தமிழ் எழுத்துக்கள், கடிதம்

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?
மொழியை பேணிக்கொள்ள…
புலம்பெயர் உழைப்பு
மொழிக்கு அப்பால்…

அன்புள்ள ஜெ,

நலந்தானே? ஆங்கில லிபியில் தமிழை எழுதுதல் தொடர்பான என் எண்ணங்கள்.

கையெழுத்து போட மட்டுமே பேனா எடுக்கும், 25 வயதுக்கு குறைந்த, ஆங்கில வழியில் கல்வி கற்ற, என் நண்பர்களுடன் நான் எழுத்து மூலமாக உரையாடும் பொழுது பெரும்பாலும் அவர்கள்  தமிழை ஆங்கில லிபியில்தான் எழுதுகிறார்கள். நான் தமிழ் எழுத்தில் எழுதினாலும் சிலர் ஆங்கில லிபிக்கு மாறச்சொல்லிக் கேட்பதுமுண்டு. பொதுச்சமூகத்தின் மிகவும் இயல்பான மொழி வெளிப்பாடென்பது இதுபோல் தனிப்பட்ட முறையில் எழுதப்படும் உரையாடல்களில் இருப்பவையே. நாள், வார இதழ்கள் கட்டமைத்த தமிழின் பொதுநடையை இன்று தீர்மானிப்பவை, முகநூல் பதிவுகளும் தனிப்பட்ட உரையாடல்களும்தான்.

இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே (19.09.2021 மதியம் இரண்டு மணி அளவில்) சந்தேகம் வந்து டிவிட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் ஐந்தை தமிழ் லிபியிலும் ஆங்கில லிபியிலும் தேடிப்பார்த்தேன். (தமிழர் அதிகம் எழுதும் தளங்களுள் டிவிட்டரும் ஒன்று என்பதால். முகநூல் முழுமையான தேடல் முடிவுகளை அளிப்பதில்லை. நம் நட்பு வட்டத்தைப் பொருத்து வடிகட்டிய முடிவுகளையே அளிக்கிறது என்பதாலும்.) கடந்த பதினைந்து நிமிடங்களுக்குள் எழுதப்பட்ட சில தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை: ஒரு – 72, oru – 38, என்ன – 64, enna – 37, அவன் – 13, avan – 9, அம்மா – 7 , amma – 3, நான் – 38 , nan- 7, naan – 11. (பயனர்களின் பெயரில் இருந்த சொற்களைச் சேர்க்கவில்லை. ஆங்கில லிபியில் தேடும்போது பிறமொழிகளில் எழுதப்பட்டவற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டேன். ஒரே தொடரில் பல முறை ஒரு சொல் பாவிக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் அச்சொல் எண்ணப்பட்டது.)  பிறர் இதே தேடலை செய்தாலும் இதற்கு சமமான முடிவுகளே வரும் என்று நம்புகிறேன்.

அறுதியான, முழுமையான கணக்காக இல்லாவிடினும், தமிழில் அன்றாடம் எழுதப்படும் பேச்சுகள் பாதிக்குப் பாதி ஆங்கில லிபியில் எழுதப்படுகிறது என்றே படுகிறது. ஆனால், இது ஏன் நம் கவனத்திற்கே வரவில்லை? நான் நினைக்கும் காரணங்கள்: 1. நம்மில் பலர் பெரும்பாலும் தம் சம வயதினரிடமே அதிகம் புழங்குவதால், தமிழ் லிபியில் எழுதும் கூட்டத்தினரிடம் பழகும் வாய்ப்பே அதிகம் அமைகிறது. 2. அரசியல், கருத்தியல் சார்பு கொண்ட -மொழியைப் பழகிய- இளைஞர்களிடம் அதிகம் புழங்குவதால் எல்லா இளைஞர்களும் தமிழ் லிபியையே பயன்படுத்துகிறார்கள் என்று தவறாக நினைத்தல். (அல்லது அரசியல், கருத்தியல் சார்ந்து எழுதப்படும் பதிவுகளையே அதிகம் வாசிக்க நேர்வதால்). 3. அலுவல் ரீதியில் பழகும் தமிழர்களிடம் ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துதல்.

எது எப்படி இருந்தாலும் ஆங்கில லிபியில் தமிழை எழுதும் மக்களின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. என் நண்பர்களுள் பலர் கொஞ்சம் சிரமப்பட்டாவது தமிழ் லிபியை வாசிக்கக்கூடியவர்களே. ஆனால் அவர்கள் கடைசியாகத் தமிழ் லிபியில் வாசித்தவை பெரும்பாலும் திரைப்பட பாடல் வரிகளோ மீம்களில் எழுதப்பட்ட வாசகங்களோ தான். கணிசமான மீம்களிலும் தமிழ் ஆங்கில லிபியிலேயே எழுதப்படுகிறது வேறு. அலுவல், கருத்தியல், அரசியல் தாண்டி தமிழ் இன்னும் கொஞ்சம் வாசிக்கப்பட வேண்டும் என்றால், ஆங்கில லிபியில் தமிழை எழுதுவதில் தவறில்லை என்னும் கருத்துடன் உடன்படுகிறேன்.

