நூற்பு, தொடக்கம்

நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

நூற்பு ஆரம்பித்து ஐந்து வருடம் முடியும் தருவாயில், வெகுநாட்களாக மனதில் கனவாக வீற்றிருந்த செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் கொண்டு நிறைவேற ஆரம்பித்துள்ளது. எப்படியாவது கைநூற்பு மற்றும் கைநெசவு எனும் அரும் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது நூற்பு ஆரம்பித்த தினத்தில் இருந்து ஆழமாக இருந்தது. தொடர்ச்சியாக அதே துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதே எனக்குள் இருந்த தடையை உடைத்து கற்றுக் கொடுப்பதற்கான ஆத்மபலத்தை கொடுத்துள்ளது.

நூற்பு நெசவு பள்ளிக்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஈரோடு சித்தார்த்தா மேல்நிலைப் பள்ளியில் இருந்து இருபது மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் வந்திருந்தனர். காந்தி அரையாடை ஏற்று நூறாம் ஆண்டின் முதல் தினத்தில் பயிற்சிக்கான நாளாக அமைந்தது இறையின் அருள் என்றே கருதுகிறேன்.

முதலில் மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் இணைந்து காந்தியின் சர்வசமய பிரார்த்தனை பாடலை பாடினர். அவர்களுடைய ஒட்டுமொத்த குரலின் அதிர்வுகள் என்னையறியாமல் கண்ணீரை வரவழைத்தது. காரணம் நானும் சிவராஜ் அண்ணாவும் இதே காட்சியை பலமுறை கனவாக பேசியிருக்கிறோம். அதை நிதர்சனமாக உணருகையில், இறைக்கு நன்றிகடனாக அகம் உணர்ந்த கண்ணீரை மட்டுமே படையலாக கொடுக்க முடிந்தது.

அந்த தருணத்தில் காந்தியை, வினோபாவை, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவை, உங்களை, சிவராஜ் அண்ணாவை நன்றியோடு நினைத்துக் கொண்டேன். நீங்கள் யாரும் இல்லையென்றால் என்வாழ்வு இவ்வளவு நம்பிக்கையாக கடந்து வந்திருக்காது. இதற்காக வாழ்வின் இறுதி நொடிவரை எல்லோருக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.

பிரார்த்தனை முடிந்து, அந்த நாளின் முக்கியதுவத்தை பற்றியும் காந்தியை பற்றியும் சிறு உரையாடல் இருந்தது. பிறகு என் வாழ்வு பயணம் பற்றிய அறிமுகத்தோடு, ஆடையின் ஒட்டுமொத்த சுழற்சி பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நிறைய பதில்கள் அவர்களிடமிருந்து விதவிதமாக வந்தது. இன்னும் ஆழமாக மாணவர்களிடத்தில் செல்ல வேண்டும் என்ற சக்தி கிடைத்தது. அந்த இளமைத்துடிப்பும் வேகமும் எனக்கான ஆர்வத்தை இன்னமும் அதிகப்படுத்தியிருக்கிறது.

உரையாடல் முடிந்து, பெட்டி இராட்டையில் இருந்து  கைநூற்பின் மூலம் பஞ்சு நூலாகும் செயல்முறையை செய்து காண்பித்தேன். அதன் பிறகு ஐந்து ஐந்து குழுவாக மாணவர்கள் பிரிந்து  அவர்களால் இயன்ற அளவில் நூல் நூற்றார்கள். நூற்பு முடிந்தவுடன், சிறியவர்களுக்கு சொல்லிக் கொடுப்பத்றாகாக இருந்த கைத்தறியில் அமர்ந்து கைநெசவு முறையில் நூல் எப்படி துணியாக மாறுகிறது என்பதையும் செயல்முறையாக செய்து காண்பித்தேன். நெசவு நெய்யும் போதே, ஒரு மாணவர் நானும் செய்கிறேன் என்று முன்வந்தது மிகவும் மகிழ்ச்சியான மனநிலையை கொடுத்தது.

ஒவ்வொருவராக சிறிய கைத்தறியில் அமர்ந்து நெய்து வந்த சப்தத்தோடு அவர்களின் சிரிப்பும் இந்த பிரபஞ்ச வெளியில் அன்று கலந்தது. அந்த தருணம் நானாக இல்லை. கைத்தறி நெசவு குறித்து பெரும் கனவு கொண்டு மறைந்த M.P நாச்சிமுத்து அய்யாவாகவும், இன்று வரை சிறிதும் குறைகூறாமல் கைத்தறி நெசவு எனும் கலையை பிடித்துக் கொண்டிருக்கும் கணபதி தாத்தாவாகவும் முத்துவின் குழந்தை ஆழிகையாகவும் மாறி மாறி நினைவு வந்துகொண்டிருந்தது. ஏன் என்று தெரியவில்லை. ஆனால், பல்லாயிரக்கணக்கான கைகள் மாறி வந்த கலையின் ஏதோ ஒரு கண்ணி அறுபடாமல் தொடரப்போகிறது, அதற்கு நூற்பு ஒரு சிறு கருவியாக இருக்கிறது என்பதை அந்த தருணத்தின் சாட்சியமாக உணர்ந்தேன்.

செயல் முறைகள் முடித்துவிட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். ”இதற்கு முன்பு அப்பா அம்மா கடைக்கு துணி எடுக்க அழைத்துச் செல்லும்போது, அந்த கலர் பிடிக்கலை, இந்த மாடல் பிடிக்கலை என்று குறை கூறுவேன் அத்தோடு நிறைய துணிவாங்கி வைத்துக்கொள்வேன். ஆனால் இன்னிக்கு துணி எப்படி உருவாகுது,  அதற்கு எவ்வளவு பேரு வேலை செய்யறாங்க என்பதை  தெரிஞ்சுக்கிட்டேன். இனி துணியெடுக்கும்போது இதையெல்லாம் யோசிப்பேன்” என்று ஒரு மாணவி கூறினாள்.

இந்த பதில் இத்தனை வருடம் கடந்து வந்த அத்தனை கஷ்டங்களையும் காயங்களையும் தகர்த்து சிறு பூ மெல்லிய வாசனையுடன் என்னுள் மலராக மலர்ந்ததை மனப்பூர்வமாக உள்வாங்கிக் கொண்டேன்.

இது முதல் நூற்பு நெசவுப்பள்ளியில் தொடர்சியாக வகுப்புகள் நடத்துவதற்கான திட்டமிடல்களோடு பயணப்படுகிறோம் என்பதை உங்களிடம் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பெரும் செயலின் தொடக்கத்துக்கு தனது மாணவர்களை அனுப்பிய சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெயபாரதி அம்மாவுக்கும், மாணவர்களை அழைத்துவந்த ஆசிரியர்களுக்கும், பயிற்சி முடியும் வரை உதவியாய் இருந்த கோவர்த்தனன் அண்ணாவுக்கும் ராதிகா அக்காவுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் குக்கூ நண்பர்களுக்கும் சிரம் தாழ்த்தி வாழ்வின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில் கிடைத்த ஒட்டுமொத்த நல் அதிர்வுகளை உங்கள் எழுத்துக்கும், குக்கூ நிலத்திற்கும் காந்தியத்திற்கும் சமர்ப்பனம் செய்கிறேன்.

நன்மை மலர்கிறது…

நெஞ்சார்ந்த நன்றிகளோடு,

சிவகுருநாதன். சி
நூற்பு நெசவுப்பள்ளி

www.nurpu.in


நூற்பு -சிறுவெளிச்சம்

நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்

முந்தைய கட்டுரைஒரு யுகசந்தி
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி, அச்சுநூல்