.ஜெயஸ்ரீ குறித்து ஆற்றிய உரையைக் கேட்டேன்.

பவா தொடக்கத்தில் சொன்னது போல ஒரு சொல்லையும் நீக்க முடியாத செறிவான உரை.

ஒரு எழுத்தாளரது படைப்புலகை தொகுத்து முன்வைக்க எண்ணும் எவரும் இப்படித்தான் தொகுத்துக் கொள்ள வேண்டும் என்பதுபோல, ஒரு கச்சிதமான வடிவம்.

முதலில் இமையம் எழுத வந்த காலகட்டம், அதற்கு சுந்தர ராமசாமி போன்ற முன்னோடிகளிடமிருந்து கிடைத்த வரவேற்பு, அங்கீகாரம், விமர்சனம் போன்றவை; பின்னர் யதார்த்தவாதம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட காலத்தில் அவர் எழுத வந்ததைச் சொல்லி அந்த வரலாற்றுச் சித்திரத்தை முழுமை செய்கிறீர்கள்.

அதன் பின்னர் யதார்த்தவாத அழகியலுக்குள் எழுத்தாளர் இமையத்தின் தவற விட்டு விடக்கூடாத சிறப்புகளாக சிலவற்றை தொட்டுக்காட்டுகிறீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது எழுத்தின் சமரசமின்மை, பல பட்டைகள் கொண்ட வைரம் போல அமைவதே கலை, கலைஞன் தொடும்போது தன்னிச்சையாக அவ்விதம் பல ஆழங்களைத் தொடுவது போன்ற பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறீர்கள்.

அவற்றுக்கு அப்பால் இன்றைய உரையில் சிறப்பான புதிய திறப்புகளாக மனதில் பதிந்தவற்றைத் தொகுத்துக் கொண்டேன்.

முதலாவதாக, கதை ஒரு எழுத்தாளனுக்காகக் காத்திருப்பதை, இமையம் மட்டுமே சொல்லக் காத்திருந்த கதைகளின் வரிசையை சொல்வதற்கு,  தாங்கள் சொன்ன அரேபியக் கதை இன்றைய உரையின் உச்சம் எனத் தோன்றியது. குறளுரையில் விரித்துச் சொன்ன ஆற்றாது அழுத கண்ணீர் போல, அதைக்  கவித்துவமாகச் சொல்லும் கதை இது. “ஒரு துக்கம், ஒரு அநீதி, ஒரு முறையீடு அங்கு யுகயுகமாக ஒரு கவிஞனுக்காகக் காத்திருக்கும்” என்பது மிக அற்புதமான வரி. எத்தனை முறை சொன்ன பின்னும் இது ஒரு தெய்வ சன்னதம் போல நம்பிக்கை அளிக்கிறது. அதைச் சொல்லக் காத்திருக்கும் கலைஞனை தெய்வத்தின் அணுக்கனாக்குகிறது.

ஒரு ஆளற்ற இரவில் உடலற்ற ஒரு குரல், வரலாற்றின் குரல் போல கேட்ட ஒரு அழுகுரலைச் சொல்லி, அதுபோல ஒரு காலம்கடந்த ஒன்றின் குரலை யதார்த்தவாதத்தில் சொன்னவர் இமையம் எனச் சொன்னது அருமை. அவரது எழுத்தை, அதன் யதார்த்தவாத அழகியலைப் பேசும்தோறும் அதனூடாக வந்தமரும் நாட்டுப்புறக் கவிஞனின், தெருக்கூத்துக் கலைஞனின் குரலைத் தவற விட்டு விடக்கூடாது என்ற பார்வை முக்கியமானது.

மூன்றாவதாக ‘செல்லாதபணம்’ நாவலின் நாயகி செய்வது, காலம்காலமாக பெண் உணர்வு பூர்வமாக செய்யும் முடிவு போலத் தோன்றுவதை குருதிபலி கொடுக்கும் பக்தனுக்கும் மலர் வைக்கும் பக்தனுக்கும் இடையேயான தேர்வாகச் சொல்வதும், அக்கதையை  சமூகவியல் அர்த்த தளங்களைத் தாண்டிப் பார்க்க வேண்டிய என்றைக்குமான ஆண்-பெண் ஆடலை ஆழமாகத் திறந்து செல்லும் படைப்பாகக் காட்டியது பெரிய திறப்பாக இருந்தது. வென்றெடுக்கக் கூடிய பொருள் மேல் வென்றவனுக்கு இருக்கக் கூடிய அதீதமான உரிமை, அந்தப் பொருளை உடைத்தழிப்பது வரை செல்வது  போன்ற உளவியலும், காலம்காலமாக உடைமை கொள்ளும் வெறி கொண்ட ஆணுக்கும் தன்னை அவனுக்கு முழுதளித்து ஒருகட்டத்தில் தன்னை மீட்டுக் கொள்ள வேண்டிய பெண்ணுக்கும் இடையேயான ஆடல் என்றதும் எப்போதும் நினைவிருக்கும். ஒரு எழுத்தாளரோடு பொதுவில் இணைத்து நாம் வைத்திருக்கும் பிம்பஙகளைத்தாண்டி இலக்கியத்தை அணுக வேண்டியதை மீண்டும் நினைவுறுத்தியது.

நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலைச் சொல்லும் போது அகநானூறு காட்டும் வாழ்வியலுக்கும் புறநானூறு காட்டும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லி அகத்துறை கடந்தகாலத்தை காட்டுவதும், புறத்திணை நிகழ்காலத்தைக் காட்டுவதையும் சொன்னது அழகு.

மிகச் சிறப்பான உரையை உடனுக்குடன் இணையத்தில் தொகுத்து வெளியிட்ட ஸ்ருதி டீவிக்கும் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைநாட்டார் தெய்வங்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைஅக்டோபர் 2 நற்கூடுகை – செயல்வழி ஞானம்