ஆனால் இன்றைய பயன்பாட்டில் இருக்கும் ஆங்கில லிபி வடிவம் தரமான எழுத்திற்கு ஏற்ற வகையில் இல்ல.  அன்றாடம் புழங்கும் 200, 300 சொற்களை மனம்போன படி ஆங்கில லிபியில் எழுதும் வழக்கமே இப்போதுள்ளது (நீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியே ni, ne, nee என்றெல்லாம் எழுதப்படுகிறது). அம்மாவை ‘amma’ என்று எழுதும் நடையில் ‘ அம்ம’  என்னும் சங்கச் சொல்லை எழுத முடியுமா? பலர் ஒட்டு மொத்தமாக விகுதியையே தவிர்த்துவிடுகிறார்கள் வேறு. பண்ணுற, பண்ணுறேன், பண்ணுறான், பண்ணுறாள் ஆகிய நான்கு சொற்களையும் ‘panra’ என்றே எழுதுபவர்கள் உள்ளனர். (மேலே உள்ள கணக்கெடுப்பின்போது நான் என்பதை இருவர் ‘na’ என்று எழுதி இருந்ததைப் பார்த்துக் கடுப்பாகி, அவற்றைக் கணக்கில் கொள்ளாத கொடுமையும் நடந்தது). எனவே, எழுத்துக்கு எழுத்து சமானமாக எழுதும் ஒரு லிபி முறை அவசியமாகிறது.

தமிழின் குறில் நெடில் எழுத்துக்களும் இரட்டித்து வரும் எழுத்துக்களும் ஆங்கில லிபியில் அப்படியே எழுதுகையில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. பல வகைகளில் இந்த சிக்கல் எதிர்கொள்ளப்பட்டாலும் சில வழிமுறைகளில் வாசிப்பது சிரமமாகவே உள்ளது. நெடில் எழுத்துகளைக் குறிக்க ஆங்கில லிபியின் பெரிய எழுத்துக்களை (capital letters) போடுவது நல்ல யோசனையாகப் பட்டாலும், சிறிய எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களும் கலந்துள்ள சொற்றொடரைப் படிப்பது சோர்வூட்டுவது. லகரமும் னகரமும் தலா மூன்றாக இருப்பதும் இன்னொரு சிக்கல். சர்வதேச தரக் கூட்டமைப்பின் ISO 15919 (https://en.m.wikipedia.org/wiki/ISO_15919) எழுத்துமுறை சில குறைகளைத் தவிர்த்து தரமானது. அக்சரமுகம் இணைய தளத்தில் ( http://aksharamukha.appspot.com/converter) எளிதாக தமிழ் லிபியில் இருந்து பிற லிபிகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

அமைப்புகளின் துணையில்லாமல் தனிமனிதனாக இருந்து ஆங்கில லிபியில் எழுதப்படும் தமிழுக்கு தர நிர்ணயத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் கடினம்தான். தமிழ் லிபியை பயன்படுத்த சிரமப்படும் மக்கள் கணிசமானவர்கள் என்பதை உணராமல் யாரும் ஆங்கில லிபிக்கு ஆதரவு செலுத்தப்போவதும் இல்லை. ஏதேனும் தகுதியுள்ள அமைப்பு ஒன்று இவ்விவாதத்தைப் பொதுச்சூழலில் முன்னெடுத்தால் நல்லது.  ஆங்கில லிபி முறைகளுள் ஏதேனும் ஒன்று பரவலாகப் பயன்பாட்டில் வந்தால், அதன் குறைகளைக் களைந்து மேம்படுத்தலாம்.  தற்சமயத்திற்கு ISO 15919 முறையையே பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

இப்போதைக்கு நாட்டுடமை ஆக்கப்பட்ட மின்நூல்களில் சிலவற்றையாவது ஆங்கில லிபியில் மாற்றி மின்நூல்களாகப் பதிப்பித்தால் இலக்கியம் இன்னும் சிலரை அடையும். இன்றைய நிலையே தொடர்ந்தால், எழுதுபவர்கள் மட்டுமே வாசகர்கள் என்னும் நிலை தமிழிலக்கியத்திற்கு நேர்ந்தாலும் வியக்க ஒன்றும் இல்லை.

அன்புடன்

யஸோ

எழுத்துரு ஓர் எதிர்வினை -2

எழுத்துரு ஓர் எதிர்வினை

மொழி மதம் எழுத்துரு- கடிதம்

தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்

எழுத்துரு விவாதம் ஏன்?

எழுத்துரு கடிதங்கள்

எழுத்துருக்கள்-எதிர்வினைகள்

முந்தைய கட்டுரைஇலக்கிய விவாதத்தில் எல்லை வகுத்தல்
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்